Friday, October 29, 2010

நாயகி ஆளுகிறாள்

திருக்கடவூர் எனக்குத் தாய்வழிப்பாட்டனாரின் ஊர் . எங்கே இருந்தாலும்
கனவிலும் நனவிலும் அந்த ஊரோ வீடோ மின்னிக் கொண்டிருக்கும் வைத்தீசுவரன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு முன்னால் ஏடெடுத்துப் பார்த்த போது கடந்த பிறவியில் திருக்கடவூரில் நான் பிறந்ததாக
வந்தது. இந்த முறை திருக்கடவூருக்குப் போய்க் கொண்டிருந்த போது அந்த
சம்பவம் நினைவுக்கு வந்தது)




எத்தனை திசைகள் போனால் என்ன
இதுதான் என்வீடு
வித்தகி ஆள்கிற கடவூர் என்தலம்
என்றது பனையேடு
நித்தமும் நித்தமும் நினைவினில் மின்னும்
நாயகி அவள்தோடு
எத்தனை உயரங்கள்!எத்தனை துயரங்கள்!
எல்லாம் அவளோடு!

பால்கொண்ட மழலைப் பருவத்திலிருந்தே
பார்த்தது அவள்முகம்தான்
நூல்கொண்ட அறிவில் நூபுர ஒலியுடன்
நுழைந்தது அவள்பதம்தான்
வேல்கொண்டு வினைகள் சாடிய பொழுதும்
விழுந்தது அவளிடம்தான்
கால்கொண்டு நடக்கும் காரியம் அவளது
கருணையில் நிகழ்வதுதான்

நேர்வழி நடக்கையில் வீசிடும் தென்றலில்
நிச்சயம் இருக்கின்றாள்
யாரறிவாரென இழிசெயல் புரிகையில்
இடறியும் விடுகின்றாள்
தேர்வடம் பற்றிய பிஞ்சு விரல்களைத்
தாய்மனம் மறந்திடுமோ
கார்முகில் நிறத்துக் காருண்ய வடிவம்
கனவிலும் நிறைந்திடுமோ

கோபுர பொம்மையை வேடிக்கை காட்டிக்
கோயிலில் நுழைய வைத்தாள்
தீபத்தின் சுடரில் திருமுகம் காட்டி
தவிப்புகள் அடங்கவைத்தாள்
ஆபத்தென்றுள்ளம் அழும்பொழுதெல்லாம்
அவள்வழி காட்டுகிறாள்
நாபியி லிருந்து எழுகிற குரலை
நாயகி ஆளுகிறாள்

பாலைக்காற்று

கோலாலம்பூர் கம்பன் விழா மேடையில் இருந்த போது கிடைத்த செய்தி கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் மனைவியார் மரணமடைந்த செய்தி. விழாவில் முதல்நாள் பங்கேற்று அடுத்த சில மணிநேரங்களில் விமானம் ஏற இருந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை மேடையில் இருந்த வண்ணமே தொடர்பு கொண்டேன். அவருக்கு ஏற்கெனவே செய்தி தெரிந்திருந்தது. கவிஞர் சவுந்தரா கைலாசம் மறைந்த செய்தியையும் அவர் தெரிவித்தார். இருவருக்கும்  கோலாலம்பூர் கம்பன் விழாத் திரள் அஞ்சலி செலுத்தியது.

சென்னை வந்த பிறகு திருவான்மியூர் வான்மீகி சாலையில் இருக்கும் கவிக்கோ இல்லத்துக்கு பர்வீன் சுல்தானாவும் நானும் சென்றோம். கவிஞர் வீட்டில் இல்லை. அவருடைய மகள் இருந்தார். அப்பாவின் உடலமைப்பும், அசைவுகளும் அச்சு அசலாய் அவரிடம்... அம்மாவை வருத்தி வந்த ஆஸ்துமா நோய் பற்றியும், தூசி ஒத்துக் கொள்ளாத நிலையிலும் வீட்டிலுள்ள புத்தகக் குவியலை அகற்ற அப்பா ஒத்துக் கொள்ளாததால், புத்தகங்களுக்கு மாடியில் தனியறை கட்டி முடித்த கதையையும் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரும் பர்வீனும் உருது மொழியில் உரையாடிக் கொண்டிருந்தார்கள். எனக்கு
உருது தெரியாது என்பது கவிஞர் மகளுக்குத் தெரிந்த பின் உரையாடல்
தமிழுக்குத் தாவியது. இசுலாமிய இல்லங்களுக்கே உரிய அருமையான தேனீர்
கொடுத்தார்கள்.

