Sunday, April 21, 2013

பாவேந்தர்-ஓர் இளங்கதிர்

                                                 


(22 ஆண்டுகளுக்கு முன் சென்னைத் தொலைக்காட்சியில் வாசித்த கவிதை...
பாவேந்தர் நினைவாக இன்று..)

சதைக்கவிதை உயிரின்றிப் பிறந்த காலம்
சகதியிலே மையெடுத்துப் புனைந்த காலம்
எதைக்கவிதை என்போமோ எனுமேக்கத்தில்
எந்தமிழர் உயிர்வாடி இளைத்த காலம்
புதுத்தமிழை நவகவிதை ஆக்கித் தந்த
பாரதியோ மூத்தகதிர்-அவன்சுவட்டில்
உதித்தெழுந்த இளங்கதிராய் ஒளிபரப்பி
உலவியவன் புதுவைநகர் கவிதைவேந்தன்

தேயவுடல் மீதமின்றித் தினமுழைத்தும்
தகுந்தபலன் அடையாத மனித மந்தை
ஓய்ந்திருந்த புழுக்களென்ற நிலைமை மாறி
ஓங்கார வேங்கைகளாய் எழுந்த விந்தை
பாவேந்தன் செய்ததுதாநீனும் என்ன?
பாரதிதாசன் கவிதை வீரச் சந்தை
ஆயிரமாய்த் தமிழ்ச்சொற்கள் இருந்தபோதும்
ஆண்பிள்ளைச் சொற்களுக்கு அவன்தான் தந்தை

எழிலாக மின்னுகிற நிலவும்-அவன்
எழுத்துக்குப் பொட்டாகி நிலவும்
மழைவானை வெட்டுகிற ஒளியும்-அவன்
மணிவிழியின் சுடர்கண்டு ஒளியும்
தழலனைய பாவேந்தன் பெயரும்-சொல்லத்
தயக்கங்கள் மனம்விட்டுப் பெயரும்
குழைவான சந்தத்தின் இசையும்-அவன்
கூட்டுகிற கவிதைக்கே  இசையும்

பாவேந்தன் என்பவன்யார் கவியா?-இல்லை
பலகோடி உணர்வுகளின் புதல்வன்
பாரதிர வைத்ததமிழ்ப் புயலாய்-அந்தப்
புதுவையிலே சூல்கொண்ட புலவன்
பாரதியைத் துதிக்கின்ற விரதன் -அவன்
பாதையிலே வந்தமுதல் முரடன்
யாருக்கும் அஞ்சாத திறனால்-இங்கு
இமயமென நிமிர்ந்திருந்த கவிஞன்

Saturday, April 20, 2013

அங்குசத்தைக் கும்பிடும் ஆனை

கவியன்பன்.கே.ஆர்.பாபு

இது நடந்து இருபது  ஆண்டுகள் இருக்கும்.கோவை நானி கலையரங்கில் ஓர் இலக்கிய நிகழ்ச்சி. பார்வையாளர்கள் வரிசையில் கவியன்பன் பாபுவும்
நானும். இருவருக்குமே வெண்பா எழுதுவதில் விருப்பம். ஆளுக்கு இரண்டு
வரிகளாய் பாடும் இரட்டைப் புலவர்களின் உத்தியை நாங்களும்
கடைப்பிடித்திருந்தோம். மேடையில் பேச்சாளர்கள் தூள் கிளப்பினார்கள்.
தூள் கிளப்பினார்கள் என்றதுமே பிரமாதமாகப் பேசினார்கள் என்று நீங்கள்
நினைத்துவிடக்கூடாது. மரத்தை ரம்பத்தால் அறுக்கும் போது தூள் கிளம்பும்
அல்லவா? அந்த தூள் இது. 

ஆர்வக் கோளாறில் முதலிரண்டு வரிசைகளில் அமர்ந்து விட்ட நாங்களிருவரும் ஒருவரையொருவர் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டோம்.
கவியன்பன் பாபு,விழா நோட்டீசின் பின்புறம் இரண்டு வரிகளை எழுதி நீட்டினார்.

