இப்படித்தான் ஆரம்பம் -28

ஜனநாயக சோஷலிசத்தின் தளகர்த்தராக காமராஜரைக் கண்ட கவிஞரின் கண்கள், அந்தக் கோட்பாட்டின் முதல் எதிரியாக ராஜாஜியை வரித்துக் கொண்டது. எனவே ஜனநாயக சோஷலிசத்தை வற்புறுத்திப் பாடுகிற இடங்களிலெல்லாம், கவிஞர் ராஜஜியைத் தாக்கவும் தவறவில்லை. 1965ல்  கோவையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், இரண்டு பெண்களை ஒப்பிட்டு ஜனநாயக சோஷலிசத்தை விளக்க கவிஞர் முற்படுகிறார். ஒருநாள் வீட்டில் கவிஞர் ஓய்வாகப் படுத்திருந்தாராம். இருப்பவர்கள், இல்லாதவர்கள் இடையிலான  பள்ளத்தை  மாற்றுவது  பற்றிய  பெருங்கனவில்  கவிஞர் இருந்தாராம். அப்போது இருகைகள்  தன்  முகத்தைத்  தழுவக் கண்டு கண்கள் திறந்தாராம். இனி கவிஞரே தொடர்கிறார்'கழுத்து முதலாகக் கால்வரைக்கும் ஒருசீராய்ப்
பருத்திருக்கும் என்மனைவி பக்கத்தில் நின்றிருந்தாள்
முதலாளித் தத்துவத்தை முழுவடிவில் பார்த்ததுபோல்
அதிசயித்துப் பார்த்தேன்"என்றவர், அடுத்த வீட்டுப் பெண்ணை ஒப்பிட்டு தன் கொள்கை விளக்கத்தின் கொடிநாட்டத்தொடங்குகிறார். இங்கே இருப்பது , அடுத்தாத்துஅம்புஜமல்ல. அடுத்த வீட்டு அன்னம்!!
  
' அங்கே பார் அங்கே அடுத்தகத்து அன்னத்தை
 காய்ந்த அவரைக் காய்போன்ற மேனியைப் பார்!
 இங்கே உனக்கு இடையே தெரியவில்லை !
 அங்கே அவளுக்கு இடையென்றே அங்கமில்லை!'
இப்படிச் சொன்னால் எந்தப் பெண்ணுக்கும் அழுகைவருமல்லவா.
"இதுதானா பெண்ணை இறைவன் படைத்தவிதம்
என்றேன்! அழுதுவிட்டாள் ! என்கண்ணே அழாதேடி!
உன்னைநான் சொல்லவில்லை!உள்ளோர்க்கும் இல்லோர்க்கும்
தலைவன் பிரித்துரைத்த தத்துவத்தை நானுரைத்தேன்!
வீங்குகின்ற செல்வம் வீங்குவதும் ஆபத்து!
ஏங்குகின்ற நெஞ்சம் ஏங்குவதும் ஆபத்து!
இதுவரை உருவகமாகவே பாடிவருகிற கவிஞர், நேரடித் தாக்குதலில் ராஜாஜியைக் குறிவைக்கிறார். ராஜாஜியின் சுதந்திரா கட்சியில் இருந்த தொழிலதிபர்களும் இதற்குத் தப்பவில்லை. கோவையில் சுதந்திரா கட்சியை வளர்த்தெடுத்தவர்களில் ஆலை அதிபர் அமரர் ஜி.கே.சுந்தரம் குறிப்பிடத்தக்கவர். மிக நல்ல பண்பாளர். கோவையில் கம்பன் கழகம் கண்டவர். தொண்ணூற்று நான்கு வயதுவரை காந்தீயப் பார்வையுடன் கண்ணியமாய் வாழ்ந்தவர். ஆனால் ராஜாஜியின் நண்பர் என்பதாலேயே கவிஞரின் கவிதையில் கண்டனத்திற்கு ஆளாகிறார்.

மந்திரங்கள் போட்டாலும்,மறைத்துப் பதுக்கிவைத்துத்
தந்திரங்கள் செய்தாலும்,சாணக்யர் தலைமையிலே
சுந்தரங்கள் எல்லாம் தோள்தட்டி நின்றாலும்   
சமதர்மப் போருக்குத் தப்பிவிட முடியாது
இருவேறு வர்க்கம் இனிமேல் கிடையாது
என்று கவியரங்கில் கர்ஜித்தார் கவிஞர். இது ஜி.கே.சுந்தரம் அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனாலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும்  கம்பன்விழா கவியரங்குகளுக்கு கவிஞரைத்தான் அழைக்க வேண்டும் என்பதில் உறுதியாயிருந்தவர் அவர். இந்தப் பெருந்தன்மை குறித்து கவிஞரே கம்பன் அன்பர்களிடம் சிலாகித்துப் பேசியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ராஜாஜியின் நண்பரே இப்படி பாடப்பட்டார் என்றால் கவிஞரின் கவிதைகளில் ராஜாஜியின் நிலை என்னவென்பதை இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.

