Monday, June 28, 2010

தமிழ் செம்மொழி மாநாடு கவியரங்க கவிதை - 25.06.10





தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்
தலைமையில் நிகழ்ந்த கவியரங்கில் வாசித்த கவிதை.அவையின் அப்போதைய கலகலப்புக்காக வாசித்த சில வரிகள் நீங்கலாய் மற்றவைஇங்கே இடம் பெறுகின்றன...

பொதுத்தலைப்பு: கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக் கூட்டம்
கிளைத்தலைப்பு:  அடையாளம் மீட்க

கலைஞருக்கு
மூவேந்தர் இங்கிருந்தார்; முத்தமிழை வளர்த்திருந்தார்
தார்வேந்தர் அவர்கள் பணி தாயகத்தைத் தாண்டவில்லை
பாரிலுள்ள தமிழர்களை - ஒரு பந்தலின் கீழ் கூட்டுவித்து
ஓர்வேந்தர் செம்மொழியின் உயர்வுகளை முரசறைந்தார் - அந்தச்
சீர்வேந்தர் கலைஞரென்று சாற்றிநிற்கும் வரலாறு

கூடும் வானிலை நம்பியதால்தான்
  கோவையிலே நீ மாநாடமைத்தாய் - பல
நாடுள்ள தமிழரை நம்பியதால்தான்
  நான்கு திசைக்கும் அழைப்புக் கொடுத்தாய்
பாடும் கவிஞரை நம்பியதால்தான்
  பாட்டரங்கங்கள் மூன்று அமைத்தாய்
வீடு பேற்றை நம்பாததால்தான்
  வீட்டைகூட எழுதிக் கொடுத்தாய்

கால்களில் சக்கரம் கட்டித்தானே கால காலமாய் சுழன்றுவந்தாய்
காலச்சக்கரம் சுழலச் சுழல சக்கரவர்த்தியாய் பவனிவந்தாய்

எம்மொழிக்காரரும் இருந்து கேட்டால்
ஈர்த்துப்பிடிப்பது உந்தன் வாக்கு
செம்மொழி நடக்க விரிக்கப்படுகிற
சிகப்புக் கம்பளம் உந்தன் நாக்கு

கவியரங்கத் தலைவருக்கு


பருவமழை சிலுசிலுக்கும் பேரழகுக் கோவையிலே
கவிதைமழை பொழியவந்த கருமுகிலே வணக்கம் - உன்
விரல்பிடித்தே கவியுலகில் வளர்பவன் நான் என்பதனால் - உன்
குரல்கேட்கும் பொழுதெல்லாம் எனக்குள்ளே மயக்கம் - நீ
கலைஞருக்கு நெருக்கம்! அவர் கவிதைகளின் விளக்கம்
காதலன் காதலி போல் உங்கள் இருவரிடை இணக்கம்

அவைக்கும்..கோவைக்கும்..

இசைமணக்கும் தமிழ்கேட்க இசைந்துவந்த வரவுகளே
திசைகள் அனைத்திருந்தும் திரண்டுவந்த உறவுகளே
நீர்நிலைக்காய் பறந்துவரும் பன்னாட்டுப் பறவைகள்போல் - தமிழின்
வேர்நிலைக்க வந்திருக்கும் வளமான தமிழ்க்குலமே வணக்கம்

ஆலைநகரென்று அறியப்பட்ட கோவையினை - நல்ல
சாலைநகர் ஆக்கியது செம்மொழி மாநாடு
பல காலம் கோவையிலே பிறந்து வளர்ந்தவர்க்கே
அடையாளம் தெரியாமல் அழகுநகர் ஆகியது
மண்ணெடுத்தார் மாலையிலே! தார்தெளித்தார் இரவினிலே
கண்விழித்துப் பார்க்கையிலே கண்ணாடிபோல் மின்னியது!
சறுக்கிவிடும் பள்ளங்கள் சமச்சீராய் மாறியது
வழுக்கிக்கொண்டு சாலையிலே வாகனங்கள் போகிறது
வெறிச்சோடிக் கிடந்திருந்த வீதியோர நடைபாதை
குளித்துத் தலைமுழுகி கலகலப்பாய் இருக்கிறது
துணைமுதல்வர் வந்துவந்து தூண்டிவிட்ட காரணத்தால்
இணையில்லா அழகோடு எங்கள் நகர் ஜொலிக்கிறது
தேவை அறிந்திந்த திருப்பணிகள் செய்தவைக்கு
கோவைநகர்க் கவிஞன் நான் கனிவோடு நன்றி சொன்னேன்.