"வேண்டாம் இவர்களெல்லாம் வாயால் விஷம்தெளிப்பார்
மாண்டுவிடும் நம்பொறுமை வாபோவோம்"
மீதி இரண்டுவரிகளை நான் எழுதினேன்.
                                               -தீண்டவரும்
பாம்பின்று கால்சுற்றப் பார்த்துவிட்டோம்;போடும்முன்
நாம்தப்பிப் போதல் நலம்

இருவரும் வெளிநடப்புச் செய்தோமே தவிர ஒரே வாரத்தில் அப்படி இன்னொரு கூட்டத்தில் மாட்டிக் கொண்டோம். கூட்டம் தொடங்கும் முன்
சுண்டலெல்லாம் தந்தார்கள்.அதன்பிறகு சுண்ட சுண்டக் காய்ச்சினார்கள்.
நொந்துபோய் வெளிநடப்பு செய்த சில விநாடிகளிலேயே பாபு தொடங்கினார்.

"தட்டைப் பயிர்கொடுத்துத் தட்டிவிட்டார் பார்த்தாயா?
நெட்டை மரங்களாய் நீள்புலம்பல்"
அவரைப்போலவே உச்சக் கடுப்பில் இருந்த நான் மீதம் இரண்டு
வரிகளை எழுதினேன்.
                                                            " -நட்டகல்லும்
கால்முளைத் தோடவே கொன்றுவிட்டார் அப்பப்பா
வால்முளைத்தால் போவார் வனம் "
                                                                            
இந்த வெண்பாக்கள் கோவை மாநகர வீதிகளிலும் உணவகங்களிலும் தேநீர்ச்சாலைகளிலும் உருவாயின.பேல்பூரியுடன் தொடங்கும் மாலைப்
பொழுதுகள்.

"பேல்பூரி தட்டும் பெருங்கரண் டிச்சத்தம்
ஆள்நகர்ந்தாலும் அழைத்துவரும்"
என்று கவியன்பன் எழுத 
                                                    "-நாளுமே
முட்டை பரோட்டாவை முன்னெருவாய்ப் போட்டால்தான்
மொட்டவிழும் பாட்டு மலர்"

என்று நான் எழுதினேன்.
ஏதோவோர் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு,பழம் தின்ன பெட்டிக்கடை ஒன்றில் நின்றோம்.     
"பெட்டிக் கடைக்குப் பழம்வாங்கப் போனாலும்
   சுட்டிப்பெண் தோலாய் சிரிக்கின்றாள்"
என்று தொடங்கினேன்.உடனே எச்சரிக்கை வரிகளை எழுதினார் கவியன்பன்.
                                                                  "-எட்டநின்று
தோல்வாங்கும் ஆடாய் தெரிவதவள் அப்பன்தான்
கால்வாங்கிப் போவானே காண்".  

"மல்லிகைத் தோட்டாக்கள்" என்னுந் தலைப்பில் அவருடைய கவிதைத் தொகுதி வெளிவந்தது. முதுகலை படித்தார்.ஆசிரியர் பயிற்சி முடித்தார். ஆனால் அவருடைய திறமைக்கும் தகுதிக்கும் சம்பந்தமேயில்லாத விதமாய்
ஓர் அரசு அலுவலகத்தில் மிக எளிய பணியே வாய்த்தது.இதற்கிடையில்
திரைப்படப் பாடலாசிரியர் ஆகும் கனவில் சென்னை சென்று,தன் வாலிப
வயதின் வீறுகொண்ட நேரங்களை எரிபொருளாக்கி எரித்து, கோவை
மீண்டார். அந்த வலிமிகும் அனுபவங்களை "பட்டணம் போனேன் பாட்டெழுத"
என்ற தலைப்பில்,நான் நடத்திவந்த ரசனை இதழில் தொடராக எழுதினார்.  
          கோவை ஸ்ரீ அன்னபூர்ணா குழுமங்களிலிருந்து சிறுவாணிமெயில்
என்னும் வார இதழ் என் பொறுப்பில் வெளிவந்தபோது "தெரிந்த கோவை
தெரியாத கதை"என்னும் தலைப்பில் கவியன்பன் எழுதிய தொடர் பெரும்
வரவேற்பைப் பெற்றதுடன் விஜயா பதிப்பக வெளியீடாக நூல்வடிவமும்
பெற்றது.