பட்டப் படிப்பும் பாரதமும் கீதைகளும்
சட்டத் திமிரும் தவக்கோல முத்திரையும்
ஞானக் கிறுக்கும் நானென்னும் ஆணவமும்
கயவர் மனம்போன்ற கறுப்புக் கண்ணாடிகளும்
"தாங்கள் உயர்வென்று" தலைதூக்கி நின்றாலும்
தானைத் தலைவன் தாளுக்கும் சிறியவரே என்றெழுதிய கவிஞர்

ராஜாஜியின் முதுமைக்கால வாழ்க்கைக்கோர் ஆலோசனை சொல்கிறார். காமராஜர், ராஜாஜியை பெரியவர் என்றே குறிப்பாராம். அதேச் சொல்லையே கவிஞர் பயன்படுத்துகிறார்.
 
 வயதான பெரியவர்காள்!வம்புமொழி பேசாதீர்!
வழிமேல் வழிமாறி வந்தவழி மறவாதீர்!
சாய்வு நாற்காலியில் சடலந் தனைக்கிடத்தி
ஓய்வெடுத்துக் கொண்டு உள்ள யஜுர் வேதமெல்லாம்
பாராயணம் செய்தால் பரகதிக்கு நல்லவழி!

இதுதான் அந்த ஆலோசனை. காமராஜரை,திராவிட இயக்கத் தொனியில் பாராட்டிப் பாடுகிற வழக்கமும் கவிஞர் தொடங்கி வைத்ததுதான். ஜனநாயக சோஷலிசம் என்னும் முழக்கத்தை முன்னெடுக்க இந்தியத் தலைவர்களுக்கும் ரஷ்யத் தலைவர்களுக்கும் நடுவே ஒற்றுமை தேடி கவிதைபாடி அகமகிழ்ந்தார் அவர். இந்தோ சோவியத் பண்பாட்டுக் கழகத்தின் முதல் மாநாட்டுக் கவியரங்கில் அவர் பாடிய கவிதையின் நிறைவு வரிகள் இவை.

வால்காவில் லெனின் கங்கை வளத்திலே காந்திமகான்
வால்காவில் ஸ்டாலின்கங்கையிலே வல்லபாய்படேல்
வால்காவில் குருசேவ் கங்கையிலே நேரு வந்தான்
கோசிஜினை வால்கா கொண்டுவந்த வேளையிலே
கங்கை நதிக்கரையில் காமராஜ் எழுந்துநின்றான்
ஒருநோக்கம்!ஓருள்ளம் ஒன்றேபோல் சிந்தனைகள்
பண்பாடு யாவும் பாரதமும் ரஷ்யாவும்
கொள்ளும் உறவின் குறிப்பாகும் இவ்வுறவு
வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் வேகாது
கள்ளக் கறுப்புக் கண்ணாடிக் கண்களுக்குள்
சாயாது,சாயாது!சரித்திரமே!தாயகமே!" என்கிறார்.

காமராஜரை வந்தனை செய்யும் போதெல்லாம் ராஜாஜியை நிந்தனை செய்ய கவிஞர்
மறந்ததேயில்லை. காமராஜரின் பிறந்த நாட்களில், குறிப்பாக 60,61,62 வயதுகளை காமராஜர் கடக்கும் போதெல்லாம், கவிஞரின் கவிதை வரிகள் அவருக்குக் கவரி வீசின. கவரியின் முன்முனை, காமராஜர் மீது குளிர்ந்த காற்றைப் பொழிகிற போதே அதன் கைப்பிடி ராஜாஜியின் முகத்தில் உரசவே செய்கிறது

கல்லாமைதனைக் கருவறுக்கின்றவன்
இல்லாமைதனை இல்லாதாக்குவோன்
நல்லோர் இதயம் நாடும் நாயகன்
நாவசைக் காமலே நாடமைக்கின்றவன்  என்கிற போதே
"படித்தவனல்லன்;பல்கலைக் கல்வி
முடித்தவனல்லன்;நால்வகை வேதம்
குடித்தவனல்லன்;கொள்கை நிலத்தில்
வெடித்து வந்தவன் ;வெள்ளை நெஞ்சினன்!
என்று இடித்துவிட்டுப் போகிறார் கவிஞர்.

காமராஜரின் நிழலிலிருந்து நீங்கி இந்திரா காங்கிரஸில் கவிஞர் இணைந்தபோது, இந்திரா ஆதரவுக் கவிதைகளை எழுதினார்.காமராஜரே
நேரில் சொல்லியும் இந்திரா காங்கிரஸில் இணையும் முடிவை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.
"இந்திய மலைகள் தோறும்
 இந்திரா பேர்கேட்டாயா
இந்திய நதிகள் எங்கும்
 எதிரொலி கேட்கின்றாயா
இந்தியக் கடல்கள் முற்றும்
இயங்கிடும் இசைகேட்டாயா
இந்தியா இந்திராவே
இந்திரா இந்தியாவே    என்றெழுதினார் கவிஞர்.ஆனால் சந்தர்ப்பவாத அரசியல் அவருக்கு சற்றுமில்லை என்பதற்கு அடையாளம், இந்தக் கவிதைகள் எதுவும் காமராஜரை நேராகவோ மறைமுகமாகவோ இடிக்கவில்லை என்பதுதான்.மாறாக இந்திரா காங்கிரஸ்,காமராஜரை மதித்து அவரை  முன்னிலைப்படுத்தி  தன்னை  வளர்த்துக்  கொள்ள வேண்டும் என்று கவிஞர் விரும்பினார். குணம்நாடி,குற்றமும்நாடினால் காமராஜரிடம்
குணமே அதிகம் என்று கவிஞர் வாதிட்டார்.

