இப்படித்தான் ஆரம்பம் - 34

இந்தியாவின் இணையற்ற பெருமைகளைப் பட்டியல் போடும் பாரதி, தத்துவக் கோட்பாடுகளின் தூல வடிவமாக வாழ்ந்தவர்களையே பட்டியலில் சேர்க்கிறான். மானுட தத்துவத்தைக் கலையாக்கிய கம்பன், கலைநேர்த்தி என்னும் தத்துவத்திற்கு சான்றான காளிதாசன், என்ற வரிசையில் வேதாந்த தத்துவத்தின் வடிவாய் வாழ்ந்த ஆதிசங்கரரை குறிப்பிடுகிறான் பாரதி.கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்
காளிதாசன் கவிதை புனைந்ததும்
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்தளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்
நம்பரும் திறலோடொரு பாணினி
ஞாலம் மீதினில் இலக்கணம் கண்டதும்
இம்பர் வாழ்வினிறுதிகண்டு உண்மையின்
இயல்புணர்த்திய சங்கரன் ஏற்றமும்  
என்றந்தப் பட்டியல் நீள்கிறது.

கவிஞரைப் பொறுத்தவரை அவர் வாழ்க்கை அனுபவங்களால் வார்க்கப்பட்டவர். வேதாந்தச் சிந்தனைகளுடன் அவருக்கு நேரடிப் பரிச்சயம் ஏதுமில்லை. "தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்-அது தெரியாமல் போனாலே வேதாந்தம்" என்பதும் அவருடைய வாக்குதான். காஞ்சி மஹாபெரியவர்பால் அவருக்கிருந்த அளப்பரிய பக்தியும், அடிக்கடி  படித்து  வந்த "தெய்வத்தின் குரல்" புத்தகமும் வேதாந்த நாட்டத்தை அவருக்குக்  காலப்போக்கில் ஏற்படுத்தியிருக்க வேண்டும். கவிஞர்  மறைந்து  சில ஆண்டுகளுக்குப்  பிறகு  சகோதரர்  காந்தி  கண்ணதாசனிடம்  கேட்டு   கவிஞரின்  புத்தக அலமாரியைச் சென்று பார்த்தேன். அவர் வைத்திருந்த வரிசையின் ஒழுங்கு கலையாமல் பாதுகாத்திருந்தார்கள். நேர்க்கோட்டில்
அடுக்கப்பட்டிருந்த புத்தகங்களின் மீது படுக்கை வசத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரே புத்தகம், தெய்வத்தின் குரல்.பிரித்துப் பார்த்தால்,முதல் பக்கத்தில்,"இது என்னுடைய புத்தகம்; இதை யாரும் இரவல் கேட்கக் கூடாது என்று எழுதி, அன்பன் கண்ணதாசன் என்று கையொப்பமிட்டிருந்தார்.

ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம், பஜகோவிந்தம் ஆகியவற்றைத் தமிழில் எழுதினார் கவிஞர். அவற்றை மொழிபெயர்ப்பு என்று சொல்லலாகாது. டிரான்ஸ் க்ரியேஷன் என்று சொல்லத்தக்க மொழியாக்கங்கள் அவை.

மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வி
மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்
நீலமா மேகம்போல நிற்கின்ற திருமால் உந்தன்
நேயத்தால் மெய்சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்;
மாலவன் மீது வைத்த மாயப்பொன் விழியிரண்டை
மாதுநீ என்னிடத்தில் வைத்தனை என்றால்- நானும்
காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்று
கண்ணிறை வாழ்வு கொள்வேன் கண்வைப்பாய் கமலத்தாயே

பொன்மழை என்ற தலைப்பில் கனகதாரா ஸ்தோத்திரத்தைத் தமிழில் கவிஞர் எழுதின தொகையின் முதல் பாடல் இது. எண்பதுகளில் இக்கவிதை ஸ்டிக்கர்களாகவும் வெளியிடப்பட்டது. அதைத் தமது பணப்பெட்டியில் ஒட்டி வைத்திருந்தவர்கள் பலர்.