ஆலைத் தொழிலாளியின் மகனாகப் பிறந்து,வறுமை காரணமாய் கல்லூரியில் நேரடியாகப் படிக்கும் வாய்ப்பை இழந்து கவிஞர்களின் கிரியா
ஊக்கியான காதல் தோல்வியில் துவண்டு,வளராத தாடியை வருடி,அடுத்த
காதல் அரும்பிய போது கவியன்பன் எழுதிய எண்சீர் விருத்தமொன்று எனக்கு
மிகவும் பிடிக்கும்.அந்தத் தேதிவரை அவர் வாழ்ந்த அவருடைய மொத்த வாழ்க்கையும் அதற்குள் அடக்கம்.

"செந்தாமரைச் செல்வி பிறப்பு தொட்டு
சேராமல் இருந்துவிட்டாள்;சொந்தமில்லை;
வெண்தாமரைச் செல்வி ஈரெட்டாண்டில்
விடைபெற்றாள்;போராடி அழைத்து வந்தேன்.
என்தாமரைச் செல்வி என்பாளுக்கோ
இரக்கமிலை;இமையவளே விழியைத் தின்றாள்;
வந்தவளே! நீயெந்தச் செல்வியம்மா?
வைகறையா?அஸ்தமனம்தானா நீயும்?"                                                                              
காலநடையில், பணிச்சுமை அழுத்தம்,குடும்பப் பொறுப்புகள் என்று வெவ்வேறு வேலைகளுக்கு நடுவில்முழுவீச்சில் கவியன்பனால் இயங்க
முடியவில்லை.சில மேடை நிகழ்ச்சிகளையும் தவிர்க்கும் நிலை ஏற்பட்டது.
சமீபத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கோவையில் நடத்திய முத்திரைக் 
கவியரங்கில் கலந்து கொள்ள அழைத்தேன்.வந்திருந்தார். கவியரங்கில்
மூன்று சுற்றுகள். மூன்றாவது சுற்றில் தன் தற்போதைய நிலையை
விளக்கும் விதமாய் மூன்று வெண்பாக்கள் வாசித்தார் கவியன்பன்.
முதல் வெண்பாவின் முதல் வரியே முழுவதையும் சொல்லிவிட்டது.

"ராசாங்க வேலைதான்;ராப்பிச்சை சம்பளம்"

அவை.அதிர்ந்து போனது.'ஆகா' என ஆரவாரித்து ரசித்தவர் ஆகாசம்பட்டு
சேஷாசலம்.வெண்பா மன்னர் .இந்த மூன்று வெண்பாக்களில் கவியன்பன்
கே.ஆர்.பாபுவின் அகம் புறம் அனைத்தும் தெரியும்.

ராசாங்க வேலைதான் ராப்பிச்சை சம்பளம்
காசுக்குப் போடுகிறேன் கைத்தாளம்-பேசியென்ன
அங்குசத்தைக் கும்பிடும் ஆனைபோல் ஆகினேன்
பொங்குவதால் நெஞ்சுக்குள் புண்.

பந்தயத்தில் ஓடிப் பதக்கம் பெறுவதற்கு
முந்திவரும் ஆசை முடங்கவில்லை-எந்தநாளும்
லாடச் செருப்பணிந்து லாயத்தில் நிற்கின்றேன்
கூடுமோ அந்தக் கனவு.

பக்கம் கரும்பாலை பர்லாங்கில் சோலையென்று
மொக்குமலர் தேடா மடத்தேனீ-பக்க(ம்)நின்று
கொப்பரையில் பாகெடுக்கக் குத்தாட்டம் போடுதே
எப்படித் தப்பும் இது.

 அங்குசத்தைக் கும்பிடும் ஆனையை,அதற்குரிய ஆரண்யத்தில்
சேர்ப்பிக்குமா காலம்?

Friday, April 19, 2013

ஷூட்டிங்கா?மீட்டிங்கா?


