Thursday, January 24, 2013

எம்.எஸ்.உதயமூர்த்தி-எழுத்தின் எழுச்சி


ஓவியம் :திரு.ஜீவா

தமிழ்நாடு உணவகத்தின் கூட்ட அரங்கில் ஏராளமானவர்கள் கூடியிருந்தார்கள்.பெரும்பாலானவர்கள்கோவையையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் சேர்ந்த கல்லூரி மாணவர்கள்.அனைவரும் அடிக்கடி வாயிலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வகுப்பறைக்குள் நுழையும் பேராசிரியர் போல் கால்சட்டைக்குள் உள்ளிடப்பட்ட மேல்சட்டையுடன் சிரித்த முகமாய் நுழைந்தார் எம்.எஸ்.உதயமூர்த்தி.சுற்றிலும் வெள்ளைச்
சட்டையில் ஏராளமான பிரமுகர்கள்.மேடையின் பின்புலத்திலிருந்த எளிய பதாகையில் "மக்கள் சக்தி இயக்கம்"என்று எழுதப்பட்டிருந்தது.

அப்போதே பிரபலமாயிருந்த கல்லூரி மாணவப் பேச்சாளர் ஜெயஸ்ரீ பத்ரிநாத் மேடைக்கு வந்து அறிவிக்க மற்ற பொறுப்பாளர்களுடன் மேடையேறினார் எம்.எஸ்.உதயமூர்த்தி. அவர் பேசுவதற்காக ஒலிபெருக்கி முன்னர் வந்தபோது ஆர்வமும் எதிர்பார்ப்பும் நிரம்பிய நிசப்தம். தனிமனிதர்கள் முன்னேற்றம் என்ற புள்ளியில் தொடங்கி சமூக முன்னேற்றம் என்ற பார்வையில் விரிந்து அரசியல்வாதிகள் மனமாற்றம் அல்லது அரசியல் மாற்றம் நோக்கிச் செல்ல வேண்டிய தேவை குறித்துப்
பேசினார்.செறிவான பேச்சு. பாசாங்கில்லாத உடல்மொழி.அவர் முன்வைத்த அரசியல் மாற்ற ஆலோசனைகள் பொறுக்காத ஓர் அரசியல் தலைவர்,எம்.எஸ்.உதயமூர்த்தியை "உள்ளம் போலவே குள்ளம்"என்று சாடியிருந்தார்.

அந்த சொற்றொடரை எம்.எஸ்.உதயமூர்த்தி குழந்தைபோல் சிரித்துக் கொண்டே மேற்கோள் காட்டி,"என் கேள்விகளுக்கு பதில் சொல்லலையே"என்றபோது அவை ஆரவாரம் செய்து ஆதரித்தது.

கொங்குமண்ணில் இருந்த ஏராளமான தொழிலதிபர்கள் தங்கள் சமூகப் பிரக்ஞையின் வார்ப்பாகவே மக்கள் சக்தி இயக்கத்தைக் கருதினர்.அப்போது கல்லூரி மாணவனாக இருந்த நான் எம்.எஸ்.உதயமூர்த்தியின் ஆளுமையால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இயக்கத்தில் ஈடுபடவில்லையே தவிர அதன் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றேன்.மக்கள் சக்தி இயக்கத்தின் முக்கிய விழா ஒன்றில்
கவியரங்கில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டேன். கோவை மாநகராட்சிக் கலையரங்கில் நடந்தது.அநேகமாக 1987ஆம் ஆண்டென்று ஞாபகம்.


"அச்சத்தின் பிடியிலே இன்றைக்கு வாலிபன்
வாழ்க்கையைத் தேடுகின்றான்
படமாடும் இருட்டுக்குள் பலியாகித் தானுமே
நடமாடும் இருட்டாகிறான்"
என்ற என் வரிகளை உதயமூர்த்தி வெகுவாகப் பாராட்டினார். கவியரங்க மரபுப்படி எம்.எஸ்.உதயமூர்த்தி பற்றி நான் பாடிய எண்சீர் விருத்தமொன்றை அவருடைய தீவிர ரசிகர்கள் சிலர் எழுதி வாங்கிப் போனார்கள்.

"ரத்தத்தைச் சுண்டுகிற எழுத்து-தேவ
ரகசியத்தை மொண்டுதரும் கண்கள்-தர்ம
யுத்தத்தை நடத்துகிற வேட்கை-வெற்றி
யுக்திகளைக் காட்டுகிற வாழ்க்கை-அன்பை
சித்தத்தில் நிறைத்திருக்கும் தோற்றம்-பொங்கிச்
சீறுகையில் சிங்கத்தின் சீற்றம்-ஆமாம்
மொத்தத்தில் காணுகையில் உதயமூர்த்தி
மானுடத்தை உயர்த்தவந்த மனித ஏணி"

என்பவை அந்த வரிகள். சிலநாட்களிலேயே ஓர் அஞ்சலட்டையில் கடிதம் எழுதியிருந்தார் உதயமூர்த்தி.பாராட்டும் அறிவுரைகளுமாய் இருந்தது அந்தக் கடிதம்.கீழை நாட்டில் காலங்காலமாய் மனித சக்தி குறித்து சொல்லப்பட்ட சித்தாந்தங்களை மேற்கின் மேற்கோள்களுடன் நிறுவியது அவர் செய்த மிக முக்கியப் பங்களிப்பு."எண்ணங்கள்" என்னும் புகழ்பெற்ற அவருடைய புத்தகம் அந்த அணுகுமுறையின் துல்லியமான அடையாளம்.நதிநீர் இணைப்பு,அரசியல் சீரமைப்பு ஊழல் ஒழிப்பு போன்றவற்றுக்காக எண்பதுகளில் தொடங்கப்பட்ட முக்கிய இயக்கம்,மக்கள் சக்தி இயக்கம்.அவர் காலத்திலேயே அந்த
இயக்கம் பெரும் பின்னடைவை சந்திக்கக் காரணம்,தேர்தலில் நின்றதுதான் என்றொரு விமர்சனம் பரவலாக எழுந்தது.

"நீதான் தம்பி முதலமைச்சர்","நம்பு தம்பி! நம்மால் முடியும்" போன்ற பல நூல்கள் வெளிவந்த வேகத்திலேயே விற்றுத் தீர்ந்தன. அப்துர்-ரகீம் போன்ற சுயமுன்னேற்றச் சிந்தனையாளர்கள் அவருக்கு முன்னர் நம்பிக்கை நூல்கள் எழுதியிருந்தாலும் சுயமுன்னேற்றத் துறை விசையுறு பந்தென வேகம் பெற்றது,எம்.எஸ்.உதயமூர்த்தியின் வருகைக்குப் பிறகுதான்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை நீலாங்கரையில் அவருடைய இல்லத்தில் சந்தித்தேன்.நீண்ட உரையாடலின்போது மக்கள் சக்தி இயக்கம் பற்றிக் கேட்டேன்."இப்பவும் செயல்படறோம்.முன்னமாதிரி பரபரப்பா இல்லை.அப்போ எல்லாம் பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுக்கறதுலேயேரொம்ப கவனம் செலுத்துவோம் .இப்ப அதையெல்லாம் செய்யறதில்லை" என்றார்.அவருடைய மனைவி இறந்திருந்த நேரமது. என்னிடம் பேசிக்கொண்டே தொலைபேசி அழைப்பு ஒன்றினுக்கு பதில் சொன்னவர்,ரிசீவரை நெடுநேரம் கீழேயே வைத்திருந்தார். யாரோ லைனில் இருக்கிறார்கள் போலுமென எண்ணிக் கொண்டேன். நீண்டநேரம்கழித்து சுட்டிக் காட்டியபின்"அடேடே" என்று எடுத்து வைத்தார்."தேவியைப் பிரிந்த பின்னும் திகைத்தனை போலும் செய்கை"என்ற கம்பனின் வரி நினைவு வந்தது.

1996 தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தன் பணிகளை மெல்ல மெல்ல சுருக்கிக் கொண்டது மக்கள் சக்தி இயக்கம். சிலர் அமைப்பிலிருந்து பிரிந்து தனி இய்க்கம் கண்டனர். "உன்னால் முடியும் தம்பி"யில் வருகிற
உதயமூர்த்தி,எம்.எஸ்.உதயமூர்த்தி கனவுகண்ட இலட்சிய இளைஞனாகக் கூட இருக்கலாம்.அவர் கனவுகண்ட இலட்சிய சமூகத்தை நோக்கி சமகால இளைஞர்களைப் பொறுப்புடன் வழிநடத்தியவர் என்ற சாதனை அவரின் புகழை நிலைபெறச் செய்யும்.அமரர்.எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களுக்கு என் அஞ்சலி.