Friday, December 6, 2013

வ.உ.சி. வாழ்வில் இரண்டுமுறை விளையாடிய காந்தி


தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் வ.உ.சி.க்காக அனுப்பிய பணத்தை தன்னிடமே வைத்திருந்து "அந்தப் பணத்தை நான் அனுப்பிவிட்டேனா"என்று வ.உ.சிக்கே 21.04.1915 ல் கடிதம் எழுதிய காந்தி,20.01.1916 வரை தொடர்ந்து கடிதம் எழுதிய பிறகு 347 ரூபாய் 12 அணாவை காந்திக்கு அனுப்பினார் என்பது பழைய கதை.

அதற்குப் பிறகு வ.உ.சி.சிறையிலிருந்த காலத்தில் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த வேதியன் பிள்ளையும்
அவரின் சகலை  தண்டபாணிப் பிள்ளையும் 1912ல் ஐயாயிரம் ரூபாய்கள் வசூலித்து இந்தியா திரும்பியதும் வ.உ.சி.யிடம் தரும்படி காந்தியிடம் தந்தனுப்பினார்கள். 1920 வரை,அதாவது எட்டாண்டுகள் அந்தப் பணத்தை வ.உ.சி.யிடம் காந்தி கொடுக்கவில்லை.1915-1920 பலமுறை காந்தி வ.உ.சி.யை சந்தித்த போதும் அந்தப் பணம் தன்னிடம் இருப்பதைத் தெரிவிக்கவில்லை.

அதன்பின் வேதியன் பிள்ளை இந்தியா வந்தபிறகு சபர்மதி ஆசிரமத்திற்கே சென்று காந்ட்தியை சந்தித்துக் கேட்டபோது,
அந்தப் பணம் வேறு வகையில் செலவாகிவிட்டதாக சொன்ன காந்தி முன்பையைச் சேர்ந்த இசுலாமிய வணிகர் ஒருவருக்குக் கடிதம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளச் சொன்னாராம்.

திலகரும் இந்த விஷயத்தில் தலையிட 1920 மே மாதம் மும்பையைச் சேர்ந்த இசுலாமிய வணிகர் கோபாளி எட்டாண்டுகளுக்கான வட்டியுடன் ஐந்தாயிரத்தை வ.உ.சி.யிடம் தர, "காந்தியின் தவறுக்கு நீங்கள் ஏன் வட்டி தர வேண்டும்"என்று வ.உ.சி. அசலை ம்ட்டும் பெற்றுக் கொண்டாராம்.

வேதியன் பிள்ளையின் மகனும் சிறந்த தமிழறிஞருமான திரு.வே.தென்னன் இன்றும் கோவையில் வாழ்கிறார்.88 வயதான இவரை நான் நன்கறிவேன்.


 இந்த விபரங்களடங்கிய கட்டுரை,வழக்கறிஞர் திரு.அனிதா.கு.கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ள "காந்தி கணக்கு" என்ற நூலில் இடம் பெற்றிருக்கிறது. இந்த நூலை வைத்துப் பார்த்தால் வ.உ.சி.வாழ்வில் காந்தி இரண்டுமுறை விளையாடியது தெரிகிறது. காந்தியுடன் நெருங்கிப் பழகியும் வ.உ.சி.தொடர்பான விபரங்கள் காந்தியின் அரசியல் வாழ்வு குறித்த எந்தப் பதிவிலும் இடம் பெறாமை குறித்தும் நூலாசிரியர் கேள்விகள் எழுப்புகிறார். இன்னும் பல அழுத்தமான செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

நூல் : காந்தி கணக்கு (விலை ;ரூ.100/)
நூலாசிரியர் : அனிதா.கு.கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு சூரியன் பதிப்பகம்
                  லியோலேபிள் கட்டடம்
                  இடுவம் பாளையம்
                   திருப்பூர்-641 687
                   தொ.பே: 94437 22618
                   தொடர்புக்கு :  anithaakrishnamoorthy@gmail.com
                                           

Monday, December 2, 2013

எல்லாம் அவனே


பொன்னிநதி தீரத்தில் புறப்பட்ட கங்கையென
புனிதத்தின் அலைவீசி வந்தான்
அன்புநதி கடலாகி ஆர்ப்பரிக்கும் விதமாக
ஆனந்த அலையிங்கு தந்தான்
துன்பநதி நடுவினிலே தூசாகி அலைபவர்க்கு
திருவடிகள் படகாக்கித் தந்தான்
இன்பநதி சிவமாக இருகரையே தவமாக
"இதிலிருநீ மீனாக" என்றான்

கண்ணீரின் சுகவெள்ளம் கங்குகரை காணாமல்
கன்னத்தில் வழிந்தோடச் செய்தான்
மண்ணெங்கும் உலவுகிற மூலிகைத்தேன் காற்றாக
மனிதர்க்கு இதம்செய்ய வந்தான்
விண்ணென்ற ஒன்றைநாம் வாழ்கின்ற வையத்தில்
விரித்திடவே வழிசொல்லித் தந்தான்
வண்ணங்கள் கதைபேசும் வானவில்லின் முதுகேறி
வானுக்கும் புதுசேதி சொன்னான்

கருவென்ற சிறைதேடிக் கால்சலிக்க நடக்கின்ற
கணக்குகளைக் களவாடிக் கொண்டான்
ஒருநூறு பிறவிகளின் ஓயாத சங்கிலியை
ஒருமூச்சில் பொடியாக்கித் தந்தான்
குருவென்னும் அற்புதமாய் வரம்பொங்கும் கற்பகமாய்
குளிர்கொண்ட கனலாக வந்தான்
இருளென்றும் ஒளியென்றும் இலதென்றும் உளதென்றும்
எல்லாமே அவனாகி நின்றான்