Tuesday, May 11, 2010

இப்படித்தான் ஆரம்பம் - 21

"சரஸ்வதியின் கையிலுள்ள வீணைபோல் இருக்கிறீர்களே! உங்களை கவனிக்க யாருமில்லையா?"  என்று கவிஞர் கண்ணதாசனிடம் கேட்டவள், அவரிடம் கொஞ்ச நேர உறவுக்காக வந்த பெண்ணொருத்தி. அந்தச் சொல்லே, வசந்தமாளிகை திரைப்படத்தில் "கலைமகள் கைப்பொருளே!உன்னை கவனிக்க ஆளில்லையோ!விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரலில்லையோ" என்ற பல்லவியாய்ப் பூத்தது.
கவிஞர் அத்தகைய பெண்களை அன்புடனும் புரிதலுடனுமே அணுகிவந்திருக்கிறார் என்பது அவருடைய படைப்புகள் வழியாகவும் பாடல்கள்வழியாகவும் நமக்குப் புலப்படுகின்றன.

அவர்பால் இதய அன்பு வைத்து, இன்பம்கொடுத்த பெண்ணொருத்தி இளைய வயதிலேயே இறந்தது குறித்து அவர் எழுதிய இரங்கற்பா ஒன்று ஒப்பற்ற உணர்ச்சிப்படைப்பாய் ஒளிர்கிறது.

நேருவுக்கும், டி,என்.ராஜரத்தினம்பிள்ளைக்கும், பெரியாருக்கும், காமராஜருக்கும், அண்ணாவுக்கும் , கலைவாணருக்கும் ஆகச்சிறந்த இரங்கற்பாக்களை ஆக்கி, தனக்குத்தானே இருந்துபாடிய இரங்கற்பாவையும் எழுதிக்கொண்டகவிஞர், பெயர் தெரியாத அந்தப் பெண்ணுக்காகவும் அந்தரங்க சுத்தியுடன் அழுது எழுதிய அஞ்சலிக் கவிதையின் தலைப்பு, "நான்மட்டும் அறிந்த கதை".

"தைமாத மேகமெனத் தள்ளாடும் பூங்கொடியே
 கையோடு நீயிணைந்தால் கற்பனைகள் ஊறுமடி!

  பொங்குதடந்தோளில் புல்லரித்து வீழ்ந்துவிட்டால் தங்குதடை இல்லாமல் தமிழ்ப்பாடல் தோன்றுமடி!

 வாழைத் தொடையிரண்டில் வசமிழந்த வேளையிலே
ஏழைபோல் தோன்றிடுவேன் என்னதான் விந்தையடி!

 செவ்வாயில் ஒருநிமிடம் ஜீவனுறப் பாய்ந்துவிட்டால்
 தெவ்வாதி தேவருக்கும் தேராத இன்பமடி!

 தொட்டிலிலே பேரன்மார் தூங்குகிற வயதினிலும்
கட்டிலிலே நீகொடுத்த கதையே நினைக்குதடி!

ஊர்பேர் அறியாமல் உயிர்துறந்த பைங்கிளியே
ஊமைமனதுமட்டும் உனைத்தேடி வாடுதடி"   என்றெல்லாம்  எழுதிவிட்டு

"அன்பே உன் ஆன்மா அமைதியுற வேண்டுமென்று
 என்பாடல் ஒன்று எழுதி முடிந்ததடி"  என்று கண்ணீ ர் அஞ்சலிசெலுத்தினார் கவிஞர்.

