Wednesday, June 30, 2010

முன்னே பின்னே இருக்கும்

தமிழில் சில சொற்கள் மேம்போக்காகக் கையாளப்பட்டாலும் அடிப்படையில் அவற்றுக்கு வேறுபொருள் இருக்கும்.கன்னா பின்னா என்றொரு பிரயோகம் உண்டு. கன்னன் என்பது கர்ணனைக் குறிக்கும் சொல். பின்னா என்பது, அவனுக்குப் பின்னால்  பிறந்தவனாகிய  தருமனைக்  குறிக்கும்.. ஒருவரை  கர்ணமகராசா, தருமமகராசா என்றெல்லாம் புகழ்வதுதான் கன்னா பின்னா என்று புகழ்வது. (உடனே உங்களுக்கு ஏதேனும்  கவியரங்குகள்  நினைவுக்கு  வந்தால்  நான் பொறுப்பில்லை). கர்ணன் தன் அண்ணன் என்று தெரியாமலேயே தருமன் கடைசிவரை எதிர்க்கிறான். தருமன் தன் தம்பி என்று தெரிந்தும் கர்ணன் போர்க்களத்தில் எதிர்த்து நிற்கிறான்

தருமன் மகன் முதலாய அரிய காதல்
தம்பியரோடு அமர்மிலைந்தும் தறுகண் ஆண்மைச்
செருவில் எனது உயிரனைய தோழற்காக
செஞ்சோற்றுக் கடன் கழித்தேன்

என்கிறான் கர்ணன். அண்ணன் தம்பி உறவும் இப்படி கன்னா பின்னா என்றே இருந்திருக்கிறது. கம்பர் சோழனின் அவையில் இருந்த காலத்தில், மூடன் ஒருவனுக்கும் பாடிப் புகழ்பெறும் ஆசை வந்துவிட்டது. சொந்தமாக  எழுதத் தெரியாவிட்டால் என்ன? கேள்விப்படுவதை எழுதுவோம் என்று முடிவுகட்டிவிட்டான். இரு குழந்தைகள் மண்ணில் சோறு சமைத்து பொண்ணு மாப்பிள்ளை விளையாட்டில் இருந்தன. மண்ணை பையனுக்கு ஊட்டி மண்ணுண்ணி மாப்பிள்ளை மண்ணுண்ணி மாப்பிள்ளை என்று சொல்வது காதில் விழவும், அதுவே செய்யுளின் முதல்வரியானது. "மண்ணுண்ணி மாப்பிள்ளையே" என்று முதல் வரியை எழுதிக் கொண்டான்.

கொஞ்ச தூரம் போனதும் காகங்கள் கா கா என இரைச்சலிட்டன. "காவிறையே" என்று எழுதிக் கொண்டான். இன்னும் கொஞ்சம் போனதும் குயில்கள் கூவின. கூவிறையே என்று எழுதிக் கொண்டான். கோயிலை ஒட்டி வீதி திரும்பியது. இரண்டுபேர்  சண்டை  போட்டுக்  கொண்டிருந்தார்கள். "உங்கப்பன் கோயில் பெருச்சாளி" என்றொருவன் ஏசியது காதில் விழ, அதையும் எழுதிக் கொண்டான். எதிரே வந்த நண்பனிடம் கம்பீரமாகக்  காண்பித்து, சோழமன்னனைப் பற்றி தான் எழுதியது என்றும் சொல்லிக் கொண்டான்.

நண்பன் பார்த்துவிட்டு, "என்னடா ,பாட்டு கன்னா பின்னா வென்றிருக்கிறது! மன்னரைப் பற்றி எதுவுமே இல்லையே என்றதும், "கன்னா பின்னா மன்னா
தென்னா சோழங்கப் பெருமானே" என்று முடித்துக் கொண்டான்.
சோழனின் அவைக்குள் நுழைந்து பாடலை வாசித்தான்.

மண்ணுண்ணி மாப்பிள்ளையே
காவிறையே கூவிறையே
உங்களப்பன் கோயில் பெருச்சாளி
கன்னா பின்னா மன்னா தென்னா
சோழங்கப் பெருமானே
அடக்க மாட்டாமல் அவையினர் சிரித்து உருண்டார்கள்.


கம்பர் நிதானமாக எழுந்தார். "அருமையான பாடல் இது. இதன் ஆழம்  புரியாமல்  நீங்கள் ஏளனம் செய்கிறீர்கள். மண்ணுண்ணி என்பது  திருமாலைக்  குறிக்கும். மா என்பது திருமகளைக் குறிக்கும். இவர்களின் பிள்ளை மன்மதன். நம் அரசரை இந்தப் புலவர், மன்மதனே என்கிறார். கா என்றால் வானுலகம். காவிறையே என்றால் வானுலகை ஆளும் இந்திரனே என்று பொருள். கூ என்றால் மண்ணுலகம். கூவிறையே என்றால் மண்ணுலகை ஆள்பவனே என்று பொருள். விண்ணும் மண்ணும் நம் அரசரின் ஆட்சியில் என்கிறார் புலவர். உங்களப்பன் கோ-வில்லில் பெரிசு-ஆளி  என்று பிரிக்க வேண்டும். நம் மன்னனின் தந்தையார் வில்லில் ஆளிபோல் வல்லவர். தந்தையின் தனித்தன்மையை சொல்வதன் மூலம் மகன் அவரினும் வலியவர் என்பதை சொல்லாமல் சொல்கிறார் புலவர். கன்னா-கர்ணனே,பின்னா-தருமனே, மன்னா, மன்னவனே தென்னா சோழங்கப் பெருமானே-தென்னாட்டின் அங்கமாகிய சோழ மன்னனே என்று பொருள் சொன்னாராம் கம்பர்.

கன்னா பின்னா போலவே தமிழில்,முன்னே பின்னே என்றொரு சொற்றொடர்
அதிகமாகப் புழங்குகிறது.ஏதோ முன்னே பின்னே இருந்தாலும் ஏத்துக்குங்க 
என்று பொன் கொடுப்பதில் இருந்து பெண் கொடுப்பது வரை எல்லாவற்றிலும்
சொல்கிறார்கள்.

இந்தப் பிரபஞ்சத்திற்கு முன்னேயும் பின்னேயும் இருப்பது  கடவுள்தான். ஆதியும் அந்தமும் இல்லாத கடவுளே அனைத்திற்கும் ஆதியாகவும் அந்தமாகவும் இருப்பதையே இந்த சொற்றொடர் உணர்த்துகிறது. கடவுளை எங்கெல்லாம் காணலாம் என்று புலவர் ஒருவர் பாடியதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

மூல மறைகளுக்கெல்லாம் மூலமாய் இருப்பது கடவுள்.எனவே மறைகளை
ஆராய்ச்சி செய்பவர்கள் அதற்கு மூலமாக இருக்கக் கூடிய கடவுளைக் காணலாம். அது எல்லோருக்கும் சாத்தியமா என்று கேள்வி வருகிறதா? கவலையே படாதீர்கள். அதே கடவுள் குழலை இசைத்தபடி ஆடு மாடுகளை
மேய்த்துக் கொண்டிருப்பான். அவனை இப்படி அப்படி என்று  யாரும்  வரையறுத்து  விட  முடியாது. சிலர்  வேதங்களைப்  பீராய்ந்தும்  ஆராய்ந்தும் தேடுவார்கள். வரமாட்டான். நெடுநேரம் கிடைக்க மாட்டான். ஒரு யானை முதலையிடம் மாட்டிக்கொண்டு அலறும்.ஓடி வருவான். பிரபஞ்ச உருவாக்கத்துக்கு முன்னும் அவன்தான். பின்னும் அவன்தான்.

மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம்
காலிக்குப் பின்னேயும் காணலாம்-மால்யானை
முந்தருளும் வேத முதலே எனவழைப்ப
வந்தருளும் செந்தாம ரை .

கடவுளை நம்பாதவர்கள், பக்தர்களைப் பார்த்து கடவுளை நீ முன்னே பின்னே
பார்த்திருக்கிறாயா என்று கேட்பதுண்டு. தங்களையும் அறியாமல் அவர்கள்
ஒரு தத்துவத்தையே சொல்கிறார்கள் . முன்னே பின்னே பாருங்கள். மூலத்தையே  பார்ப்பீர்கள்.

Monday, June 28, 2010

தமிழ் செம்மொழி மாநாடு கவியரங்க கவிதை - 25.06.10





தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்
தலைமையில் நிகழ்ந்த கவியரங்கில் வாசித்த கவிதை.அவையின் அப்போதைய கலகலப்புக்காக வாசித்த சில வரிகள் நீங்கலாய் மற்றவைஇங்கே இடம் பெறுகின்றன...

பொதுத்தலைப்பு: கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக் கூட்டம்
கிளைத்தலைப்பு:  அடையாளம் மீட்க

கலைஞருக்கு
மூவேந்தர் இங்கிருந்தார்; முத்தமிழை வளர்த்திருந்தார்
தார்வேந்தர் அவர்கள் பணி தாயகத்தைத் தாண்டவில்லை
பாரிலுள்ள தமிழர்களை - ஒரு பந்தலின் கீழ் கூட்டுவித்து
ஓர்வேந்தர் செம்மொழியின் உயர்வுகளை முரசறைந்தார் - அந்தச்
சீர்வேந்தர் கலைஞரென்று சாற்றிநிற்கும் வரலாறு

கூடும் வானிலை நம்பியதால்தான்
  கோவையிலே நீ மாநாடமைத்தாய் - பல
நாடுள்ள தமிழரை நம்பியதால்தான்
  நான்கு திசைக்கும் அழைப்புக் கொடுத்தாய்
பாடும் கவிஞரை நம்பியதால்தான்
  பாட்டரங்கங்கள் மூன்று அமைத்தாய்
வீடு பேற்றை நம்பாததால்தான்
  வீட்டைகூட எழுதிக் கொடுத்தாய்

கால்களில் சக்கரம் கட்டித்தானே கால காலமாய் சுழன்றுவந்தாய்
காலச்சக்கரம் சுழலச் சுழல சக்கரவர்த்தியாய் பவனிவந்தாய்

எம்மொழிக்காரரும் இருந்து கேட்டால்
ஈர்த்துப்பிடிப்பது உந்தன் வாக்கு
செம்மொழி நடக்க விரிக்கப்படுகிற
சிகப்புக் கம்பளம் உந்தன் நாக்கு

கவியரங்கத் தலைவருக்கு


பருவமழை சிலுசிலுக்கும் பேரழகுக் கோவையிலே
கவிதைமழை பொழியவந்த கருமுகிலே வணக்கம் - உன்
விரல்பிடித்தே கவியுலகில் வளர்பவன் நான் என்பதனால் - உன்
குரல்கேட்கும் பொழுதெல்லாம் எனக்குள்ளே மயக்கம் - நீ
கலைஞருக்கு நெருக்கம்! அவர் கவிதைகளின் விளக்கம்
காதலன் காதலி போல் உங்கள் இருவரிடை இணக்கம்

அவைக்கும்..கோவைக்கும்..

இசைமணக்கும் தமிழ்கேட்க இசைந்துவந்த வரவுகளே
திசைகள் அனைத்திருந்தும் திரண்டுவந்த உறவுகளே
நீர்நிலைக்காய் பறந்துவரும் பன்னாட்டுப் பறவைகள்போல் - தமிழின்
வேர்நிலைக்க வந்திருக்கும் வளமான தமிழ்க்குலமே வணக்கம்

ஆலைநகரென்று அறியப்பட்ட கோவையினை - நல்ல
சாலைநகர் ஆக்கியது செம்மொழி மாநாடு
பல காலம் கோவையிலே பிறந்து வளர்ந்தவர்க்கே
அடையாளம் தெரியாமல் அழகுநகர் ஆகியது
மண்ணெடுத்தார் மாலையிலே! தார்தெளித்தார் இரவினிலே
கண்விழித்துப் பார்க்கையிலே கண்ணாடிபோல் மின்னியது!
சறுக்கிவிடும் பள்ளங்கள் சமச்சீராய் மாறியது
வழுக்கிக்கொண்டு சாலையிலே வாகனங்கள் போகிறது
வெறிச்சோடிக் கிடந்திருந்த வீதியோர நடைபாதை
குளித்துத் தலைமுழுகி கலகலப்பாய் இருக்கிறது
துணைமுதல்வர் வந்துவந்து தூண்டிவிட்ட காரணத்தால்
இணையில்லா அழகோடு எங்கள் நகர் ஜொலிக்கிறது
தேவை அறிந்திந்த திருப்பணிகள் செய்தவைக்கு
கோவைநகர்க் கவிஞன் நான் கனிவோடு நன்றி சொன்னேன்.

அடையாளம் மீட்க

வில்பதித்த செங்கொடியை சேர மன்னர்
  வஞ்சிநாட்டின் அடையாளம் ஆக்கிக் கொண்டார்
நெல்பழுத்த சோழமண்ணில் புலிக்கொடியை
  நல்லதொரு சின்னமென ஏற்று நின்றார்
அல்நிறத்துப் பாண்டியரோ கயலைத் தங்கள்
  அடையாளம்ச் சின்னமேன ஆக்கிகொண்டார்
சொல்பழுத்த தமிழுக்குக் கலைஞர்தானே
  செம்மொழியின் அடையாளம் வாங்கித்தந்தார்

ஓலைகளைத் தில்லையிலே பூட்டிவைத்த
  ஒருகாலம் தனிலங்கே சோழன் கூட
கோலமிகு மூவர்சிலை கொண்டு போய்தான்
  கோவிலே செந்தமிழை மீட்டெடுத்தான்
ஆலயத்தில் செந்தமிழைத் தடுத்தபோது
  அரசானையால் கலைஞர் மீட்டெடுத்தார்
காலங்கள் மாறுகின்றன போதும்கூடக்
  களம்மாறாதிருப்பதற்க்கு இதுவே சாட்சி

அடையாத நெடுங்கதவம் - தமிழன் வாழ்ந்த
  அறவாழ்வின் அடையாளம்; அல்லல் வந்தும்
உடையாத நெஞ்சுறுதி - தமிழன் கொண்ட
  ஊற்றத்தின் அடையாளம்; மிரட்டலுக்குப்
படியாத பேராண்மை - தமிழன் கொண்ட
  போர்குணத்தின் அடையாளம்; எந்த நாளும்
விடியாத இரவுகளை விடிய வைக்கும்
  விவேகம்தான் தமிழன் அடையாளம் ஆகும்


திசையறிந்து வருகின்ற பறவை கூடத்
  தன்கூட்டின் அடையாளம் தெரிந்து போகும்
இசையறிந்தோன் யாழ்நரம்பில் விரல் பதித்தால்
  இசைகுறிப்பின் அடையாளம் எழும்பலாகும்
பசியெழுந்தால் சிறுமழலைகூட, அன்னை
  பால்முலையை அடையாளம் தெரிந்துசேரும்
விசைமிகுந்த வாழ்வினிலே தமிழா உந்தன்
  வேருனக்கு அடையாளம் தெரிய வேண்டும்