பர்வீன் உருது பேசுவதில் அளப்பரிய விருப்பம் கொண்டவர். கவிஞர் மகள்
தமிழில் பேசினாலும், தன்னை மறந்து அவ்வப்போது உருதுவுக்குத் தாவிக் கொண்டிருந்தார் பர்வீன். ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால்,சென்னை கம்பன் விழா பட்டி மண்டபத்தில் கூட உருது மொழிக் கவிதை ஒன்றை சொன்னாராம். எதிரணியில் இருந்த பேராசிரியர் இராமச்சந்திரன் "நான் ஒரு ஜப்பானியக் கவிதை சொல்கிறேன்"என்று,மூன்று நிமிஷங்கள்
மூக்கால் பேசினாராம்.

சிறிது நேரத்தில் கவிஞர் வந்தார். வக்பு வாரியத் தலைவர் ஆனதிலிருந்து
சுழல் விளக்கு கொண்ட கார் கொடுத்திருக்கிறார்கள். மனக்கவலை மறக்கவோ, கடமைகள் கருதியோ ஆலோசனைக் கூட்டங்கள், குழு அமர்வுகள்
என்று வரிசையாகக் கலந்து கொண்டு வருகிறார். அன்றுகூட மதியமே வீட்டை விட்டுப் புறப்பட்டவர் முன்னிரவில்தான் திரும்பினார். வீட்டு வாசலிலேயே உதவியாளரிடம் மறுநாள் நிகழ்ச்சி நிரலை சொல்லத் தொடங்கி விட்டார்.



கம்பீரமான நடையில் சிறு தளர்ச்சி. முகத்தில் சோர்வு. பேசத் தொடங்கிய சில விநாடிகளுக்குள்ளாகவே வந்து விழுந்த வார்த்தைகள் இவை; "நான் அடிக்கடி சொல்ற விஷயம்தான். பொது வாழ்க்கையிலே இருக்கறவங்க கல்யாணம் பண்ணிக்கறது பெரிய அயோக்கியத்தனம். ஒரு பொண்ணு வாழ்க்கையை அனாவசியமா கெடுக்கற வேலை ".அவர் சொல்லச் சொல்ல அவர்
பொதுவாழ்வில் கடந்து வந்திருக்கக் கூடிய நெடுந்தொலைவின்
வரைபடத்தை மனம் வரைந்து பார்க்கத் தொடங்கியது.


தன்னிடம் ஒருமுறை கூட சண்டை போடாத மனைவியை, தான்
இதுவரை அவருக்கு ஏதொன்றும் வாங்கித் தந்திராததை, நினைவுகூர்ந்த கவிஞர் சொன்னார்,"என் பெருமைகளை அவள் புரிந்து கொண்டாள் என்று நான்
கருதவில்லை.ஆனால் என்னை மிகச்சரியாகப் புரிந்து கொண்டவள்
அவள். அவளைப் பற்றி ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை கேட்டார்கள். அதில் கூட சொல்லியிருக்கிறேன் -பாலைவனத்துக்கென்றே திட்டமிட்டுப் படைக்கப்பட்ட ஒட்டகம் போல் என் வாழ்க்கைக்கென்றே திட்டமிட்டுப் படைக்கப்பட்டவள் அவள்".



மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அப்பாற்பட்ட
நிலைநோக்கி அவர் செல்வதை உணர்ந்த மருத்துவர்கள், அதை
வெளிப்படையாகச் சொல்லவில்லை. வீட்டிலேயேஆக்ஸிஜன் சிலிண்டர் இருப்பதால் வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லிவிட்டார்களாம். மருத்துவமனையிலிருந்து வருகிற போது கண்திறந்து பார்த்த அம்மையார் கவிஞரிடம் எங்காவது வெளியூர் கூட்டங்களுக்குப் போக வேண்டியிருக்கிறதா
என்று கேட்க, கவிஞர் தன் நிகழ்ச்சிகளை சொல்லியிருக்கிறார். கண்மூடியபடி
சோர்வோடு அம்மையார் சொன்ன வார்த்தை, "உங்களுக்குப் பொறுப்பே கிடையாது".மணவாழ்வில் முதன்முதலாய்  சலிப்பான வார்த்தை அவரிடமிருந்து வந்ததுமே கவிஞர் ஓரளவு விஷயத்தை யூகித்துக் கொண்டாராம்.

சிக்கல்களும் மோதல்களும் நிறைந்த இன்றைய மணவாழ்வு பற்றி
பேச்சு திரும்பியது. கவிக்கோ சொன்னார், "எல்லோருக்கும் அறிவு இருக்கு. சுய
சிந்தனை, உரிமை எல்லாம் இருக்கு. ஆனா கல்யாணம்ங்கிறது,உரிமைகளை
நிலைநாட்டறதுக்கில்லை. அவரவர் உரிமைகளை தியாகம் செய்யறதுக்கு". மனம் நிறைந்த மணவாழ்வின் செய்தியாகவே அந்த வார்த்தைகள் வந்து விழுந்தன.

விடைபெறும்போது கைகளைப் பற்றிய விநாடிகளில் அதுவரை சொல்லாத செய்திகளையும் கவிக்கோ சொன்னதாகவே எனக்குப் பட்டது. எங்களை வழியனுப்பிவிட்டு சோர்வுடன் நாற்காலியில் சாய்ந்தார். கதவை முழுவதுமாய் மூடாமல் சற்றே திறந்து வைத்து விட்டு வெளியேறினேன். வெளியே வீசிய காற்று அவருக்குத் தேவைப்பட்டிருக்கும்தானே.

Thursday, October 28, 2010

சாபல்யம் அவள்பதமே



அவள்தான் அவள்தான் அடைக்கலம்
அருளே அவளின் படைக்கலம்
கவலை முழுதும் எரித்திடும்
கருணை அவளின் சூத்திரம்

சாகச மனம்செய்யும் சேட்டைகளில் அவள்
சாட்சி மாத்திரமே
சாட்டை அடிகளும் வாட்டி வதைக்கையில்
சாபல்யம் அவள்பதமே
ஆகாயம் அவள் ஆடுகளம் அதில்
அல்லென ஆடுகிறாள்
ஆயிரம் ஆயிரம் விண்மீன் நடுவே
நிலவென்று தோன்றுகிறாள்

கோணல் மனங்களின் கோடுகளை அவள்
கோலங்கள் செய்வாளோ
கோடி வினைகளும் மூள்கையிலே ஒரு
பார்வையில் எரிப்பாளோ
கேணியில் அமுதம் ஊறிடச் செய்பவள்
கடவூர் ஆளுகிறாள்
கேடுகள் எதுவும் சூழவிடாமலே
கனலாய்த் தோன்றுகிறாள்

இருள்கிற வானிடை எழுநிலவாய் அவள்
எறிந்தனள் தாடங்கமே
இருண்டஎன் நெஞ்சினில் எழுந்திடுவாளோ
இதுதான் ஆதங்கமே
உருள்கிற காலங்கள் உருட்டிடும் தாயெனை
ஒருமுறை பார்ப்பாளோ
உள்ளொளி காட்டவும் தன்னிழல் சேர்க்கவும்
உத்தமி நினைப்பாளோ

Tuesday, October 12, 2010

தனியாய்க் காணுவதோ

 
 
 
 
 
நேற்றொரு பாதையில் நடக்கவிட்டாள்-இன்று
நான்செல வேறொரு திசையமைத்தாள்
காற்றினில் இலைபோல் மிதக்கவிட்டாள்-இளங்
காட்டுப்புறாவின் சிறகளித்தாள்
ஆற்றின் வெள்ளங்கள் கடக்கவிட்டா ள்-அவள்
அமிலக் கொதிப்புகள்  குளிரவிட் டாள்
ஊற்றெழும் வினைப்பயன் தூரவைத்தாள்-அந்த
உத்தமி தன்னிழல் சேரவைத்தாள்
 
