Saturday, June 19, 2010

இப்படித்தான் ஆரம்பம்-35

கண்ணதாசன் என்று சொன்ன மாத்திரத்தில் நம் நினைவுக்கு வருகிற மற்றோர் அம்சம், புலனின்பம். வாழ்வின் சுகங்களை நிதானமாய் ரசித்து அந்த அனுபவங்களை இலக்கியமாய்ப் படைத்தவர் கண்ணதாசன்.அவசரத்துக்கு கள், ஆவேசத்திற்கு பெண் என்ற வகையைச் சேர்ந்தவரல்ல அவர். காதலிலும் போதையிலும் அவர் ஈடுபட்ட விதமே அலாதியானது.வானில் முழுநிலவு ஒளிவீச, அதன் ஒளிக்கீற்று விழுகிற முற்றத்தில் மஞ்சம் விரித்து, பண்ணிசை ஒலிக்க. பெண்ணொருத்தி பரதம் ஆட கையில் கிண்ணமேந்தி நிற்கிற பொழுது பொங்குகிற எண்ணங்கள் அவரை ஆனந்த உலகுக்கே அழைத்திச் செல்கின்றன.

"வெண்ணிலா முற்றத்தின்மேல் விரிமுல்லை மஞ்சம் போட்டு
பண்ணிலே இதயம் தோய,பரதத்தில் கண்கள் ஆட
கிண்ணமும் கையுமாக 'கிண்'ணென்று நிற்கும் போது
எண்ணங்கள் கோடியாகி எங்கெங்கோ ஓடியாடும்"

போதையல்ல அவரை இயக்குவது. போகத்தின் சுகம் பொங்கும் சூழலே அவரை இயக்குவது.வாழ்வு குறித்த அச்சமும், நிலையாமை குறித்த நடுக்கமும் சிலரை புலனின்பத்திலிருந்து விலகிநிற்கச் சொல்கிறது. சிலரை அந்த நிலையாமை குறித்த எண்ணங்களே சுகங்கள் நோக்கி ஆற்றுப்படுத்துகிறது. கண்ணகி கோவலன் முதலிரவுக்காட்சியைப் பாடவந்த இளங்கோவடிகள், இந்த உலக வாழ்க்கை நிலையில்லாதது என்பதாலேயே, இருக்கின்ற போதே இன்பங்களின் உச்சம்தொட இருவரும் துணிந்தாற்போல் இருந்தது என்கிறார்.

"தொலையாத இன்பமெலாம் துன்னினார் மண்மேல்
  நிலையாமை கண்டவர்போல் நின்று" என்று மனையறம் படுத்த காதையில் பாடுகிறார்.

கண்ணதாசனும் நிலையாமை குறித்து நீளப்பேசுகிறார்.
"சுட்டெரித்தால் இந்த மேனியும் சாம்பலாய்
  சுடுகாட்டு மண்ணிலுருளும்
  சுவையான பாவலன் போயினான் எனச்சொல்லி
சொந்தமும் வீடுசெல்லும்
கட்டைக்கு வாய்க்கின்ற நிலைகூட மானிடக்
கட்டைக்கு வாய்ப்பதில்லை" என்பதுவரை தீவிரமான தத்துவ விசாரம்போல் தோன்றுகிறது.ஆனால் இந்த விரிவான முன்னுரையெல்லாம் வேறொன்றுக்காக எழுதப்பட்டது..

கட்டைக்கு வாய்க்கின்ற நிலைகூட மானிடக்
 கட்டைக்கு வாய்ப்பதில்லை
கண்மூடி மேனியை மண்மூடும் முன்னரே
காலத்தை அனுபவிப்பேன்
தட்டத்திலே கிண்ணம் மதுவைத்தெடுத்துவா
தங்கமே பக்கம் வந்து
தழுவாத மேனியைத் தழுவுநீ அப்போது
சாராது மரணபயமே" என்கிறார்.

மரணபயத்திலிருந்து தப்பிக்கவா காதலும் கள்ளும் அவருக்குக் கைகொடுத்தன? இல்லை. கவிஞரின் உயிரில் உற்சாகத்தை ஊறச்செய்த உல்லாசங்கள் அவை.