 கவிஞரின் கவிதை ஓட்டத்திற்கு மிகப் பொருத்தமாக அமைந்தது பஜகோவிந்தம்."பஜகோவிந்தம் பஜகோவிந்தம் மூடமதே!ஸ்ம்ப்ராப்தே
சந்நிஹிதே காலெ நஹிநஹி ரக்ஷதி டுக்ரிஞ் கரணே" என்னும் முதல்
சுலோகத்தை கவிஞர் தமிழில் தந்த விதம் இது.

பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை
 பாடிடுக மூடமதியே
பாடுவதில்தீர்ந்துவிடும் பழிபாவம்அத்தனையும்
 பரந்தாமன் சொன்னவிதியே
பாடுவதைவிட்டுவிட்டு பாணினிஇலக்கணத்தைப்
பற்றுவதில் நன்மைவருமோ
பாய்விரித்தவேளைதனில்காலனவன்சந்நிதியில்
பாணினியம் காவல்தருமோ

பஜகோவிந்தம் என்று சொன்ன மாத்திரத்தில் எல்லோரின் உள்ளங்களிலும்
உதயமாகும் முதல் வரி, புனரபி ஜனனம் புனரபி மரணம். இந்த சுலோகத்திற்குக் கவிஞர் தந்த தமிழ்வடிவம் அபாரமானது.
தாய்வயிற்றிலே பிறந்து தானிறந்து மீண்டும் மீண்டும்
தாய்வயிற்றிலே பிறக்கிறேன்
தாரணிக்குள்ளே இருந்து வான்வெளிக்குள்ளே பறந்து
தாரணிக்குள்ளே நடக்கிறேன்
ஓய்விலாத என்பிறப்பு மீண்டும் மீண்டும் யார்பொறுப்பு
உன்னையன்றி வேறு காண்கிலேன்
ஊரிலுள்ள ஜீவனுக்கு நீகொடுத்த வாழ்க்கையென்று
உன்னிடத்தில் என்னை வைக்கிறேன்
வாய்திறந்து கூறுஇந்த வார்த்தைதனை-விட்டுவிட்டு
வாடுவதில் என்ன பயனே
வஞ்சகர்க்கு இறப்புவைத்து பஞ்சவர்க்கு வாழ்வுவைத்த
வித்தகனைப் பாடு மனமே

போலி குருமார்கள் திருமூலர் காலத்திலிருந்தே உண்டு. ஆதிசங்கரர், பஜகோவிந்தத்தில் வேடதாரி முனிவர்கள் பற்றி ஒரு  சுலோகமே  பாடுகிறார். ஜடிதோ முண்டில்உஞ்சித கேச என்று தொடங்கும்  அந்த சுலோகத்தில் பிரபலமான வரி, "உதர நிமித்தம் பஹுக்ருத வேஷ". எழுத்தாளர் சுஜாதா ஒரு திரைப்பட வசனத்தில் கூட இந்த வரியைப் பயன்படுத்தியிருப்பார். வயிற்றுப் பிழைப்புக்காக சாமியார் வேஷம் என்பது அதன் பொருள். இந்த சுலோகத்தை கவிஞர் தமிழில் தந்துள்ளார்.

காவியுடை மொட்டையொடு கையிலொரு பாத்திரமும்
காட்டுவது என்ன துறவோ
கண்ணியமும் இல்லை யிதில் புண்ணியமும் இல்லை வெறும்
கட்டைகளின் வேஷமல்லவோ
கோவணமும் நீள்சடையும் கோஷமிடும் வாய்மொழியும்
கோமுனிவன் ஆக்கி விடுமோ
கும்பியை நிரப்பவொரு செம்புசுமப்பார் அவர்க்கு
கோவிந்தன் காட்சி வருமோ

ஏசு காவியம் எழுதிய பிறகு இந்து சமயத்திற்கும் ஒரு காவியம் படைக்க வேண்டும்  என்று கவிஞர் கருதியதன் விளைவாக அவர் எழுதத்  தொடங்கியதுதான்  சங்கர காவியம். 
ஆதிசங்கரரின் வரலாற்றைப் பாடும் பணி எத்தகையது என்று அவையடக்கக் கவிதையிலேயே அறிவிக்கிறார் கவிஞர்.