சூரியன் போகிற வழிபார்த்தே -ஒரு
சூரிய காந்தி திரும்புதல் போல்
காரியம் பலப்பல பார்த்தபடி-அவள்
காருண்ய முகத்தினைப் பார்க்கச் சொன்னாள்
சூரியன் போவதோ ஒருவழிதான் -எங்கள்
சூலினி எங்கணும் பரந்துபட்டாள்
நேர்வரும் எதனிலும் நிற்பவளை-அட
நானெங்கு தனியாய்க் காணுவதோ 
 
வீணையின் நாதத்தில் சிரிப்பவளை-அந்த
வெய்யிற் சூட்டில் தெறிப்பவளை
பூநிழல் வழியெங்கும் விரிப்பவளை-மனப்
புண்களில் இருந்து வலிப்பவளை
கோணல்கள் சரிசெய்து கொடுப்பவளை- வருங்
கோபத்தில் ஓங்கி அடிப்பவளை
ஆணவச் சேற்றினைத் துடைப்பவளை- எங்கள்
அம்பிகை தாள்களை சரண்புகுந்தேன்   
 
என்னென்ன நான்செய்ய முற்படினும்-அவள்
எண்ணம் ஏதெனக் கேட்டுக்கொள்வேன்
கன்னி யவள்பதில் சொல்வதுண்டு-ஒரு
கள்ள மவுனமும் கொள்வதுண்டு
என்னையும் பொருட்டென எண்ணுகிறாள்-அட
இதைவிடப் புண்ணியம் என்னவுண்டு
பொன்னையும் சருகையும் பொருட்படுத்தும்-ஒரு
பேதமை தாய்க்கன்றி யாருக்குண்டு

அம்பிகை வந்ததென்ன

 
 வானங் கறுத்தது வானங் கறுத்தது
வஞ்சி முகம் போலே-இடி
கானமிசைத்தது கானமிசைத்தது
காளிகுரல் போலே
தேனுமினித்தது தேனுமினித்தது
தேவியவள்போலே  -இனி
நானுந் தொலைந்திட நீயுந் தொலைந்திடு
நங்கையருளாலே
 
தேகத்தின் இச்சைகள் தூண்டி விடுவது
தாயவள் மாயையன்றோ-உள்ளே
நாகத்தின் வேகத்தில் ஓடிடும் சக்தியும்
நாயகி சாயையன்றோ
தோகையின் வண்ணத்தில் தோன்றிடும்பேரெழில்
மாதங்கி ரூபமன்றோ-இடப்
பாகத்தைத் தந்தவன் தேகத்தை ஆள்வதும்
பைரவி லீலையன்றோ
 
மூர்க்கம் வளர்த்திடும் மோதல் பலகண்டு
மூக்கறு பட்டதென்ன-அவள்
தீர்க்க விழிநெஞ்சில் தோன்றிய பின்னரென்
வாக்கெடு பட்டதென்ன
ஆக்கும் எதனையும் காக்கும் துணையென
அம்பிகை வந்ததென்ன
போக்கு வரவுகள் ஆக்கவும் சேர்க்கவும்
பேரருள் செய்வதென்ன
 
ஆலத்தை உண்டவன் நீலத் திருக்கண்டம்  
அம்பிகை கைவண்ணமோ-முழு
மூலத்தை ஆக்கிடும்  சீலத்தை செய்வதும்
மோகினி கண்வண்ணமோ
சூலத்தை ஏந்திடும் கோலத்தைக் காட்டிடும்
சிந்துரப் பொன்வண்ணமோ-முக்
காலத்தைப் பந்தெனக் காலில் உதைப்பவள்
காருண்யம் என்வண்ணமோ?
 
