Friday, December 30, 2011

சாம்பல் வாசனை

பாம்பின் கண்களில் பதட்டம் பார்க்கையில்
பச்சைத் தவளையின் ஆறுதல் மொழியாய்
தீப்பற்றும் உன் தீவிரத்தின் முன்
முழக்கங்கள் முயன்று முனகவே செய்கிறேன்:
 காட்டு நெருப்பு கலைத்த கலவியில்
உக்கிரம் பரப்பி ஓடும் விலங்காய்
எல்லாத் திசையிலும் எரிதழல் பரப்பும் உன்
பார்வையில் எனக்கென பனியும் சுரக்கும்

அடுத்த விநாடியே அரும்பு கட்டும் -
புன்னகைக்குள்ளே புதையும் எரிமலை
சமதளமாகி சந்தனமாகி
எரிந்த சுவடுகள் எல்லாம் தணிந்திட
எழுந்து நதியாய் என்னை நனைக்கும்..
தேம்பும் எனனைத் தழுவுமுன் கைகளின்
சாம்பல் வாசனை சர்ப்பத்தை எழுப்பும்

நீங்கா நிழலின் நீட்டக் குறுக்கம்
தீரா வியப்பைத் தருவது போல்தான்
பரஸ்பர நிழல்களாய் படரும் நமக்குள்
நிகழ்ந்து கொண்டிருக்கும் நீட்டமும் குறுக்கமும்:

பகடைக் காயின் பக்கங்கள் போல
உருளும் கணங்களின் உன்மத்தம் தெறிக்க
இரவின் மௌனம் கடையும் ஒலியில்
திரளும் அன்பும் திரளும் சினமும்
உருகும் உயிரில் ஒளியை வழங்கும்
  

Thursday, December 29, 2011

பாவை பாடிய மூவர்


மார்கழி மாதத்தின் மகத்துவங்களில் முக்கியமானவை அறிவால் சிவமேயாகிய மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும், சூடிக்கொடுத்த  சுடர்க்கொடியாம் ஆண்டாள் பாடிக் கொடுத்த திருப்பாவையும். அவற்றின் ஆன்மத் தோய்வும் பக்தி பாவமும் அளவிட முடியா அற்புதங்கள்.  இந்து சமயத்திற்கு சைவமும் வைணவமும் இரண்டு கண்கள் எனில்  அந்தக் கண்களின் இரண்டு பாவைகளே திருப்பாவையும் திருவெம்பாவையும் எனலாம்.



"குத்து விளக்கெரிய, கோட்டுக்கால கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின்மீது
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா" 

என்னும் ஆண்டாளின் சொல்லோவியமும்,

"மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியில் புரண்டாள்" என்ற மணிவாசகரின் சொற்சித்திரமும்
அளிக்கும் அனுபவங்கள் பரவசமானவை. இந்த இரண்டு படைப்புகளிலும் ஊறித் திளைத்த உள்ளம் கவியரசு  கண்ணதாசனின் உள்ளம்.

"கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை
கூப்பிடும் குரல்கேட்டுக் கண்ணன் வந்தான்"
என்று பாடியவர் அவர்.

ஆன்மீக மரபில் பிறந்து வளர்ந்தாலும் நாத்திக இயக்கத்தில் ஈடுபட்டு,  பின்னர் அங்கிருந்து விடுபட்டு,மீண்டும் ஆன்மீகத்தில் ஆழங்கால் பட்டவர் அவர்.

"நல்லறிவை உந்தனருள்
தந்ததென எண்ணாமல்
நாத்திகம் பேசிநின்றேன் 

நடைபயிலும் சிறுவனொரு
கடைவைத்த பாவனையில்
நாற்புறம் முழக்கி வந்தேன் 

கல்வியறிவு அற்றதொரு
பிள்ளையிடம் நீகொடுத்த
கடலையும் வற்ற விட்டேன் 

கருணைமயிலே உனது
நினவுவரக் கண்டதன்பின்
கடலையும் மீறிநின்றேன் " என்பது கவியரசரின் வாக்குமூலம்.


