விடுதலைப் போராட்டத்திற்குப் பிற்பட்ட காலத்தில் தேசிய உணர்வு தீபோல் பரவிய சூழல் சீன யுத்தத்தின் போதும் பாகிஸ்தான் யுத்தத்தின் போதும் ஏற்பட்டது. இந்த இரண்டு தருணங்களிலும், சந்நதம் கொண்டு சங்கெடுத்து முழங்கினார் கவிஞர். தன்னுடைய கவிதைகளின் மூன்றாம் தொகுதியை மங்கலமானதொரு வாழ்த்து கவிதையுடன் தொடங்குவார்.
உற்றவர் வாழ்க !உறவினர் வாழ்க!
கொற்றவன் கோட்டைக் கொடிமரம் வாழ்க!
கொல்புலித் தானை கூட்டங்கள் வாழ்க !
தானைத்தலைவர் தனித்திறம் வாழ்க!
தலைவர் அமைச்சர் சால்புற வாழ்க!
என்று வாழ்த்து மலர்கள் வரிசையாய் பூத்துக் குலுங்கும் அந்தக் கவிதையில்,
எங்கள் பகைவர் எமையணுகாமல்
தங்கள் பூமியில் தழைத்துயிர் வாழ்க என்று பாடியிருப்பார் கவிஞர்.
ஆனால் சீனா படையெடுத்து வந்துவிட்டது. அதே தொகுதியில் கவிஞர் எழுதுகிறார்..
எங்கே பகைவன்?எங்கே பகைவன்?ஏறிவிட்டானா மலைமேலே?
அங்கே பறந்து அவன்தலை கொய்து பங்குவைப்போம் வா பதறாதே!
திங்களும் வானில் திரிகிற வரையில் எங்களுக்குரிமை இந்நாடே-இதில்
தங்கள் உரிமைச் சாத்திரம் சொல்வோர் எங்கு வந்தாலும் மண்ணோடே!
யாரது வீட்டில் யாரது பாட்டு?சோரர்கள் வலையில் விழமாட்டோம்-இனி
வேறதிகாரம் பாரதநாட்டில் வேர்பிடிக்காது! விடமாட்டோம்!
மக்கள் மத்தியில் சீன எதிர்ப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் கவிஞரின்
கவிதைகள் பெரும்பங்கு வகித்தன. புகழ்பெற்ற ராக் அண்ட் ரோல் பாடலின்
மெட்டில் சீன எதிர்ப்புக் கவிதை எழுதினார் கவிஞர்
சூ சூ சூ
சூ என் லாய்
தூ தூ தூ
மா சே தூ
சூடுபட்ட மாடுபோன்று
நாடுவிட்டு நாடுவந்து
கேடுகெட்ட வேலைசெய்யும் சூ சூ சூ
கோழைபோல ஓய்வு கொண்டு
கோட்டைவிட்டு ஓடப்போகும் சூ சூ சூ
தங்கள் சோறு தீர்ந்ததென்று
தரமிழந்து நெறியிழந்து
எங்கள்சோறு தின்னவந்த சூ சூ சூ
அப்பனுக்குப் பிள்ளையென்று
தப்பிவந்து பிறந்து இன்று
அடுத்த வீட்டில் சாகவந்த
சூ சூ சூ சூஎன் லாய்
தூ தூ தூ மா சே தூ.
அத்தோடு நிற்கவில்லை கவிஞர்.ஊரடங்கு உத்தரவு போல,பாரடங்கு உத்தரவே போட்டார்.
ஏ வெண்ணிலவே! சீனத்து வானில்நீ விளங்காதே
காற்றே நீ சீனத்துக் கன்னியரைத் தழுவாதே!
மேகமே !சீனத்தில் வெள்ளிமழை பொழியாதே!
பொன்மலரே!சீனத்தில் பூத்துக் குலுங்காதே!என்று நீளும் அந்தக்கவிதை.
கேட்டிலும் உண்டோர் உறுதி என்றார் திருவள்ளுவர். அதேபோல் இந்த யுத்தத்தாலும் ஒரு நன்மை விளைந்தது என்கிறார் கவிஞர். இந்தியாவில் ஆங்காங்கே கேட்ட பிரிவினைக் குரல்கள் ஓய்ந்து எல்லோரும்
ஒன்று சேர்ந்தனராம். நேருவை விமர்சித்தவர்களும் அவரது வலிமையினை உணர்ந்தனராம். ஒற்றுமைக்காக குழுவமைத்து பாரதம் தடுமாறிய போது படையெடுத்ததன் மூலம் ஒற்றுமையை உருவாக்கிய சீனத்துக்கு நன்றி சொல்கிறார் கவிஞர்.