ஆழ மாகடல் அளப்பது போலவும்
வேழ மாயிரம் வெல்வது போலவும்
ஏழை இந்த இளங்கவி செப்பினேன்
வாழி என்று வாழ்த்துக சங்கர 
கற்ற ஞானியர் காசறு பாவலர்
குற்ற மென்று குறையெடுத் தோதவும்
முற்ற றிந்தவர் முன்புயான் வெட்கவும்
சற்ற றிந்தது சாற்றினேன் சங்கர

ஆனால் சங்கரரின் முரசாகவே நின்று தான் முழங்குவதாக கவிஞர் சொல்கிறார்.
அரசு வீற்றுள அத்வைதம் தனை
சிரசிலேற்றி இத் திக்கெலாம் சென்றவன்
பரசுராம ஷேத்திரப் பால நின்
முரசு போலநான் முழங்கினேன் சங்கர 
சங்கர காவியம் தொடங்கும்போது ஆல்வாய் நதிக்கு ஆற்றுப் படலம் பாடுகிறார்.

சுற்றி உலாவரும் சுடர்த்தேவி தோகை ஆல்வாய்த் தொன்நதியாள்
வெற்று விடாய்தனை தீர்த்தங்கே வேத விடாயும் தீர்க்கின்றாள்
சேர மண் பற்றி நாட்டுப் படலம் பாடுகிறார்.பாட்டுடைத் தலைவன்
ஆதிசங்கரர் தோன்றியது காலடி என்னும் கிராமத்தில்.எனவே காலடி பற்றி
கிராமப்படலம் பாடுகிறார். மத்தளம், செண்டை , கொம்பு போன்ற வாத்தியங்கள் முழங்குகிற ஊர் என்பதை, அந்த வாத்தியங்களின் ஓசைநயம் தரும் சந்தத்திலேயே பாடுகிறார்.

மத்தளத்தொடும் செண்டை கொம்புகள்
மண்ணதிர்ந்திடச் செய்வன
எத்தவத்தையும் வெல்லும் வேதியர்
ஏற்று மாமறை சொல்வன
தத்தும் நீர்த்திரள் யாவும் ஆங்கொரு
சக்தி தத்துவம் காண்பன
முத்து விற்பபோல் முத்தி வித்திடும்
மோக மற்றவூர் காலடி 
முத்துப்போல் முத்தி எளிதாகக் கிடைகிறது என்றும் பொருள்.முத்தியை விலை போட்டு விற்கும் மோகமில்லாத ஊர் என்றும் பொருள்.
பரிபூரண ஞானத்தில் சித்துகள் தாமாகக் கைவருவதும்,கைவரப் பெற்றோர்
அதைக் கடந்து செல்வதுமாக காலடியில் காலம் கழிகிறது என்கிறார் கவிஞர்.

எண்ணெயின்றி ஓர் தீபம் ஏற்றுவார்
என்றும் வாழ்ந்திடும் அவ்விடம்
கண்ணைமூடி ஓர் சிற்பம் நாட்டுவார்
கவிதை பாடிடும் கண்ணிடம்
மண்ணை யள்ளுவார் வைத்த கையிலே
மணிகள் தோன்றிடும் தம்மிடம்
வெண்ணிலாவிலும் தேய்பிறை இலா
வெற்றி மங்கலம் காலடி

இத்தகைய புனிதத் தலமாகிய காலடியில், சீலம் மிக்க வாழ்வு வாழ்கிறார்கள்சிவகுருவும் ஆர்யாவும். எப்போதும் சிவசிந்தையிலேயே அந்தத் தம்பதிகள் இருக்கின்றனர், சிவத்தன்மை நிரம்பிய  மகன் வேண்டியே இல்லறத்திலும்
ஈடுபடுகின்றனர் என்பதை நயமாகவும் நாகரீகமாகவும் கவிஞர் குறிப்பிடுகிறார்