உரைநடையில், அத்தகைய பெண்களைப்பற்றிச் சொல்கையில், "பொருளாதாரத்தின் பொதுக்குழந்தைகள்" என்றெழுதுவார். தமிழில் பரத்தைமை என்கிற பிரிவு சங்க இலக்கியம்தொட்டுப் பேசப்பட்டிருக்கிறது. சரியான பொருளில் பார்த்தால்,பரத்தையரும் கணிகையரும் வேறு வேறு தகுதிகள் கொண்டவர்கள்.பரத்தையரில்
ஆடல், பாடல் போன்ற கலைகளில் தேர்ந்தவர்களே கணிகையர்கள் என்றழைக்கப்பட்டனர் . ஆனால் பரத்தையருக்கான பொதுச்சொல்லாக
கணிகை என்ற பெயர் வழங்கலாயிற்று. 
 கண்ணதாசன்,மாதவி பற்றிய கவிதையொன்றில், "உன்னைக் கணிகையென்றால் உலகே கணிகைமயம்"என்பார். தகுதியாலும் குண இயல்புகளாலும், மதிக்கத்தக்க இடத்தை  மாதவி பெற்றாள். சிலப்பதிகாரத்தில் மாதவி பற்றிய ஒரு வரி என்னைப்  பெரிதும்  யோசிக்க  வைத்தது. 

"சிறப்பிற் குன்றா செய்கையிற் பொருந்திய பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை" என்பார் இளங்கோவடிகள். பெண்ணுக்கு மெல்லிய தோள்கள்தானே அழகு! "பெருந்தோள் மடந்தை"என்கிறாரே இளங்கோ! அறிஞர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்களிடத்தில் கேட்டேன். "சேக்கிழார்,திருஞான சம்பந்தரை சிறிய பெருந்தகை என்றது போல்தான் இதுவும்" என்றார் அவர். தோள்வலிமை காக்கும் தொழிலின் அடையாளம். தன் நடனத் திறனால் பரிசும் பொன்னும் பெற்று குடும்பத்தைக் காக்கிறாள் மாதவி என்பது கூட அதற்குக் காரணமாயிருக்கலாம்.
நீதிநூல் என்ற அளவில் பரத்தைமையைக் கண்டிக்கத் தலைப்பட்ட வள்ளுவர், சற்று கடுமையாகப் பாடிவிடுகிறார்.
பொருட்பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று"   "என்கிறார். 
பணத்துக்காகப் பொய்யாகத் தழுவும்பெண்களுடன் உறவு  கொள்வது  ,  இருட்டறையில் அனாதைப்பிணத்துடன் உறவு கொள்வதைப் போன்றது என்று கடுமையாக சாடுகிறார் திருவள்ளுவர். அறிவுலகின் நெடும்பரப்பில் வள்ளுவர் எடுத்து வைத்த இந்த வாதத்தை, கவிஞர் கண்ணதாசன்தான் எதிர்கொள்கிறார். அந்தப் பெண்களின் உணர்வுகளுக்கு  முதலிடம் தந்து மாற்றுக்கேள்வி எழுப்புகிறார்:


"தொட்டவுடன் ஒட்டிகொள்ள சட்டிப்பானையா?-வந்த
  தோளுக்கெல்லாம் மாலைபோடக் கோயில்யானையா?" என்கிறார்.

காசு கொடுத்தால் மாலை போடும் கோயில்யானைகளுடன் விலைமகளிரை ஒப்பிடும் விரிந்த உள்ளம் கவிஞருக்கே வரும்.

சூழ்நிலைக்கைதிகளாய் வாழ்விழந்த அந்தப்பெண்களை கவிஞர் புரிதலுடன் அணுகியிருக்கிறார். பரிவுடன் நடத்தியிருக்கிறார். அவரது தனிக்கவிதை ஒன்று திரைப்பாடலாகவும் உலா வந்தது:



"கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம்
 கடைத்தெருவில் நிற்குதடா ஐயோ பாவம்!
 காசிருந்தால் வாங்கலாம் ஐயோ பாவம்!"
இந்தப் பாடலில் விலைமகளிரின் வழக்கறிஞராகவே மாறியிருப்பார் கவிஞர்.