"பைரன் தழுவாத பாவையரே, பாரசீகப்
பாவலனும் பாடாத பாவையர்காள் என்னையொரு
வைரம்போல் உங்கள் மார்பினிலே சூடுங்கள்
ஓர்கையிலே மதுவும் ஓர்கையில் மங்கையரும்
சேர்ந்திருக்கும் வேளையிலேஜீவன் பிரிந்தால்தான்
நான்வாழ்ந்த வாழ்க்கை நலமாகும் இலையெனில்
ஏன்வாழ்ந்தாய் என்றே இறைவன் எனைக்கேட்பான்"என்பவை கவிஞரின் பிரபலமான பெண்மணீயம் கவிதையின் முத்தாய்ப்பு வரிகள்.அதே கவிதையில்

 "பெண்மணி உன்னைப் பெரிதாய் மதிக்கின்றேன்
  கண்மணி உந்தன் காலை வணங்குகிறேன்
 உன்மணி வாய்ச்சாரம் ஊற்றிக்கொடு தினமும்
 என்மணி வாயோடு இணைந்தே கிடந்துவிடு
கிண்ணத்தில் மதுவூற்று கிண்ணென்னும் போதையிலே
எண்ணங்கள் எல்லாம் என் இதழில் ததும்பட்டும்!
வண்ணத்தைக் காட்டு உன் வடிவம் முழுவதையும்
கண்ணாலே பார்க்கின்றேன் -கண்ணாடி மேனியிலே
சிற்றெறும்பு போலோடி சிற்றணுக்கால் அத்தனையும்
ஒவ்வொன்றாய்ப் பார்த்தேநான் ஓடித் திரிகின்றேன்
ஆரத்தழுவுகின்றேன்; ஆவி உடலேறி
சாரத் தழுவுகின்றேன் சந்நிதியே தெய்விகமே
ஏட்டில் எழுதாத எழுத்தையெல்லாம் உன்னுடலில்
பாட்டாய்நான் எழுதுகிறேன் பள்ளித் திருமயிலே
மதுவே வா! மயிலே வா! வாழுங்காலம் வரைக்கும்
புதியதுவாய்த் தோன்றும் பொருளேவா!" என்றெல்லாம் வெறிகொண்டு பாடும் இடத்தில்தான் கவிஞரின் வீச்சும் தேடலும் தவிப்பும் வெளிப்படுகிறது
 இப்படி தேடச்செய்தது எது என்கிற கேள்விக்கு இவருடைய கவிதைகளிலேயே விடைகள் கிடைக்கின்றன.


மகககவி பாரதியின் சின்ன வயதுக்காதல் நிறைவேறவில்லை. பத்து வயது
இருக்கும்போது ஒன்பது வயதுத் தோழியின் கள்ளமற்ற அன்பில் கரைந்து போனான் பாரதி.
 ஒன்பதாய பிராயத்தள் என் விழிக்கு
ஓது காதை சகுந்தலை ஒத்தனள் என்று சுயசரிதையில் எழுதுகிறான்.
கவிஞருக்கும் இளவயதில் அப்படியொரு காதல் தோல்வி உண்டு. கவிதா என்ற பெயரில் தி.நகரில் கட்டிய ஹோட்டலில் காவிரி என்னும் பெயருள்ள அறையில் இருப்பார். காவிரி என்பது அவருடைய  காதலியின்  பெயர்.


ஒருமுறை பொது இடத்தில் தன் பழைய காதலியைப் பார்த்த கவிஞர் தன்னையும் மறந்து பெயர் சொல்லி அழைக்க நினைத்தவர் கடைசி நேரத்தில் சுதாரித்தாராம்.
காவிரி என்று எந்தன் கடையிதழ் வந்த வார்த்தை
பூவிரி மஞ்சம் தன்னில் போட்ட கல் ஓசையாகும்
என்று அச்சம்பவத்தைக் கவிஞர் பதிவு செய்கிறார்.

அதே போல அயல்நாடொன்றில் அவர் பேசிய கூட்டத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்தார். சற்றே வயதான போதும் அந்தப் பெண்ணின் வனப்பு அப்படியே இருந்ததாம்.
தோட்டத்து மதிற்சுவரின் மேலாகத் தோன்றிவரும் ஜோதிக்கீற்று
கூட்டத்தில் இருந்திடினும் குறிப்பாக எனைநோக்கிக் கொஞ்சும் காற்று
ஆட்டத்து மயிலெந்தன் அரங்கத்து விதானங்கள் அமைதி ஊற்று
வாட்டத்தும் வளமாக வயதினிலும் அழகாக வந்தாள் நேற்று
என்று வலியிலும் மகிழ்ச்சி கண்டார் கவிஞர்.

இந்த வலியின் சுகத்தை வாழ்வில் அழுது ரசித்தார் அவர். 
  