சலசலக்கும் கடலலைகள் மட்டும் நீண்ட
சமுத்த்தத்தின் அடையாளம் ஆவதில்லை
கலகலக்கும் சலங்கைஒலி மட்டும் ஆடல்
கலைக்கான அடையாளம் ஆவதில்லை
விலைவைக்கும் கேளிக்கை விளம்பரங்கள்
வாழ்வுக்கு அடையளம் ஆவதில்லை
தலையிழந்தும் தனைஇழக்காத் தன்மானம்தான்
தமிழனுக்கு அடையாளம் - வேறொன்றில்லை

வாசல்திண்ணைகள், விருந்தினர் தேடி
வாழ்ந்த தமிழனின் அடையாளம்
பேசக் கூட ஆளில்லாமல்
பொந்தில் வாழ்வது அவமானம்

நலம்புனை சிற்பங்கள் ஆலயத்துள்ளே
நிற்பது தமிழனின் அடையாளம்
குளியல் அறைபோல் பளிங்கைப் பதிப்பது
கோயில் கலைக்கே அவமானம்

தப்பில்லாத உச்சரிப்புத்தான்
தமிழின் செம்மைக்கு அடையாளம்
செப்புச் சிலைபோல் தொகுப்பாளினிகள்
செந்தமிழ் கொல்வது அவமானம்

குத்துப்பாட்டுக்கு குதிக்கும் தமிழா
பத்துப்பாட்டு உன் அடையாளம்
பெட்டித்தொகையே பெரிதென்றிராதே
எட்டுத்தொகை உன் அடையாளம்

பதுக்கல்கணக்கும் ஒதுக்கல் கணக்கும்
பகட்டுத்திருட்டின் அடையாளம்
பதினென்கீழ் கணக்கு நூல்தான்
பண்டைய தமிழின் அடையாளம்

யாரென்ன உறவு என்பதை அறிந்து
அழைப்பது தமிழின் அடையாளம்
பார்ப்பவரை எல்லாம் அங்கிள் என்று
பிள்ளைகள் அழைப்பது அவமானம்

நெல்லில் வேலி கட்டிய வளம்தான்
நமது பரம்பரை அடையாளம்
முள்வேலிக்குள் உறவுத் தமிழன்
முடங்கிக் கிடப்பது அவமானம்

அவமானம் துடைத்தெடுப்போம்! அடையாளம் மீட்டெடுப்போம்
தமிழ்மானம் காத்திருப்போம்! திசையெல்லாம் புகழ் படைப்போம்

----------------------------

Friday, June 25, 2010

இப்படித்தான் ஆரம்பம் - இன்னும் சில குறிப்புகள்


"அவனைப் பற்றியே ஆயிரம் கவிதைகள்
 எழுதி எழுதிநான் எழுத்தை நேசித்தேன்"
என்று நேருவைப்பற்றிச் சொன்னார்  கவிஞர். அவரை வாசித்து வாசித்தே தமிழின் பக்கம் வந்தேன். கவிஞரின் தனிக்கவிதைகள் வழியே அவரின் திரைப்பாடல்களுக்குள் பிரக்ஞையுடன் புகுந்தேன். அவரின் படைப்புலகுக்குள் புகுந்து பார்க்க இந்தக் கட்டுரைகள் ஒரு கைவிளக்காய் இருக்கலாம். ஆனால் உள்ளே போகிற நீங்கள் நான் காணாதவற்றையும் காண்பீர்கள். காட்டுவிப்பீர்கள்.


இந்தக் கட்டுரைகளில் கவிஞரின் உரைநடைக்குள்  நான்   செல்லவேயில்லை. அவரின் பயணங்களையும்  மன ஓட்டங்களையும் கவிதைகள் மற்றும் பாடல்கள்  வழியாகவே கண்டறியும் முயற்சி இது. அவர் எழுதிய பாடல்கள் சிலவற்றைக் கேட்கும்போது அவர் எழுதிக் கொடுத்த முறையை மாற்றி ஒலிப்பதிவு செய்திருந்தால் கூட அவரின் வரிகள் அவரைக் காட்டிக் கொடுத்துவிடும்.

பாடல் ஒலிப்பதிவின் போது ஆண்குரல்-பெண்குரல் நிரலமைப்புக்காக அவர் எழுதிய சரணங்களை முன்னும் பின்னும் மாற்றினார்களோ என்று ஐயப்படும் விதமாய் ஒரு பாடல்

"என்னை யாரென்று எண்ணியெண்ணி நீ பார்க்கிறாய்-இது
யார்பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்"

இதில் பெண்குரலில் முதல் சரணம் ஒலிக்கும்:

சிலையான உன்தெய்வம் பேசாதய்யா
சருகான மலர்மீண்டும் மலராதய்யா
கனவான கதைமீண்டும் தொடராதய்யா
காற்றான அவள்வாழ்வு திரும்பாதய்யா

இரண்டாவது சரணம் இது:

என் மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா
கனவென்னும் தேரேறிப் பறந்தாளம்மா
காற்றோடு காற்றாகக் கலந்தாளம்மா
நியாயமாக இதுதான் முதல் சரணமாக இருந்திருக்க வேண்டும்.

மனக்கோயில் சிலையாக வளர்ந்தாளம்மா என்பதற்கான எதிர்வாதம்,
சிலையான உன்தெய்வம் பேசாதய்யா.
மலரோடு மலராக மலர்ந்தாளம்மா என்பதற்கான எதிர்வாதம்,
சருகான மலர்மீண்டும் மலராதய்யா
கனவென்னும் தேரேறிப் பறந்தாளம்மா என்பதற்கான எதிர்வாதம்,
கனவான கதைமீண்டும் தொடராதய்யா
காற்றோடு காற்றாகக் கலந்தாளம்மா என்பதற்கான எதிர்வாதம்,
காற்றான அவள்வாழ்வு திரும்பாதய்யா   
கவியுளம் உணர்வோர் கண்டுசொல்ல இப்படி எத்தனையோ அம்சங்கள்
உண்டு.

இந்தத் தொடர் "கண்ணதாசன் ஒரு காலப்பெட்டகம்"என்ற தலைப்பில்
நூல்வடிவம் பெற்று,கோவையில் ஜூலை11காலைவெளியிடப்படவுள்ளது.

வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.
வலைப்பூவுக்குத் தொடர்ந்து வருகைதாருங்கள்.
எழுதுகிறேன்.எழுதுங்கள்.எழுதுவோம்

Tuesday, June 22, 2010

இப்படித்தான் ஆரம்பம் - 36

கவிஞரின் தேடல் உள்முகமாகக் குவியத் தொடங்கிய காலகட்டம் அவருடைய வாழ்வின் நிறைவு நிலையில் நிகழ்ந்தது. வாழ்வெனும் மாயப்பெருங்கனவை விலக்கி உதறி விழித்தெழுந்த நிலையில் அவருடைய மனப்பான்மை மலர்ந்தது

.


இமயம் வரைக்கும் என்பெயர் தெரியும்
குமரிக் கடலென் குணம்சொல்லி ஆடும்
அமெரிக்க வானம் என் அருமையைப் பாடும்..
ஆயினும் என்ன நண்பர்களே
அமைதியைத் தேடி அலைகின்றேன்

என்று அவர் சொன்னாலும்,தன்னையே தேடுகிற தவிப்பின் ஆரம்ப அடையாளங்களே அந்த அமைதியின்மை. அவருக்குள் இருந்த அபூர்வமான சக்தியைக் குறித்து நாம் அறிந்து கொள்வதற்கான தடயங்கள் அவருடைய
படைப்புகளிலேயே இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று. தினமணிக்கதிரில் அமரர் சாவி ஆசிரியராக இருந்த போது கவிஞருடன் தொலைபேசியில் கிராஸ்டாக்கில் வந்தாராம். அப்போதைய உரையாடலில் அவர் தொடர் எழுதக்கேட்டு அப்போது தந்த தலைப்பு அர்த்தமுள்ள இந்துமதம். ஆனால் அர்த்தமுள்ள இந்துமதம் என்ற பெயரை கவிஞர் ஏற்கெனவே ஒரு  கவிதையில் பயன்படுத்திய சொற்றொடர். "இந்தத் தலைப்பு தனக்கு எப்படித்  தோன்றியது " என்று நெற்றியைத் தேய்த்துக் கொண்ட கவிஞர் "அடேடே!அதிலே வருதா!'என்று கவியரங்கக் கவிதை ஒன்றை நினைவு
கூர்ந்தாராம். இதை கவிஞரின் உதவியாளர் திரு.இராம.கண்ணப்பன், "அர்த்தமுள்ள அனுபவங்கள்" என்னும் தன்னுடைய நூலில் பதிவு செய்துள்ளார். கவிஞரும் இதே செய்தியை தன்னுடைய "மனவாசம்" நூலில் குறிப்பிடுகிறார்.


அவர்கள் மேற்கோள் காட்டிய கவிதையை  ஏற்கெனவே படித்திருந்ததால் 
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. காரணம்,வெறுமனே அர்த்தமுள்ள இந்துமதம் என்று அவர் அந்தக் கவிதையில் சொல்லவில்லை.
காடுபொடி யாகநட மாடுசிவன் தேவியர்கள் காவல்கொள வந்த நாடு
காசிமுதல் கன்னிவரை காணுமிடம் அத்தனையும் கன்னிவிசாலாட்சிவீடு
ஆடவரில் தேவியர்கள் பாதியெனும்தத்துவமும் ஆக்கியவ ரென்று பாடு
ஆதிமுதல் அந்தம்வரை அர்த்தமுள்ள இந்துமதம் ஆசையுடன் தந்த ஏடு 
அர்த்தமுள்ள இந்து மதம் என்கிற நூலை எழுதுகிற எண்ணம் ஏற்படும் முன்பே ஆதிமுதல் அந்தம்வரை அர்த்தமுள்ள இந்துமதம் ஆசையுடன் தந்த ஏடு என்று கவிஞர் எழுதியிருக்கிறார். இந்தக்கவிதை  ஐந்தாம் தொகுதியில் உள்ளது. இதன் முதல்பதிப்பு வந்தது 1972ல். அர்த்தமுள்ள இந்துமதம் வெளிவந்தது 1973ல். இந்தத் தலைப்பில் ஓர் ஏடு தன்னால் எழுதப்படும் என்று உள்ளுணர்வு தூண்ட கவிஞரின் கவிதையில் அந்த சொற்றொடர் இயல்பாக வந்து விழுந்திருக்கின்றது. 
கவிஞரோ இராம.கண்ணப்பன் அவர்களோ முன்கூட்டியே இந்தப் பெயர்
வந்துள்ளதைப் பதிவு செய்துள்ளார்களே தவிர "ஆசையுடன் தந்த ஏடு"
என்ற சொற்றொடரை கவனித்ததாகத் தெரியவில்லை. இந்த வரிதான் 
கவிஞரின்ஆன்மா தன்னினும் பெரிய சக்தியுடன் தொடர்பு கொண்டிருந்ததன்அடையாளம்.

புலனின்பம் அரசியல் போன்றவற்றிலிருந்து பற்று நீங்கிய நிலையில்
தன்னந் தனிமையில் தவம் புரிவோம் எனக் கதவினைச் சார்த்தும் முன்
தன் வாழ்வைத் தள்ளி நின்று பார்க்கிறார் கவிஞர். அவருள் ஆவேசித்து
எழுந்த இறைவேட்கை,கிருஷ்ணகாந்தனின் வண்ணத் திருவடிகளில்
வாக்குமூலங்களை வைக்கிறது.

வாராத கற்பனை வாராத சிந்தனை வந்தநாள் அந்தநாளே
வளமான மேனியும் வளமான எண்ணமும் வாழ்ந்தநாள் அந்தநாளே
தீராத ஆசையில் மாதர்குழாத்தில் நான் திரிந்தநாள் அந்தநாளே
சீழ்பட்ட பண்டமும் பாழ்பட்ட கறிகளும் தின்றநாள் அந்த நாளே
சேராத கூட்டத்தில் என்னை மறந்துநான் சேர்ந்தநாள் அந்த நாளே
செறிவான புத்தியைத் தவறான பாதையில் செலுத்தினேன் அந்த நாளே
பாராத பூமியைப் பார்க்கின்றேன் இப்போது பார்த்தனைக் காத்த நாதா
பதிநினதுகதைபுகல உடல்நிலையைநீகொஞ்சம் பார்த்தருள் கிருஷ்ணகாந்தா
என்று மன்றாடுகிறார். கண்ணன் மீது பக்தியில்லாத காலத்திலேயே
கண்ணதாசன் என்று புனைபெயர் சூட்டிக்கொண்டு பிறகு கண்ணனுக்கு
தாசனானவர் கவிஞர். மிக இளைய வயதிலேயே கண்ணனை உணர்ந்திருந்தால், தன் வாழ்வே மாறியிருக்கும் என்று சொல்கிற கவிதயில் நாற்பதுகளில்தான் தனக்கு கிருஷ்ணபக்தி மிகுந்தது என்பதைக் கண்ணீருடன்
ஒப்புக் கொள்கிறார் கவிஞர்.
சீரோடும் நாற்பதும் நீரோடிப் போனபின் சிந்தையில் வந்துநின்றாய்
சென்ற காலங்களை எண்ணியென் கண்ணிலே சிறுமழை வீழவைத்தாய்
காராரும் மேனியாய்!ஐம்பதில் உன்னையான் கண்டனன் காதல்நாதா;
கனிவுடையவயதிலொரு எழுபதுகொடுத்தென்னைக் காத்தருள் கிருஷ்ணகாந்தா

என்று பிரார்த்தனை செய்கிறார் கவிஞர். இந்த பக்தியோகமே முற்றி அவரைத் தனக்குள் ஆழ்ந்திருக்கச் செய்தது.
யானே யானாய் என்னுள் அடங்கிட
வானும் மண்ணும் என் வாழ்வை என்செயும்
என்று அவர் சொன்னதும் இந்த ஆன்ம பக்குவத்தால்தான்.

எது இனிது என்று கேட்டபோது "இனிது இனிது ஏகாந்தம் இனிது" என்றாள் அவ்வை. தனிமை கண்டதுண்டு-அதில் சாரமிருக்குதம்மா என்றான் மகாகவி பாரதி.இந்தத் தாக்கத்தால் கவிஞர் எழுதிய "சாரமிருக்குதம்மா'என்ற கவிதை அவரது உள்நிலைத் தேடலை உறுதிப்படுத்துகிறது.
தனிமை ஒரு தனிமை அதில் தத்துவங்கள் கோடி
இனிமை இது இனிமையென இன்னிசைகள் பாடி
பனிமலர்கள் மயில்களுடன் பந்துவிளையாடி
கனிவகைகள் உண்ணவொரு காலம் வருமோடி  
பாரதி எதிர்பார்த்த அந்த ஏகாந்தம் அவனுக்குக் கிட்டாதது பற்றியும்
இரங்கிப் பாடுகிறார்.

ஆளரவம் அற்றதொரு அற்புத இடத்தை
நாள்முழுதும் தேடிமனம் நாடியலைகின்றேன்
ஊழ்வினையில் அந்தசுகம் உண்டென நினைத்தே
வாழுகிறேன் இறைவனொரு வாசல்தர வேண்டும்
காணிநிலம் வேண்டுமென பாரதி கனிந்தான்
ஏணியிலை பாவம் அவன் ஏறவழியில்லை
தோணிதனில் மாக்கடலைச் சுற்றிவரும் எண்ணம்
வீணென முடிந்துவிடில் வாழ்ந்தகதை வீணே
என்கிறார்.

வானளவு சோலை அதில் வண்ண மலர் மாலை
தேனளவு தேடிவரும் வண்டுகளின் லீலை
ஞானமுனி வோர்கள்நிலை நானடைய வேண்டும்
மோனநிலை கூடும் அதில் மோகனங்கள் பாடும்
என்று கவிஞர் எழுதினார்.

1981ன் மத்தியில் முதல்வர்.எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டபடி அமெரிக்காவில் இலக்கிய விழாவில் பங்கேற்கப் புறப்பட்டார் கவிஞர். விழா முடிந்து மருத்துவப்  பரிசோதனைக்காகப் போன இடத்தில் உடலிலுள்ள பல
கோளாறுகளும் வெளிப்படத் தொடங்கின.சிகிச்சைகள் பலன்தராமல்
அக்டோபர் மாதம் 17 ஆம்தேதி கவிஞர் மறைந்தார்.சிறுகூடற்பட்டியில்
பிறந்த அந்த கவிதைச்சூரியன் சிகாகோவில் அஸ்தமித்தது.

"அயல்நாடொன்றில் ஆளரவமற்ற சூழலில் அமைதியாக  என்னுயிர் பிரியும்" என்று முன்னர் எங்கோ எழுதியிருந்தார் கவிஞர். அந்த வாக்கும் பலித்துவிட்டது. அமெரிக்காவிலிருந்து விமானத்தில் கொண்டு வரப்பட்ட
கவிஞரின் உடலை முதல்வர் எம்.ஜி.ஆர். பெற்றுக் கொண்டார்.




"அந்த விமானத்தில் எங்கள் ராஜகுயிலின் கூடு மட்டுமே கொண்டுவரப்பட்டது" என்று அந்த நிகழ்வை எழுதினார் கவிஞர் வைரமுத்து. கவிஞரின் நண்பர் கலைஞரில் தொடங்கி பலப்பல கவிஞர்கள் இரங்கற்பாக்கள் வழியே தங்கள் இதய அஞ்சலியைச் செலுத்தினர். எத்தனையோ பேருக்கு இரங்கல் கவிதைகள் எழுதிய கவிஞர்,. "இருந்து பாடிய இரங்கற்பா"என்ற தலைப்பில் தனக்கான இரங்கற்பாவை முன்னதாகவே பாடியிருந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் மக்கள் அவரைப்பற்றி என்னென்ன சொல்வார்கள் என்று மனக்கண்ணால் கண்டு எழுதிய கவிதை அது.

கிருஷ்ணாம்பேட்டையில் கவிஞரின் உடல் எரியூட்டப்படும் முன்னால்
சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் அந்தக் கவிதையை இசைத்தார்.
பாரியொடும் கொடைபோகப் பார்த்தனுடன் கணைபோகப்
படர்ந்த வல்வில்
ஓரியொடும் அறம்போக உலகமறை வள்ளுவனோடு
உரையும் போக
வாரிநறும் குழல்சூடும் மனைவியொடும் சுவைபோக
மன்னன் செந்தீ 
மாரியொடும் தமிழ்போன வல்வினையை என்சொல்லி
வருந்து வேனே

தேனார்செந்தமிழமுதைத் திகட்டாமல் செய்தவன்மெய்
தீயில் வேக
போனால் போகட்டும் எனப் பொழிந்ததிரு வாய்தீயில்
புகைந்து போக
மானார்தம் முத்தமொடு மதுக்கோப்பை மாந்தியவன்
மறைந்து போக
தானே என் தமிழினிமேல் தடம்பார்த்துப் போகுமிடம்
தனிமைதானே


பாட்டெழுதிப் பொருள்செய்தான்;பரிதாபத்தால் அதனைப்
பாழும் செய்தான்
கேட்டழுத பிள்ளைக்கோர் சிறுகோடும் கீறாமல்
கிளை முறித்தான்
நாட்டழுகை கேளாமல் நந்துயரும் காணாமல்
நமன் எனும்பேய்
சீட்டெழுதி அவனாவி திருடியதை எம்மொழியில்
செப்புவேனே


வாக்குரிமை கொண்டானை வழக்குரிமை கொண்டானை
வாத மன்றில் 
தாக்குரிமை கொண்டானை தமிழுரிமை கொண்டானை
தமிழ் விளைத்த
நாக்குரிமை கொண்டானை நமதுரிமை என்றந்த
நமனும் வாங்கிப்
போக்குரிமை கொண்டானே போயுரிமை நாம்கேட்டால்
பொருள்செய்யானோ 
இதற்குமுன் ஒரு கவிதையில் கவிஞர் ஒரு கேள்வியைக் கேட்டிருப்பார்.
 செத்தபின் உயிர்கள் போவது எங்கே?தெரியும் வரைநீ தெய்வத்தை நம்பு
என்று. தான் கனிந்து கனிந்து பக்தி செய்த கண்ணனிடம் கவிஞர் போனாரா, தான் பாடிய தமிழுடன் கலந்தாரா என்று தன்னுடைய மரணத்திலும்  மக்கள் குழம்புவார்களாம்.தன் உடலுக்கு மூட்டப்பட்ட நெருப்பும் கூட தன் பாடலைத்தான் பாடும் என்று கவிஞர் சொன்னது கிருஷ்ணாம்பேட்டை
மயானத்தில் உண்மையானது.சிதைநெருப்பு ஓங்கிஉயர்ந்த போது, சீர்காழியின்
தழுதழுத்த குரலில் அந்த அமர வரிகள் எல்லாத் திசைகளிலும் எதிரொலித்தன.

போற்றிய தன் தலைவனிடம் போகின்றேன் என்றவன்வாய்
புகன்றதில்லை
சாற்றிய தன் தமிழிடமும் சாகின்றேன் என்றவன்வாய்  
சாற்றவில்லை
கூற்றுவன்தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன் படுத்தவனைக்
குவித்துப் போட்டு
ஏற்றிய செந்தீயே..நீ எரிவதிலும் அவன்பாட்டை
எழுந்து பாடு!!

(நிறைந்தது)

Saturday, June 19, 2010

இப்படித்தான் ஆரம்பம்-35

கண்ணதாசன் என்று சொன்ன மாத்திரத்தில் நம் நினைவுக்கு வருகிற மற்றோர் அம்சம், புலனின்பம். வாழ்வின் சுகங்களை நிதானமாய் ரசித்து அந்த அனுபவங்களை இலக்கியமாய்ப் படைத்தவர் கண்ணதாசன்.அவசரத்துக்கு கள், ஆவேசத்திற்கு பெண் என்ற வகையைச் சேர்ந்தவரல்ல அவர். காதலிலும் போதையிலும் அவர் ஈடுபட்ட விதமே அலாதியானது.வானில் முழுநிலவு ஒளிவீச, அதன் ஒளிக்கீற்று விழுகிற முற்றத்தில் மஞ்சம் விரித்து, பண்ணிசை ஒலிக்க. பெண்ணொருத்தி பரதம் ஆட கையில் கிண்ணமேந்தி நிற்கிற பொழுது பொங்குகிற எண்ணங்கள் அவரை ஆனந்த உலகுக்கே அழைத்திச் செல்கின்றன.

"வெண்ணிலா முற்றத்தின்மேல் விரிமுல்லை மஞ்சம் போட்டு
பண்ணிலே இதயம் தோய,பரதத்தில் கண்கள் ஆட
கிண்ணமும் கையுமாக 'கிண்'ணென்று நிற்கும் போது
எண்ணங்கள் கோடியாகி எங்கெங்கோ ஓடியாடும்"

போதையல்ல அவரை இயக்குவது. போகத்தின் சுகம் பொங்கும் சூழலே அவரை இயக்குவது.வாழ்வு குறித்த அச்சமும், நிலையாமை குறித்த நடுக்கமும் சிலரை புலனின்பத்திலிருந்து விலகிநிற்கச் சொல்கிறது. சிலரை அந்த நிலையாமை குறித்த எண்ணங்களே சுகங்கள் நோக்கி ஆற்றுப்படுத்துகிறது. கண்ணகி கோவலன் முதலிரவுக்காட்சியைப் பாடவந்த இளங்கோவடிகள், இந்த உலக வாழ்க்கை நிலையில்லாதது என்பதாலேயே, இருக்கின்ற போதே இன்பங்களின் உச்சம்தொட இருவரும் துணிந்தாற்போல் இருந்தது என்கிறார்.

"தொலையாத இன்பமெலாம் துன்னினார் மண்மேல்
  நிலையாமை கண்டவர்போல் நின்று" என்று மனையறம் படுத்த காதையில் பாடுகிறார்.

கண்ணதாசனும் நிலையாமை குறித்து நீளப்பேசுகிறார்.
"சுட்டெரித்தால் இந்த மேனியும் சாம்பலாய்
  சுடுகாட்டு மண்ணிலுருளும்
  சுவையான பாவலன் போயினான் எனச்சொல்லி
சொந்தமும் வீடுசெல்லும்
கட்டைக்கு வாய்க்கின்ற நிலைகூட மானிடக்
கட்டைக்கு வாய்ப்பதில்லை" என்பதுவரை தீவிரமான தத்துவ விசாரம்போல் தோன்றுகிறது.ஆனால் இந்த விரிவான முன்னுரையெல்லாம் வேறொன்றுக்காக எழுதப்பட்டது..

கட்டைக்கு வாய்க்கின்ற நிலைகூட மானிடக்
 கட்டைக்கு வாய்ப்பதில்லை
கண்மூடி மேனியை மண்மூடும் முன்னரே
காலத்தை அனுபவிப்பேன்
தட்டத்திலே கிண்ணம் மதுவைத்தெடுத்துவா
தங்கமே பக்கம் வந்து
தழுவாத மேனியைத் தழுவுநீ அப்போது
சாராது மரணபயமே" என்கிறார்.

மரணபயத்திலிருந்து தப்பிக்கவா காதலும் கள்ளும் அவருக்குக் கைகொடுத்தன? இல்லை. கவிஞரின் உயிரில் உற்சாகத்தை ஊறச்செய்த உல்லாசங்கள் அவை.

"பைரன் தழுவாத பாவையரே, பாரசீகப்
பாவலனும் பாடாத பாவையர்காள் என்னையொரு
வைரம்போல் உங்கள் மார்பினிலே சூடுங்கள்
ஓர்கையிலே மதுவும் ஓர்கையில் மங்கையரும்
சேர்ந்திருக்கும் வேளையிலேஜீவன் பிரிந்தால்தான்
நான்வாழ்ந்த வாழ்க்கை நலமாகும் இலையெனில்
ஏன்வாழ்ந்தாய் என்றே இறைவன் எனைக்கேட்பான்"என்பவை கவிஞரின் பிரபலமான பெண்மணீயம் கவிதையின் முத்தாய்ப்பு வரிகள்.அதே கவிதையில்

 "பெண்மணி உன்னைப் பெரிதாய் மதிக்கின்றேன்
  கண்மணி உந்தன் காலை வணங்குகிறேன்
 உன்மணி வாய்ச்சாரம் ஊற்றிக்கொடு தினமும்
 என்மணி வாயோடு இணைந்தே கிடந்துவிடு
கிண்ணத்தில் மதுவூற்று கிண்ணென்னும் போதையிலே
எண்ணங்கள் எல்லாம் என் இதழில் ததும்பட்டும்!
வண்ணத்தைக் காட்டு உன் வடிவம் முழுவதையும்
கண்ணாலே பார்க்கின்றேன் -கண்ணாடி மேனியிலே
சிற்றெறும்பு போலோடி சிற்றணுக்கால் அத்தனையும்
ஒவ்வொன்றாய்ப் பார்த்தேநான் ஓடித் திரிகின்றேன்
ஆரத்தழுவுகின்றேன்; ஆவி உடலேறி
சாரத் தழுவுகின்றேன் சந்நிதியே தெய்விகமே
ஏட்டில் எழுதாத எழுத்தையெல்லாம் உன்னுடலில்
பாட்டாய்நான் எழுதுகிறேன் பள்ளித் திருமயிலே
மதுவே வா! மயிலே வா! வாழுங்காலம் வரைக்கும்
புதியதுவாய்த் தோன்றும் பொருளேவா!" என்றெல்லாம் வெறிகொண்டு பாடும் இடத்தில்தான் கவிஞரின் வீச்சும் தேடலும் தவிப்பும் வெளிப்படுகிறது
 இப்படி தேடச்செய்தது எது என்கிற கேள்விக்கு இவருடைய கவிதைகளிலேயே விடைகள் கிடைக்கின்றன.


மகககவி பாரதியின் சின்ன வயதுக்காதல் நிறைவேறவில்லை. பத்து வயது
இருக்கும்போது ஒன்பது வயதுத் தோழியின் கள்ளமற்ற அன்பில் கரைந்து போனான் பாரதி.
 ஒன்பதாய பிராயத்தள் என் விழிக்கு
ஓது காதை சகுந்தலை ஒத்தனள் என்று சுயசரிதையில் எழுதுகிறான்.
கவிஞருக்கும் இளவயதில் அப்படியொரு காதல் தோல்வி உண்டு. கவிதா என்ற பெயரில் தி.நகரில் கட்டிய ஹோட்டலில் காவிரி என்னும் பெயருள்ள அறையில் இருப்பார். காவிரி என்பது அவருடைய  காதலியின்  பெயர்.


ஒருமுறை பொது இடத்தில் தன் பழைய காதலியைப் பார்த்த கவிஞர் தன்னையும் மறந்து பெயர் சொல்லி அழைக்க நினைத்தவர் கடைசி நேரத்தில் சுதாரித்தாராம்.
காவிரி என்று எந்தன் கடையிதழ் வந்த வார்த்தை
பூவிரி மஞ்சம் தன்னில் போட்ட கல் ஓசையாகும்
என்று அச்சம்பவத்தைக் கவிஞர் பதிவு செய்கிறார்.

அதே போல அயல்நாடொன்றில் அவர் பேசிய கூட்டத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்தார். சற்றே வயதான போதும் அந்தப் பெண்ணின் வனப்பு அப்படியே இருந்ததாம்.
தோட்டத்து மதிற்சுவரின் மேலாகத் தோன்றிவரும் ஜோதிக்கீற்று
கூட்டத்தில் இருந்திடினும் குறிப்பாக எனைநோக்கிக் கொஞ்சும் காற்று
ஆட்டத்து மயிலெந்தன் அரங்கத்து விதானங்கள் அமைதி ஊற்று
வாட்டத்தும் வளமாக வயதினிலும் அழகாக வந்தாள் நேற்று
என்று வலியிலும் மகிழ்ச்சி கண்டார் கவிஞர்.

இந்த வலியின் சுகத்தை வாழ்வில் அழுது ரசித்தார் அவர். 
  
தொழுவது சுகமா வண்ணத் தோகையின் கனிந்த மார்பில்
விழுவது சுகமா உண்ணும் விருந்துதான் சுகமா இல்லை
பழகிய காதல் எண்ணிப் பள்ளியில் தனியே சாய்ந்து
அழுவதே சுகமென்பேன்யான் அறிந்தவர் அறிவாராக
என்பது அவருடைய அனுபவ வரிகள். இந்த மெல்லிய உண்ர்வு சிலநேரங்கள் தென்றலாய் வருடுகிறது. சில நேரங்களில் சூறாவளியாய்க் கிளர்ந்து காமம் பேசுகிறது. காமம் அடங்கும்போது கணநேரம் தோன்றும் விரக்தியை பலரும் தத்துவம் என்று தவறாகக் கருதுகிறார்கள். கவிஞர் அதனை,"சக்தியிலான் பேசும் தத்துவம்"என்கிறார்.

பொன்னிநதி யவ்வளவு போனரத்தம் போனபின்னர்
 கன்னியரை ஏசுதடி உள்ளம்-இது
காலிடறி யானைவிழும் பள்ளம்
என்கிறார். இறுதிவரை இதுதானா நிலை என்றால் இல்லை. வாழ்வின்  நிறைவு நிலையில்  மிகத்துல்லியமான சமநிலைக்குக் கவிஞர் வருகிறார். அதற்கு சாட்சி சொல்கிறது ஏழாவது தொகுதியில் உள்ள ஒரு கவிதை 
"செங்கயல் ஓடி விழுந்த விழிக்கொரு சித்திரம் தீட்டுகிறாள்
பங்கயம் போன்ற முகத்தினில் ஒளிக்கதிர் பாய்ந்திட விம்முகிறாள்"
என்றந்தக் கவிதையைக் கவிஞர் தொடங்குகிறார். இது வழக்கமான
காதல் கவிதை என்றே எல்லோரும் எண்ணும்போது

காதல் இளங்கவி போலிதை எண்ணிக் கனிந்திடும் மானிடரே-நான்
மாதெனச் சொல்வது ஓடி மறைந்தயென் வாலிப நாட்களையே
ஏது நடப்பினும் என்ன நடப்பினும் இளமை திரும்பிடுமோ
தேதி நடந்திடத் தேதி நடந்திட திரையும் விழுந்திடுமோ


 இது, பொன்னிநதி அவ்வளவு ரத்தம் போனதும் வரும் கணநேர விரக்தி என்று நினைக்கத் தோன்றும்.ஆனால் கவிஞர் கவிதையைத் தொடர்கிறார்:
இன்னும் உடலினில் ரத்தம் இருப்பினும் எண்ணம் அரும்பவில்லை-அதில்
மின்னிடும் சிந்தனை ஞானமல்லால் சுக வேதனை ஏதுமில்லை
மன்னிய பக்குவம் எய்திய நாட்களை வாழ்வில் அடைந்துவிட்டேன் -இனி
தன்னந் தனிமையில் தவம் புரிவோம் எனக் கதவினைச் சார்த்திவிட்டேன்!
சிற்றின்பச் சலசலப்பில் சிறகடித்த அந்த ராஜாளிப் பறவை பேரின்பப் பெருவெளியில் சலனமின்றி மிதந்து, மேகங்களில் கூடுகட்டி மோனத்தவம் இயற்ற நினைத்த நேரம் அது.

தன் வாழ்வின் பேரேட்டைத் தானே புரட்டி ஐந்தொகை வகுத்து ஆண்டவனிடம் கணக்குக் கொடுக்க கவிஞர் ஆயத்தமான நேரம் அது. சுண்ணாம்புக் காளவாயில் திருநாவுக்கரசரை இட்டு கதவைச் சார்த்தினார்கள். அவர் வெந்து தணிவார் என்றே எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் அங்கே தன்னந்தனிமையில் தவமியற்றினார்.தன்னை இதுவரை சுட்ட காமக்காளவாயில் கவிஞர் கதவைச் சார்த்திக் கொண்டு தவமியற்றத்
தயாரானார். நிகழ்த்தியது தவம்தான். அந்தத் தவத்திற்கான அடிப்படைத் தேவைகளாய் அவர் கேட்டவை என்ன? மூடிய கதவுக்குப் பின்னே மோனத்தவம் கனிந்ததா? இவைதான் நமக்கு இப்போது தெரிய வேண்டியவை..

(தொடரும்)

Thursday, June 17, 2010

இப்படித்தான் ஆரம்பம் - 34

இந்தியாவின் இணையற்ற பெருமைகளைப் பட்டியல் போடும் பாரதி, தத்துவக் கோட்பாடுகளின் தூல வடிவமாக வாழ்ந்தவர்களையே பட்டியலில் சேர்க்கிறான். மானுட தத்துவத்தைக் கலையாக்கிய கம்பன், கலைநேர்த்தி என்னும் தத்துவத்திற்கு சான்றான காளிதாசன், என்ற வரிசையில் வேதாந்த தத்துவத்தின் வடிவாய் வாழ்ந்த ஆதிசங்கரரை குறிப்பிடுகிறான் பாரதி.



கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்
காளிதாசன் கவிதை புனைந்ததும்
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்தளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்
நம்பரும் திறலோடொரு பாணினி
ஞாலம் மீதினில் இலக்கணம் கண்டதும்
இம்பர் வாழ்வினிறுதிகண்டு உண்மையின்
இயல்புணர்த்திய சங்கரன் ஏற்றமும்  
என்றந்தப் பட்டியல் நீள்கிறது.

கவிஞரைப் பொறுத்தவரை அவர் வாழ்க்கை அனுபவங்களால் வார்க்கப்பட்டவர். வேதாந்தச் சிந்தனைகளுடன் அவருக்கு நேரடிப் பரிச்சயம் ஏதுமில்லை. "தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்-அது தெரியாமல் போனாலே வேதாந்தம்" என்பதும் அவருடைய வாக்குதான். காஞ்சி மஹாபெரியவர்பால் அவருக்கிருந்த அளப்பரிய பக்தியும், அடிக்கடி  படித்து  வந்த "தெய்வத்தின் குரல்" புத்தகமும் வேதாந்த நாட்டத்தை அவருக்குக்  காலப்போக்கில் ஏற்படுத்தியிருக்க வேண்டும். கவிஞர்  மறைந்து  சில ஆண்டுகளுக்குப்  பிறகு  சகோதரர்  காந்தி  கண்ணதாசனிடம்  கேட்டு   கவிஞரின்  புத்தக அலமாரியைச் சென்று பார்த்தேன். அவர் வைத்திருந்த வரிசையின் ஒழுங்கு கலையாமல் பாதுகாத்திருந்தார்கள். நேர்க்கோட்டில்
அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களின் மீது படுக்கை வசத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரே புத்தகம், தெய்வத்தின் குரல்.பிரித்துப் பார்த்தால்,முதல் பக்கத்தில்,"இது என்னுடைய புத்தகம்; இதை யாரும் இரவல் கேட்கக் கூடாது என்று எழுதி, அன்பன் கண்ணதாசன் என்று கையொப்பமிட்டிருந்தார்.

ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம், பஜகோவிந்தம் ஆகியவற்றைத் தமிழில் எழுதினார் கவிஞர். அவற்றை மொழிபெயர்ப்பு என்று சொல்லலாகாது. டிரான்ஸ் க்ரியேஷன் என்று சொல்லத்தக்க மொழியாக்கங்கள் அவை.

மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வி
மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்
நீலமா மேகம்போல நிற்கின்ற திருமால் உந்தன்
நேயத்தால் மெய்சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்;
மாலவன் மீது வைத்த மாயப்பொன் விழியிரண்டை
மாதுநீ என்னிடத்தில் வைத்தனை என்றால்- நானும்
காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்று
கண்ணிறை வாழ்வு கொள்வேன் கண்வைப்பாய் கமலத்தாயே

பொன்மழை என்ற தலைப்பில் கனகதாரா ஸ்தோத்திரத்தைத் தமிழில் கவிஞர் எழுதின தொகையின் முதல் பாடல் இது. எண்பதுகளில் இக்கவிதை ஸ்டிக்கர்களாகவும் வெளியிடப்பட்டது. அதைத் தமது பணப்பெட்டியில் ஒட்டி வைத்திருந்தவர்கள் பலர்.

 கவிஞரின் கவிதை ஓட்டத்திற்கு மிகப் பொருத்தமாக அமைந்தது பஜகோவிந்தம்."பஜகோவிந்தம் பஜகோவிந்தம் மூடமதே!ஸ்ம்ப்ராப்தே
சந்நிஹிதே காலெ நஹிநஹி ரக்ஷதி டுக்ரிஞ் கரணே" என்னும் முதல்
சுலோகத்தை கவிஞர் தமிழில் தந்த விதம் இது.

பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை
 பாடிடுக மூடமதியே
பாடுவதில்தீர்ந்துவிடும் பழிபாவம்அத்தனையும்
 பரந்தாமன் சொன்னவிதியே
பாடுவதைவிட்டுவிட்டு பாணினிஇலக்கணத்தைப்
பற்றுவதில் நன்மைவருமோ
பாய்விரித்தவேளைதனில்காலனவன்சந்நிதியில்
பாணினியம் காவல்தருமோ

பஜகோவிந்தம் என்று சொன்ன மாத்திரத்தில் எல்லோரின் உள்ளங்களிலும்
உதயமாகும் முதல் வரி, புனரபி ஜனனம் புனரபி மரணம். இந்த சுலோகத்திற்குக் கவிஞர் தந்த தமிழ்வடிவம் அபாரமானது.
தாய்வயிற்றிலே பிறந்து தானிறந்து மீண்டும் மீண்டும்
தாய்வயிற்றிலே பிறக்கிறேன்
தாரணிக்குள்ளே இருந்து வான்வெளிக்குள்ளே பறந்து
தாரணிக்குள்ளே நடக்கிறேன்
ஓய்விலாத என்பிறப்பு மீண்டும் மீண்டும் யார்பொறுப்பு
உன்னையன்றி வேறு காண்கிலேன்
ஊரிலுள்ள ஜீவனுக்கு நீகொடுத்த வாழ்க்கையென்று
உன்னிடத்தில் என்னை வைக்கிறேன்
வாய்திறந்து கூறுஇந்த வார்த்தைதனை-விட்டுவிட்டு
வாடுவதில் என்ன பயனே
வஞ்சகர்க்கு இறப்புவைத்து பஞ்சவர்க்கு வாழ்வுவைத்த
வித்தகனைப் பாடு மனமே

போலி குருமார்கள் திருமூலர் காலத்திலிருந்தே உண்டு. ஆதிசங்கரர், பஜகோவிந்தத்தில் வேடதாரி முனிவர்கள் பற்றி ஒரு  சுலோகமே  பாடுகிறார். ஜடிதோ முண்டில்உஞ்சித கேச என்று தொடங்கும்  அந்த சுலோகத்தில் பிரபலமான வரி, "உதர நிமித்தம் பஹுக்ருத வேஷ". எழுத்தாளர் சுஜாதா ஒரு திரைப்பட வசனத்தில் கூட இந்த வரியைப் பயன்படுத்தியிருப்பார். வயிற்றுப் பிழைப்புக்காக சாமியார் வேஷம் என்பது அதன் பொருள். இந்த சுலோகத்தை கவிஞர் தமிழில் தந்துள்ளார்.

காவியுடை மொட்டையொடு கையிலொரு பாத்திரமும்
காட்டுவது என்ன துறவோ
கண்ணியமும் இல்லை யிதில் புண்ணியமும் இல்லை வெறும்
கட்டைகளின் வேஷமல்லவோ
கோவணமும் நீள்சடையும் கோஷமிடும் வாய்மொழியும்
கோமுனிவன் ஆக்கி விடுமோ
கும்பியை நிரப்பவொரு செம்புசுமப்பார் அவர்க்கு
கோவிந்தன் காட்சி வருமோ

ஏசு காவியம் எழுதிய பிறகு இந்து சமயத்திற்கும் ஒரு காவியம் படைக்க வேண்டும்  என்று கவிஞர் கருதியதன் விளைவாக அவர் எழுதத்  தொடங்கியதுதான்  சங்கர காவியம். 
ஆதிசங்கரரின் வரலாற்றைப் பாடும் பணி எத்தகையது என்று அவையடக்கக் கவிதையிலேயே அறிவிக்கிறார் கவிஞர்.

ஆழ மாகடல் அளப்பது போலவும்
வேழ மாயிரம் வெல்வது போலவும்
ஏழை இந்த இளங்கவி செப்பினேன்
வாழி என்று வாழ்த்துக சங்கர 
கற்ற ஞானியர் காசறு பாவலர்
குற்ற மென்று குறையெடுத் தோதவும்
முற்ற றிந்தவர் முன்புயான் வெட்கவும்
சற்ற றிந்தது சாற்றினேன் சங்கர

ஆனால் சங்கரரின் முரசாகவே நின்று தான் முழங்குவதாக கவிஞர் சொல்கிறார்.
அரசு வீற்றுள அத்வைதம் தனை
சிரசிலேற்றி இத் திக்கெலாம் சென்றவன்
பரசுராம ஷேத்திரப் பால நின்
முரசு போலநான் முழங்கினேன் சங்கர 
சங்கர காவியம் தொடங்கும்போது ஆல்வாய் நதிக்கு ஆற்றுப் படலம் பாடுகிறார்.

சுற்றி உலாவரும் சுடர்த்தேவி தோகை ஆல்வாய்த் தொன்நதியாள்
வெற்று விடாய்தனை தீர்த்தங்கே வேத விடாயும் தீர்க்கின்றாள்
சேர மண் பற்றி நாட்டுப் படலம் பாடுகிறார்.பாட்டுடைத் தலைவன்
ஆதிசங்கரர் தோன்றியது காலடி என்னும் கிராமத்தில்.எனவே காலடி பற்றி
கிராமப்படலம் பாடுகிறார். மத்தளம், செண்டை , கொம்பு போன்ற வாத்தியங்கள் முழங்குகிற ஊர் என்பதை, அந்த வாத்தியங்களின் ஓசைநயம் தரும் சந்தத்திலேயே பாடுகிறார்.

மத்தளத்தொடும் செண்டை கொம்புகள்
மண்ணதிர்ந்திடச் செய்வன
எத்தவத்தையும் வெல்லும் வேதியர்
ஏற்று மாமறை சொல்வன
தத்தும் நீர்த்திரள் யாவும் ஆங்கொரு
சக்தி தத்துவம் காண்பன
முத்து விற்பபோல் முத்தி வித்திடும்
மோக மற்றவூர் காலடி 
முத்துப்போல் முத்தி எளிதாகக் கிடைகிறது என்றும் பொருள்.முத்தியை விலை போட்டு விற்கும் மோகமில்லாத ஊர் என்றும் பொருள்.
பரிபூரண ஞானத்தில் சித்துகள் தாமாகக் கைவருவதும்,கைவரப் பெற்றோர்
அதைக் கடந்து செல்வதுமாக காலடியில் காலம் கழிகிறது என்கிறார் கவிஞர்.