புகைப்படம்: வேற யாரு?அதுவும் அந்தச் சுகாதான்!!
                                                     
இந்தக் கேள்வியை 2005ல் முனைவர்.கு.ஞானசம்பந்தனிடம் கேட்பேன். "இப்போ ஷூட்டிங்தான்.நீங்க?"என்பார் பதிலுக்கு.நானும் ஷூட்டிங்தான் என்பேன். அப்போது நான் கஸ்தூரிமான் படத்தில் நடித்துக் (?) கொண்டிருந்தேன். பேராசிரியரும் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

பெரும் கடன் வாங்கி லோகிததாஸ் தயாரித்து இயக்கிய படம் கஸ்தூரிமான்.
எனக்கு அந்தப் படத்தில் கிடைத்த நல்லபெயர் யாருக்கும் கிடைத்திருக்காது.
"சே!எவ்வளவு நல்ல மனுசன்யா! கேமரா முன்னால கூட நடிக்கத் தெரியாத
அளவு எதார்த்தம்" என்று எல்லோரும் கண்ணீர் மல்க நினைத்தார்கள்.ஆனால்
பேராசிரியர் ஞானசம்பந்தனுக்கு அவ்வளவு நல்ல பெயர் இல்லை போலும்.
தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிவிட்டார்.

கஸ்தூரிமான் வெளிவந்து சில நாட்களில் சுரேஷ் (இயக்குநர் சுகா) அழைத்தார்."அண்ணே!சமீபத்தில் என்ன படம் பார்த்திங்க?"என்றார்.
"சுரேஷ்!இனிமே நான் நடிக்கிற படங்களை மட்டும்தான் பார்க்கிறதா
இருக்கேன்!"என்றேன்.எதிர்முனையில் நீண்ட மௌனம். "அண்ணே! இந்தக்
கேள்விய நான் வாபஸ் வாங்கிக்கிடுதேன்.இனிமே இந்தக் கேள்வியை ஒங்ககிட்டே கேட்டா என்ன வாரியலக் கொண்டு அடிங்கண்ணே!ரொம்ப
ஓவரால்லா இருக்கு!" என்று வைத்துவிட்டார். 

அந்த வரிசையில் இப்போது இன்னொருவர் சேர்ந்திருக்கிறார்.இசைக்கவி ரமணன். தொலைக்காட்சித் தொடர்களிலும் ஒரு திரைப்படத்திலும் நடித்து
வருகிறார். "ஷூட்டிங்கா?மீட்டிங்கா?"என்று கேட்டால், "இரண்டுமில்லை.
டப்பிங்" என்கிறார்.  இயக்குநர் பாலசந்தரின் தொடர் ஒன்றிலும் ராஜகுமாரி
தொடரிலும் நடித்து வருகிறார். ஒருநாள் இரண்டு தொடர்களுக்கும் நடிக்க
வேண்டிவந்து கால்ஷீட் பிரச்சினை வந்துவிட்டதாக ரமணன் சொன்னார்.

அப்போதுதான் சுகாவின் கடுப்பில் இருந்த நியாயம் எனக்குப் புரிந்தது.
ரொம்ப ஓவரால்லா இருக்கு என்று முணுமுணுத்தேன். சத்தமாகச் சொன்னால் அதையே சீரியலில் தன் பஞ்ச் டயலாக்காக ரமணன் அமைத்துக்
கொள்ளக்கூடும் என்று பயமாக இருந்தது.இசைக்கவி ரமணன் எழுதவே
எழுதாத "பாயாசம்..ஆயாசம்" பாடல்களை அவர் பெயரால் எழுதி இணையத்தில் உலவ விட்டுக் கொண்டிருக்கும் சுகா, பி.பி.ஸ்ரீநிவாஸ் பற்றி
ஆனந்த விகடனில் எழுதியுள்ள கட்டுரையை இசைக்கவி ரமணன் மிகவும்
பாராட்டிச் சொன்னார்.