தொழுவது சுகமா வண்ணத் தோகையின் கனிந்த மார்பில்
விழுவது சுகமா உண்ணும் விருந்துதான் சுகமா இல்லை
பழகிய காதல் எண்ணிப் பள்ளியில் தனியே சாய்ந்து
அழுவதே சுகமென்பேன்யான் அறிந்தவர் அறிவாராக
என்பது அவருடைய அனுபவ வரிகள். இந்த மெல்லிய உண்ர்வு சிலநேரங்கள் தென்றலாய் வருடுகிறது. சில நேரங்களில் சூறாவளியாய்க் கிளர்ந்து காமம் பேசுகிறது. காமம் அடங்கும்போது கணநேரம் தோன்றும் விரக்தியை பலரும் தத்துவம் என்று தவறாகக் கருதுகிறார்கள். கவிஞர் அதனை,"சக்தியிலான் பேசும் தத்துவம்"என்கிறார்.

பொன்னிநதி யவ்வளவு போனரத்தம் போனபின்னர்
 கன்னியரை ஏசுதடி உள்ளம்-இது
காலிடறி யானைவிழும் பள்ளம்
என்கிறார். இறுதிவரை இதுதானா நிலை என்றால் இல்லை. வாழ்வின்  நிறைவு நிலையில்  மிகத்துல்லியமான சமநிலைக்குக் கவிஞர் வருகிறார். அதற்கு சாட்சி சொல்கிறது ஏழாவது தொகுதியில் உள்ள ஒரு கவிதை 
"செங்கயல் ஓடி விழுந்த விழிக்கொரு சித்திரம் தீட்டுகிறாள்
பங்கயம் போன்ற முகத்தினில் ஒளிக்கதிர் பாய்ந்திட விம்முகிறாள்"
என்றந்தக் கவிதையைக் கவிஞர் தொடங்குகிறார். இது வழக்கமான
காதல் கவிதை என்றே எல்லோரும் எண்ணும்போது

காதல் இளங்கவி போலிதை எண்ணிக் கனிந்திடும் மானிடரே-நான்
மாதெனச் சொல்வது ஓடி மறைந்தயென் வாலிப நாட்களையே
ஏது நடப்பினும் என்ன நடப்பினும் இளமை திரும்பிடுமோ
தேதி நடந்திடத் தேதி நடந்திட திரையும் விழுந்திடுமோ


 இது, பொன்னிநதி அவ்வளவு ரத்தம் போனதும் வரும் கணநேர விரக்தி என்று நினைக்கத் தோன்றும்.ஆனால் கவிஞர் கவிதையைத் தொடர்கிறார்:
இன்னும் உடலினில் ரத்தம் இருப்பினும் எண்ணம் அரும்பவில்லை-அதில்
மின்னிடும் சிந்தனை ஞானமல்லால் சுக வேதனை ஏதுமில்லை
மன்னிய பக்குவம் எய்திய நாட்களை வாழ்வில் அடைந்துவிட்டேன் -இனி
தன்னந் தனிமையில் தவம் புரிவோம் எனக் கதவினைச் சார்த்திவிட்டேன்!
சிற்றின்பச் சலசலப்பில் சிறகடித்த அந்த ராஜாளிப் பறவை பேரின்பப் பெருவெளியில் சலனமின்றி மிதந்து, மேகங்களில் கூடுகட்டி மோனத்தவம் இயற்ற நினைத்த நேரம் அது.

தன் வாழ்வின் பேரேட்டைத் தானே புரட்டி ஐந்தொகை வகுத்து ஆண்டவனிடம் கணக்குக் கொடுக்க கவிஞர் ஆயத்தமான நேரம் அது. சுண்ணாம்புக் காளவாயில் திருநாவுக்கரசரை இட்டு கதவைச் சார்த்தினார்கள். அவர் வெந்து தணிவார் என்றே எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர் அங்கே தன்னந்தனிமையில் தவமியற்றினார்.தன்னை இதுவரை சுட்ட காமக்காளவாயில் கவிஞர் கதவைச் சார்த்திக் கொண்டு தவமியற்றத்
தயாரானார். நிகழ்த்தியது தவம்தான். அந்தத் தவத்திற்கான அடிப்படைத் தேவைகளாய் அவர் கேட்டவை என்ன? மூடிய கதவுக்குப் பின்னே மோனத்தவம் கனிந்ததா? இவைதான் நமக்கு இப்போது தெரிய வேண்டியவை..

(தொடரும்)

No comments: