காமராஜர் மீது கண்ணதாசன் கொண்டிருந்த பக்தி அபாரமானது. காமராஜர் மீதிருந்த ஈர்ப்பும், திராவிட இயக்கம் மீதிருந்த வெறுப்பும் சேர்ந்து கொண்டது. கவிஞரின் பாட்டுடைத் தலைவனாய் விளங்கினார் காமராஜர்.
"முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி
பழனிமலை ஆண்டிக்குப் பக்கத்தில் குடியிருப்போன்
அரசியலைக் காதலுக்கு அர்ப்பணிப்போர் மத்தியிலே
காதலையே அரசியலில் கரைத்துவிட்ட கங்கையவன்"
என்ற வரிகளும்,
"ஆண்டி கையில்ஓடிருக்கும் அதுவும் உனக்கிலையே"
என்ற வரியும் காமராஜ் நேசர்களால் காதலுடன் உச்சரிக்கப்படுபவை. காமராஜரின் தலைமைப் பண்பு பற்றிய கவிஞரின் பிரமிப்பு, லால்பகதூர் சாஸ்திரியை காமராஜர் பிரதமராக்கிய சாதுர்யத்தை விவரிக்கிறபோது விகசிக்கிறது.
நேரு மறைந்தபோது, அடுத்த பிரதமர் யார் என்ற குழப்பமேற்பட்டது.
மாளவியா, ஜெகஜீவன், மொரார்ஜி தேசாய் போன்றோர் எல்லாம் போட்டியிடுவார்களென்றும், கடும் மோதல் நிகழுமென்றும் கருத்துக்கள்
பரவிய காலமது
"மாளவியா முழங்குகிறார்;மௌனம் கிழித்தெழுந்து
ஜகஜீவன் பாடுகிறார்;தங்கத்தின் விலைகுறைத்த
தேசாய் தனக்கில்லா மீசையினை முறுக்குகிறார்
மேனன் கிளம்புகிறார் மேல்நாடும் கீழ்நாடும்
வேடிக்கை பார்க்க விளையாடப் போகின்றார்
என்றெல்லாம் வதந்திக்குத் தந்தி கொடுப்பவர்கள்
ஏட்டுச் சுதந்திரத்தில் நீட்டிப் படுப்பவர்கள்
பேசினார்;அந்தப் பேச்சுக்கே நாட்டுமக்கள்
கூசினார்;கூனிக் குறுகினார்" என்கிறார் கவிஞர்.
தர்மசங்கடமான சூழலில் காமராஜர் சூழலைக் கையிலெடுத்துக் கொண்டார். அவர் பேசிய பேச்சுக்கு டெல்லி தலைவணங்கியது.பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அவர் நுழைந்தபோது அங்கிருந்த அத்தனை பேரும் எழுந்து நின்றதை வரலாறு வாஞ்சையுடன் பதிவு செய்துள்ளது.அந்தச் சூழலை காமராஜர் கையாண்ட விதத்தைக் கவிதையாக்குகிறார் கவிஞர்.
வெட்டவெளி வானத்தோர் விடிவெள்ளி வந்ததம்மா
வெள்ளெருக்கங் காட்டினிலோர் முல்லைமலர் பூத்ததம்மா
பட்டுப்போகாமல் பசுமரத்தைக் காப்பதற்கு
பாலே மழையாக பாரதத்தில் வீழ்ந்ததம்மா என்று சிலாகிக்கிறார்.
பாராளுமன்றமே பக்கத்தில் வந்ததம்மா!
லால்பகதூர் தான்நமது நாட்டின் தலைவரென்றான்
ஐந்நூற்ற்றுபதுபேர் ஆமென்றார்'காத்திருந்த
தோல்பகதூர் எல்லாம் சுருண்டு படுத்துவிட்டார்;
நந்தா விளக்கொன்று நாட்டுக்கோர் சஞ்சீவி
தந்தான்!என் தாயகத்தைத் தலைநிமிர்த்தி வைத்துவிட்டான்!
கறுத்த நிறங்கொண்ட காமராஜர்,கண்ணாதாசனின் கண்களுக்குக் கண்ணனாகவே தெரிகிறார். அதில் வியப்பில்லை.பாரத மாதா குந்திதேவியாகத் தெரிகிறாள்.கண்ணனைத் தேடிவந்த பஞ்ச பாண்டவர்களும் இங்கே இருக்கிறார்கள்.
தருமனைப் போலொரு ஜனாதிபதியைத்
தந்து வளர்த்த தாயவள் இல்லையோ
அர்ஜுன சாஸ்திரி அளித்தவளில்லையோ
பீமன் சவானைப் பெற்றவளில்லையோ
நகுலனைப் போலொரு நந்தா இல்லையோ
சகாதேவன் நிகர் சாக்ளா இல்லையோ
இத்தனை படையையும் இயக்கும் சக்தியாம்
கண்ணனைப் போலொரு காமராஜ் இல்லையோ
என்று உருவகப்படுத்தினார் கவிஞர்.
காமராஜர் மீது கவிஞர் கொண்ட பற்று சாஸ்திரி மீதும் பெரிய பிரியமாய் வளர்ந்தது. சாச்திரியின் சென்னை வருகையின்போது வரவேற்புக் கவிதை
வாசித்தளித்தார் கவிஞர்.
அறிவே வருக! அனலே வருக!
அமைதிப் புனலே தெளிவே வருக!
உருவில் சிறிதாய் உரத்தில் பெரிதாய்
உடைவாள் எடுத்த உயிரே வருக!
என்று பாடிய கவிஞர்,பாகிஸ்தான் போரின் வெற்றியைக் குறிக்க,
மூவடி மண்ணில் முன்னடி தொடங்கி
ஓரடியாலே உலகையளந்து
மாவலி தலையின் மமதை யளந்த
வாமனா வருக! மன்னவா வருக!
நாலடி உருவென நகைத்த சூரனை
வேலடி அடித்த வேலவா வருக என்கிறார்.
காமராசரின் பிறந்தநாள் கவியரங்கில் பாடிய கவிஞர்,ஜனநாயக சோஷலிசத்தின் முக்கியத்துவத்தை விளக்க முற்பட்டார்.
கத்திரியில் வெண்டைக்காய் காய்த்துக் குலுங்குமென்றால்
தத்துவத்தில் ஏதோ தகராறு என்றுபொருள்
சிங்கந்தான் மான்குலத்தை சீராட்டி வளர்க்குமென்றால்
அங்கத்தில் ஏதோ அடிவிழுந்தது என்றுபொருள்
தனியார் தொழிலால்தான் சமதர்மம் வளருமென்றால்
தலையிலே ஏதோ தகராறு என்று பொருள் என்று தனக்கேயுரிய பாணியில் விவரிக்கிறார் கவிஞர்.
இன்று அப்துல்கலாம் புண்ணியத்தில் வாயில்லா ஜீவன்கள் கூட வல்லரசு என்று சொல்லிப் பழகிவிட்டன.ஜனநாயக சமதர்மம்தான் வல்லரசுக்கு வழி
என்று காமராஜர் பிறந்த நாளில் கவிதை பாடினார் கவிஞர். அதற்கு அவர் சொல்லும் காரணம் சுவையானது
.............................................................சிலநாட்டில்
ஜனநாயகம் உண்டு ; சமதர்மப் பேச்சில்லை
சமதர்மம் உளநாட்டில் ஜனநாயகம் இல்லை
................................................................
இங்கேதான் அந்த இரட்டைக் குழந்தைதனைப்
பெற்றெடுத்தார் நேரு;பிழைக்குமென நம்பிவந்தார்
இந்தக் குழந்தைமட்டும் எழிலாய் வளர்ந்துவிட்டால்
இன்னும் சிலநாளில் இந்தியா வல்லரசு!
என்கிறார் கவிஞர்.
காமராஜர் மீதான கவிஞரின் வருத்தம் உரைநடையில் தென்படுகிறது. கவிதையில் கரைகாணாத காதலின் பிரவாகம். அந்தக் காதலின் இன்னொரு முகம் இன்னொரு தலைவரின் மீதான வெறுப்பாகவும் வெடித்தது..அந்த வெறுப்புக்கு ஆளானவர்...ராஜாஜி!!
3 comments:
படித்தேன் ரசித்தேன்
super
மிக்க நன்றி
Post a Comment