Saturday, April 13, 2013

செய்திகள் வாசிப்பது மரபின்மைந்தன் முத்தையா

(13.04.2013 அன்று நிகழ்ந்த முத்திரைக் கவியரங்கில் வாசித்த கவிதை)

வணக்கம்! தலைப்புச் செய்திகள்..தனியாய் இல்லை!
துச்சாதனனின் இழுப்பில் வளர்ந்த
திரௌபதி புடவைத் தலைப்பைப் போல
மலைக்கவும் வைத்து களைக்கவும் வைக்கும்
நடப்புகள் நாட்டில் நிறைய நடப்பதால்
தலைப்புச்  செய்திகள் தனியாய் இல்லை.
                                 **
தேங்கிப் போன கோப்புகளுக்குள்
ஏங்கிக் கிடக்கும் ஏழை உயிர்களை
எதுவும் செய்யலாம் என்கிற ஆணையை
புதிதாய் இன்று பிறப்பித்துள்ளனர்.
                                **
வாழ்வா சாவா விடுகதைப் புதிரில்
பூவா தலையா போட்டுப் பார்த்து
முடிவு கட்டும் முடிவை எடுக்கவும்
புதிய சட்டம் பிறப்பித்துள்ளனர்
                            
தள்ளி வைத்துக் கொள்ளி வைக்கவும்
நிலுவையில் போட்டு சிலுவையில் போடவும்
ஜனநாயகத்தில் உரிமை இருப்பதாய்
தனிநாயகங்கள் தெரிவித்துள்ளனர்
                             **
தேசம் முழுவதும் தீவிர வாதிகள்
ஊடுருவி யிருப்பதாய் உளவுத்துறையினர்
கூறியிருப்பதைக் கருத்தில் கொண்டு
தீவிரவாதிகளைத் தனித்தனியாகத்
தேடிப் பிடிக்க நேரமில்லாததால்
தேச மக்கள் எல்லோரையுமே
மொத்தமாகக் கைது செய்து
பத்திரப்படுத்தவும் பரிந்துரை உள்ளது
                          **
எரிபொருள் விலையின் ஏற்றத்தாலே
பெட்ரோல் டீசல் குண்டுகள் செய்ய
மானியம் வழங்க வேண்டுமென்று
குண்டர்கள் மாநாடு கோரிக்கை வைத்தது
                         **
விளம்பர இடைவேளைக்குப் பிறகு செய்திகள் தொடரும்...

கறை நல்லது....கறை நல்லது...
கறைபடிந்த கைகள் நாட்டுக்கு நல்லது
கறைபடிந்த நெஞ்சம் பொதுவாழ்வுக்கு நல்லது
கறைபடிந்த பேச்சு மேடைக்கு நல்லது
கறைபடிந்த காற்று மூச்சுக்கு நல்லது

செய்திகள் தொடர்கின்றன

காணாமல்போன நடிகையைத் தேட
காவல்துறையினர் முயற்சிசெய்யாமல்
திருட்டை ஒழிக்கவும் கொலைகள் தடுக்கவும்
சட்டம் ஒழுங்கை நிலைபெறச் செய்யவும்
நேர விரயம் செய்துகொண்டிருப்பதாய்
நடிகர்கள் சிலபேர் கண்டனம் செய்தனர்
                   **
செத்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக
பத்து நிமிட உண்ணா விரதத்தை
கட்சித் தலைவர் முடித்ததை ஒட்டி
பத்து லிட்டர் பழரசக் கோப்பையைக்
கொண்டு சென்ற குண்டுப் பெண்மேல்
கட்சிக் காரர்கள் கற்கள் வீசினர்
                 **
பயமிலாக் கண்கள்;போர்த்திய அங்கி
பிஞ்சு இதழ்களில் பிஸ்கட் துகள்கள்;
கோலம் இதனில் காட்சி கொடுத்த
பாலசந்திரனின் புகைப்பட உருவம்
கனவில் வந்து கலக்குவதாலே
ரணப்பட்டுப் போன ராஜபக்ஷே
இலங்கை முழுவதும் பிஸ்கட் விற்பதைத்
தடைசெய்திருப்பதாய் தகவல் வந்துள்ளது
              **
இனி வணிகச் செய்திகள்....

இதுவரை வாசித்த அரசியில் செய்திகளே
வணிகச் செய்திகள் வரிசையில் வருவதால்
தனியாய் அவையும் தேவையில்லை
             **

அடுத்து...வானிலை அறிக்கை

இந்த லட்சணத்தில் இந்தியா இருக்கையில்
எந்த நம்பிக்கையில் இருக்கிறீர்கள்...
மழை வருமென்று??

செய்திகள் நிறைவடைந்தன ....வணக்கம்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
அமாவாசை நள்ளிரவில் ஆகாயம் பாருங்கள்....