Tuesday, July 29, 2014

கள்வன் சொல்லும் கதை




வான்மீக உயரத்தில் ஒரு வாக்கியத்தையேனும்
வடித்துக் கொடுக்கும் விருப்பத்தோடு
தான்கண்ட வாழ்வைத் திறந்து வைக்க
எத்தனித்தஅதே நேரத்தில்,

தெய்வ மாக்கவி பட்டம் எல்லாம்
எட்டா உயரம் என்பதை உணர்ந்து...
பெயருக்கு முன்னால் திருடன் என்று
பெருமையும் பணிவும் பொங்கப் பொங்க
போட்டுக் கொள்ளும் பக்குவம் கருதியே....
பாராட்டு விழாவும் பட்டமளிப்பும்
பார்த்துப் பார்த்து செய்யலாம் தானே....

திருடன் மணியன் பிள்ளைக்கு...


Monday, July 28, 2014

அதிரா நரம்பு


மகர யாழொன்று மீட்டக் கிடைக்கையில்
விரல்கள் ஏனோ வித்தை மறந்தன;
கவிழும் மௌனம் கனன்று கனன்று
சுரங்கள் நடுவே சலன பேதம்;
நொடிகளின் தளர்நடை நீண்டுகொண்டிருக்க
முடிவுறாக் காலம்முனகிக் கடந்தது;
சிகர நுனியில் சீறும் மேகம்
அடிவாரத்தில் புல்வெளித் தாகம்;
கொன்றை செண்பகம் கொஞ்சும் வனத்தில்
நின்று தவித்தது நிலைகொளாத் தனிமை;
துயிலின் விளிம்பில் நழுவும் பொம்மையைப்
பற்றுமுன் சோரும் பிஞ்சு விரல்கள்
பற்றியிழுத்துப் புறப்படுமென்று
அலங்காரத்தேர் அங்கே நின்றது...
இழுத்துப் போர்த்திய இருளை உதற
அழுத  இரவு அஞ்சிக் கிடக்க,
வழக்கை ஒத்தி வைக்கிற விதமாய்
கிழக்கே தெரிந்தது கீற்று வெளிச்சம்...
கலைத்தந்தை கருமுத்து தியாகராசர் அறக்கட்டளை சார்பில்,மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் ஜுலை30 மற்றும் 31 ஆகிய நாட்களில் மதுரை தியாகராசர் கல்லூரியில் என் உரைகள் நிகழ்கின்றன..அழைப்பிதழ் இத்துடன்..அருகிலிருக்கும் நண்பர்கள் வாய்ப்பிருப்பின் வருகைதர வேண்டுகிறேன்..

Saturday, July 26, 2014

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் எழுதிய கவிதை


கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் முதுகு வலி காரணமாக கோவை கங்கா மருத்துவமனையில் ஜுலை 22 அன்று அனுமதிக்கப்பட்டார். முதுகுவலி மற்றும் மூட்டு அறுவை சிகிச்சையில் உலகப் புகழ் பெற்ற மருத்துவர் திரு.எஸ்.ராஜசேகர் ஜூலை 23 அதிகாலை அறுவை சிகிச்சை நிகழ்த்தினார்.

மூன்றே நாட்களில் முழுமையாக குணமடைந்த கவிஞர்,இன்று மாலை (ஜுலை 26) மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார்.இன்று காலை கங்கா மருத்துவமனையை வாழ்த்தி கவிஞர் எழுதிய கவிதை தத்ரூபா கிராஃபிக்ஸ் நிறுவனத்தாரால் வடிவமைக்கப்பட்டு மருத்துவர் திரு.ராஜசேகரிடம் வழங்கப்பட்டது.

கங்கா மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜே.ஜி.சண்முகநாதன்,திருமதி கனகவல்லி சண்முகநாதன் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் திரு.ம.கிருஷ்ணன் மற்றும் மருத்துவமனையின் நூற்றுக்கணக்கான அலுவலர்களும் மருத்துவர்களும் செவிலிகளும் திரண்டு வந்து கவிஞரை வாழ்த்தி வழியனுப்பினர்.
அந்தக் கவிதை இது..
  விடைபெறும் முன்னர் மருத்துவர்கள் குழுவிற்கு பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கினார் கவிஞர்.

மருத்துவர் ராஜசேகர் கேட்டுக் கொண்டபடி கவிதையின் நகலில் கையொப்பமிட்டுத் தருகிறார் கவிஞர்.அருகில் மருத்துவமனை தலைவர் டாக்டர்.ஜே.ஜி.சண்முகநாதன்