 சமய இலக்கியங்களில் இருந்த திளைப்பு அவருக்குள் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டே இருந்ததன் விளைவாக திருப்பாவை,  திருவெம்பாவை ஆகியவற்றை அடியொற்றி அவர் படைத்ததே  தைப்பாவை. பாவை நோன்பு நோற்கும் பெண்களின் குரலாக திருப்பாவையும்  திருவெம்பாவையும் இருக்க,தைமகளாகிய பாவையிடம்  நேர்படப் பேசும் தொனியில் தைப்பாவை அமைந்திருக்கிறது  தமிழர் அகவாழ்வு,வீரம்,வேளாண்மையின் சிறப்பு அரசர் மாண்பு உள்ளிட்ட பல்வேறு பாடுபொருட்களைக் கொண்டது தைப்பாவை.

"தைபிறந்தால் வழிபிறக்கும்"என்பது போல தை மாதத்தில்  தமிழர்கள் நலனுக்கு வழிபிறக்கும் என்னும் உணர்வுடன் தைப்பாவையின் முதல் பாடல் தொடங்குகிறது.

"எந்தமிழர் கோட்டத்து
இருப்பார் உயிர்வளர
எந்தமிழர் உள்ளத்து
இனிமைப் பொருள்மலர
எந்தமிழர் கைவேல்
இடுவெங் களம்சிவக்க
எந்தமிழர் நாவால்
இளமைத் தமிழ்செழிக்க
முந்து தமிழ்ப்பாவாய்
முன்னேற்றம் தான்தருவாய்
தந்தருள்வாய் பாவாய்
தைவடிவத் திருப்பாவாய்
வந்தருள்வாய் கண்ணால்
வாழ்த்துரைப்பாய் தைப்பாவாய்"
என்பது தைப்பாவையின் முதல் பாடல்.
"மார்கழிக்குப் பெண்ணாக
மாசிக்குத் தாயாக
பேர்கொழிக்க வந்த
பெட்டகமே"
என்று தைமகளை வர்ணிக்கிறார் கவியரசர்.

பொங்கல் வைக்கும் நாளில் விடிய விடிய அறுவடை நடந்து  வேளாண்குடிப் பெருமக்களின் வீடுகள் பரபரப்பாக இயங்குகின்றன.  காளைமாடுகள் இழுத்துவரும் வண்டிகளிலிருந்து நெல்மூட்டைகள. இறக்கப்படுகின்றன. நெல்மணிகள் களஞ்சியங்களில் கொட்டப்  படுகின்றன.வளைக்கரங்கள் சலசலக்க பெண்கள் படையலிடத்  தயாராக வாழையிலைகளை விரித்து வைக்கிறார்கள்.  இன்னொருபுறம் தாழை மடல்களையும் பின்னுகிறார்கள்.  விடிந்த பிறகு தயிர் கடைய முடியாதாகையால் கதிர்  கிளம்பும் முன்னே தயிர் கடைகிறார்கள். அதன்பிறகு  சேவல் கூவுகிறது.

குழந்தைகள் பொங்கலோ பொங்கல்  என்று உற்சாகக் குரலெழுப்புகிறார்கள். இத்தனை சம்பவங்களையும்  பாட்டுப் பட்டியலாகவே கவியரசர் வழங்குகிறார். 

"காளை மணியோசை களத்துமணி நெல்லோசை 
வாழை இலையோசை வஞ்சியர்கை வளையோசை
தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை
கோழிக் குரலோசை குழவியர்வாய் தேனோசை
ஆழி அலையோசை அத்தனையும் மங்கலமாய்
வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ!
தோழியர் கைதாங்க தூக்கியபொன் அடிநோக
மேழியர்தம் இல்லத்து மேலெழுவாய் தைப்பாவாய் 

தன் மனம்கவர்ந்த காதல் பெண்ணைத் தீண்ட முற்படும் போது வேலை  நிமித்தமாய் பிரிந்து போகிறான் தலைவன்.பிரிவுத் துயரில்  வாடுகிறாள் தலைவி.பிரிந்தவர் மீண்டும் தைமாதத்தில் சேர்வார்கள்  என்று தைமகளையே தலைவிக்கு ஆறுதல் சொல்ல வேண்டுகிறார்.