"நான் பாராட்டினதுக்காக சுகா என்னைக் கிண்டல் பண்றதை நிறுத்தப் போறதில்லை. வெங்கடேஸ்வரன் பாராட்டினதுக்காக ரமணனை விட்டுட
முடியுமான்னு நினைப்பார்"என்றார் தருவை வெங்கடேஸ்வரன் எனும் ரமணன்.இசைக்கவி ரமணனின் பாடல்களுக்கு ரகசியமான ரசிகரான சுகா,
ரமணனை ஓட்டுவதை மட்டும் பகிரங்கமாக செய்வார்.ஏதேனும் ஒரு பாரதி விழாவில் ரமணன் "மறைந்திருந்து பார்க்கும்  மர்மமென்ன"என்று பாடினால்
எங்கோ ஒளிந்து அமர்ந்திருக்கும் சுகாவைப் பார்த்துவிட்டாரோ என்று
சந்தேகப்பட வேண்டி வரும்.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.அவர்களின் புதல்வர் வாலேஸ்வரன் அவர்களை சந்தித்துத் திரும்புகையில் அந்த சந்திப்பின்நெகிழ்வில் காரில் ரமணன் அழுதபடியே வந்தார். அவரளவுக்கு அந்தச் சந்திப்பில் நெகிழ்ந்து போயிருந்த போதும் சுகா என் காதோடு கேட்டது,"அண்ணே! இப்படி அழறாரே!
வயித்த வலிக்குதான்னு கேளுங்க!"அடுத்து சீரியல்களில் வரும் சோகக் காட்சிகளின் போது ரமணனுக்கு இந்த ஞாபகம் வந்து வெடித்துச் சிரித்து
இயக்குநர் சிகரத்திடம் ஏத்து வாங்கினால் சென்னை கடற்கரை சாலையில்
இருக்கும் நடிகர் திலகம் திருவுருவச் சிலைக்கு  108 தேங்காய் உடைப்பதாக
நானும் சுகாவும் நேர்ந்திருக்கிறோம்.

Saturday, April 13, 2013

செய்திகள் வாசிப்பது மரபின்மைந்தன் முத்தையா

(13.04.2013 அன்று நிகழ்ந்த முத்திரைக் கவியரங்கில் வாசித்த கவிதை)

வணக்கம்! தலைப்புச் செய்திகள்..தனியாய் இல்லை!
துச்சாதனனின் இழுப்பில் வளர்ந்த
திரௌபதி புடவைத் தலைப்பைப் போல
மலைக்கவும் வைத்து களைக்கவும் வைக்கும்
நடப்புகள் நாட்டில் நிறைய நடப்பதால்
தலைப்புச்  செய்திகள் தனியாய் இல்லை.
                                 **
தேங்கிப் போன கோப்புகளுக்குள்
ஏங்கிக் கிடக்கும் ஏழை உயிர்களை
எதுவும் செய்யலாம் என்கிற ஆணையை
புதிதாய் இன்று பிறப்பித்துள்ளனர்.
                                **
வாழ்வா சாவா விடுகதைப் புதிரில்
பூவா தலையா போட்டுப் பார்த்து
முடிவு கட்டும் முடிவை எடுக்கவும்
புதிய சட்டம் பிறப்பித்துள்ளனர்
                            
தள்ளி வைத்துக் கொள்ளி வைக்கவும்
நிலுவையில் போட்டு சிலுவையில் போடவும்
ஜனநாயகத்தில் உரிமை இருப்பதாய்
தனிநாயகங்கள் தெரிவித்துள்ளனர்
                             **
தேசம் முழுவதும் தீவிர வாதிகள்
ஊடுருவி யிருப்பதாய் உளவுத்துறையினர்
கூறியிருப்பதைக் கருத்தில் கொண்டு
தீவிரவாதிகளைத் தனித்தனியாகத்
தேடிப் பிடிக்க நேரமில்லாததால்
தேச மக்கள் எல்லோரையுமே
மொத்தமாகக் கைது செய்து
பத்திரப்படுத்தவும் பரிந்துரை உள்ளது
                          **
எரிபொருள் விலையின் ஏற்றத்தாலே
பெட்ரோல் டீசல் குண்டுகள் செய்ய
மானியம் வழங்க வேண்டுமென்று
குண்டர்கள் மாநாடு கோரிக்கை வைத்தது
                         **
விளம்பர இடைவேளைக்குப் பிறகு செய்திகள் தொடரும்...

கறை நல்லது....கறை நல்லது...
கறைபடிந்த கைகள் நாட்டுக்கு நல்லது
கறைபடிந்த நெஞ்சம் பொதுவாழ்வுக்கு நல்லது
கறைபடிந்த பேச்சு மேடைக்கு நல்லது
கறைபடிந்த காற்று மூச்சுக்கு நல்லது