 

Monday, October 11, 2010

யாரிவளோ



 மாத்திரைப் போதவள் முகந்தெரியும்-ஒரு
மின்னற் பொழுதினில் மறைந்துவிடும்
ஊர்த்துவம் ஆடிடும் சலங்கையொலி-மிக
உற்றுக் கவனிக்கக் காதில்விழும்
தீர்த்தக் கரைகள் எங்கணுமே -எங்கள்
தேவியின் காலடி பதிந்திருக்கும்
வார்த்தைகள் தேடிடும் வேளையிலே-அவள்
வண்ணப்பொன் அதரங்கள் முணுமுணுக்கும்

சந்நிதி சேர்கிற வேளையினில்-நெஞ்சின்
சஞ்சலம் கண்களில் பொங்குகையில்
என்கதி என்னென்று ஏங்குகையில்-அவள்
இன்பக் குறுநகை கண்ணில் படும்
சின்னக் குழந்தையின் சொல்வழியே-அவள்
சொல்ல நினைத்தது சொல்லப்படும்
என்னை அழுத்திடும் பாரமெல்லாம்-அவள்
எண்ணும் பொழுதினில் வெல்லப்படும்  

தூண்டில் முனையினில் மண்புழுவாய்-பின்
தூண்டிலில் சிக்கிய செங்கயலாய்
நீண்டிடும் எந்தன் தவிதவிப்பை-வந்து
நிர்மலை மாற்றிடும் நேரமிது
தீண்டும் நெருப்பினில் சுட்டெடுத்துப்-பசுந்
தங்கமென் றாக்கிட எண்ணம்கொண்டாள்
தாண்டவ நாயகன் பக்கம்நின்றும்-நம்மை
தாய்மை ததும்பிடப் பார்த்திருப்பாள்

யாதுமென்றாயினள் யாரிவளோ -அண்டம்
எங்கும் நிறைந்திடும் பேரொளியோ
மாதுமை தாளன்றி யார்நிழலோ-என்
மாசுகள் நீக்கிடும் பேய்த்தழலோ
ஓதிடும் வார்த்தைகள் யாவிலுமே-அவள்
உட்பொருள் ஆனபின் அச்சமில்லை
பாதங்கள் பற்றிடும் ஞானம்வந்தால்-பின்னர்
பற்றுக்கள் ஏதொன்றும் மிச்சமில்லை

Thursday, October 7, 2010

உலவிட வருவாள் தேவி

காரிருள் நிறத்துக் காரிகை ஒருத்தி
காலடி சலங்கை கேட்கும்-அவள்
மூரி நிமிர்ந்து முதலடி வைத்ததும்
மூளும் வினைத்தொடர் தீரும்
கூரிய முனையினில் குருதியின் சிவப்பினில்
குங்கும சூலம் ஒளிரும்
மாரி அவள்வரும் வேளையில் தீநிறம்
மேலைத் திசையினில் மலரும்

 ஒன்பது இரவுகள் ஒவ்வொரு வீட்டிலும்
 உலவிட வருவாள் தேவி
அன்பினில் குழைபவர் அகந்தனில் ஒளியாய்
அவள்நிலை பெறுவாள் மேவி
முன்புசெய் தவத்தின் முழுவரமாக
முற்றத்தில் கொலுவில் அமர்வாள்
இன்பமும் கல்வியும் செல்வமும் எல்லாம்
எண்ணிய விதமே தருவாள்

கடம்ப வனத்தினுள் கொஞ்சிடும் இசையாய்
கானங்கள் ஆள்பவள் அவளே
உடம்பெனும் வனத்தினுள் உயிர்தடுமாற
உதவிக்கு வருவதும் அவளே
நடம்புரி ஈசன் இடங்கொளும் நங்கை 
நம்பிய யாருக்கும் அருள்வாள்
திடம்தரும் துணையாய் திசைகளில் ஒளியாய்
தினம்தினம் கண்முன் மலர்வாள்

வந்தவள் தானாய் வீட்டுக்குள் நுழைவாள்
வடிவுகள் பலப்பல கொள்வாள்
பந்தங்கள் கொடுப்பாள் பந்தங்கள் அறுப்பாள்
பலப்பல லீலைகள் செய்வாள்
சந்ததம் அவளே சொந்தமென்றிருந்தால்
சக்திதன் ஸ்ரீபுரம் அழைப்பாள்
தந்ததும் கொண்டதும் தெரிந்திடா வண்ணம்
வீட்டுக் கணக்குகள் முடிப்பாள்