தம்மிடையே சண்டையிட்டுத்
தலைகுனிந்த இந்தியரை
இம்மெனும் முன் சேர்த்துவைத்தசீனமே-நீ
ஈந்ததுதான் இன்றுவந்த ஞானமே
குழுவமைத்து ஒருமைதேடிக்
கொண்டிருந்த பாரதத்தில்
படையெடுத்து ஒருமை கண்ட சீனமே-இது
பாவத்திலே தர்மம்கண்ட ஞானமே
நேருவென்ன நேருவென்று
நீட்டி ஆட்டிப் பேசுவோரும்
நேருவை வணங்கவைத்த சீனமே-இது
நேரம்பார்த்து நீகொடுத்த ஞானமே
என்று சீனாவைப் புகழ்வதுபோல் ஒற்றுமையில்லா உள்ளங்களை இடித்தும் காட்டினார் கவிஞர். கவிஞரின் தேசப்பற்று, கவிதையோடு நிற்கவில்லை. "இரத்தத் திலகம்"என்று திரைப்படம் ஒன்றையும் எடுத்தார்.காமராஜரிடம் போட்டுக் காட்டிய போது, "படம் ரொம்ப நீளமா இருக்கு. இதை இரண்டு படமா எடுக்க முடியாதா?"என்று கேட்டாராம்.
பண்டைய காலத்தில் போர்க்களத்திற்கே நேரில் சென்று கவிஞர்கள் யுத்தத்தை விவரித்து பரணி எழுதுவது வழக்கம்.அப்படி எழுதப்பட்டதுதான் கலிங்கத்துப் பரணி. 1965ல் பாகிஸ்தான் யுத்தத்தின் போது கவிஞர் அப்படியொரு பரணி எழுதினார்.இந்திய நாட்டின் ராணுவம் உணர்ச்சி பொங்கதேசிய கீதம் பாடி புறப்பட்டதில் தொடங்கி யுத்தம் நடந்த விதம் நம் மனக்கண்ணில் தோன்றும் விதமாக கவிஞர் விவரித்திருப்பார்.
பண்டைய காலத்தில் போர்க்களத்திற்கே நேரில் சென்று கவிஞர்கள் யுத்தத்தை விவரித்து பரணி எழுதுவது வழக்கம்.அப்படி எழுதப்பட்டதுதான் கலிங்கத்துப் பரணி. 1965ல் பாகிஸ்தான் யுத்தத்தின் போது கவிஞர் அப்படியொரு பரணி எழுதினார்.இந்திய நாட்டின் ராணுவம் உணர்ச்சி பொங்கதேசிய கீதம் பாடி புறப்பட்டதில் தொடங்கி யுத்தம் நடந்த விதம் நம் மனக்கண்ணில் தோன்றும் விதமாக கவிஞர் விவரித்திருப்பார்.
தாகூர் வடித்துவைத்த தாய்வணக்கப் பாப் பாடி
லாகூரை நோக்கி நமதுபடை முன்னேற்றம்!
சிந்துவிலோர் சேனை !சியால்கோட்டில் மறுசேனை
சந்துவழிப் பகைவந்த ஜம்முவிலோர் பெரும்சேனை
வந்துவிளையாட வந்த வஞ்சகரை நாள்முழுதும்
பந்து விளையாடுதல்போல் பாய்ந்து விளையாடுதம்மா என்று இந்தியப் படையின் நிலையையும்
தொட்டான்;தொடப்பட்டான்;துப்பாக்கி தூக்கிவந்து
சுட்டான்;சுடப்பட்டான்;தொலையாப் பெரும்படையை
விட்டான்;விடப்பட்டான்;வேற்றகத்தே தன்கொடியை
நட்டான்;நடப்பட்டான்;நாளாக நாளாகக்
கெட்டானேயன்றிக் கிஞ்சித்தும் வாழவில்லை என்று பாகிஸ்தான் படையின் நிலையையும் பாடுகிறார் கவிஞர்.
எல்லை கடந்துவந்து எங்கள் தலைமீது
வெள்ளைப் புறாக்களைப்போல் வீதிவெளி வானத்தே
பறந்தவரை எங்கள் பாரதத்தின் தளபதிகள்
காக்கை சுடுவதுபோல் காடுவெட்டிப் போடுதல்போல்
சுட்ட கதைசொல்லி சுவைக்காத மக்களில்லை என்ற அவரின் வரிகள்
அந்தக் கவியரங்கில் பெரும் ஆரவாரத்துடன் எதிர்கொள்ளப்பட்டன.
இந்துஸ்தான் அன்று இட்டுவைத்த பிச்சையினால்
வந்தஸ்தான் தானே மதியிழந்த பாகிஸ்தான்
தந்த ஸ்தான்தன்னை சரிபார்க்க இப்பொழுது
அந்த ஸ்தான்நோக்கி அனுப்பிவிட்டோம் சேனைகளை
என்று கவிஞர் எழுதிய வரிகளை நினைத்துப் பார்க்கிற போது
கிரிக்கெட் பகைவர்களாக மட்டுமே பாகிஸ்தானைப் பார்க்கிற புதிய
தலைமுறைக்கு பழைய வரலாற்றின் சுவடுகள் சற்றே தெரிய வரும்.