செய்திகள் தொடர்கின்றன

காணாமல்போன நடிகையைத் தேட
காவல்துறையினர் முயற்சிசெய்யாமல்
திருட்டை ஒழிக்கவும் கொலைகள் தடுக்கவும்
சட்டம் ஒழுங்கை நிலைபெறச் செய்யவும்
நேர விரயம் செய்துகொண்டிருப்பதாய்
நடிகர்கள் சிலபேர் கண்டனம் செய்தனர்
                   **
செத்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக
பத்து நிமிட உண்ணா விரதத்தை
கட்சித் தலைவர் முடித்ததை ஒட்டி
பத்து லிட்டர் பழரசக் கோப்பையைக்
கொண்டு சென்ற குண்டுப் பெண்மேல்
கட்சிக் காரர்கள் கற்கள் வீசினர்
                 **
பயமிலாக் கண்கள்;போர்த்திய அங்கி
பிஞ்சு இதழ்களில் பிஸ்கட் துகள்கள்;
கோலம் இதனில் காட்சி கொடுத்த
பாலசந்திரனின் புகைப்பட உருவம்
கனவில் வந்து கலக்குவதாலே
ரணப்பட்டுப் போன ராஜபக்ஷே
இலங்கை முழுவதும் பிஸ்கட் விற்பதைத்
தடைசெய்திருப்பதாய் தகவல் வந்துள்ளது
              **
இனி வணிகச் செய்திகள்....

இதுவரை வாசித்த அரசியில் செய்திகளே
வணிகச் செய்திகள் வரிசையில் வருவதால்
தனியாய் அவையும் தேவையில்லை
             **

அடுத்து...வானிலை அறிக்கை

இந்த லட்சணத்தில் இந்தியா இருக்கையில்
எந்த நம்பிக்கையில் இருக்கிறீர்கள்...
மழை வருமென்று??

செய்திகள் நிறைவடைந்தன ....வணக்கம்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
அமாவாசை நள்ளிரவில் ஆகாயம் பாருங்கள்....
  
 

Friday, April 5, 2013

இருக்கின்றாள் என்ற ஒன்றே


பவானி  பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பில் பேராசிரியர் வெற்றிவேல் பேசினார்."எங்க ஆண்டுவிழாவுக்கு வர ஒத்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க. உங்களை பவானிக்கு அழைத்து வர நம்ம மாணவர் ஒருவர் வருவாருங்க".பல கல்லூரிகள் சிறப்பு விருந்தினரை அழைத்து வர கல்லூரி
விரிவுரையாளர்களையோ மாணவர்களையோ அனுப்புவது வழக்கம்தான்.சற்று நேரத்தில் மகேந்திரன் என்றொருவர் பேசினார். மறுநாள்
காலை எட்டரை மணியளவில் வருவதாகத் தெரிவித்தார். வந்த "மாணவர்" வயது நாற்பதுக்கு மேலிருக்கும். பிறகுதான் தெரிந்தது, அந்தப்
பேராசிரியரின் முன்னாள் மாணவர் மகேந்திரன் என்று.
காளப்பட்டியில் செங்கல் சூளை வைத்திருக்கும் மகேந்திரனுக்கு ஒரு பேராசிரியருக்கே உரிய கண்டிப்பான முகம். காரைக்கிளப்பி இருபது
நிமிடங்கள் ஆகியும் அறிமுகம் நிகழ்ந்தமைக்கான முதல் புன்னகையைக் கூட அவர் வழங்கியிருக்கவில்லை.காரை நிதானமாக ஓட்டிக்
கொண்டு ஸ்லோ மோஷனில் சில வார்த்தைகளை சொல்லிக் கொண்டே வந்தார். இவருடன் பவானி வரை எப்படி போகப் போகிறோம்
என்ற எண்ணம் தோன்றி சில நிமிஷங்களிலேயே அவருடைய பேச்சில் சூடு பிடித்தது. அதற்குக் காரணம், அவரைப் போலவே நானும்
காபி பிரியன் என்பது பேச்சுவாக்கில் வெளிப்பட்டதுதான். தன்னுடைய முதல் புன்னகையை எனக்கு வழங்கினார்.தன் தொழில் பற்றி,
தான் சந்தித்த துரோகங்கள் பற்றி தன் இளமைக்கால வாழ்க்கை பற்றி விரிவாகப் பேசத் தொடங்கினார்.
சின்ன வயதில் வழிகாட்ட யாருமில்லாமல் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு வளர்ந்தவர் மகேந்திரன். பாலிடெக்னிக் ஒன்றில்
பயின்ற அந்த கிராமத்து இளைஞருக்கு மூத்தோர் சொல் அமிர்தம் என்ற சூத்திரம் எப்படியோ பிடிபட்டிருந்தது.அறிவிலும் அனுபவத்திலும்
மேம்பட்டவர்கள் சொன்னதையெல்லாம் ஆர்வமாக உள்வாங்கி வளர்ந்தவர் என்பது தெரிந்தது. பாலிடெக்னிக் படிப்பின் முதல்நாளில்,
கிராமத்து இளைஞர்கள் அழிப்பானை "'லப்பர்" என்று சொல்லிக் கொண்டிருந்ததை மாற்றி "எரேஸர்" என்று சொல்லக் கற்றுக் கொடுத்த
ஆசிரியரின் அறிவுரை தொடங்கி எல்லாமே மகேந்திரனுக்கு ஞாபகமிருந்தது.