தழுவுங்கால் இருவர் மூச்சும் சங்கரா என்னும் -விட்டு
நழுவுங்கால் அதையே சொல்லும்;நல்லுண வருந்தும் போதும்
எழுங்கைகள் அதையே பாடும் இடும்கையும் அதையே கூறும்
வழுவுங்கால் வார்த்தைகூட வன்சொல்லை அறியா தன்றே

இவர்களுக்குப் பிள்ளையாய் சங்கரர் வந்து தோன்றுகிறார்.
மையிரு விழிகள் பூக்கள் மலரிரு இதழ்கள் பாக்கள்
செய்யகை அமுதச்சாறு திருத்தக்க நிலவின் மார்பு
என்று குழந்தையை வர்ணிக்கிறார்.
திருஞானசம்பந்தர் உதடு பிதுங்க அழுதது பற்றி சேக்கிழார் சொல்கையில்
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க
பூத பரம்பரை பொலிய புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலி திருஞான சம்பந்தர்

என்று சொல்கிறார். சங்கர மழலை கைகால் உதைத்ததையும்  மதலை  பேசியதையும் தற்குறிப்பேற்றமாகவே சொல்கிறார்
கவிஞர்.

 உதைக்கின்ற கால்கள் வீணர் ஓடட்டும் என்ப போலும்
பதைக்கின்ற கைகள் இந்தப் பார்காப்போம் என்ப போலும்
விதைக்கின்ற மழலை -யாமே வேதங்கள் என்ப போலும்
எதைக்கண்ட போதும் பிள்ளை இந்துவின் ஒளியே போலும்..சங்கரர் காலை முதலை கவ்வியது, நெல்லிக்கனி பிக்ஷை பெற்ற இடத்தில்
கனகதாரா ஸ்தோத்திரம் பாடியதுஎன்று காவியத்தைத் தொடர்ந்து படைத்து  
வந்தார் கவிஞர். குருவைத் தேடி சங்கரர் கிளம்பும் இடத்தைப் பாடும்போது

குருவிலாத இடமெது நாட்டினில் குருவிகள்போல் குருவினர் கூட்டமே
ஒருவன் வேண்டும் உயர்ந்த வேதாந்தியாய் உலகம் முற்றையும்  உணர்ந்ததோர் ஞானியாய்
என்று சங்கரரின் தேடலை கவிஞர் சித்தரிப்பார்.தினமும் கவிஞர் சங்கர காவியம் எழுதிவந்தார்.

இடையில் பணி தடைப்பட்டது. ஏதேனும் பத்திரிகையில் தொடராக வெளியிடத்  தொடங்கினால் எழுதி முடித்து விடுவார் என்கிற ஆசையில், அவரது உதவியாளர் திரு.இராம.கண்ணப்பன் வார  இதழ் ஒன்றிற்கு அனுப்ப, அவர்கள் ஒருமாதம் கழித்து முழுவதையும் எழுதி அனுப்பினால் தொடராக வெளியிடுவோம் என்று சொல்லிவிட்டார்களாம். ஈழமகள்கண்ணீர் ,பாண்டிமாதேவி, பர்த்ருஹரி காவியம் என்று கவிஞரின் முற்றுப் பெறாத காவியங்களின் வரிசையில் சங்கர காவியமும் சேர்ந்து கொண்டது.
கழகத்தைப் பாடிய காலங்களிலும் சரி, கடவுளைப் பாடிய காலங்களிலும் சரி, கவிஞர் தீராக்காதலராகவே திகழ்ந்தார். அவரிடம் பெருகிய காதல் பலநேரங்களில் காமமாகவே கருதப்பட்டது.இன்றும் பலருக்கும் இருக்கிற
கேள்வி இதுதான்.கண்ணதாசன் காதலரா?காமுகரா?

(தொடரும்)