எண்ணெயின்றி ஓர் தீபம் ஏற்றுவார்
என்றும் வாழ்ந்திடும் அவ்விடம்
கண்ணைமூடி ஓர் சிற்பம் நாட்டுவார்
கவிதை பாடிடும் கண்ணிடம்
மண்ணை யள்ளுவார் வைத்த கையிலே
மணிகள் தோன்றிடும் தம்மிடம்
வெண்ணிலாவிலும் தேய்பிறை இலா
வெற்றி மங்கலம் காலடி

இத்தகைய புனிதத் தலமாகிய காலடியில், சீலம் மிக்க வாழ்வு வாழ்கிறார்கள்சிவகுருவும் ஆர்யாவும். எப்போதும் சிவசிந்தையிலேயே அந்தத் தம்பதிகள் இருக்கின்றனர், சிவத்தன்மை நிரம்பிய  மகன் வேண்டியே இல்லறத்திலும்
ஈடுபடுகின்றனர் என்பதை நயமாகவும் நாகரீகமாகவும் கவிஞர் குறிப்பிடுகிறார்

தழுவுங்கால் இருவர் மூச்சும் சங்கரா என்னும் -விட்டு
நழுவுங்கால் அதையே சொல்லும்;நல்லுண வருந்தும் போதும்
எழுங்கைகள் அதையே பாடும் இடும்கையும் அதையே கூறும்
வழுவுங்கால் வார்த்தைகூட வன்சொல்லை அறியா தன்றே

இவர்களுக்குப் பிள்ளையாய் சங்கரர் வந்து தோன்றுகிறார்.
மையிரு விழிகள் பூக்கள் மலரிரு இதழ்கள் பாக்கள்
செய்யகை அமுதச்சாறு திருத்தக்க நிலவின் மார்பு
என்று குழந்தையை வர்ணிக்கிறார்.
திருஞானசம்பந்தர் உதடு பிதுங்க அழுதது பற்றி சேக்கிழார் சொல்கையில்
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க
பூத பரம்பரை பொலிய புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலி திருஞான சம்பந்தர்

என்று சொல்கிறார். சங்கர மழலை கைகால் உதைத்ததையும்  மதலை  பேசியதையும் தற்குறிப்பேற்றமாகவே சொல்கிறார்
கவிஞர்.

 உதைக்கின்ற கால்கள் வீணர் ஓடட்டும் என்ப போலும்
பதைக்கின்ற கைகள் இந்தப் பார்காப்போம் என்ப போலும்
விதைக்கின்ற மழலை -யாமே வேதங்கள் என்ப போலும்
எதைக்கண்ட போதும் பிள்ளை இந்துவின் ஒளியே போலும்..



சங்கரர் காலை முதலை கவ்வியது, நெல்லிக்கனி பிக்ஷை பெற்ற இடத்தில்
கனகதாரா ஸ்தோத்திரம் பாடியதுஎன்று காவியத்தைத் தொடர்ந்து படைத்து  
வந்தார் கவிஞர். குருவைத் தேடி சங்கரர் கிளம்பும் இடத்தைப் பாடும்போது

குருவிலாத இடமெது நாட்டினில் குருவிகள்போல் குருவினர் கூட்டமே
ஒருவன் வேண்டும் உயர்ந்த வேதாந்தியாய் உலகம் முற்றையும்  உணர்ந்ததோர் ஞானியாய்
என்று சங்கரரின் தேடலை கவிஞர் சித்தரிப்பார்.தினமும் கவிஞர் சங்கர காவியம் எழுதிவந்தார்.

இடையில் பணி தடைப்பட்டது. ஏதேனும் பத்திரிகையில் தொடராக வெளியிடத்  தொடங்கினால் எழுதி முடித்து விடுவார் என்கிற ஆசையில், அவரது உதவியாளர் திரு.இராம.கண்ணப்பன் வார  இதழ் ஒன்றிற்கு அனுப்ப, அவர்கள் ஒருமாதம் கழித்து முழுவதையும் எழுதி அனுப்பினால் தொடராக வெளியிடுவோம் என்று சொல்லிவிட்டார்களாம். ஈழமகள்கண்ணீர் ,பாண்டிமாதேவி, பர்த்ருஹரி காவியம் என்று கவிஞரின் முற்றுப் பெறாத காவியங்களின் வரிசையில் சங்கர காவியமும் சேர்ந்து கொண்டது.
கழகத்தைப் பாடிய காலங்களிலும் சரி, கடவுளைப் பாடிய காலங்களிலும் சரி, கவிஞர் தீராக்காதலராகவே திகழ்ந்தார். அவரிடம் பெருகிய காதல் பலநேரங்களில் காமமாகவே கருதப்பட்டது.இன்றும் பலருக்கும் இருக்கிற
கேள்வி இதுதான்.கண்ணதாசன் காதலரா?காமுகரா?

(தொடரும்)

Wednesday, June 16, 2010

இப்படித்தான் ஆரம்பம்-33

அர்த்தமுள்ள இந்துமதம் எழுதினாலும் கவிஞர் சமய உணர்வுகளுக்கு  அப்பாற்பட்டவர் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு.திருக்குரானை தமிழில் மொழிபெயர்க்க அவர் முற்பட்டார். அது குறித்து சிலர் அதிருப்தி தெரிவித்ததும் அப்பணியை நிறுத்திக் கொண்டதோடு இசுலாமிய சகோதரர்களுக்கு வருத்தம் தெரிவித்து நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டார். எனினும் இஸ்லாம் தமிழில் எனும் பிளாக் கவிஞர் மொழிபெயர்த்த முதல்பகுதியை  வெளியிட்டு  மகிழ்ந்துள்ளது. 

திறப்பு
எல்லையிலா அருளாளன்இணையில்லா அன்புடையோன்
அல்லாஹ்வைத் துணைகொண்டுஆரம்பம் செய்கின்றேன்.
* * *
உலகமெலாம் காக்கின்றஉயர்தலைவன் அல்லாவே
தோன்றுபுகழ் அனைத்திற்கும்சொந்தமென நிற்பவனாம்;
அவன் அருளாளன்;அன்புடையோன்;
நீதித் திருநாளின்நிலையான பெருந்தலைவன்;
உன்னையே நாங்கள்உறுதியாய் வணங்குகிறோம்;
உன்னுடைய உதவியையேஓயாமல் கோருகிறோம்;
நேரான பாதையிலேநீ எம்மை நடத்திடுவாய்;
அருளைக் கொடையாக்கி யார்மீது சொரிந்தனையோ
அவர்களது பாதையிலேஅடியவரை நடத்தி விடு!
எவர்மீது உன் கோபம்எப்போதும் இறங்கிடுமோ
எவர்கள் வழிதவறிஇடம் மாறிப் போனாரோ
அவர்களது வழி விட்டுஅடியவரைக் காத்து விடு!”

திருமறையின் தோற்றுவாயாகிய அல்ஃபாத்திஹா என்னும் பகுதியை கவிஞர் மொழிபெயர்த்திருந்த விதம் இது.
திருச்சியில் உள்ள கலைக்காவிரி நிறுவனம் மேற்கொண்ட முயற்சி காரணமாக கவிஞர் ஏசு காவியம் படைத்தார்.திருக்குற்றாலத்தில் கவிஞரைத் தங்கவைத்து ஒருவர் விவிலிய வரிகளை வாசிக்க,மற்றொருவர் விளக்க கவிஞர் வரிகளை உடனே சொல்வாராம்.ஏசு காவியம் எனக்கு அறிமுகமானதும் கவிஞர் மறைந்த போதுதான்.ஏசு காவியத்தின் எண்சீர் விருத்தமொன்றை வெளியிட்டது இதயம் பேசுகிறது இதழ்.ஏசு கடைசியாகத் தனது சீடர்களுக்குச் சொன்னது,கவிஞரே தனது சீடர்களுக்குச் சொன்னதுபோல் உள்ளது
என்ற குறிப்புடன் வெளியான வரிகள் இவை;
அன்புடைய குழந்தைகளே உங்களோடும்அதிகநாள் நானிருக்க மாட்டேன் பின்பு
பொன்பொழியும் என்தந்தை இடத்துச் செல்வேன்போனபின்னர் நீங்களெல்லாம் என்னைப் போல
அன்புடைமை மிக்கோராய் வாழ்தல் வேண்டும்ஆன புதுக் கட்டளையை ஏற்றல் வேண்டும்
மன்பதையோர் இதிலிருந்து நீவீர் எந்தன்மகத்தான சீடரென அறிதல் வேண்டும்
இந்தக் கவிதையைப் படித்த பிறகே ஏசு காவியம் புத்தகத்தை வாங்கினேன். மாணவர் பதிப்பு ஒன்றையும் கலைக்காவிரி வெளியிட்டிருந்தது.

ஏசுநாதர் அவதாரம் செய்யுமிடத்தில் அருமையான தாலாட்டுப் பாடலை கவிஞர் எழுதியிருந்தார்.

வானளந்த திருக்குமரா!மனிதகுல மருத்துவனே!
தேனளந்த திருவாயில் சித்திரங்கள் தீட்டவந்தாய்!
மாணிக்கத் தொட்டிலுக்கு வாய்க்காத பெருமையெல்லாம்
ஆநிரைக் கொட்டிலுக்கு யார்கொடுத்தார் எங்கோவே!
தச்சனுக்குப் பிள்ளையென்றும் தாயொருத்தி கன்னியென்றும்
இச்சனங்கள் சொன்னாலும் இறைவனது திருக்குமரா
போன்ற வரிகள் இப்போது நினைவிலிருக்கின்றனஏசுவை மேய்ப்பனென்றும் மனிதர்களை ஆடுகளென்றும் சொல்லும் வழக்கம் கிறித்துவத்தில் உண்டு. மக்களை ஆடுகள் என்று சொல்வதற்கு முற்றிலும் புதிய காரணமொன்றை கவிஞர் ஏசுகாவியத்தில் குறிப்பிட்டிருந்தார். ஒரு மரத்தின் இலைகளை உண்ணும் ஆடுகள், அந்த மரம் வெட்டப்பட்டால் அழுவதில்லை. அடுத்த மரம் தேடி ஓடும்.ஏசு தண்டிக்கப்பட்ட போது மக்கள் அப்படித்தான்  நடந்து  கொண்டார்களாம். கவிஞர் சொல்கிறார்....
"ஆடு நிகர்த்தவர் மக்களே-இலை ஆடிய பக்கத்தில் ஓடுவார்;முன்பு
நாடிய மன்னனைப் போற்றிய வாயில் நாலு மொழிகளும் பேசுவார்-உடல்
கூடு விழுந்தபின் யானையை கொசு கொத்திக் கடிப்பது போலவே-துன்பக்
கோடு விழுந்தவர் மேனியில் புதுக் கொள்கையையும் மக்கள் தீட்டுவார்


 ஏசு காவியத்தின் பல இடங்கள் வாசிப்பவர்களை உருக்கிவிடும்.ஏசுவின் கைகளில் சிலுவையைத் தூக்கிவைத்த காட்சியை வர்ணிக்கும் போது ,
 
தொட்டதெல்லாம் பொன்னாகும் வள்ளலிடம் சென்று ஒரு தொழுநோய்க்காரன்
விட்டெறிந்த பணம்போல ஏசுபிரான் கைகளிலே வீரர் எல்லாம்
எட்டுப்பேர் சுமக்கின்ற பெருஞ்சிலுவை தனையாங்கே எடுத்து வைத்தார்
கட்டளைபோல் பெருவானம் கலக்கமுற ஓர்மின்னல் கண்டதம்மா
என்றெழுதினார் கவிஞர். உலகில் உள்ளவர் பாவங்களை  சுமப்பவரிடம்  கொடுத்த சிலுவை, வள்ளலிடம் விட்டெறிந்த பணம் போன்றது என்று புதிய உவமை படைத்தார் கவிஞர். சிலுவையில் ஏசுவை அறைகிற போது உடலில் ஆணிகளை அடிக்கும் காட்சியைக் கவிஞர் வர்ணிக்கிறார்.
"அக்கிரமம் வென்றதென ஓராணி கைகளிலே அறைந்து வைத்தார்
மக்களினம் தோற்றதென மறு ஆணி கால்களிலே அடித்து வைத்தார்"
"நாயகனை சிலுவையிலே சாய்த்தார்கள் ஆணிகளை நன்றாய்த் தட்டி
காயங்கள் யாவினுக்கும் குழந்தைகளைக் கொடுத்தார்கள்"
என்பன போன்ற ஏராளமான இடங்கள் உருக்கமானவை.
காவியத்தில் முக்கியமான இடங்களில் கவிஞன் உள்ளே நுழைந்து தன் கருத்தைச் சொல்வதற்கு கவிக்கூற்று என்று பெயர்.பாஞ்சாலி சபதத்தில் பாரதியின் குரலைப் பல்வேறு இடங்களில் கேட்கலாம்.அதேபோல ஏசுவை சிலுவையில் அறைகிற இடத்தில் கவிஞர் நுழைந்து ஒரு கேள்வி கேட்கிறார்
வஞ்சகர்கள் வாழுவதும் மதுக்குளத்தில் நீந்துவதும் வாழ்க்கையெல்லாம்
பஞ்சணையில் தூங்குவதும் பால்பழங்கள் அருந்துவதும் பண்பு மிக்கோர்
வெஞ்சிலுவை ஏறுவதும் வெங்கொடுமை காணுவதும் பண்பாடென்றால்
நஞ்சிருக்கும் பாத்திரமே நல்லவரின் பாத்திரமோ அறியோம் நாமே ! 

சிலுவையில் அறையப்பட்ட மகனை மேரிமாதா காண்கிற இடம் .குழந்தைப் பருவத்தில் பார்த்த மகனை மறுபடியும் அன்னை பார்க்கிறாள்


பதினாலாம் நால்நிலவை,பால்நிலவை,தன்வயிற்றுப் பனியை தேனை
புதனொடும் வியாழனொடும் பொருந்துகிற மதியழகை பூப்போல் கண்ணை
மதலையிலே பார்த்திருந்த மரியாளாம் மாதா இவ்வடிவம் பார்த்தாள்
என்று சொன்ன கவிஞர்,திருக்குறளை மிகச்சரியான இடத்தில் கையாள்கிறார். 

ஈன்றெடுத்த போதினிலே பெரிதுவக்கும் தன்மகனை இந்த நேரம்
ஊன்றிவைத்த சிலுவையுடன் பார்ப்பதற்கோ திருமாதா உயிர்படைத்தாள்
 என்னும் இடம் கண்களில் கடலை வரவழைக்கும். ஏசுநாதர் சிலுவையில் மரிக்கிற போதும் உணர்ச்சிப் பிழம்பாகிறார் கவிஞர்.

"பூவிருந்த பொன்மரங்கள் போய்விழுந்து பட்டன பூமிதன்னை வானகத்து மீனினங்கள் தொட்டன "
"தாயிருக்கப் பிள்ளை சாகும் சங்கடங்கள் கொஞ்சமோ!சாட்டையாலே வேட்டையாடி சாவதென்றால் தாங்குமோ!" 
"ஓதுகின்ற வேதநூலில் உள்ளவாறு மீட்பரின் பாதமோடு எலும்புஅங்கு பங்கமாக வில்லைகாண்
ஆதவனின் விலாப்புறத்தில் குத்திநோக்குவாரெனஆதிநூலில் உள்ளவாறு யாவுமாகிவிட்டதே ".
ஏசு காவியத்தை கவிஞர் நிறைவு செய்கிற இடமும் அபாரமானது.