முதல் பார்வைக்குக் கரடுமுரடாகத் தெரியும் மகேந்திரன் வெள்ளந்தியான மனிதர் என்பது மெல்ல மெல்ல விளங்கியது.அவினாசி
நெடுஞ்சாலையை கார் கடந்து கொண்டிருந்தது.பக்கத்து கிராமங்களின் பாதைகள் இடைவெட்டாக நெடுஞ்சாலைக்குள் நுழைந்து
கொண்டிருந்தன."நெடுஞ்சாலைக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் இருநூறு இருநூறு ரேஷன் கார்டுக இருந்தா ஒரு பாலம்
கட்டோணும் சார். செலவாகுமுண்ணு காசைக் கொடுத்து என்.ஓ.சி. வாங்கீட்டாங்க. அதனாலதான் ஏகப்பட்ட ஆக்ஸிடெண்ட்"
என்பது போன்ற நுட்பமான விஷயங்களைச் சொன்ன மகேந்திரன் தனக்குத் தெரிந்த எதையும்  வீண் செய்யவில்லை.

தன் மகள் மித்ரா பிரி.கே.ஜி. போகும்போதே 'எரேஸர்' என்று சொல்லக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.வகுப்பில் எரேஸர் கேட்ட
மித்ராவின் அறிவில் மயங்கிய ஆசிரியை கொடுத்த பாராட்டு முத்தம், பாரதரத்னா விருதை விட பெரிய விஷயம்தானே
மித்ராவுக்கு!பிஞ்சு வயதிலேயே சாலை விதிகளின் நுட்பங்களைப் பற்றி அப்பாவிடம் தெரிந்து கொண்டு மாமாக்களுக்கும்
சித்தப்பாக்களுக்கும் தகுந்த நேரங்களில் மித்ரா உபதேசித்து வருவதைச் சொல்லும் போது மகேந்திரன் முகத்தில் மலர்ந்தது
அந்த நாலின் முதல் பூ. நெடுஞ்சாலையெங்கும் முளைத்திருக்கும் கும்பகோணம் டிகிரி காபி கடை ஒன்றில் பித்தளை
டபரா செட்டும் கையுமாக அமர்ந்திருந்தோம்.அந்தக் கடை அன்றுதான் திறப்புவிழா கண்டிருந்தது.
அவினாசி சாலையிலும் திருச்சி சாலையிலும் மேட்டுப்பாளையம் சாலையிலும் கும்பகோணம் டிகிரி காபி கிடைக்கும்
இடங்களை இடம் சுட்டிப் பொருள் விளக்கிய மகேந்திரன் அந்தக் கடைக்காரரிடம் பாலின் அடர்த்திஎப்படி இருக்க வேண்டுமென்று
சிறு வகுப்பு நடத்திவிட்டே புறப்பட்டார்.கூட்டம் முடிந்து திரும்பும் வழியிலும் நல்ல பால்கோவா கிடைக்கும் இடத்தையும்,
ஹோல்சேல் விலையில் தரமான கோதுமை விற்கக்கூடிய ஆலை ஒன்றின் பிரத்யேக கடையையும் எனக்குக் காட்டித் தந்தார்.
அலுவலகத்தில் இறக்கிவிட்ட மகேந்திரனிடம் மித்ராவுக்கு தரச்சொல்லி கான்ஃபிடன்ஸ் கார்னர் புத்தகம் பரிசளித்தேன்.
அதற்குப் பிறகு அவரிடம் பேசும் தருணம் வாய்க்கவில்லை. சில நாட்களுக்கு முன் எங்கள் அலுவலகம் அருகில் வாசலில்
அவசர ஷாமியானா போடப்பட்டிருந்த வீடொன்றின் வாசலில் செல்ஃபோனும் கையுமாய் பெருங்கூட்டம் நடுவே மகேந்திரன்தட்டுப்பட்டார்.
சூழல் சரியாய் இல்லாததால் நின்று பேசுவதைத் தவிர்த்தவன், இரண்டு நாட்கள் கழித்து மகேந்திரனைத் தொலைபேசியில்
அழைத்தேன். "ரெண்டு நாளு முன்னே ஏதோ பெரிய காரியத்தில இருந்தீங்க போல" என்றேன். கொங்குப் பகுதியில் மரணங்களைப்
பெரிய காரியம் என்று சொல்வது வழக்கம்."ஆமாம் சார் ! சூசைடு பண்ணீட்டாருங்க!" என்றார். பதைத்துப்போய் "யார்" என்று கேட்டபோது
மகேந்திரன் சொன்னார்,"சம்சாரத்துக்கு இதய நோய் வந்துடுச்சுன்னு வெக்ஸ் ஆயி தூக்கு மாட்டீட்டாருங்க! எங்க தாத்தா தானுங்க!
அம்மாவுக்கு அப்பா! வயசு 102ங்க! பாட்டிக்கு வயசு 94"!
மறைந்த பெரியவர் பெயர் ரங்கசாமி என்பதும் அவர் மனைவி பெயர் ரங்கநாயகி என்பதும் உபரித் தகவல் .