"வண்டு வந்து தேன்குடித்தால் மலருக்குத்தான் தண்டனை
வழுக்கிவிழும் பெண்களுக்கோ சட்டத்திலும் வஞ்சனை"என்பது திரைப்பாடல் வடிவம்.

இதன் மூலமாகிய தன் தனிக்கவிதையில்,
"பணமிருப்போர் தவறுசெய்தால் பாதுகாக்கும் சட்டமே-நீ
வலையைவீசிப் பிடிப்பதெல்லாம் ஏழைகளை மட்டுமே"என்பார் கவிஞர்.

அந்த ஊரில் ஒரு வேசி இருந்தாள்". என்று ஒருவர் கதை எழுதியிருந்தாராம். ஜெயகாந்தன் அதைப் படித்துவிட்டு, "என்னடா எழுதியிருக்கிறான்?அந்த ஊரில் ஒரு பெண் இருந்தாள்.அங்கிருந்த ஆண்களெல்லாம் சேர்ந்து அவளை வேசியாக்கினார்கள்என்றல்லவா எழுதியிருக்க வேண்டும்" என்றாராம்.

கவிஞர், பெண்ணை ஆண்கள் எப்படியெல்லாம் வேசியாக்கினார்கள் என்று பட்டியலிடுவார்.

"குணமிருந்தும் தவறுசெய்வாள் குழந்தைக்காக ஒருத்தி-இந்தக்
கொடுமைசெய்ய உடன்படுவாள் குடும்பம் காக்க ஒருத்தி
 படித்திருந்தும் வேலையின்றிப் பள்ளிகொள்வாள் ஒருத்தி-திரைப்
படத்தொழிலில் ஆசைவைத்து பலியானாள் ஒருத்தி" என்பார்.

கண்ணீரில் மிதக்குதடா கற்பு எனும் ஓடம்-இது
கம்பனுக்கும் வள்ளுவருக்கும் கடவுளுக்கும் பாடம்" என்று முடிக்கும்போது கவிஞரின் கனிவு புலப்படும்.

தப்புத்தாளங்கள் படத்தில்
"நினைவெங்கும் மாங்கல்யம் தாய்மை
 நிதந்தோறும் விளையாட்டு பொம்மை
பொருளாதாரம் செய்த விந்தை-இவள்
பொருள்தாரம் ஆகிவிட்ட சந்தை"என்றெழுதியிருப்பார் கவிஞர்.

விளிம்புநிலை மனிதர்கள் மீது அவருக்கிருந்த அன்பும் அனுதாபமும் இந்தப்  படப்பாடல்களில் வெளிப்படும். எதிர்மறை வாழ்வை ஏற்றுக் கொண்டவன் குரல் இந்தப் படத்தின் பாடல்களில் ஒங்கிக் கேட்கும்.

"படிக்க ஆசவச்சேன் முடியலே
 உழைச்சு பாத்துபுட்டேன் விடியலே 
பொழைக்க வேறுவழி தெரியலே
 நடந்தேன் நான்நெனச்ச வழியிலே...
இதுக்குக் காரணந்தான் யாரு..?
படைச்ச சாமியப்போய் கேளு
இதுக்குப்போய் அலட்டிக்கலாமா..
என்ற பாடலும் தப்புத்தாளங்கள்-வழி தவறிய பாதங்கள் என்ற பாடலும்
விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்கள்.

அந்த நாட்களில், ஜனதா கட்சியில்,தலைப்பாகையும் தாடியுமாய் ராஜ்நாராயணன்  என்ற மனிதர், தான்தான் அடுத்த பிரதமர் என்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பார். அதில் கவிஞர் கண்ணதாசனுக்கிருந்த எரிச்சல், இந்தப் பாடலில் வெளிப்பட்டிருக்கும்

பாராளும் வேஷங்கள் பரதேசிக் கோலங்கள்
விதி-வழி-தினமோடும் ஓடங்கள்

(தொடரும்...)

No comments: