Monday, June 14, 2010

இப்படித்தான் ஆரம்பம்-32

கவிஞர் எழுதத் தொடங்கி இருபத்தைந்தாண்டுகள் ஆனபோது தெய்வ வணக்கத்துடனும் தன்னடக்கத்துடனும் ஒரு கவிதை எழுதினார் அவர். அதிலொரு பிரகடனமும் செய்தார்.
இருபத்தைந்தாண்டுகள் எழுதினேன் என்பதால் என்னையான் போற்றவில்லை
இன்னுமோர் காவியம் எண்ணுவேன் எழுதுவேன் இலக்கியம் தூங்கவில்லை என்றார்.

ஆனாலும் தொடக்க காலந்தொட்டே சில குறுங்காவிய முயற்சிகளைக் கவிஞர் மேற்கொண்டுள்ளார்.அவற்றுள் குறிப்பிடத்தக்கவை, மாங்கனி மற்றும் ஆட்டனத்தி ஆதிமந்தி.

இவற்றில் முன்னே பழுத்தது மாங்கனி. கல்லக்குடி வழக்கில் தண்டிக்கப்பட்டு 1954 ல் சிறையிலிருந்த போது ஆறு நாட்களில் இதை எழுதினாராம் கவிஞர். சிறையிலிருக்கும் போது கடிதம் கட்டுரை காவியம் என்று பலவும் எழுதும் பழக்கம் தலைவர்களால் தொடங்கிவைக்கப்பட்டதுதானே. மோரிய  மன்னனுக்கும் பாண்டியனுக்கும் நிகழ்ந்த போரில் மோரிய மன்னனுக்கு ஆதரவாய் சேரன் செங்குட்டுவன் படையெடுத்ததை மட்டுமே அடிப்படையாக்கி, மாங்கனி என்ற ஆடல்பெண்ணையும் அடலேறு என்ற நாயகனையும், மோகூர் மன்னனின் மகள்களாக தென்னரசி-பொன்னரசி ஆகிய கற்பனைப் பாத்திரங்களையும் படைத்து கவிஞர் உருவாக்கிய குறுங்காவியமே மாங்கனி.

காவியத்தின் தொடக்கத்தில், கனக விசயர் முடித்தலை நெரித்த நாளை சேரன் செங்குட்டுவன் கொண்டாட அங்கே மாங்கனி நடனமாடுகிறாள். மிக  மெல்லியளான மாங்கனி நடனமாடிய காட்சியை, காற்றுக்கு முருங்கைமரம் ஆடுவதை உவமையாக்குகிறார்.

 காற்றுக்கு முருங்கைமரம் ஆடல்போலும்
கடலுக்குள் இயற்கைமடி அசைதல் போலும்
நாற்றுக்குள் இளங்காற்று நடித்தல் போலும்
நல்லோர்தம் அவைக்கண்ணே நடனமிட்டாள்



அவளைப் பார்த்து மயங்கி நின்றான் அடலேறு. பொதுவாக ஆடல்பெண்களில் தவறான மனப்பான்மை கொண்டவர்கள் மயங்கி நின்றவர்களை இனங்கண்டு மயக்க முற்படுவார்கள்.ஆனால் மாங்கனி அப்படியில்லையாம்.

மூட்டைமுடிச் சத்தனையும் கட்டிக் கொண்டு
முதிர்தாயின் பின்னந்த மில்லை சென்றாள்
வேட்டையிலோர் புலிவீழந்தது அறியாள் அன்னாள்
வேடர்குணங் கொண்டங்கு வராததாலே
போனவளையே பார்த்துக் கொண்டிருந்த அடலேறு, அவளுடைய கால்சுவட்டைத் தேடினானாம்.

சித்திரத்தாள் அடிச்சுவட்டைத் தேடிப் பார்த்தான்
தென்றலது போனதற்கு சுவடா உண்டு
கைத்திறத்தால் தரைதடவிப் பார்த்து அன்னாள்
கால்பட்ட இடத்திலிளஞ் சூடு கண்டான் என்பார் கவிஞர்.

மோகூர் மன்னனுக்குத் துணையாக சேரனின்  படையை  அடலேறு  தலைமையேற்று  நடத்திச் செல்கிறான். போர்வீரர்களை நடனமாடி மகிழ்விக்க ஆடல்மகளிரை அழைத்துச் செல்லும் அந்நாளைய வழக்கப்படி மாங்கனியை அழைத்துச் செல்கிறான் அடலேறு. அவர்களுக்குள் காதல் அரும்புகிறது. போர்க்களத்தில் வில்லன்கள் முளைக்கிறார்கள். திருவிழாவில் குழந்தையைத் தொலைப்பதுபோல் போர்க்களத்தில் மாங்கனியைத் தொலைத்து விடுகிறான் அடலேறு. போரில் வெற்றி பெற்றதும் படைத்தலைவனுக்கு தன் மாளிகையில் விருந்து வைக்கிறான் பழையன். இளவரசியர் தென்னரசி-பொன்னரசி இருவரும் உணவையும், கனிகளையும்,காதலையும் பரிமாறுகிறார்கள். முக்கனிகளில்வாழையும் பலாவும் உண்டபின் மாங்கனியை எடுக்கிறான். உடனே காதலி நினைவு வருகிரது. தொட்ட கனி தூக்காமல் விட்டகனி தேடி ஓடுகிறான்.

கதை இருக்கட்டும். இந்தக் காட்சியில் விருந்துக்கு  வந்தவன்  சொல்லாமல்  கொள்ளாமல்  வெளியே ஓடினால் வீட்டிலிருப்பவர்களுக்கு எப்படி இருக்கும்?   தென்னரசி-பொன்னரசி-பழையன் ஆகிய மூவரின் வருத்தத்தை ஒரு விருத்தத்தில் அழகாகக் காட்டுகிறார் கவிஞர்.

 தென்னரசிக் கேதொன்றும் புரியவில்லை
 தேன்குறையோ பால்குறையோ என்று எண்ணிப்
 பொன்னரசி தனைப் பார்த்தாள்-அவளோ அங்கு
 பூத்திருந்த மலர்போன வழியைப் பார்த்தாள்
 கன்னலினை மறந்தோமென் றெண்ணித் தந்தை
 கவலையுடன் கோபித்தே மகவைப் பார்த்தான்
 பொன்னை ஒளி மறந்திருந்து தேடி ஓடும்
புதுக்கதையை அவரெங்கே அறிவார் பாவம்!

தென்னரசி அடலேறு திருமண ஏற்பாடுகளை சேரன் முன்னின்று செய்கிறான். மாங்கனி என்ன ஆனாள் எப்போது வருகிறாள் என்பதெல்லாம் கதைப்போக்கில்  கண்டுகொள்ள வேண்டியவை. ஆனால்,கல்யாணக்
கச்சேரியை வர்ணிக்கிறார் கவிஞர்.

"பிப்பீ"என்றார் நாதஸ்வரத்துக் காரர்
பெருந்தட்டுத் தட்டிவிட்டார் மேளகாரர்
எப்போதும் போலிருந்தார் ஒத்துக்காரர்.

கல்யாண வீடுகளில் எல்லாம் இந்த வரிகள் நினைவுக்கு வரும். கவிஞருக்கு மாங்கனி பெரும்புகழ் பெற்றுத்தந்ததே தவிர அவரின் படைப்பாளுமைகளில் விளைந்த மற்ற கனிகளுடன் ஒப்பிடும் போது புகை போட்டுப் பழுக்க வைத்தது போலத்தான் இருக்கிறது மாங்கனி.

ஏறக்குறைய இதே கதைக்களம் கொண்டது ஆட்டனத்தி ஆதிமந்தி. வரலாற்றுப் பின்புலம் கொண்ட கதை. சேர மன்னன் ஆட்டனத்தி,மருதி-சோழ இளவரசி ஆதிமந்தி ஆகியோர் இடையிலான முக்கோணக் காதல் இது. மருதியைக் காதலித்தாலும் சூழ்நிலை காரணமாய் ஆதிமந்தியின் காதலை ஏற்க வேண்டிய சூழல் ஆட்டனத்திக்கு. தன் போருக்கு ஆதிமந்தியின் தந்தை சோழன் உதவியது மட்டுமே காரணமா? காவியத்தில் இந்த இடத்தைக் கவிஞர் கையாளும் விதம் சுவையானது.போர் முடிந்த ஓர் அந்திப் பொழுதில் ஆதிமந்தி ஆட்டனத்தியைச்  சந்திக்கிறாள்.

மாலை மறைந்தது அந்தி எழுந்தது 
மக்களும் இல்லுறச் சென்றுவிட்டாள்
சோலையிலே ஆதிமந்தி மலர் 
சூடுற சேரனைத் தேடுகிறாள்
வாலைக் குமரியர் எண்ணிவிட்டால் உயர்
வானமும் கைப்படத் தாழுமன்றோ
சேலை நெருக்கிய சிற்றிடையில் கரம்
சேர்க்கப் பிறந்தவன் வந்துவிட்டான் 

மருதியும் ஆட்டனத்தியும் ஒருவரை ஒருவர் விரும்புவது ஆதிமந்தி அறிந்த ஒன்றுதான். ஆனாலும் தன் காதலை நிறைவேற்றிக் கொள்ளக் கிடைத்த  வாய்ப்பை மிகச்சரியாய் பயன்படுத்துகிறாள். அதுசரி, மருதியை விரும்பும் ஆட்டனத்தி இதற்கு உடன்பட்டது எப்படி? மிகச் சுலபமாக இதற்கு
பதில் சொல்கிறார் கவிஞர்.

நெஞ்சில் இருப்பது கைக்குக் கிடைத்தபின்
நேரங் கழிப்பதை யார்விழைவார்
கஞ்ச மலரடி தூக்கிவைத்தாள் அவள்
காதலன் மார்பினில் பாய்விரித்தாள்
வஞ்சமகன் -அட-வஞ்சிமகன் மலர்
வஞ்சியில் உள்ளதை எண்ணவில்லை
கொஞ்சக் கிடைத்தது நெஞ்சம் துடித்தது
கொட்டி எடுத்துயிர் கொண்டுவிட்டான்
கவிஞர் பொதுவாக சொல்ஜாலங்களை நம்புபவர் அல்லர். ஆனாலும் ஆட்டனத்தி ஆதிமந்தியில் சாதி என்ற சொல்லை வைத்து ஒரு விருத்தத்தை வலியப் புனைந்தார்.

"நாற்சாதிப் பெண்வகையில் அவளே அந்த
 நற்சாதிப் பதுமினியாள்-மெல்லத் தூக்கும்
காற்சாதி மலர்ச்சாதி-கண்ணின் சாதி
கருங்குவளைப் பூச்சாதி-கன்னச் சாதி
பாற்சாதி கை காந்தள் படைப்பின் சாதி
மேற்சாதி கீழ்ச்சாதி எதிலும் சேரா
வேற்சாதி இவள்சாதி என்றான் வேந்து".

இருபொருள் தரும் சொல்ஜாலங்களையே கவிஞரிடம் நிறையக் கேட்டிருக்கிறோம். அத்திக்காய் காய் காய், பார்த்தேன் சிரித்தேன்,  என்று
பல பாடல்கள். இந்த சாதிச் சிலம்பம் அவருடைய மற்ற ஜாலங்களுக்கு முன்னே சோபிக்கவில்லை. ஆனால் மன்னாதி மன்னன் என்ற பெயரில்
இதுவே திரைப்படமாக வந்தது. வசனமும் பாடல்களும் கவிஞர்தான்.
கண்கள் இரண்டும் இங்கே உன்னைக் கண்டு பேசுமோ போன்ற
அற்புதமான பாடல்கள் அந்தப் படத்தில்தான்.

 மாங்கனி, ஆட்டனத்தி-ஆதிமந்தி, இரண்டுமே ஏறக்குறைய ஒரேமாதிரிதான்
முடிகின்றன. காவிரியில் ஆட்டனத்தி அடித்துச் செல்லப்படுகிறான்.அவனைத்தேடி  ஆதிமந்தியும் ஆற்றோடு செல்கிறாள். மாங்கனியிலும் மாங்கனி ஆற்றில் விழ அடலேறு பின்னால் வந்து விழுகிறான்.
மாங்கனியுடன் ஒப்பிடும்போது கதைக்களம் கவிவளம் இரண்டிலும் ஆட்டனத்தி ஆதிமந்தி மேலோங்கியே இருக்கிறது. இரண்டும் குறுங்காவியங்கள் என்ற அளவில் அமைந்தன.ஆனாலும்,ஆற அமர
காவியம் படைக்க விரும்பினார் கவிஞர்.அதற்கு சரியான வாய்ப்பாக அமைந்தது...ஏசு காவியம்!!

(தொடரும்)

No comments: