Friday, January 25, 2013

ஓடாத்தூர்.மு.அர்ச்சுனன்



பெரிய கல்வி நிறுவனங்களை உருவாக்கி வைத்திருக்கும் ஒருவர்,மதுரைக்குப் போகும் வழியில் தன் அலுவலர் ஒருவரிடம் சிலவற்றை சொல்வதற்காக அலைபேசியில் அழைத்திருக்கிறார்."மதுரைக்குப் போகாதேடீ"என்ற பாடல் ஒலித்ததும்
அதிர்ந்து போன அவருக்கு சொல்ல வந்தது மறந்துபோனது.

அவர் மதுரைக்குப் போனார்.அந்த அலுவலர் அடுத்த நிமிடமே அந்தப்
பாட்டை மாற்றிக் கொடுக்குமாறு கேட்டு அந்த அலைபேசி நிலையத்துக்கே
போனார்.ஒருகாலத்தில் நான் மதுரைக்கு மாதம் ஒருமுறையாவது போவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதாவது
தொண்ணூறுகளின் தொடக்கத்தில்....

ஒரே நேரத்தில் கொத்துக் கொத்தாய் எனக்கு இலக்கிய நண்பர்கள் ஏகத்துக்குக் கிடைத்தது மதுரையில்தான்.மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில்
இருக்கும் ஹோட்டல் பிரேம்நிவாஸ் என் வழக்கமான வாசஸ்தலமாக
மாறியிருந்தது. அப்போதெல்லாம் அங்கே அடிக்கடி வந்து தங்குபவர்களில்
திரு.தமிழருவி மணியன் குறிப்பிடத்தக்கவர்.

பிரேம்நிவாஸ் ஹோட்டல்
மனிதத்தேனீ இரா.சொக்கலிங்கம், திரு.பாபாராஜ்,திரு.வீரபாண்டியத்
தென்னவன் என்று நீளுமந்தப் பட்டியலில் முக்கியமான இரண்டு பேர்கள்
கவிஞர் மு.அர்ச்சுனனும் கவிஞர் இரா.பொற்கைப் பாண்டியனும்.
இவர்களில் அர்ச்சுனன் புதுக்கவிஞர்.சங்க இலக்கியம் தொடங்கி சமகால
இலக்கியம் வரை நல்ல வாசிப்பும் விமர்சனமும் உள்ளவர்.பொற்கை
பிடிவாதமான மரபுக்கவிஞர்.சுவைமிக்க கவிதைகளை வடிப்பவர்.

மதுரைக்கு நான் வரும்போதெல்லாம் இவர்கள் இருவருமே என்னுடன்
அதிகநேரம் இருப்பார்கள். இருவருக்குமான பொதுக்குணம், வெள்ளந்தியாகப் பழகும் இயல்பு.கூர்மையான இலக்கியப் பார்வையும்,
அதனினும் கூர்மையான நகைச்சுவையும் அர்ச்சுனனின் இயல்புகள்.
ஒரு நகைச்சுவையை அதன் கடைசிச் சொட்டு வரையில் உள்வாங்கி,
அதற்குரிய முழுமையான சிரிப்பை உடல் குலுங்க,கண்கள் கலங்க,
கொட்டிவிட்டு,தன் சிரிப்பின் எதிரொலியாகத் தொடர்ந்து சிரித்துக்
 கொண்டிருப்பார். அவர்களெல்லாம் சேர்ந்து நற்கூடல் இலக்கியக் கழகம்
என்னும் அமைப்பை நடத்திக் கொண்டிருப்பார்கள்.

ஓடாத்தூர்.மு.அர்ச்சுனன்
வித்தியாசமான சூழல்களைச் சொல்லி பாடல்கள் எழுதச் சொல்வார் அர்ச்சுனன்.அவர் சொல்கிற கதைச்சூழல்கள் கறுப்புவெள்ளை காலத்துக்
காட்சியமைப்பாக இருந்தாலும் மிகவும் சுவாரசியமாக இருக்கும். என்னை
"முத்தையன்"என்றழைக்கும் வெகுசில நண்பர்களில் அவரும் ஒருவர்.
"முத்தையன்! இது நடந்த சம்பவம்னே வெச்சிகிடுங்களேன்.ஒரு பஸ்
கிளம்பப் போகுது. ஒரு சீட்லே ஒரு பொம்பளை.பஸ் நகரத் தொடங்கற
போது இன்னொரு பொம்பளை ஓடிவந்து ஏறி அவ பக்கத்திலேயே
உட்கார்றா.

ஒருத்தர ஒருத்தர் பார்த்துகிட்டு அதிர்ச்சியாகறாங்க. விஷயம் என்னன்னா,
ரெண்டு பேரும் கோர்ட்டுக்குதான் போறாங்க.ஒரு கொலைக்கேசில அன்னைக்கு தீர்ப்பு. ஒருத்தி,செத்தவனோட பொண்டாட்டி. இன்னொருத்தி
வெட்டினவனோட பொண்டாட்டி. அசந்தர்ப்பமா நடந்துபோன விசயம்.
ஒருத்தி இறுக்கமா இருக்கா. முகத்தில பழி வாங்கற உணர்ச்சி. இன்னொருத்தி அழுதுகிட்டே வர்றா. புருஷன் தப்பிக்கணுமேங்கிற ஏக்கம்.
இப்ப பாட்டு தொடங்கணும். கோர்ட் வாசல்லே பஸ் நிக்கறப்போ பாட்டு
முடியணும்.எழுதுங்களேன்!"என்பார்.

"கட்டிய துணியையும் மீறி-அதோ
 கண்ணீர் வடிக்குது நீதி
ஒருவிழி விடுத்லை தேடி
மறுவிழிக்கென்னடி சேதி "

என்ற பல்லவியுடன் தொடங்கி எழுதிய அந்தப் பாடலின் கடைசிச் சரணம்
மட்டும் இப்போது நினைவிருக்கிறது.

"கணவனை இழந்த கண்ணகி கொதிப்பு
 கோப்பெருந்தேவி தவிக்கிற தவிப்பு
ஒவ்வொரு மனதிலும் ஒரு எதிர்பார்ப்பு
யாருக்கு வருமோ இன்றைய தீர்ப்பு ".

அர்ச்சுனனுக்கு "ஆஹா"என்றும் சொல்ல வராது. "ஆகா!ஆகா!" என்பார்.
அவர் சொன்ன இன்னொரு கதைச்சூழல்."முத்தையன். ஒரு கிராமத்துப்
பொண்ணுக்கு வேற ஒரு ஆளோட காதல். அவ மாமன் குடிகாரன்.
மகா முரடன்.இவளைக் கட்டிவைக்கச் சொல்லி மிரட்டிகிட்டே இருக்கான்.
அம்மாகாரி படுத்த படுக்கையா கெடக்கா. அண்ணனும் அந்த மாமனுக்குதான் சப்போர்ட்டு.ஒருநா ராத்திரி காதலனோட ஒடிப் போக
அந்தப் பொண்ணு முடிவெடுத்து பெட்டியோட வெளிய வர்றா.அண்ணன்
ஊரில இல்லை. உள்ளறையிலே அவங்க அம்மா உயிர் பிரியுது."அத்தே!
போயிட்டீகளே"ன்னு அந்தப் பொண்ணோட அத்தாச்சி  அழுவுற சத்தம்
கேக்குது.

நின்னா கொஞ்ச நாளிலே மாமனுக்குக் கட்டி வெச்சுடுவாங்க.நிக்கறதா,
போறதா,நிக்கறதா,போறதாங்கிற போராட்டத்தில அழுதுகிட்டே பெட்டியோட நடக்கறா. இதுக்கு தொகையறாவோட ஒரு பாட்டு வேணும்.
சீர்காழி பாடற மாதிரி உச்ச ஸ்தாயியில தொகையறா இருக்கணும்" என்றார்
அர்ச்சுனன். ஏதோ பொழுதுபோக்குக்காக கதைச்சூழல் சொல்கிறோம் என்கிற எண்ணம் அவருக்கு இருக்காது. மாலையே பாடல் ஒலிப்பதிவு
செய்து,மறுநாளே படப்பிடிப்பு என்பது போன்ற தீவிரமான முகபாவனையில் இருப்பார்.

"கருவோடு சுமந்த அன்னை காற்றோடு கலந்தாள்
 உருவாகி வந்தமகள் தெருவோடு நடந்தாள்
 வந்தமகள் கதறுகிறாள் சொந்தமகள் விலகுகிறாள்
 கண்ணீரின் காவியத்தை காலமகள் எழுதுகிறாள்"

என்ற தொகையறாவும்,

"கோயிலைப்போய் மலர்சேரும் காலமல்லவா
 கொடிசாய்ந்து கிடக்கிறதே பாவமல்லவா"
என்று தொடங்கும் பல்லவியின் இரண்டு வரிகளும் மட்டுமே இப்போது
ஞாபகத்திலிருக்கின்றன.

ஓடாத்தூர் கிராமத்தில் முழுநேர விவசாயியாக இருந்த அர்ச்சுனன் வான்
பொய்ப்பினும் தான்பொய்யா வையையும் பொய்த்த சூழலில் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றின் கள ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்லும் வேலையில் அமர்ந்தார். ஆனால் தன் இலக்கிய ஆய்வுகளை
நிறுத்திக் கொள்ளவேயில்லை. அவ்வப்போது வீட்டுக்கு வருவார். அலைபேசுவார்.ஊரில் உருப்படியான காரியம் ஒன்றை செய்து வருகிறார்.
மாலை வேளைகளில் பக்கத்து கிராமங்களுக்குப் போகிறார்.இளைஞர்களையும் விவசாயிகளையும் திரட்டுகிறார்.அவர்கள்
மொழியில் சங்க இலக்கியம் பற்றிப் பேசுகிறார்."சங்கப்பறவை" என்ற தலைப்பில் இதனைத் தொடர்ந்து செய்து வருகிறார்.


கவிஞர் கண்ணதாசனைப் பற்றிய அவருடைய புத்தகம்
ஒன்றினை கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டது. கோவையில்
கவியரசு கண்ணதாசன் நினைவுநாள் விழா ஒன்றில் பேசிவிட்டு ஊருக்குப்
போனார் அர்ச்சுனன்.

சில மாதங்களுக்குப் பின்னர் அழைத்தார்.ஊரில் நடந்த கலவரம் ஒன்றில்
அர்ச்சுனனின் கால் வெட்டுப்பட்டது. உடனடி சிகிச்சையால் சில வாரங்களில்
ஒன்றுசேர்ந்தாலும் சில மாதங்கள் படுக்கையிலேயே இருந்தார். "என்னோட
சுயமுயற்சி இருந்தாத்தான் நடக்க முடியும்னு டாக்டருங்க சொல்லீட்டாங்க
முத்தையன். வெட்டின பயகளும் வேண்டிய பயகதான்.என்ன செய்ய. "சரிசரி
போங்கடா"ன்னு சொல்லீட்டேன்.இனிமே நடக்கறதுலதான் கவனம் செலுத்தணும்.
கண்ணதாசன் வசனங்களைப் பத்தி ஒரு புத்தகம் எழுதணும்".

அடுக்கிக் கொண்டே போன அர்ச்சுனனிடம் சொன்னேன். "விடுங்க அர்ச்சுனன்.இந்த சம்பவத்தை மறந்துட்டு முன்ன மாதிரி நடக்கணும்ங்கிறதில
உறுதியா இருங்க.உங்களுக்காகவே கவிஞர் தில்லானா மோகனாம்பாளில
ஒருவரி எழுதியிருப்பார். "நடந்ததெல்லாம் மறந்திருப்போம்.நடப்பதையே
நினைத்திருப்போம்"னு!" என்றதும் அதிர்ந்து சிரித்த அர்ச்சுனன்,"ஆகா!ஆகா!"
என்றார்.    

Thursday, January 24, 2013

கோயம்புத்தூர் விழாவில் இலக்கிய மாலை

கோவையின் எழுத்தையும் பண்பாட்டையும் கொண்டாடும் திருவிழா....               கண்டிப்பா வாங்க!!

எம்.எஸ்.உதயமூர்த்தி-எழுத்தின் எழுச்சி


ஓவியம் :திரு.ஜீவா

தமிழ்நாடு உணவகத்தின் கூட்ட அரங்கில் ஏராளமானவர்கள் கூடியிருந்தார்கள்.பெரும்பாலானவர்கள்கோவையையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் சேர்ந்த கல்லூரி மாணவர்கள்.அனைவரும் அடிக்கடி வாயிலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வகுப்பறைக்குள் நுழையும் பேராசிரியர் போல் கால்சட்டைக்குள் உள்ளிடப்பட்ட மேல்சட்டையுடன் சிரித்த முகமாய் நுழைந்தார் எம்.எஸ்.உதயமூர்த்தி.சுற்றிலும் வெள்ளைச்
சட்டையில் ஏராளமான பிரமுகர்கள்.மேடையின் பின்புலத்திலிருந்த எளிய பதாகையில் "மக்கள் சக்தி இயக்கம்"என்று எழுதப்பட்டிருந்தது.