"வாளைத் தொடு காளை
வடிவைத் தொடு வேளை
வேலைக்கென ஓலை
விரைவுற்றது சென்றான்;
நூலைத் தொடும் இடையாள்
நோயுற்றனள் பாராய்
வேலைப்பழி விழியாள்
வியர்வுற்றனள் காணாய்
ஆலந்தளிர்த் தத்தை
அமைவுற்றிட இத் தை
காலம்வரல் கூறாய்
கனிவாய தைப்பாவாய்" 

சங்க இலக்கியச் செழுமரபின் நெறிநின்ற இப்பாடல் கவியரசரின்  ஆளுமைக்கு சான்று.அதேநேரம் அவர் பயின்ற சமய இலக்கியங்களாகிய  பாவைப் பாடல்களின் தாக்கம் தலைப்பில் மட்டுமின்றி தைப்பாவையை  பாவாய் என்றழைக்கும் உத்தியில் மட்டுமின்றி தைப்பாவை கவிதை  வரியிலும் எதிரொலிக்கிறது.

ஆண்டாள், திருப்பாவையில் கண்ணனை வர்ணிக்கும்போது
"கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்" என்று பாடுகிறார்.
கதிர்போன்ற ஒளியும் நிலவுபோன்ற குளுமையும் ஒருங்கே கொண்டவன்
கண்ணன் என்பது உரையாசிரியர்கள் விளக்குகிற உட்பொருள்.
இந்த நயத்தை உள்வாங்கிய கவியரசர் கண்ணனின் அந்தத் தன்மையை
தமிழ்ச்சமுதாயத்தின்மேல் ஏற்றிப் பாடுகிறார்.

"எங்கள் சமுதாயம்
ஏழாயிரம் ஆண்டு
திங்கள்போல் வாழ்ந்து
செங்கதிர்போல் ஒளிவீசும்" என்கிறார்.

தமிழ் மன்னர்கள் பற்றிய சுவைமிக்க பதிவுகளையும்  தைப்பாவையில் கவிஞர் எழுதுகிறார்.குறிப்பாக சேரமன்னன் பற்றிய கவிதை மிக அழகான ஒன்று
"இருள்வானில் நிலவிடுவான்
நிலவாழ்வை இருளவிடான்
செருவாளில் கை பதிப்பான்
கைவாளை செருவில்விடான்
மருள்மானை மனத்தணைவான்
மனமானை மருளவிடான்
தரும்சேரன் பெற்றறியான்
தழைக்கும்கோன் வஞ்சியிலும்
நிறையாயோ உலவாயோ
நிலவாயோ தைப்பாவாய்"


சங்க இலக்கிய சாரத்தையும் சமய இலக்கிய உத்தியையும் ஒருசேர  வெளிப்படுத்தும் தைப்பாவை, கவியரசு கண்ணதாசனின் முத்திரைப்  படைப்புகளில் முக்கியமானது

Sunday, December 25, 2011

ஆதியோகி வந்தமர்ந்த ஆலயம்

ஆதியோகி வந்தமர்ந்த ஆலயம்- நம்
ஞானயோகி ஆக்கிவைத்த ஆலயம்
ஜோதியாக நின்றொளிரும் ஆலயம்- இதைத்
தேடிவந்து சேர்பவர்க்கு ஆனந்தம்
 
யோகமென்னும் கொடைநமக்குத் தந்தவன்-இந்த
தேகமென்றால் என்னவென்று சொன்னவன்
ஆகமங்கள் தாண்டியாடும் தாண்டவன் -இந்த
ஆதியோகி அனைவருக்கும் ஆண்டவன்
 
சத்குருவின் சக்திமிக்க தந்திரம்- அட
சொல்லிச் சொல்லித் தீரவில்லை மந்திரம்
 பக்திகொண்டு பொங்கியதே நம்மனம்- அந்தப்
பரமனுக்கும் இங்குவரச் சம்மதம்
 
சாம்பசிவம் நீலகண்டன் என்றவன் -கரும்
பாம்பின்நஞ்சில் பால்கலந்து உண்டவன்
வீம்புகொண்டு மீண்டும்மண்ணில் வந்தவன் - நாம்
வாழ்வதற்குக் காரணங்கள் தந்தவன்
 
கண்ணெதிரே கடவுள்வந்த சாகசம்- அதைக்
காட்டுவிக்கும் கருணைவேறு யார்வசம்?
எண்ண எண்ண விந்தை அந்த அற்புதம்-என்றும்
இன்பம் இன்பம் சத்குருவின் பொற்பதம்