காளையர் வருக!கன்னியர் வருக!
கைவாள் மறவர் களம்புக வருக!
வேளை இதுவே !வேறொன்றுமில்லை!
வீரம் புலப்பட விரைந்து புறப்படு!
கோடி அகதிகள் கொட்டிய கண்ணீர்
நீதி கேட்கிற நேரம் இதுதான்!
பதினேழாண்டு பட்ட பாட்டுக்கு
பதிலடி கொடுக்க பாரதம் எழுந்தது!
பஞ்சாய்ப் பறக்கவே படைகொண்ட மூடன்
பஞ்சாப் எல்லையில் படைகொண்டு வந்தான் என்பதும் பாகிஸ்தான் போரின்போது கவிஞர் எழுதிய பாடல்களில் ஒன்று.
வங்காளப் பிரிவினையின்போது நடந்த அட்டூழியங்களைக் கண்டபோதும் கவிஞரின் போர்க்குணம் பொங்கியெழுந்தது.சமூகச்சிறுமைகள் கண்டு மனம் பொறாமல் தான் வழிபடும் கடவுளையே சினந்து கொள்வது தமிழ் படைப்புலகில் உயர்ந்த நிலைகளில் வெளீப்பட்டிருக்கின்றன. "கெடுக உலகியற்றியான்" என்று திருவள்ளுவர் கூடத் திட்டியிருக்கிறார். கோவை மாவட்டம் அவிநாசியருகே உள்ள பண்டைய திருத்தலம், திருமுருகன்பூண்டி. அதனருகே சுந்தரமூர்த்தி நாயனார் நிறைய பொன்பொருளோடு வந்த சமயம் சிவபெருமான் பூதகணங்களையே வேடுவர் ரூபத்தில் அனுப்பி கவர்ந்து வந்ததாக பெரிய புராணம் சொல்கிறது. சுந்தரருக்கு வந்ததே கோபம். நேராக கோவிலுக்குச் சென்று சிவபெருமானை வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார். "உன் எல்லையில் சட்டம் ஒழுங்கு கெட்டிருக்கிறது . நீ எல்லை காக்கப் போகாமல் கொஞ்சம் கூட கவலையின்றி முல்லைப்பூக்களின் மணத்தை நுகர்ந்து கொண்டு சுகமாயிருக்கிறாயா?"
வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லி
கல்லால் எறிந்திட்டும் மோதியும் கூறையம் கொள்ளுமிடம்
முல்லைத் தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர்வாய்
எல்லை காப்பதொன்று இல்லையாகில்நீர் எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரேஇது சுந்தரர் தேவாரம்.
சுந்தரருக்கு சிவபெருமான் மீது வந்த கோபம்,வங்காளப் பிரிவினையின்போது கண்ணதாசனுக்கு கண்ணன் மேல் வருகிறது.
ஆண்சாதி நாமென்றே அங்குவந்த கோபாலன்
மான்சாதி வங்காள மங்கையர்கள் கண்ணீரை
ஏன்காணவில்லை?எனக்குமது புரியவில்லை
அர்ச்சுனர்க்குப் போதித்த அண்ணல் பரந்தாமன்
நிக்சனுக்குப் போதிக்க நேரம் கிடைக்கவில்லை
சுந்தரரின் திருமுருகன் பூண்டி தேவாரத்தில் ரிஷப வாகனத்தில் ஏறியாவது
எல்லை காக்கப் போக வேண்டாமா என்றொரு கேள்வி வரும்.
முடவர் அல்லீர்!இடரிலீர்!முருகன்பூண்டி மாநகர்வாய்
இடபம் ஏறியும் போவதில்லாகில் நீர் எத்துக்கிருந்தீர் எம்பிரானீரே
என்பார் சுந்தரர்.
அதே தீவிரத்துடன் கவிஞர் எழுதுவார்,
துரியோதனர் பாலும் தூது சென்ற பரந்தாமன்
கொரியாவில் தூது செல்லக் குதிரை கிடைக்கவில்லை என்று.
எல்லையிலாத் துயர்தீர இறைவன்வரவில்லையெனில்
இல்லையவன் என்பாரை இறைவனென நாம்துதிப்போம் என்று இக்கவிதை முடிகிறது. தான் நாத்திகனாகிவிடப் போவதாக பராசக்தியை பாரதி மிரட்டியதைப் போலத்தான் இதுவும்!! பின்னால் ஒரு திரைப்படப் பாடலில் இறைவன் இருக்கின்றானா அவன் எங்கே இருக்கிறான் என்று தொடங்கிய கவிஞர் எழுதினார்..
நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை
(தொடரும்)
No comments:
Post a Comment