அப்போதே பிரபலமாயிருந்த கல்லூரி மாணவப் பேச்சாளர் ஜெயஸ்ரீ பத்ரிநாத் மேடைக்கு வந்து அறிவிக்க மற்ற பொறுப்பாளர்களுடன் மேடையேறினார் எம்.எஸ்.உதயமூர்த்தி. அவர் பேசுவதற்காக ஒலிபெருக்கி முன்னர் வந்தபோது ஆர்வமும் எதிர்பார்ப்பும் நிரம்பிய நிசப்தம். தனிமனிதர்கள் முன்னேற்றம் என்ற புள்ளியில் தொடங்கி சமூக முன்னேற்றம் என்ற பார்வையில் விரிந்து அரசியல்வாதிகள் மனமாற்றம் அல்லது அரசியல் மாற்றம் நோக்கிச் செல்ல வேண்டிய தேவை குறித்துப்
பேசினார்.செறிவான பேச்சு. பாசாங்கில்லாத உடல்மொழி.அவர் முன்வைத்த அரசியல் மாற்ற ஆலோசனைகள் பொறுக்காத ஓர் அரசியல் தலைவர்,எம்.எஸ்.உதயமூர்த்தியை "உள்ளம் போலவே குள்ளம்"என்று சாடியிருந்தார்.

அந்த சொற்றொடரை எம்.எஸ்.உதயமூர்த்தி குழந்தைபோல் சிரித்துக் கொண்டே மேற்கோள் காட்டி,"என் கேள்விகளுக்கு பதில் சொல்லலையே"என்றபோது அவை ஆரவாரம் செய்து ஆதரித்தது.

கொங்குமண்ணில் இருந்த ஏராளமான தொழிலதிபர்கள் தங்கள் சமூகப் பிரக்ஞையின் வார்ப்பாகவே மக்கள் சக்தி இயக்கத்தைக் கருதினர்.அப்போது கல்லூரி மாணவனாக இருந்த நான் எம்.எஸ்.உதயமூர்த்தியின் ஆளுமையால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இயக்கத்தில் ஈடுபடவில்லையே தவிர அதன் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றேன்.மக்கள் சக்தி இயக்கத்தின் முக்கிய விழா ஒன்றில்
கவியரங்கில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டேன். கோவை மாநகராட்சிக் கலையரங்கில் நடந்தது.அநேகமாக 1987ஆம் ஆண்டென்று ஞாபகம்.


"அச்சத்தின் பிடியிலே இன்றைக்கு வாலிபன்
வாழ்க்கையைத் தேடுகின்றான்
படமாடும் இருட்டுக்குள் பலியாகித் தானுமே
நடமாடும் இருட்டாகிறான்"
என்ற என் வரிகளை உதயமூர்த்தி வெகுவாகப் பாராட்டினார். கவியரங்க மரபுப்படி எம்.எஸ்.உதயமூர்த்தி பற்றி நான் பாடிய எண்சீர் விருத்தமொன்றை அவருடைய தீவிர ரசிகர்கள் சிலர் எழுதி வாங்கிப் போனார்கள்.

"ரத்தத்தைச் சுண்டுகிற எழுத்து-தேவ
ரகசியத்தை மொண்டுதரும் கண்கள்-தர்ம
யுத்தத்தை நடத்துகிற வேட்கை-வெற்றி
யுக்திகளைக் காட்டுகிற வாழ்க்கை-அன்பை
சித்தத்தில் நிறைத்திருக்கும் தோற்றம்-பொங்கிச்
சீறுகையில் சிங்கத்தின் சீற்றம்-ஆமாம்
மொத்தத்தில் காணுகையில் உதயமூர்த்தி
மானுடத்தை உயர்த்தவந்த மனித ஏணி"

என்பவை அந்த வரிகள். சிலநாட்களிலேயே ஓர் அஞ்சலட்டையில் கடிதம் எழுதியிருந்தார் உதயமூர்த்தி.பாராட்டும் அறிவுரைகளுமாய் இருந்தது அந்தக் கடிதம்.கீழை நாட்டில் காலங்காலமாய் மனித சக்தி குறித்து சொல்லப்பட்ட சித்தாந்தங்களை மேற்கின் மேற்கோள்களுடன் நிறுவியது அவர் செய்த மிக முக்கியப் பங்களிப்பு."எண்ணங்கள்" என்னும் புகழ்பெற்ற அவருடைய புத்தகம் அந்த அணுகுமுறையின் துல்லியமான அடையாளம்.நதிநீர் இணைப்பு,அரசியல் சீரமைப்பு ஊழல் ஒழிப்பு போன்றவற்றுக்காக எண்பதுகளில் தொடங்கப்பட்ட முக்கிய இயக்கம்,மக்கள் சக்தி இயக்கம்.அவர் காலத்திலேயே அந்த
இயக்கம் பெரும் பின்னடைவை சந்திக்கக் காரணம்,தேர்தலில் நின்றதுதான் என்றொரு விமர்சனம் பரவலாக எழுந்தது.

