Friday, July 24, 2015

படகுக்காரர்கள் பார்வைக்கு....

 
 உடலெனும் கனவு; சுடலையில் விறகு;
 கடலெனும் வினைகள்  கடந்திடும் படகு;
படகில் சிலபேர் பவவினை கடப்பார்;
படகைச் சிலபேர் பாதியில் கவிழ்ப்பார்;
கற்றவை ,கேட்டவை, கண்டவை என்று
பற்றுச் சரக்குகள் பலவும் குவிப்பார்
விற்று வரவில் வினைகள் வளர்ப்பார்;

வெற்றுப் படகே விரைய வல்லது;
வட்டியும் முதலுமாய் வாங்கிச் சேர்த்ததை
கொட்டிக் கவிழ்ப்பவர் கெட்டிக் காரர்;

மலர்நிகர் குருவின் மணிக்கழல் இரண்டும்
வலிக்கும் துடுப்பாய் வாய்ப்பவர் கடப்பார்
நீச்சல் தெரிந்த நினைவில் குதிப்பவர்
வீச்சில் சுருண்டு வெறுமனே தவிப்பார்;

பிணைக்கும் இந்தப் பிறப்பு முதல்கரை
அணைக்கும் முக்தி அதுதான் மறுகரை;
கரைகா ணாமையின் கரைதொடும் சாதனை
உரையால் உணர்வதோ உலகத்தீரே! 
 
--

 
regards
Marabin Maindan Muthiah

Saturday, July 18, 2015

எங்கிருந்தோ வந்தான்


காரணம் தெரியவில்லை..
அவன் காம்போதி வாசித்தான்


சுரங்களின் சுவடறியா..
கரங்களில் குழலேந்தி
இதுவரை தொட்டறியா
துளைகளில் விரல்தடவி
எவரும் கேட்டறியா
இதத்தில் இங்கிதத்தில்...
தவமியற்ற அமர்ந்தவுடன்
தேடிவந்த வரம்போல

காரணம் தெரியவில்லை...அவன்
காம்போதி வாசித்தான்

தொடுத்த பூக்களிடை
துலங்கும் கதம்பங்களை
எடுத்தெடுத்துக் கோர்க்கும் 
இளம்விரல்கள் லாவகமாய்
அடுத்தடுத்த ராகத்தில்
அநாயசமாய் சஞ்சரித்து
சிலிர்த்த சபைநடுவே
சிங்காரக் கண்ணனைப்போல்..

மோகக் குழல்தடவி-அவன்
மோகனம் வாசித்தான்

ஒற்றை முலையாலே
ஊரெரித்தாள் கோபத்தை
முற்றத்தில் துகில்பற்ற
மூண்டெழுந்த சாபத்தை
பற்றவைத்த கனல்துண்டாய்
புயலுருட்டும் மூங்கிலிடை
நிற்கும் சினம்தெறிக்க
நின்றெரிக்கும் அமிலம்போல்

 அத்தனைபேர் அதிர்ந்திருக்க
அடாணா வாசித்தான் 


குழல் இவனில் இசைகிறதா
குழல் இவனை இசைக்கிறதா
அழலெழும்பும் நினைவுகளே
அபூர்வசுரம் ஆகிறதா
மழைநடுவே வனமாக
மனோதர்மம் சிலிர்க்கிறதா
இழையிழையாய் தேன்பிலிற்றி
இனந்தெரியா லஹரியிலே


கடவுள்தந்த கனவைப்போல்
கல்யாணி வாசித்தான்

நேற்றுவரை இசைஞனில்லை
நிமிடமொன்றில் சித்தித்து
ஊற்றெடுக்கும் தேனிசையை
உளமுருகி உபாசித்து
காற்றாய் மிதக்கின்றான்
கண்கிறங்கி இசைக்கின்றான்
வேற்றாவி புகுந்ததுபோல்
விசித்திரமாய் ஒளிர்ந்தபடி..


ராக மாலிகையில்-அவன்
ராஜாங்கம் நடத்துகிறான்


இந்தக் கணம் பிறந்த
இவன் இசையில் லயித்தபடி
வந்த மனவிரிவின்
விசுவரூபம் பார்த்தபடி
அந்தர சக்கரங்கள்
அனைத்திலுமே கனலெழும்ப
உந்துகிற மௌனத்தில்
உள்முகமாய் தொலைந்தபின்னும்

சித்தன்போல் நெடுந்தொலைவில்
சஹானாவில் கரைகின்றான் 

தேய்பிறையின் ஒலியிதுவோ
திசைமுடியும் ஓரிடமோ
வேய்குழலின் தொலைநாதம்
வேதத்தின் பூரணமோ
பாய்ந்துவந்த பேரருவி
போய்மறையும் சமுத்திரமோ
போயடைய முடியாத
பரம்பொருளோ?பூரணமோ?

காட்டாதன காட்டி
ககனமெங்கும் இசையூட்டி
கற்பூரப் புகைபோல
குழல்வழியே கரைகின்றான் 









Tuesday, July 14, 2015

விசுவம் எங்கும் அவன்நாதம்


கருவி இசைத்துக் கற்றானா
கருவில் இருந்தே பெற்றானா
சரிகம பதநி சுரங்களெல்லாம்
சுடர்விரல் நுனிகளில் உற்றானா
வரிகளில் இசையைக் கண்டானா
வானின் அமுதம் தந்தானா
ஒருமுறை வந்த இசை மன்னன்
உலகுக்கு மீண்டும் வருவானா

ஆர்மோனியத்தின் ஆளுமையாய்
அமர கவியின் தோழமையாய்
வேறொன்றெதுவும் அறியாமல்
வேர்விட்டிருந்த மேதைமையாய்
தாரா கணமாய் ஒளிர்ந்தானே
தன்னிகர் இல்லா எம்.எஸ்.வி
பாரோர் அழுது கேட்டாலும்
பரமன் மீண்டும் தருவானா

நாடக உலகில் நுழைந்தவனை
நாளும் பாடுகள் பட்டவனை
மூடச் சிலபேர் முயன்றாலும்
முடக்க முடியாச் சூரியனை
பாடகர் பலபேர் வயிற்றினிலே
பாலை வார்த்த புண்ணியனை
ஆடகப் பொன்னாய் ஒளிர்ந்தவனை
அந்தோ மறுபடி காண்போமோ

விசுவம் என்றால்  உலகமன்றோ
விசுவம் எங்கும் அவன்நாதம்
விசும்பி அழுபவர் இதழ்களிலும்
வெளிப்படும் அஞ்சலி அவன்கீதம்
விசுவ நாதன் சென்றடைந்தான்
விஸ்வநாதனின் மலர்ப்பாதம்
இசையாய் என்றும் வாழ்ந்திருப்பான்
இனியென் செய்ய...அதுபோதும்