அந்த மனிதனை அழையுங்கள்;உங்கள் 
அன்னை கோவிலுக்கு அவனோர் கோபுரம்
 முன்னம் உலகின் முடியுடை மன்னன்
தன்னந் தனியே தவம்புரிகின்றான்
..........................................................
அவனால் இன்னும் ஆவன கோடி
அவனை நம்புவோர் ஆயிரம் அயிரம்
வண்டினம் முரல மயங்கும் பொய்கையின்
வெண்டாமரையை வேரறுக்காதீர்
குற்றம் நாடிக் குணமும் நாடிடின்
குற்றம் பத்து !குணமோர் ஆயிரம்!
செல்லும் தேரில் சிறு தவறுண்டு
உள்ளம் தவறில்லை;உலகம் அறியும்;
நல்லோர்,மேலோர்,நன்றியை மறவார்
வல்லான் வீட்டு வாசல் தட்டுக
தந்தை ஒருநாள் தடியால் அடிப்பினும்
தந்தை தந்தையே;தழுவுவான் மறுநாள்;
அந்த மனிதனை அழையுங்கள் உங்கள்
அடுத்த கட்டத்தை அழகுற நடத்த
என்ற கவிஞரின் குரல் தேசிய நீரோட்டத்தின் சலசலப்பில் கலந்து போனது.
முன்னர் ஓரிடத்தில் பெரியாரை அரசியல் நரிக்குறவன் என்று கிண்டல் செய்தவர் கவிஞர்.ஆனால் காலப்போக்கில் பெரியாரின் பெருமைகளை அவர் உணர்ந்து புகழாரம் சூட்டியுள்ளார்.தொடக்க காலத்திலேயே பெரியார் அதரவு நிலையைக் கவிஞர் எடுத்திருக்க வாய்ப்பில்லை.காரணம்,திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் உருவான காலத்தில்தான் அவர் அரசியலில் தீவிரமாகப் பங்கெடுக்கிறார். பெரியாருக்கு எதிரான விமர்சனங்கள் பெருமளவில் எழுந்த காலமது.பக்தி நெறியில் படுதீவிரமாக கவிஞர் எழுதத் தொடங்கிய வேளையிலும் பெரியார் மீதான
லேசான கிண்டல்வரிகள் அவரிடமிருந்து ஆங்காங்கே எழுந்ததுண்டு. அவற்றில் கூட நாத்திக எதிர்ப்புதான் தலைதூக்கி நிற்கிறது .
ஆனால் பெரியாரின் பெற்றிமைகளை அவர் பாடிய பாங்கு அபாரமானது.

"ஊன்றிவரும் தடிசற்று நடுங்கக் கூடும்
 உள்ளத்தின் உரத்தினிலே நடுக்கமில்லை
தோன்றிவரும் வடிவினிலே நடுக்கந் தோன்றும்
துவளாத கொள்கையிலே நடுக்கமில்லை
வான்தவழும் வெண்மேகத் தாடி அடும்
வளமான சிந்தனைக்கோர் ஆட்டமில்லை
ஆன்றவிந்த பெரியார்க்கும் பெரியார் எங்கள்
ஐயாவுக் கிணைஅவரே மற்றோர் இல்லை


நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்வார்
நெறிகெட்டு வளைந்ததெல்லாம் நிமிர்த்தி வைப்பார்
சாதியெனும் நாகத்தைத் தாக்கித் தாக்கிச்
சாகடித்த பெருமை அவர் தடிக்கே உண்டு
நாதியிலார் நாதிபெற நாப்படைத்தார்
நற்பத்து ஐங்கோடி மக்களுக்கும்
பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார்
பிறப்பினிலேபெரியாராய்த் தான்பிறந்தார்"

 என்றெழுதிய கண்ணதாசன், ராஜஜியைப் பாராட்டி எழுதியது இரங்கல் கவிதையில்தான். அது உள்ளத்திலிருந்து எழுந்த உண்மைக் கவிதை என்கிறார் திரு.பழ.கருப்பையா.ஆனால் அத் உபசாரத்திற்காக எழுதப்பட்டதுதான் என்பது என்னுடைய முடிவு. மற்றவர்கள் மறைவுக்காக கவிஞர்  எழுதிய இரங்கல் கவிதைகளைப் பார்த்துவிட்டு ராஜாஜியின் மறைவுக்கு அவர் எழுதிய வரிகளையும் பார்த்தால் நான் சொல்ல வருவது விளங்கும். பார்ப்போமே...
(தொடரும்)