"நீதான் தம்பி முதலமைச்சர்","நம்பு தம்பி! நம்மால் முடியும்" போன்ற பல நூல்கள் வெளிவந்த வேகத்திலேயே விற்றுத் தீர்ந்தன. அப்துர்-ரகீம் போன்ற சுயமுன்னேற்றச் சிந்தனையாளர்கள் அவருக்கு முன்னர் நம்பிக்கை நூல்கள் எழுதியிருந்தாலும் சுயமுன்னேற்றத் துறை விசையுறு பந்தென வேகம் பெற்றது,எம்.எஸ்.உதயமூர்த்தியின் வருகைக்குப் பிறகுதான்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை நீலாங்கரையில் அவருடைய இல்லத்தில் சந்தித்தேன்.நீண்ட உரையாடலின்போது மக்கள் சக்தி இயக்கம் பற்றிக் கேட்டேன்."இப்பவும் செயல்படறோம்.முன்னமாதிரி பரபரப்பா இல்லை.அப்போ எல்லாம் பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுக்கறதுலேயேரொம்ப கவனம் செலுத்துவோம் .இப்ப அதையெல்லாம் செய்யறதில்லை" என்றார்.அவருடைய மனைவி இறந்திருந்த நேரமது. என்னிடம் பேசிக்கொண்டே தொலைபேசி அழைப்பு ஒன்றினுக்கு பதில் சொன்னவர்,ரிசீவரை நெடுநேரம் கீழேயே வைத்திருந்தார். யாரோ லைனில் இருக்கிறார்கள் போலுமென எண்ணிக் கொண்டேன். நீண்டநேரம்கழித்து சுட்டிக் காட்டியபின்"அடேடே" என்று எடுத்து வைத்தார்."தேவியைப் பிரிந்த பின்னும் திகைத்தனை போலும் செய்கை"என்ற கம்பனின் வரி நினைவு வந்தது.

1996 தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தன் பணிகளை மெல்ல மெல்ல சுருக்கிக் கொண்டது மக்கள் சக்தி இயக்கம். சிலர் அமைப்பிலிருந்து பிரிந்து தனி இய்க்கம் கண்டனர். "உன்னால் முடியும் தம்பி"யில் வருகிற
உதயமூர்த்தி,எம்.எஸ்.உதயமூர்த்தி கனவுகண்ட இலட்சிய இளைஞனாகக் கூட இருக்கலாம்.அவர் கனவுகண்ட இலட்சிய சமூகத்தை நோக்கி சமகால இளைஞர்களைப் பொறுப்புடன் வழிநடத்தியவர் என்ற சாதனை அவரின் புகழை நிலைபெறச் செய்யும்.அமரர்.எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களுக்கு என் அஞ்சலி.

Saturday, January 19, 2013

வடிவழகி வெண்பா




புயல்நடுவே சிற்றகலும் புன்னகைக்கு மென்றால்


கயல்கண்ணி பார்த்த கருணை-ஒயிலாக

சந்நிதி யில்நிற்கும் சக்தியருள் பெற்றபின்னே

நன்னிலைதான் சேரும் நமக்கு.



பட்டுரசும் பாதங்கள் பூமி தனிலுரச

மொட்டவிழும் கற்பகப்பூ மண்ணெங்கும்-எட்டுதிசை

வீசும் வளைக்கரங்கள் வையமெலாம் காப்பதனைப்

பேசும் பணியே பணி.



மயிலானாள் கற்பகத்தாள் மாதேவன் ஆடக்

குயிலானாள் கீதம் கொடுத்தாள்-துயர்தீரப்

பாடும் அடியார்தம் பாட்டானாள் பொற்சபையான்

ஆடும் ஜதியானாள் அங்கு



மாயை வடிவானாள் மாயை தனைத்தொலைக்கும்

தீயின் வடிவாகத் தானானாள்-தூய

வடிவானாள் ஞான விடிவானாள் வேத

முடிவானாள் அன்னை முகிழ்த்து



வண்ணங் கறுப்பென்றே வம்புசெய்த ஈசனவன்

கண்டங் கறுக்கவே கைவைத்தாள்-உண்டநஞ்சை

தீண்டியமு தாக்குந் திரிபுரையாள் பாதவிரல்

தூண்டுவதே குண்டலினித் தீ.



காமன்கைக் கொண்ட கரும்புவில்லைத் தீய்த்தவனின்

வாமத்தை ஆளுகிற வல்லியின்கை- சேமத்தில்

தோன்றும் கரும்புவில்லில் தோற்றபின்னே ஈசன்கால்

ஊன்றவழி உண்டோ உரை