பாரதிதாசனின் முதியோர் காதல் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.
"புதுமலர் அல்ல மேனி;புற்கட்டே அவளுடம்பு
மதிமுகம் அல்ல வறள்நிலம் குழிகள் கண்கள்
சதுராடும் நடையாள் அல்லள்:தள்ளாடி விழும் மூதாட்டி
எது எனக்கின்பம் நல்கும்? இருக்கின்றாள் என்ற ஒன்றே!"

Thursday, April 4, 2013

தெய்வம் தெரிகிறது


 வானம் எனக்கென வரைந்து கொடுத்த
 வரைபடம் ஒன்றுண்டு
நானே என்னைத் தேடி அடைந்திட
நேர்வழி அதிலுண்டு
ஊனெனும் வாகனம்   ஓட்டி மகிழ்வது
ஒருதுளி உயிராகும்
ஏனென்றும் எங்கென்றும் யார்தான் கேட்பது
எங்கோ அதுபோகும்
 
காலம் அமைக்கிற சாலைகள் எல்லாம்
காலுக்குச் சுகமில்லை
ஆலாய்ப் பறந்து அடைந்தவை போலே
வேறெதும் சுமையில்லை
நீலம் பரவிய வானிலிருந்து
நகைப்பது கேட்கிறது
ஆலம் பரவிய கண்டத்திலிருந்து
அதுவாய் எழுகிறது
 
மாற்று வழிகளில் புகுந்தவன் வந்தேன்
மறுபடி கருப்பைக்கு
நேற்று வரைக்கும் நான்செய்த எல்லாம்
நிரம்பும் இரைப்பைக்கு
கீற்றென எழுகிற வெளிச்சத்தின் வகிடு
கிழக்கே நீள்கிறது.
ஊற்றெழும் அமுதம் ததும்பும் கோப்பை
உள்ளே வழிகிறது

பொன்னை எண்ணிப் பூமியைத் தோண்ட
பூதம் வருகிறது
ஜன்னல் மூடிய நெஞ்சுக்குள்ளே
புழுக்கம் நிறைகிறது
தன்னைக் கொஞ்சம் தள்ளி வைத்தால்
தெய்வம் தெரிகிறது
மின்னல் கொஞ்சும் முகிலாய் ஆனால்
மழையாய்ப் பொழிகிறது

ஆகாயத்தின் வரைபடம் புரிந்தால்
அடிகள் வைத்திடலாம்
பாகாய் உருகும் பக்குவம் வந்தால்
பாரை அளந்திடலாம்
நோகச் சொன்ன வார்த்தைகள் கனிந்து
நேயம் கமழ்ந்திடலாம்
வேகம் தணிந்து வேட்கை அவித்தால்
வேதம் விளங்கிடலாம்