அடையாளம் மீட்க

வில்பதித்த செங்கொடியை சேர மன்னர்
  வஞ்சிநாட்டின் அடையாளம் ஆக்கிக் கொண்டார்
நெல்பழுத்த சோழமண்ணில் புலிக்கொடியை
  நல்லதொரு சின்னமென ஏற்று நின்றார்
அல்நிறத்துப் பாண்டியரோ கயலைத் தங்கள்
  அடையாளம்ச் சின்னமேன ஆக்கிகொண்டார்
சொல்பழுத்த தமிழுக்குக் கலைஞர்தானே
  செம்மொழியின் அடையாளம் வாங்கித்தந்தார்

ஓலைகளைத் தில்லையிலே பூட்டிவைத்த
  ஒருகாலம் தனிலங்கே சோழன் கூட
கோலமிகு மூவர்சிலை கொண்டு போய்தான்
  கோவிலே செந்தமிழை மீட்டெடுத்தான்
ஆலயத்தில் செந்தமிழைத் தடுத்தபோது
  அரசானையால் கலைஞர் மீட்டெடுத்தார்
காலங்கள் மாறுகின்றன போதும்கூடக்
  களம்மாறாதிருப்பதற்க்கு இதுவே சாட்சி

அடையாத நெடுங்கதவம் - தமிழன் வாழ்ந்த
  அறவாழ்வின் அடையாளம்; அல்லல் வந்தும்
உடையாத நெஞ்சுறுதி - தமிழன் கொண்ட
  ஊற்றத்தின் அடையாளம்; மிரட்டலுக்குப்
படியாத பேராண்மை - தமிழன் கொண்ட
  போர்குணத்தின் அடையாளம்; எந்த நாளும்
விடியாத இரவுகளை விடிய வைக்கும்
  விவேகம்தான் தமிழன் அடையாளம் ஆகும்


திசையறிந்து வருகின்ற பறவை கூடத்
  தன்கூட்டின் அடையாளம் தெரிந்து போகும்
இசையறிந்தோன் யாழ்நரம்பில் விரல் பதித்தால்
  இசைகுறிப்பின் அடையாளம் எழும்பலாகும்
பசியெழுந்தால் சிறுமழலைகூட, அன்னை
  பால்முலையை அடையாளம் தெரிந்துசேரும்
விசைமிகுந்த வாழ்வினிலே தமிழா உந்தன்
  வேருனக்கு அடையாளம் தெரிய வேண்டும்

சலசலக்கும் கடலலைகள் மட்டும் நீண்ட
சமுத்த்தத்தின் அடையாளம் ஆவதில்லை
கலகலக்கும் சலங்கைஒலி மட்டும் ஆடல்
கலைக்கான அடையாளம் ஆவதில்லை
விலைவைக்கும் கேளிக்கை விளம்பரங்கள்
வாழ்வுக்கு அடையளம் ஆவதில்லை
தலையிழந்தும் தனைஇழக்காத் தன்மானம்தான்
தமிழனுக்கு அடையாளம் - வேறொன்றில்லை

வாசல்திண்ணைகள், விருந்தினர் தேடி
வாழ்ந்த தமிழனின் அடையாளம்
பேசக் கூட ஆளில்லாமல்
பொந்தில் வாழ்வது அவமானம்

நலம்புனை சிற்பங்கள் ஆலயத்துள்ளே
நிற்பது தமிழனின் அடையாளம்
குளியல் அறைபோல் பளிங்கைப் பதிப்பது
கோயில் கலைக்கே அவமானம்

தப்பில்லாத உச்சரிப்புத்தான்
தமிழின் செம்மைக்கு அடையாளம்
செப்புச் சிலைபோல் தொகுப்பாளினிகள்
செந்தமிழ் கொல்வது அவமானம்

குத்துப்பாட்டுக்கு குதிக்கும் தமிழா
பத்துப்பாட்டு உன் அடையாளம்
பெட்டித்தொகையே பெரிதென்றிராதே
எட்டுத்தொகை உன் அடையாளம்

பதுக்கல்கணக்கும் ஒதுக்கல் கணக்கும்
பகட்டுத்திருட்டின் அடையாளம்
பதினென்கீழ் கணக்கு நூல்தான்
பண்டைய தமிழின் அடையாளம்

யாரென்ன உறவு என்பதை அறிந்து
அழைப்பது தமிழின் அடையாளம்
பார்ப்பவரை எல்லாம் அங்கிள் என்று
பிள்ளைகள் அழைப்பது அவமானம்

நெல்லில் வேலி கட்டிய வளம்தான்
நமது பரம்பரை அடையாளம்
முள்வேலிக்குள் உறவுத் தமிழன்
முடங்கிக் கிடப்பது அவமானம்

அவமானம் துடைத்தெடுப்போம்! அடையாளம் மீட்டெடுப்போம்
தமிழ்மானம் காத்திருப்போம்! திசையெல்லாம் புகழ் படைப்போம்

----------------------------

No comments: