Thursday, February 20, 2014

ராஜீவ் கொலை வழக்கு-சில நியாயங்கள்! சில தர்மங்கள்!





ராஜீவ் கொலை வழக்கில் கொலைக்கு உடந்தையாகவும் திட்டத்திற்கு உடந்தையாகவும் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தவர்களில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவர்,23 ஆண்டுகள் சிறையிலிருந்ததாலும் கருணைமனு மீது முடிவெடுக்க மத்திய அரசு காலம் தாழ்த்தியதாலும் அவர்களின் மரணதண்டனையை உச்சநீதி மன்றம் ரத்து செய்தது.

கூடுதலாக தண்டனை அனுபவித்ததால் அவர்களை விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.தமிழக முதல்வர் அமைச்சரவைக் கூட்டத்தில் அவர்களுடன் ஏற்கெனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 23 ஆண்டுகள் சிறையிலிருப்பவர்களையும் சேர்த்து விடுவிக்க வேண்டும் என்று முடிவெடுத்ததையும் அதன்பின் நிகழ்பவற்றையும் நாம் பார்த்து வருகிறோம்.

ராஜீவ் கொலையையோ அதற்கு உடந்தையாய் இருந்ததையோ யாரும் நியாயப்படுத்த முடியாது.அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது நியாயம்.ஒவ்வொரு குற்றவாளிக்கும் தன்னைத் தற்காத்துக் கொள்ள வாதிடுகிற,விண்ணப்பிக்கிற உரிமைகள் உண்டு என்கிற அடிப்படையில் கருணை கோரி குடியரசுத் தலைவருக்கு விண்ணப்பித்தனர். இதில் பொதுமக்களின் கலவை உணர்வுகள் சம்பந்தப்பட்டிருப்பதாலோ என்னவோ, குடியரசுத்தலைவர்கள் தொடர்ந்து மௌனமாகவே இருந்தார்கள்.அது மௌனமா மெத்தனமா என்பது பற்றியும் இன்று வாதங்களும் எதிர்வாதங்களும் நிகழ்கின்றன.

ராஜீவைக் கொன்றவர்கள் கொல்லப்ப்ட்டு விட்டனர். உடந்தையாக இருந்தவர்கள்,மூல மூளையாக இருந்தவர்கள் என்றெல்லாம் வர்ணிக்கப்படுபவர்களின் வழக்கு விசாரணையில் ஈடுபட்டவர்களே தாங்கள் சில வாக்குமூலங்களை சரிவர பதிவு செய்யவில்லை என்று சொல்லியிருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.இதில் உரிய காலத்திற்கும் அதிகமாக தண்டனை அனுபவித்தவர்களை நீதிமன்றம் நடுநிலையுடன்தான் அணுகும்.அரசியலில் தலைவர்களாகத் தங்களை வாக்கு அடிப்படையிலோ வாரிசு அடிப்படையிலோ நிலைநிறுத்திக் கொள்பவர்களிடம் அத்தகைய நடுநிலையை மக்கள் எதிர்பார்ப்பார்கள்.

ராஜீவ் பொது வாழ்வில் இருந்தவர். பிரதமராகவும் இருந்தார். கொல்லப்பட்டபோது அவர் ஓர் அரசியல் தலைவர். அவர் பிரதமரா முன்னாள் பிரதமரா என்பதைப் பொறுத்து அவருடைய உயிரின் மதிப்பு கூடவோ குறையவோ போவதில்லை.அந்த குண்டு வெடிப்பில் உயிர் துறந்த மற்றவர்களின் உயிருக்கு என்ன மதிப்போ அதே மதிப்பு ராஜீவின் உயிருக்கும் உண்டு.

ஆனால் ராஜீவைக் கொன்றதன் மூலம் இந்தியாவின் ஆன்மா தாக்கப்பட்டது என்று மன்மோகன் சிங் சொல்வது நன்றியுணர்வு மிக்க ஒரு காங்கிரஸ்காரரின் குரலாக இருக்கலாமே தவிர மூத்த அரசியல்வாதிக்கு(முதிர்ந்த அல்ல) குறிப்பாக பிரதமர் பதவியில் இருப்பவருக்கு அழகல்ல.
ஒரு பிரதமரைக் கொன்றார்கள் என்று ராகுல்காந்தி திரும்பத் திரும்பச் சொல்வதும் அவருக்கே உரிய முதிரா இளமைக் குரல் மட்டுமே. ராஜீவ் கொல்லப்பட்ட போது நடந்ததாக ஒரு சம்பவம் சொல்வார்கள்.இது எவ்வளவு தூரம் உண்மையென்று தெரியவில்லை. அப்போது ஆளுநராக இருந்த பீஷ்ம நாராயண்சிங்கை எழுப்பி ராஜீவ் கொலையான தகவலைக் கூறியபோது,"சிட்டிங் பிரைம் மினிஸ்டரா?" என்று கேட்டாராம். ஒருவேளை இந்த சம்பவம் உண்மையென்றால் அவர் தூக்கக் கலக்கத்தில் கேட்டதுபோல் 23 ஆண்டுகளுக்குப் பின் துக்கக் கலக்கத்தில் ராகுல் பேசுவதாக எடுத்துக் கொள்ளலாமே தவிர அந்த வாதத்தை நாம் கணக்கிலெடுக்க முடியாது.

அடுத்தது நாம் முழு மதிப்பளிக்க வேண்டியது,அந்த குண்டு வெடிப்பில்  உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் கேட்கும் கண்ணீர்க் கேள்விகளுக்குதான்.கொலைக்குற்றவாளிகளை விடுவிக்கலாமா என்று கேட்கும் அவர்கள் இந்தியாவில் இதுவரை எந்தக் கொலை வழக்கிலும் குற்றவாளிகள் தண்டனைக்குப் பிறகு விடுவிக்கப்படவேயில்லையா என்றும் யோசிக்க வேண்டும். ஒருகாலத்தில் ஆட்சி புரிபவனே நீதி சொல்பவனாகவும் தண்டனை தருபவனாகவும் இருந்தான்.அதில் தனிச்சார்புகள் ஏற்படுகின்றன என்பதால் தனியாக நீதித்துறை உருவானது.
ஆட்சியாளர்களே நீதியும் வழங்கியதால் முதலில் பாதிக்கப்பட்டவனும் ஒரு தமிழனே.கோவலன் என்பது அவனுடைய பெயர். இன்று நீதியானது நடுநிலையில் நின்று சில தர்மங்களை சில நியாயங்களை முன்வைக்கின்றது.  பாதிக்கப்பட குடும்பங்கள் வழக்கின் இன்னொரு   பக்கத்தையும் பரிசீலித்து தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டும்.அவர்களின் இழப்பு பெரியது. அதற்காக கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்றோ நிரந்தர சிறைவாசம் விதிக்கும் முகமாகவோ நீதிமன்றம் செயல்பட முடியுமா என்ன?


 ஆயுள்தண்டனை என்பது பதினான்கு வருடங்கள் என்பதை எல்லோரும் அறிவர். அதையும் தாண்டி ஒன்பதாண்டுகள் சிறையிலிருந்தவர்களை விடுவிப்பதுதான் தர்மம்.
விடுதலை அறிவிப்பு வந்ததும் அதனை வரவேற்ற மூத்த அரசியல்வாதிகள் மறுநாள் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்ததும் அதனை முதிர்ச்சியின்மை என்கின்றன.அப்படியானால் முந்திக் கொண்டு பாராட்டியதும் முதிர்ச்சியின்மைதானே.

விடுவிப்பதில் சில நடைமுறைகள் பின்பற்றப்படவில்லையென்றும் ஒரேநாளில் எப்படி நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருக்க முடியுமென்றும் உச்சநீதிமன்றம் கேட்டிருக்கிற கேள்வியை தமிழக அரசு எதிர்கொள்ள வேண்டும்.ஆனால் ஒரு சராசரி குடிமகன் பார்வையில் எழுவரையும் விடுவிப்பது என்கிற கொள்கை முடிவை எடுத்து மத்திய அரசுக்கு 
அறிவித்துவிட்டு அதற்கான நடைமுறைகளை தமிழக அரசு  தொடங்க இருந்ததாகவே புரிந்து கொள்கிறேன். மூன்று நாட்கள் அவகாசம் அதற்கானதாகக் கூட இருக்கலாம்
பாதிக்கப்பட்ட குடும்பங்கள்பொங்குவதில் நியாயம் இருக்கிறது.ஆனாலும் காலம் கடந்தும்சிறைதண்டனை அனுபவித்தவர்கள் விடுவிக்கப்படுவதுதான் தர்மம். நியாயங்கள் தற்காலிக தர்மங்கள். தர்மங்களே   நிரந்தரமான நியாயங்கள்