எல்லாம் அவனே


பொன்னிநதி தீரத்தில் புறப்பட்ட கங்கையென
புனிதத்தின் அலைவீசி வந்தான்
அன்புநதி கடலாகி ஆர்ப்பரிக்கும் விதமாக
ஆனந்த அலையிங்கு தந்தான்
துன்பநதி நடுவினிலே தூசாகி அலைபவர்க்கு
திருவடிகள் படகாக்கித் தந்தான்
இன்பநதி சிவமாக இருகரையே தவமாக
"இதிலிருநீ மீனாக" என்றான்

கண்ணீரின் சுகவெள்ளம் கங்குகரை காணாமல்
கன்னத்தில் வழிந்தோடச் செய்தான்
மண்ணெங்கும் உலவுகிற மூலிகைத்தேன் காற்றாக
மனிதர்க்கு இதம்செய்ய வந்தான்
விண்ணென்ற ஒன்றைநாம் வாழ்கின்ற வையத்தில்
விரித்திடவே வழிசொல்லித் தந்தான்
வண்ணங்கள் கதைபேசும் வானவில்லின் முதுகேறி
வானுக்கும் புதுசேதி சொன்னான்

கருவென்ற சிறைதேடிக் கால்சலிக்க நடக்கின்ற
கணக்குகளைக் களவாடிக் கொண்டான்
ஒருநூறு பிறவிகளின் ஓயாத சங்கிலியை
ஒருமூச்சில் பொடியாக்கித் தந்தான்
குருவென்னும் அற்புதமாய் வரம்பொங்கும் கற்பகமாய்
குளிர்கொண்ட கனலாக வந்தான்
இருளென்றும் ஒளியென்றும் இலதென்றும் உளதென்றும்
எல்லாமே அவனாகி நின்றான்