மண்ணிடை ஏசு மறுபடி வருவார் என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து தேவைநித்தியமே!
விண்ணரசமையும் உலகம் முழுதும்-இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே..ஏசுவை நம்புவமே!
என்று அவர்களின் நம்பிக்கைக்கு அரண்சேர்ப்பார்.
தத்துவம் ஏதும் விட்டுவிட்டிருந்தால் தயவுடன் பொறுத்தருளும் என்றும்  கேட்டுக் கொள்வார் .

வாழிய சூசை;வாழிய மரியாள்;வாழிய ஏசுபிரான்
ஆழ்தமிழாலே அவன்புகழ்சொன்னேன் துன்பங்கள் சேரவிடான்
 என்று நம்பிக்கை தெரிவிப்பார்.
கவிஞர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் துணைவியார் திருமதி வள்ளியம்மை கண்ணதாசன் கோவையில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார். ஏசுகாவியம் உருவானபோது குற்றாலத்தில் கூடவே இருந்தவர் அவர்.கவிஞர் கடைசியாய் சிகாகோவில் மருத்துவமனையில்  இரு கைகளிலும் குழாய்கள் பொருத்தப்பட்டு  படுத்துக்  கிடந்த  கோலம், ஏசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவூட்டியதாக அந்தக் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்  
தான் படைத்த இறவாக்காவியம் என்று ஏசு காவியத்தை அவர் சொன்னார். அதேநேரம், தான் பிறந்து வளர்ந்து பின்பற்றும் இந்து மதத்திற்கு இப்படியொரு காவியம் எழுத வேண்டுமென்ற எண்ணம் அவரை உந்தியது. அதன் விளைவாக அவர் எழுதத் தொடங்கியதுதான்.....சங்கர காவியம்!!
(தொடரும்)

Monday, June 14, 2010

இப்படித்தான் ஆரம்பம்-32

கவிஞர் எழுதத் தொடங்கி இருபத்தைந்தாண்டுகள் ஆனபோது தெய்வ வணக்கத்துடனும் தன்னடக்கத்துடனும் ஒரு கவிதை எழுதினார் அவர். அதிலொரு பிரகடனமும் செய்தார்.
இருபத்தைந்தாண்டுகள் எழுதினேன் என்பதால் என்னையான் போற்றவில்லை
இன்னுமோர் காவியம் எண்ணுவேன் எழுதுவேன் இலக்கியம் தூங்கவில்லை என்றார்.

ஆனாலும் தொடக்க காலந்தொட்டே சில குறுங்காவிய முயற்சிகளைக் கவிஞர் மேற்கொண்டுள்ளார்.அவற்றுள் குறிப்பிடத்தக்கவை, மாங்கனி மற்றும் ஆட்டனத்தி ஆதிமந்தி.

இவற்றில் முன்னே பழுத்தது மாங்கனி. கல்லக்குடி வழக்கில் தண்டிக்கப்பட்டு 1954 ல் சிறையிலிருந்த போது ஆறு நாட்களில் இதை எழுதினாராம் கவிஞர். சிறையிலிருக்கும் போது கடிதம் கட்டுரை காவியம் என்று பலவும் எழுதும் பழக்கம் தலைவர்களால் தொடங்கிவைக்கப்பட்டதுதானே. மோரிய  மன்னனுக்கும் பாண்டியனுக்கும் நிகழ்ந்த போரில் மோரிய மன்னனுக்கு ஆதரவாய் சேரன் செங்குட்டுவன் படையெடுத்ததை மட்டுமே அடிப்படையாக்கி, மாங்கனி என்ற ஆடல்பெண்ணையும் அடலேறு என்ற நாயகனையும், மோகூர் மன்னனின் மகள்களாக தென்னரசி-பொன்னரசி ஆகிய கற்பனைப் பாத்திரங்களையும் படைத்து கவிஞர் உருவாக்கிய குறுங்காவியமே மாங்கனி.

காவியத்தின் தொடக்கத்தில், கனக விசயர் முடித்தலை நெரித்த நாளை சேரன் செங்குட்டுவன் கொண்டாட அங்கே மாங்கனி நடனமாடுகிறாள். மிக  மெல்லியளான மாங்கனி நடனமாடிய காட்சியை, காற்றுக்கு முருங்கைமரம் ஆடுவதை உவமையாக்குகிறார்.

 காற்றுக்கு முருங்கைமரம் ஆடல்போலும்
கடலுக்குள் இயற்கைமடி அசைதல் போலும்
நாற்றுக்குள் இளங்காற்று நடித்தல் போலும்
நல்லோர்தம் அவைக்கண்ணே நடனமிட்டாள்



அவளைப் பார்த்து மயங்கி நின்றான் அடலேறு. பொதுவாக ஆடல்பெண்களில் தவறான மனப்பான்மை கொண்டவர்கள் மயங்கி நின்றவர்களை இனங்கண்டு மயக்க முற்படுவார்கள்.ஆனால் மாங்கனி அப்படியில்லையாம்.

மூட்டைமுடிச் சத்தனையும் கட்டிக் கொண்டு
முதிர்தாயின் பின்னந்த மில்லை சென்றாள்
வேட்டையிலோர் புலிவீழந்தது அறியாள் அன்னாள்
வேடர்குணங் கொண்டங்கு வராததாலே
போனவளையே பார்த்துக் கொண்டிருந்த அடலேறு, அவளுடைய கால்சுவட்டைத் தேடினானாம்.

சித்திரத்தாள் அடிச்சுவட்டைத் தேடிப் பார்த்தான்
தென்றலது போனதற்கு சுவடா உண்டு
கைத்திறத்தால் தரைதடவிப் பார்த்து அன்னாள்
கால்பட்ட இடத்திலிளஞ் சூடு கண்டான் என்பார் கவிஞர்.

மோகூர் மன்னனுக்குத் துணையாக சேரனின்  படையை  அடலேறு  தலைமையேற்று  நடத்திச் செல்கிறான். போர்வீரர்களை நடனமாடி மகிழ்விக்க ஆடல்மகளிரை அழைத்துச் செல்லும் அந்நாளைய வழக்கப்படி மாங்கனியை அழைத்துச் செல்கிறான் அடலேறு. அவர்களுக்குள் காதல் அரும்புகிறது. போர்க்களத்தில் வில்லன்கள் முளைக்கிறார்கள். திருவிழாவில் குழந்தையைத் தொலைப்பதுபோல் போர்க்களத்தில் மாங்கனியைத் தொலைத்து விடுகிறான் அடலேறு. போரில் வெற்றி பெற்றதும் படைத்தலைவனுக்கு தன் மாளிகையில் விருந்து வைக்கிறான் பழையன். இளவரசியர் தென்னரசி-பொன்னரசி இருவரும் உணவையும், கனிகளையும்,காதலையும் பரிமாறுகிறார்கள். முக்கனிகளில்வாழையும் பலாவும் உண்டபின் மாங்கனியை எடுக்கிறான். உடனே காதலி நினைவு வருகிரது. தொட்ட கனி தூக்காமல் விட்டகனி தேடி ஓடுகிறான்.

கதை இருக்கட்டும். இந்தக் காட்சியில் விருந்துக்கு  வந்தவன்  சொல்லாமல்  கொள்ளாமல்  வெளியே ஓடினால் வீட்டிலிருப்பவர்களுக்கு எப்படி இருக்கும்?   தென்னரசி-பொன்னரசி-பழையன் ஆகிய மூவரின் வருத்தத்தை ஒரு விருத்தத்தில் அழகாகக் காட்டுகிறார் கவிஞர்.

 தென்னரசிக் கேதொன்றும் புரியவில்லை
 தேன்குறையோ பால்குறையோ என்று எண்ணிப்
 பொன்னரசி தனைப் பார்த்தாள்-அவளோ அங்கு
 பூத்திருந்த மலர்போன வழியைப் பார்த்தாள்
 கன்னலினை மறந்தோமென் றெண்ணித் தந்தை
 கவலையுடன் கோபித்தே மகவைப் பார்த்தான்
 பொன்னை ஒளி மறந்திருந்து தேடி ஓடும்
புதுக்கதையை அவரெங்கே அறிவார் பாவம்!

தென்னரசி அடலேறு திருமண ஏற்பாடுகளை சேரன் முன்னின்று செய்கிறான். மாங்கனி என்ன ஆனாள் எப்போது வருகிறாள் என்பதெல்லாம் கதைப்போக்கில்  கண்டுகொள்ள வேண்டியவை. ஆனால்,கல்யாணக்
கச்சேரியை வர்ணிக்கிறார் கவிஞர்.

"பிப்பீ"என்றார் நாதஸ்வரத்துக் காரர்
பெருந்தட்டுத் தட்டிவிட்டார் மேளகாரர்
எப்போதும் போலிருந்தார் ஒத்துக்காரர்.

கல்யாண வீடுகளில் எல்லாம் இந்த வரிகள் நினைவுக்கு வரும். கவிஞருக்கு மாங்கனி பெரும்புகழ் பெற்றுத்தந்ததே தவிர அவரின் படைப்பாளுமைகளில் விளைந்த மற்ற கனிகளுடன் ஒப்பிடும் போது புகை போட்டுப் பழுக்க வைத்தது போலத்தான் இருக்கிறது மாங்கனி.

ஏறக்குறைய இதே கதைக்களம் கொண்டது ஆட்டனத்தி ஆதிமந்தி. வரலாற்றுப் பின்புலம் கொண்ட கதை. சேர மன்னன் ஆட்டனத்தி,மருதி-சோழ இளவரசி ஆதிமந்தி ஆகியோர் இடையிலான முக்கோணக் காதல் இது. மருதியைக் காதலித்தாலும் சூழ்நிலை காரணமாய் ஆதிமந்தியின் காதலை ஏற்க வேண்டிய சூழல் ஆட்டனத்திக்கு. தன் போருக்கு ஆதிமந்தியின் தந்தை சோழன் உதவியது மட்டுமே காரணமா? காவியத்தில் இந்த இடத்தைக் கவிஞர் கையாளும் விதம் சுவையானது.போர் முடிந்த ஓர் அந்திப் பொழுதில் ஆதிமந்தி ஆட்டனத்தியைச்  சந்திக்கிறாள்.

மாலை மறைந்தது அந்தி எழுந்தது 
மக்களும் இல்லுறச் சென்றுவிட்டாள்
சோலையிலே ஆதிமந்தி மலர் 
சூடுற சேரனைத் தேடுகிறாள்
வாலைக் குமரியர் எண்ணிவிட்டால் உயர்
வானமும் கைப்படத் தாழுமன்றோ
சேலை நெருக்கிய சிற்றிடையில் கரம்
சேர்க்கப் பிறந்தவன் வந்துவிட்டான் 

மருதியும் ஆட்டனத்தியும் ஒருவரை ஒருவர் விரும்புவது ஆதிமந்தி அறிந்த ஒன்றுதான். ஆனாலும் தன் காதலை நிறைவேற்றிக் கொள்ளக் கிடைத்த  வாய்ப்பை மிகச்சரியாய் பயன்படுத்துகிறாள். அதுசரி, மருதியை விரும்பும் ஆட்டனத்தி இதற்கு உடன்பட்டது எப்படி? மிகச் சுலபமாக இதற்கு
பதில் சொல்கிறார் கவிஞர்.

நெஞ்சில் இருப்பது கைக்குக் கிடைத்தபின்
நேரங் கழிப்பதை யார்விழைவார்
கஞ்ச மலரடி தூக்கிவைத்தாள் அவள்
காதலன் மார்பினில் பாய்விரித்தாள்
வஞ்சமகன் -அட-வஞ்சிமகன் மலர்
வஞ்சியில் உள்ளதை எண்ணவில்லை
கொஞ்சக் கிடைத்தது நெஞ்சம் துடித்தது
கொட்டி எடுத்துயிர் கொண்டுவிட்டான்
கவிஞர் பொதுவாக சொல்ஜாலங்களை நம்புபவர் அல்லர். ஆனாலும் ஆட்டனத்தி ஆதிமந்தியில் சாதி என்ற சொல்லை வைத்து ஒரு விருத்தத்தை வலியப் புனைந்தார்.

"நாற்சாதிப் பெண்வகையில் அவளே அந்த
 நற்சாதிப் பதுமினியாள்-மெல்லத் தூக்கும்
காற்சாதி மலர்ச்சாதி-கண்ணின் சாதி
கருங்குவளைப் பூச்சாதி-கன்னச் சாதி
பாற்சாதி கை காந்தள் படைப்பின் சாதி
மேற்சாதி கீழ்ச்சாதி எதிலும் சேரா
வேற்சாதி இவள்சாதி என்றான் வேந்து".

இருபொருள் தரும் சொல்ஜாலங்களையே கவிஞரிடம் நிறையக் கேட்டிருக்கிறோம். அத்திக்காய் காய் காய், பார்த்தேன் சிரித்தேன்,  என்று
பல பாடல்கள். இந்த சாதிச் சிலம்பம் அவருடைய மற்ற ஜாலங்களுக்கு முன்னே சோபிக்கவில்லை. ஆனால் மன்னாதி மன்னன் என்ற பெயரில்
இதுவே திரைப்படமாக வந்தது. வசனமும் பாடல்களும் கவிஞர்தான்.
கண்கள் இரண்டும் இங்கே உன்னைக் கண்டு பேசுமோ போன்ற
அற்புதமான பாடல்கள் அந்தப் படத்தில்தான்.

 மாங்கனி, ஆட்டனத்தி-ஆதிமந்தி, இரண்டுமே ஏறக்குறைய ஒரேமாதிரிதான்
முடிகின்றன. காவிரியில் ஆட்டனத்தி அடித்துச் செல்லப்படுகிறான்.அவனைத்தேடி  ஆதிமந்தியும் ஆற்றோடு செல்கிறாள். மாங்கனியிலும் மாங்கனி ஆற்றில் விழ அடலேறு பின்னால் வந்து விழுகிறான்.
மாங்கனியுடன் ஒப்பிடும்போது கதைக்களம் கவிவளம் இரண்டிலும் ஆட்டனத்தி ஆதிமந்தி மேலோங்கியே இருக்கிறது. இரண்டும் குறுங்காவியங்கள் என்ற அளவில் அமைந்தன.ஆனாலும்,ஆற அமர
காவியம் படைக்க விரும்பினார் கவிஞர்.அதற்கு சரியான வாய்ப்பாக அமைந்தது...ஏசு காவியம்!!

(தொடரும்)

Thursday, June 10, 2010

இப்படித்தான் ஆரம்பம் - 31

கவிஞர் கண்ணதாசன் கோலோச்சிய களங்களில் கவியரங்கமும் ஒன்று. கவியரங்கம் என்னும் வடிவத்தை மக்கள் மத்தியில் கொண்டு  சென்றவர்களில் கவிஞரும்  கலைஞரும்  குறிப்பிடத்தக்கவர்கள். கவிஞர் காங்கிரஸ் இயக்கத்திற்குச் சென்ற பிறகு அங்கும் இந்த  வடிவத்தை  பிரபலப்படுத்தினார்.  கவியரங்குகளில் கவிஞரால் பாடப்பெற்று பல ஊர்கள்  பாடல் பெற்ற தலங்கள் ஆயின. தொன்மையான  சிறப்புகள்  கொண்ட  மதுரையைப்  பாடுகிற போதெல்லாம் கவிஞருக்குள் உற்சாகம்  பொங்கிப்  பிரவாகமெடுத்தது. அது  புதிய  கற்பனைகளைக்  கொண்டு  சேர்த்தது. நக்கீரனை மதுரையில் சிவபெருமான் நெற்றிக்கண்ணால் எரித்தது  பற்றி  திருவிளையாடல்  புராணம் பேசுகிறது. ஏன் சிவபெருமான் எரித்தார் என்பதற்கு கவிஞர், பரஞ்சோதி முனிவரும் சொல்லாத காரணமொன்றைச் சொல்கிறார்.



'மங்கையர்தம் கூந்தலுக்கு வாசமுண்டோ
மணமென்பது இயற்கையிலே வருவதுண்டோ
 தங்கமலர்க் கண்ணாரைத் தழுவும்போது
 தாய்ப்பாலின் வாசந்தான் வருமல்லாது
 பொங்கிவரும் பூமணத்தை நுகர்ந்ததுண்டோ
 பொய்யென்று நக்கீரப் புலவன் கூற
 தங்கட்சி தோற்றதெனத் தலைகுனிந்த
தமிழ்ச்சொக்கன் திருக்கோயில் தழைத்த நாடு'
தோல்வி வருத்தத்தால் சிவபெருமான் தலைகுனிந்த போது நெற்றிக்கண்ணின் நெருப்பு நக்கீரர் மேல் பட்டு விட்டதால் அது ஒரு விபத்து மட்டுமே என்பதுகவிஞரின் சுவையான கற்பனை. மதுரையில் நடைபெற்ற கவியரங்கில் அவையடக்கம் பாடுகிறபோது கூட மதுரைக்காரர்கள் காதலின் மகத்துவத்தைப் பாடுகிறார். காதலியை முத்தமிடும் போது காதலர்கள் மறக்காமல், முன்னே விழும் கூந்தல்மலர்களைப் பின்னுக்கு ஒதுக்கி விடுவார்களாம்.

பூ-வாடுமென்று புறமொதுக்கி முத்தமிடும்
மூவாத முல்லை முறுவலினார் காதலிலே
பாவாட விடுகின்ற பாண்டியனார் பொன்னாட்டில்
நாவாடத் துணிகின்ற நாயேனை மன்னிப்பீர்  என்கிறார் கவிஞர்.

அவையடக்கம் கூட ஒரு மரபு கருதித்தான்.
அவையடக்கம் சொன்னேன் -ஆனால் எனக்கிந்த அவை அடக்கம் என்று உடனே ஒரே போடாகப் போட்டு விடுவார்.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் கொங்குநாட்டுக்கு வந்தபோது யாரோ அவருக்கு எரிச்சலூட்டியிருக்கிறார்கள்.
ஊர்களோ பட்டி தொட்டி,உண்பதோ கம்பஞ்சோறு,
பேர்களோ பொம்மன் திம்மன் பெண்களோ பொம்மி திம்மி
காருலாம் கொங்கு நாட்டைக் கனவிலும் நினைக்கொணாதே
என்று ஏசிவிட்டுப் போய்விட்டார்.அந்தப் பழியைக் கவிஞர்தான் துடைத்தார்.

நீலமலைச் சாரலிலே நிலம் விரித்து
நெளிந்துவரும் தென்றலினை வலையவிட்டுப்
பால்போன்ற இதயத்தைப் பிள்ளையாக்கிப்
பண்பினையும் அன்பினையும் துணைவராக்கி
வாழுங்கள் எனவிட்டாள் தமிழ்மூதாட்டி
வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்
சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்
சுவையெல்லாம் பணிவெல்லாம் கோவையில்தான்

ஏனுங்க!என்னவுங்க!ஆமாமுங்க!
இருக்குங்க !சரியிங்க!பாக்க வாங்க!
மானுங்க!வேணுங்களா!வாங்கிக்கோங்க!
மலைப்பழமும் இருக்குங்க !எடுத்துக்கோங்க!
தேனுங்க!கையெடுங்க!சாப்பிடுங்க!
திருப்பூரு நெய்யுங்க! சுத்தமுங்க!
ஏனுங்க எழுந்தீங்க உக்காருங்க
ஏபையா பாயசம் எடுத்துப் போடு

அப்பப்பா கோவையிலே விருந்து வந்தால்
ஆறுநாள் பசிவேண்டும் வயிறும் வேண்டும்
தப்பப்பா கோவைக்கு வரக்கூடாது
சாப்பாட்டினாலேயே சாகடிப்பார்
ஒப்பப்பா இவருக்கு வள்ளல் ஏழ்வர்
உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்

பழங்குடியினர் தலைவன் கோவன் பெயரால் கோவை கோவன்புத்தூர் என்று பெயர் பெற்று கோயம்புத்தூரானது.ஆனால்சேரநாட்டு இளங்கோ துறவு பூண்டுநாட்டின் எல்லையில் ஊரமைத்த புதியஊரே கோவை என்றும் இளங்கோவன் புத்தூரே கோவன்புத்தூர் என்றும் ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார் கவிஞர்.

அந்நாளில் இளங்கோவன் அமைத்த புத்தூர்
அங்கோவன் புத்தூராய்ப் பேரெடுத்து
இந்நாளில் கோயம்புத்தூ ராயிற்று
இயல்பான உருமாற்றம் சரிதச் சான்று

இதற்கு ஆதாரமே கிடையாதே,தவறாயிற்றே என்று யாராவது சொன்னாலும்
கவிஞர் கவலைப்படுவதாயில்லை .
என்கருத்தை யான்சொல்வேன்;தமிழறிந்தோர்
இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக என்று தாண்டிப் போய்விட்டார்.
கவிஞரால் பாடப்பெற்ற ஊர்களில் புதுச்சேரியும் ஒன்று.

கம்பன் கழகம் அந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டது.
மதுச்சேரி என்றே மாகவிகள் நினைத்திருந்த
புதுச்சேரி வாசல் புலவர்களின் தலைவாசல்
மதித்தேறி வந்த மாகவிகள் தம்மையெலாம்
அணைத்தோர்கள் வாழும் அழகுநகர் புதுச்சேரி!
பாரதியும் இங்கேதான் பாடித் திரிந்தானாம்
பாரதிதாசன் இங்கே பாண்டியனாய் வாழ்ந்தானாம்


 என்றெல்லாம் பாண்டியின் பெருமைகளைக் கவிஞர் பதிவு செய்தார். 
 இந்தியா விடுதலை பெற்று 25 ஆண்டுகள் ஆனபோது கலைஞர் தலைமையில் வெள்ளிவிழா கவியரங்கம் நடந்தது.ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு  தியாகியைப்  பற்றி கவிதை வாசித்தார்கள்.கவிஞருக்குத் தரப்பட்ட
தலைப்பு,"பெயர் தெரியாத தியாகிகள்".அவருடைய மிக முக்கியமான கவிதைகளில் இதுவும் ஒன்று.

"ஊரறியோம்!பேரறியோம்!உறங்கிவிட்ட கதையறிவோம்
 சீரறிவோம்!திறமறிவோம்!தியாகத்தின் சிறப்பறிவோம்!
ஆங்காங்கே மாண்டவர்கள் ஆயிரம்பேர் என்பதனால்
 அத்தனைபேர் வரலாறும் அறிவதற்கு வசதியில்லை!
 தூங்காமல் தூங்கிவிட்ட சுதந்திரப் பூங்கன்றுகளைத்
 தாங்காமல் தாங்கிவிட்ட தாயகத்து மண்ணறியும்!
என்று தொடங்கும் கவிதையில்,சுதந்திர இந்தியாவை ஒரு மாளிகையாக
உருவகிக்கிறார் கவிஞர்.பெயர் தெரிந்த தலைவர்களும்,தியாகிகளும் அதன்
மாடமாய்,நிலைவாசலாய் தூணாய் ஒளிவீசுகிறார்கள்.ஆனால் பெயர்
தெரியாத தியாகிகள்?

"இன்றிங்கே வானுயர எழுந்திருக்கும் மாளிகைக்கு
 தன்னெலும்பைத் தந்தவர்கள் சதைரத்தம் கொடுத்தவர்கள்
அஸ்திவாரங்கள் என அடியினிலே தூங்குகிறார்!

மாளிகைக்கு மையிடுவோம்;மாணிக்கக் கதவிடுவோம்;
ஆங்காங்கே ஓவியங்கள் அழகழகாய்த் தீட்டிவைப்போம்;
கண்ணாடி பதித்திருப்போம்;கலைவிளக்கும் ஏற்றிவைப்போம்
முன்னாலே முகப்பெடுத்து முத்துப்போல் பந்தலிட்டுக்
கண்ணாலே பார்த்தாலே கவி பிறக்குமாறு செய்வோம்
அத்தனையும் மாளிகைக்கே;அலங்காரம் மாளிகைக்கே;
அஸ்திவாரங்களுக்கு அலங்காரம் யார்புரிவார்?

தாங்குகின்ற பூமியிது தாங்கியதே நம்மையென்று
தங்கப் பாவாடை கட்டித் தளதளக்கப் பார்த்தோமா?
மண்தானே மண்ணென்று மாறி மிதித்திருப்போம்.
அப்படித்தான் அரசியலின் அடிப்படையாய் நின்றவரும்
செப்பரிய பேர்கூடத் தெரியாமல் தூங்குகிறார்;
தாயார் அழுதிருப்பார்;தம்பியர் துடித்திருப்பார்
வாயார முத்தமிட்ட மனையாளும் மாய்ந்திருப்பாள்;
நாடே அழவேண்டும் நல்லவர்கள் செத்ததற்கு
யாரே அழுதார்கள் அஸ்திவாரங்களுக்கு !

உணர்ச்சிமயமான இந்தக் கவிதையில் விடுதலை வீரர்களின் வரலாற்றைப்
பாடமாக வைக்காமல் வெள்ளையர் பற்றியே வரலாறுகள் இருப்பதைக் கவிஞர் இடித்துரைக்கிறார்.


"மண்ணாண்ட க்ளைவ்முதல் மவுண்ட்பாட்டன் பிரபுவரை
 படிக்கத்தான் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம்" என்றவர் ,
"ஊரெங்கும் தேடுங்கள்;உழைத்த கதை கேளுங்கள்
 யாரென்று பாருங்கள்;அவர்பெயரைக் கூறுங்கள்
நானவரைப் பற்றி நாலுவரி எழுதுகிறேன்
வானவரை வந்து வாழ்த்துரைக்கச் சொல்லுகிறேன் என்றோர் உறுதிமொழியும் வழங்கினார்.

நடிகர் திலகத்தின் பிறந்தநாள் விழாவில்,கவி.கா.மு.ஷெரீஃப் தலைமையில்
நவரசக் கவியரங்கம் நடந்தது.கவிஞருக்குத் தரப்பட்ட தலைப்பு,'அழுகை'.

பிறப்பிலும் அழுதேன் ;வந்து பிறந்தபின் அழுதேன்;வாழ்க்கைச்
சிறப்பிலும் அழுதேன்;ஒன்றிச் சேர்ந்தவர் சிலரால் சுற்று
மறைப்பிலும் அழுதேன்;உள்ளே மனத்திலும் அழுதேன்;ஊரார்
இறப்பிலே அழுவதெல்லாம் இன்றுவரை அழுதுவிட்டேன்
என்று தொடங்கும் அமர கவிதையை அந்த அரங்கில் கவிஞர் படைத்தார்.
சீசரைப் பெற்ற தாயும் சிறப்புறப் பெற்றாள்-அன்று
நாசரைப் பெற்ற தாயும் நலம்பெறப் பெற்றாள்-காம
ராசரைப் பெற்ற தாயும் நாட்டிற்கே பெற்றாள்-என்னை
ஆசையாய்ப் பெற்ற தாயோ அழுவதற்கென்றே பெற்றாள் 


கண்வழி சொரியும் உப்பு கடவுளால் வருவதல்ல
மண்வழி வரலாம் பெற்ற மகன்வழி வரலாம் சேர்ந்த
பெண்வழி வரலாம் செய்த பிழைவழி வரலாம் ஆனால்
நண்பர்கள் வழியிலேதான் நான்கண்ட கண்ணீர் உப்பு


தொட்டபின் பாம்பு என்றும் சுட்டபின் நெருப்பு என்றும்
பட்டபின் உணர்வதே என் பழக்கமென்றான பின்பு
கெட்டவன் அழுகைதானே கெடுவதை நிறுத்த வேண்டும்
பட்டபின் தேறல்தானே பட்டினத்தார்கள் வாழ்வு

கண்ணீரைத் தொட்டுக் கவிஞர் எழுதியஇந்த வரிகள் காலத்தின் வெய்யிலிலும்
உலராத உன்னதம் கொண்டவை .

இன்னொரு நண்பரின் பிறந்தநாள் கவியரங்குகளிலும் கவிஞர் பாடினார். கலைஞர் என் காதலி என்று பாடிய கவிதை, கலைஞர் பிறந்தநாள் கவியரங்கக் கவிதைகள் பலவற்றிலும் சிறந்தது.

கன்னியின் பெயரைக் கேட்டேன் கருணையின் நிதியம் என்றாள்
மன்னிய உறவைக் கேட்டேன் மந்திரி குமாரி என்றாள்
பன்னிநான் கேட்டபோது பராசக்தி வடிவம் என்றாள்
சென்னைதான் ஊரா என்றேன் திருவாரூர் நகரமென்றாள்
தந்திரம் அறிவாள் மெல்ல சாகசம் புரிவாள் மின்னும்
அந்திவான் மின்னல்போல அடிக்கடி சிரிப்பாள் நானும்
பந்தயம் போட்டுப் பார்த்து பலமுறை தோற்றேன் என்ன
மந்திரம் போட்டாளோஎன் மனதையே சிறையாய்க் கொண்டாள்

என்று பாடினார்காலம் மாறியது.தமிழக அரசியல் காட்சிகளை அரங்கமும் அந்தரங்கமும் என்று எழுதிய சில நாட்களிலேயே எம்.ஜி.அர்.ஆட்சியில்
அரசவைக் கவிஞரானார் கவிஞர்.

மன்னர் இவரொருநாள் மலையாளம் சென்றிருந்தார்
அங்கும் தமிழில்தான் அழகான மொழியுரைத்தார்
கேரளத்தில் பேசென்று கேட்டார்கள் தோழரெல்லாம்
ஓரளவும் பேசேன் நான் உயிர்படைத்த நாள்முதலாய்
உண்ணும் உணவும் உலவுகிற வீதிகளும்
எண்ணும் பொருளும் ஏற்றதோர் தொழில்நலமும்
செந்தமிழால் வந்த திருவென்றே பெற்றவன்நன்
அந்த மொழியின்றி அடுத்தமொழி பேசுவதோ
என்று பதிலுரைத்தார்;இவர்பெருமை யார்க்கு வரும்!
பொன்மனத்துச் செல்வர் புரட்சித் தலைவரிவர்
தமிழரில்லை என்றால் தமிழுக்கே களங்கம் வரும்  
 என்று எம்.ஜி.ஆரை,கவிஞர் பாடிய கவியரங்கக் கவிதையின் தலைப்பு
"தமிழோடிருப்பவர்கள்".

மக்கள் தருகின்றார் மகத்தான ஆதரவு
தக்கதொரு ஆதரவால் தமிழ்நாட்டில் நல்லாட்சி
ஆயிரமாய்ப் பகைவரெல்லாம் ஆட்டிவைக்கப் பார்த்தாலும்
 ஆயுட்காலம் முழுதும் அமைச்சரவை மாறாது
என்று எம்.ஜி.ஆருக்கு கவிஞர் மொழிந்த வாழ்த்து,அப்படியே பலித்தது.

(தொடரும்)

Monday, June 7, 2010

இப்படித்தான் ஆரம்பம்-30

விடுதலைப் போராட்டத்திற்குப் பிற்பட்ட காலத்தில் தேசிய உணர்வு தீபோல் பரவிய சூழல் சீன யுத்தத்தின் போதும் பாகிஸ்தான் யுத்தத்தின் போதும் ஏற்பட்டது. இந்த இரண்டு  தருணங்களிலும், சந்நதம்  கொண்டு  சங்கெடுத்து  முழங்கினார்  கவிஞர். தன்னுடைய கவிதைகளின்  மூன்றாம் தொகுதியை  மங்கலமானதொரு வாழ்த்து கவிதையுடன் தொடங்குவார்.

பெற்றவர் வாழ்க!பெரியவர் வாழ்க!
உற்றவர் வாழ்க !உறவினர் வாழ்க!
கொற்றவன் கோட்டைக் கொடிமரம் வாழ்க!
கொல்புலித் தானை கூட்டங்கள் வாழ்க !
தானைத்தலைவர் தனித்திறம் வாழ்க!
தலைவர் அமைச்சர் சால்புற வாழ்க!

என்று வாழ்த்து மலர்கள் வரிசையாய் பூத்துக் குலுங்கும் அந்தக் கவிதையில்,
எங்கள் பகைவர் எமையணுகாமல்
தங்கள் பூமியில் தழைத்துயிர் வாழ்க என்று பாடியிருப்பார் கவிஞர்.
ஆனால் சீனா படையெடுத்து வந்துவிட்டது. அதே தொகுதியில் கவிஞர் எழுதுகிறார்..

எங்கே பகைவன்?எங்கே பகைவன்?ஏறிவிட்டானா மலைமேலே?
அங்கே பறந்து அவன்தலை கொய்து பங்குவைப்போம் வா பதறாதே!
திங்களும் வானில் திரிகிற வரையில் எங்களுக்குரிமை இந்நாடே-இதில்
தங்கள் உரிமைச் சாத்திரம் சொல்வோர் எங்கு வந்தாலும் மண்ணோடே!
யாரது வீட்டில் யாரது பாட்டு?சோரர்கள் வலையில் விழமாட்டோம்-இனி
வேறதிகாரம் பாரதநாட்டில் வேர்பிடிக்காது! விடமாட்டோம்!

 மக்கள் மத்தியில் சீன எதிர்ப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் கவிஞரின்
கவிதைகள் பெரும்பங்கு வகித்தன. புகழ்பெற்ற ராக் அண்ட் ரோல் பாடலின்
மெட்டில் சீன எதிர்ப்புக் கவிதை எழுதினார் கவிஞர்

சூ சூ சூ
சூ என் லாய்
தூ தூ தூ
மா சே தூ

சூடுபட்ட மாடுபோன்று
நாடுவிட்டு நாடுவந்து
கேடுகெட்ட வேலைசெய்யும் சூ சூ சூ

கோடுவிட்டு மேலும்வந்து
கோழைபோல ஓய்வு கொண்டு
கோட்டைவிட்டு ஓடப்போகும் சூ சூ சூ

தங்கள் சோறு தீர்ந்ததென்று
தரமிழந்து நெறியிழந்து
எங்கள்சோறு தின்னவந்த சூ சூ சூ

அப்பனுக்குப் பிள்ளையென்று
தப்பிவந்து பிறந்து இன்று
அடுத்த வீட்டில் சாகவந்த 



சூ சூ சூ சூஎன் லாய்
தூ தூ தூ மா சே தூ.

அத்தோடு நிற்கவில்லை கவிஞர்.ஊரடங்கு உத்தரவு போல,பாரடங்கு உத்தரவே போட்டார்.

ஏ வெண்ணிலவே! சீனத்து வானில்நீ விளங்காதே
காற்றே நீ சீனத்துக் கன்னியரைத் தழுவாதே!
மேகமே !சீனத்தில் வெள்ளிமழை பொழியாதே!
பொன்மலரே!சீனத்தில் பூத்துக் குலுங்காதே!என்று நீளும் அந்தக்கவிதை.

கேட்டிலும் உண்டோர் உறுதி என்றார் திருவள்ளுவர். அதேபோல் இந்த யுத்தத்தாலும் ஒரு நன்மை விளைந்தது என்கிறார் கவிஞர். இந்தியாவில்  ஆங்காங்கே கேட்ட பிரிவினைக் குரல்கள் ஓய்ந்து எல்லோரும்
ஒன்று சேர்ந்தனராம். நேருவை விமர்சித்தவர்களும் அவரது வலிமையினை உணர்ந்தனராம். ஒற்றுமைக்காக குழுவமைத்து பாரதம் தடுமாறிய போது படையெடுத்ததன் மூலம் ஒற்றுமையை உருவாக்கிய சீனத்துக்கு நன்றி சொல்கிறார் கவிஞர்.

தம்மிடையே சண்டையிட்டுத்
தலைகுனிந்த இந்தியரை
இம்மெனும் முன் சேர்த்துவைத்தசீனமே-நீ
ஈந்ததுதான் இன்றுவந்த ஞானமே


குழுவமைத்து ஒருமைதேடிக்
கொண்டிருந்த பாரதத்தில்
படையெடுத்து ஒருமை கண்ட சீனமே-இது
பாவத்திலே தர்மம்கண்ட ஞானமே


நேருவென்ன நேருவென்று
நீட்டி ஆட்டிப் பேசுவோரும்
நேருவை வணங்கவைத்த சீனமே-இது
நேரம்பார்த்து நீகொடுத்த ஞானமே

என்று சீனாவைப் புகழ்வதுபோல் ஒற்றுமையில்லா உள்ளங்களை இடித்தும் காட்டினார் கவிஞர். கவிஞரின் தேசப்பற்று, கவிதையோடு நிற்கவில்லை. "இரத்தத் திலகம்"என்று திரைப்படம் ஒன்றையும் எடுத்தார்.காமராஜரிடம் போட்டுக் காட்டிய போது, "படம் ரொம்ப நீளமா இருக்கு. இதை இரண்டு படமா எடுக்க முடியாதா?"என்று கேட்டாராம்.

 பண்டைய காலத்தில் போர்க்களத்திற்கே நேரில் சென்று கவிஞர்கள் யுத்தத்தை விவரித்து பரணி எழுதுவது வழக்கம்.அப்படி எழுதப்பட்டதுதான் கலிங்கத்துப் பரணி. 1965ல் பாகிஸ்தான் யுத்தத்தின் போது கவிஞர் அப்படியொரு பரணி எழுதினார்.இந்திய நாட்டின் ராணுவம் உணர்ச்சி பொங்கதேசிய  கீதம்  பாடி  புறப்பட்டதில்  தொடங்கி யுத்தம் நடந்த விதம் நம் மனக்கண்ணில் தோன்றும் விதமாக கவிஞர் விவரித்திருப்பார்.

தாகூர் வடித்துவைத்த தாய்வணக்கப் பாப் பாடி
லாகூரை நோக்கி நமதுபடை முன்னேற்றம்!
சிந்துவிலோர் சேனை !சியால்கோட்டில் மறுசேனை
சந்துவழிப் பகைவந்த ஜம்முவிலோர் பெரும்சேனை
வந்துவிளையாட வந்த வஞ்சகரை நாள்முழுதும்
 பந்து விளையாடுதல்போல் பாய்ந்து விளையாடுதம்மா என்று இந்தியப் படையின் நிலையையும்

தொட்டான்;தொடப்பட்டான்;துப்பாக்கி தூக்கிவந்து
 சுட்டான்;சுடப்பட்டான்;தொலையாப் பெரும்படையை
விட்டான்;விடப்பட்டான்;வேற்றகத்தே தன்கொடியை
நட்டான்;நடப்பட்டான்;நாளாக நாளாகக்
கெட்டானேயன்றிக் கிஞ்சித்தும் வாழவில்லை என்று பாகிஸ்தான் படையின் நிலையையும் பாடுகிறார் கவிஞர்.



எல்லை கடந்துவந்து எங்கள் தலைமீது
வெள்ளைப் புறாக்களைப்போல் வீதிவெளி வானத்தே
பறந்தவரை எங்கள் பாரதத்தின் தளபதிகள்
காக்கை சுடுவதுபோல் காடுவெட்டிப் போடுதல்போல்
சுட்ட கதைசொல்லி சுவைக்காத மக்களில்லை என்ற அவரின் வரிகள்
அந்தக் கவியரங்கில் பெரும் ஆரவாரத்துடன் எதிர்கொள்ளப்பட்டன.

இந்துஸ்தான் அன்று இட்டுவைத்த பிச்சையினால்
வந்தஸ்தான் தானே மதியிழந்த பாகிஸ்தான்
தந்த ஸ்தான்தன்னை சரிபார்க்க இப்பொழுது
அந்த ஸ்தான்நோக்கி அனுப்பிவிட்டோம் சேனைகளை
என்று கவிஞர் எழுதிய வரிகளை நினைத்துப் பார்க்கிற போது
கிரிக்கெட் பகைவர்களாக மட்டுமே பாகிஸ்தானைப் பார்க்கிற புதிய
தலைமுறைக்கு பழைய வரலாற்றின் சுவடுகள் சற்றே தெரிய வரும்.

காளையர் வருக!கன்னியர் வருக!
கைவாள் மறவர் களம்புக வருக!
வேளை இதுவே !வேறொன்றுமில்லை!
வீரம் புலப்பட விரைந்து புறப்படு!
கோடி அகதிகள் கொட்டிய கண்ணீர்
நீதி கேட்கிற நேரம் இதுதான்!
பதினேழாண்டு பட்ட பாட்டுக்கு
பதிலடி கொடுக்க பாரதம் எழுந்தது!
பஞ்சாய்ப் பறக்கவே படைகொண்ட மூடன்
பஞ்சாப் எல்லையில் படைகொண்டு வந்தான் என்பதும் பாகிஸ்தான் போரின்போது கவிஞர் எழுதிய பாடல்களில் ஒன்று.

வங்காளப் பிரிவினையின்போது நடந்த அட்டூழியங்களைக் கண்டபோதும் கவிஞரின் போர்க்குணம் பொங்கியெழுந்தது.சமூகச்சிறுமைகள் கண்டு மனம் பொறாமல் தான் வழிபடும் கடவுளையே சினந்து கொள்வது தமிழ் படைப்புலகில் உயர்ந்த நிலைகளில் வெளீப்பட்டிருக்கின்றன. "கெடுக உலகியற்றியான்" என்று திருவள்ளுவர் கூடத் திட்டியிருக்கிறார். கோவை மாவட்டம் அவிநாசியருகே உள்ள பண்டைய திருத்தலம், திருமுருகன்பூண்டி. அதனருகே சுந்தரமூர்த்தி  நாயனார்  நிறைய  பொன்பொருளோடு   வந்த சமயம் சிவபெருமான் பூதகணங்களையே  வேடுவர்  ரூபத்தில் அனுப்பி  கவர்ந்து  வந்ததாக பெரிய புராணம் சொல்கிறது. சுந்தரருக்கு  வந்ததே  கோபம். நேராக கோவிலுக்குச் சென்று சிவபெருமானை  வாங்கு  வாங்கென்று  வாங்கிவிட்டார். "உன் எல்லையில் சட்டம் ஒழுங்கு கெட்டிருக்கிறது . நீ  எல்லை காக்கப் போகாமல் கொஞ்சம்  கூட  கவலையின்றி  முல்லைப்பூக்களின்  மணத்தை நுகர்ந்து கொண்டு சுகமாயிருக்கிறாயா?"
வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லி
கல்லால் எறிந்திட்டும் மோதியும் கூறையம் கொள்ளுமிடம்
முல்லைத் தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர்வாய்
எல்லை காப்பதொன்று இல்லையாகில்நீர் எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரேஇது சுந்தரர் தேவாரம்.

சுந்தரருக்கு சிவபெருமான் மீது வந்த கோபம்,வங்காளப் பிரிவினையின்போது கண்ணதாசனுக்கு கண்ணன் மேல் வருகிறது.
பாஞ்சாலி பூந்துகிலைப் பற்றி இழுக்கையிலே
ஆண்சாதி நாமென்றே அங்குவந்த கோபாலன்
மான்சாதி வங்காள மங்கையர்கள் கண்ணீரை
ஏன்காணவில்லை?எனக்குமது புரியவில்லை
அர்ச்சுனர்க்குப் போதித்த அண்ணல் பரந்தாமன்
நிக்சனுக்குப் போதிக்க நேரம் கிடைக்கவில்லை
சுந்தரரின் திருமுருகன் பூண்டி தேவாரத்தில் ரிஷப வாகனத்தில் ஏறியாவது
எல்லை காக்கப் போக வேண்டாமா என்றொரு கேள்வி வரும்.

முடவர் அல்லீர்!இடரிலீர்!முருகன்பூண்டி மாநகர்வாய்
இடபம் ஏறியும் போவதில்லாகில் நீர் எத்துக்கிருந்தீர் எம்பிரானீரே
என்பார் சுந்தரர்.

 அதே தீவிரத்துடன் கவிஞர் எழுதுவார்,
துரியோதனர் பாலும் தூது சென்ற பரந்தாமன்
கொரியாவில் தூது செல்லக் குதிரை கிடைக்கவில்லை என்று.
எல்லையிலாத் துயர்தீர இறைவன்வரவில்லையெனில்
இல்லையவன் என்பாரை இறைவனென நாம்துதிப்போம் என்று இக்கவிதை முடிகிறது. தான் நாத்திகனாகிவிடப் போவதாக பராசக்தியை  பாரதி மிரட்டியதைப் போலத்தான் இதுவும்!! பின்னால் ஒரு திரைப்படப் பாடலில் இறைவன் இருக்கின்றானா அவன் எங்கே இருக்கிறான் என்று தொடங்கிய  கவிஞர் எழுதினார்..

நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை
(தொடரும்)