Thursday, May 13, 2010

இப்படித்தான் ஆரம்பம் - 22

நிறம் மாறாத பூக்கள் படம். பாடலுக்கான சூழலை, கவிஞர் கண்ணதாசனிடம் விளக்கினார் இயக்குநர் பாரதிராஜா. "யார் ஹீரோ?" வினவினார் கவிஞர். 'புதுப்பையன்தாண்ணே! ஒண்ணு ரெண்டு படங்களிலே  நடிச்சிருக்கான். "என்றார் பாரதிராஜா. "ஹீரோயின்?" அதுவும் புதுசுதாண்ணே! நம்ம ராதா அண்ணன் பொண்ணு..நான்தான் அறிமுகப்படுத்தினேன். இந்தப்படத்திலே  வில்லன் கூட புதுசுதாண்ணே" என்றார். கவிஞர்  முகம்  மலர்ந்தது. "அடேடே! எல்லாருமே புதுசா! வரட்டும் வரட்டும்! நல்லா வரட்டும்.!" மனங்கனிந்த  அவருடைய வாழ்த்து மங்கலமான பல்லவியாகவும் மலர்ந்தது..


"ஆயிரம் மலர்களே மலருங்கள்!அமுத கீதம் பாடுங்கள்!ஆடுங்கள்!காதல்
தேவன் காவியம்- நீங்களோ..நாங்களோ..நெருங்கி வந்து சொல்லுங்கள்!சொல்லுங்கள்!"

கவிஞரின் வாழ்த்தோ வசையோ பலிக்கும் என்கிற நம்பிக்கை, அவர் காலத்தில் பரவலாக இருந்தது. அவருக்கு வாடகைக்குக் கொடுப்பதாக வாக்களித்த ஸ்டூடியோ அதிபர், கூடுதல் பணம் வாங்கிக்கொண்டு வேறொருவருக்கு வாடகைக்கு விட்டாராம். கோபத்தில் கவிஞர் 'உன் ஸ்டூடியோ தீப்பிடிச்சு சாம்பலாப்போகும்' என்று ஏசிவிட்டுத் திரும்ப, அவர்   வீடு சென்று சேரும்முன் மின்கசிவினால் அந்த ஃபுளோர் தீப்பிடித்ததாம். "கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்"என்று எழுதியவர் கவிஞர்.

காவியங்களில்,பாத்திரங்களின் குரலாக இன்றி, கதைப்போக்கு பற்றியோ, பொதுச்செய்தியாகவோ, காவியகர்த்தாவே சில கருத்துக்களைச் சொல்வதுண்டு. இதற்குக் கவிக்கூற்று என்று பெயர். திரைப்படங்களில், பாத்திரங்களின் குரலாக இல்லாமல் பின்னணியிலோ அல்லது  மையப்பாத்திரங்களுக்குத் தொடர்பில்லாத மூன்றாம் குரலாகவோ ஒலிக்கும் கவிஞர் கண்ணதாசனின் பல பாடல்கள் தனித்தன்மை வாய்ந்தவை.

கற்பனைக்களஞ்சியம் என்றழைக்கப்பட்ட அருளாளர், துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். நால்வர் நான்மணி மாலை உள்ளிட்ட அற்புதமான இலக்கியங்களைப் படைத்திருக்கிறார். நன்னெறி என்னும் நூலில், அருமையான  வெண்பாக்கள் இயற்றியுள்ளார். அவற்றில் ஒன்று. பலவீனமானவர்கள், தங்களினும் பலமடங்கு வலிமை வாய்ந்தவர்களைத் துணையாகக் கொண்டுவிட்டால், தங்களின் பலம்பொருந்திய எதிரிகளைப் பார்த்து அஞ்ச மாட்டார்கள் என்ற கருத்தை சொல்ல வந்த அவர், அதற்கோர் உதாரணத்தையும் சொல்கிறார். கருடனின் நிழல்பட்டாலே கலங்கக்கூடியது பாம்பு. ஆனால்,சிவபெருமானின் தலையில் அமர்ந்திருக்கும் துணிவில் கருடனைக்கண்டு அஞ்சாதாம்!!

மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தமைத்தாம் மருவில்-பலியேல்
கடவுள் அவிர்சடைமேற் கட்செவியஞ் சாதே
படர்நிறைப் புள்ளரசைப் பார்த்து.
இதுவே நாட்டார் வழக்கில், சிவபெருமான் தலையில் இருந்த பாம்பு கருடா சவுக்கியமா, என்று கேட்டதாம். என்று கதையாக வழங்கி வருகிறது.


போதிய சம்பாத்தியமில்லாமல் தாழ்வு மனப்பான்மையில் தவிக்கிற கணவனுக்கும் மனைவிக்கும் நடுவே நிகழும் மனப்போராட்டங்களைப்பாட இந்தப் பழம்பாடலின் பொறியைப் பல்லவியாக்கியிருப்பார் கவிஞர்

"பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது-கருடா சவுக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே
கருடன் சொன்னது-அதில் அர்த்தமுள்ளது".இந்தப் பாடலில் கவிஞரே திரையில் தோன்றி நடிப்பார். டி.எம்.எஸ்.பாடியிருப்பார். கவிஞருக்கு திரைப்படத்தில் சொந்தக்குரலில் பாடுகிற ஆசை இருந்ததாம். இசையமைப்பாளர் ஒருவர், கவிஞரிடம், அவர் குரல் எத்தனை கட்டை என்று கேட்கிற அர்த்தத்தில், "உங்களுக்கு என்ன கட்டை?' என்று கேட்க, அருகிலிருந்த கலைஞர், "புத்தி..புத்திதான் கட்டை" என்று சொல்லிச் சிரித்தாராம். சூரியகாந்தியிலும் இரத்தத்திலகத்திலும் மேடையில் தோன்றி தன் பாடலுக்குத் தானே வாயசைத்திருப்பார் கவிஞர்.

"உயர்ந்த நிலையில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்-உன்
நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும்கூட மிதிக்கும்" என்றும்

"வண்டி ஓட சக்கரங்கள் இரண்டுமட்டும் வேண்டும்-அந்த
இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்"
என்றும் அபாரமான வரிகள் அந்தப்பாடலில் உண்டு. அதேநேரம், கணவனின் நிலையில் நின்றுபாடும்போது அவனுடைய தாழ்வு மனப்பான்மையையும் உளவியல் ரீதியாய் அலசுவார் கவிஞர். பொதுவாக ஆணை அகாயம் என்றும் பெண்ணை நிலவு என்றும் சொன்னால் ஆணாதிக்க உள்ளங்கள் ஆனந்தம் அடையும். ஆனால் கவிஞரோ இதில் பெண்ணை ஆகாயமாக்கி ஆணை நிலவாக்குகிறார். நிலவு போல் தேய்ந்து வளரும் நிலையில்லாத மனம் காரணமாய் நாயகனுக்கு இந்த உவமை பொருந்துகிறது. சொல்லப்போனால் கதாநாயகனின் பிரச்சினை தன் மனைவியின் வளர்ச்சிதான். மற்றபடி இவன் தேய்வதற்குக் காரணமேயில்லை.




நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே.இதில் நீ-நான்,  நிலவு-வான் என்று நிரல் நிரையணியை அழகாகப் பயன்படுத்துகிறார் கவிஞர். நான்நிலவுபோலத் தேய்ந்துவ்ந்தேன் நீ வளர்ந்ததாலே. பிரச்சினையின் மையத்தைப் பாடலிலேயேதொட்டுக் காட்டிவிடுகிறார் கவிஞர்.

திரைப்பாடல்களில் பெருமளவு விரும்பப்பட்ட பாடல்களில் ஒன்று, "மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா" என்ற பாடல். ஒவ்வொரு மனிதனும், தன்னுடைய துன்பத்தையே உலகின் தலையாய துன்பம் என்று கருதுவான். அவனுடைய துன்பம் ஒன்றுமேயில்லை என்ற உணர்வை உருவாக்குவது மிகக் கடினம்.முதல் சரணத்திலேயே அதை வெற்றிகரமாக நிகழ்த்திவிடுகிறார் கவிஞர்.

வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடிநின்றால் ஓடுவதில்லை

இன்றைய நவீன நிர்வாகவியல், what next attitude என்பதை சமீபகாலமாய் வலியுறுத்துகிறது.அடைந்த பின்னடைவிலேயே நின்றுவிடாமல் அடுத்தது என்ன என்று நகர்கிற மனோபாவத்தை இந்தப் பாடல் வெகு இயல்பாக வலியுறுத்துகிறது. தோல்வி நேர்ந்தாலும் எதிர்காலத்தில் எட்ட நினைக்கும் வெற்றிகளை மனதில் கற்பனை செய்து கொள்வதை, ஆட்டோ சஜஷன் என்கிறார்கள். அந்தக் கற்பனை  எப்படியிருக்க வேண்டும்?கவிஞரைக் கேளுங்கள்..

 ஏழை மனதை மாளிகையாக்கி
 இரவும் பகலும் காவியம் பாடு
 நாளைய பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு என்கிறார்.

அடுத்தவனின் துன்பம் தன்னுடையதைவிடப் பெரிதாக இருந்தால் அது மகிழ்ச்சிக்குரிய விஷயமில்லை. ஆனால் நம்முடைய நிலை எவ்வளவோ தேவலை என்று கருதினாலேயே நம்பிக்கையுடன் அடுத்த முயற்சியைத் தொடங்கலாம். முந்நூற்று சொச்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த குமரகுருபரர், "தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென்று அகமகிழ்க" என்றார்.

கவிஞர் அதனை உள்வாங்கிக் கொண்டு,
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்று பாடுகிறார்.

படத்தின் கதையைக் கருத்தில் கொள்ள அவசியமேயில்லாமல் பொதுவில் நின்று பாடுகிற போதும் நம்மை ஈர்க்கிற பாடல்களில் இவையும்  சில. அதே நேரம், கதைச்சூழலோடு நகமும் சதையுமாய் பொருந்துகிற பல பாடல்களை கவிக்கூற்றாக கவிஞர் எழுதியுள்ளார். அவற்றில்  முக்கியமானது, 47 நாட்கள் படத்தில் வரும் மான்கண்ட சொர்க்கங்கள் என்ற பாடல். அந்தக்காலத்தில்அமெரிக்க மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்து  கொண்டு  போய் வஞ்சிக்கபடுகிற கட்டுப்பெட்டியான பெண்ணின்  நிலை  பற்றிய  சிவசங்கரியின் கதை அது. அந்தப்  பெண்ணின்  மனநிலையை  நான்கு  சரணங்கள் கொண்ட பாடலில்  அற்புதமாகப் படம் பிடித்திருப்பார் கவிஞர்.




கண்ணீரில் நீராடக் கடல்தாண்டி வந்தாளே பொன்மங்கை
என்ற ஒற்றை வரியே போதுமானது.

தாம்பத்ய சங்கீதத்தின் விளைவாய் கரு உருவாகிவிடுகிறது.சந்தோஷம் தந்த தாய்மையே அவளை சஞ்சலம் கொள்ள வைக்கிறது.

ஆசையில் ஒருநாளில் பாடிய ஒருபாட்டில்
தாயென ஆனோமே சேயினைக் கொண்டோமே
ஏனிந்த சேயென்று தாளாத நோய்கொண்டாள் இப்போது
பாசத்தில் நீராடி பந்தத்தில் போராடி
வேஷத்தைத் தொடர்வாளா வேதனை பெறுவாளா
ஊரில்லை உறவில்லை தனியாக நின்றாளே பூமாது

 என்ற சித்தரிப்பு, ஆயிரம் காமராக்களின் காரியத்தைச் செய்துவிடுகிறது.
திருமணமாகிப் போகிற பெண் , தாய்வீட்டின் குலதெய்வ வழிபாட்டைக்கூட
துறந்து விடுகிறாள். அந்நிய நாட்டில் மொழி தெரியாத நிலையில் கடும் சீதோஷ்ணமும் அவளை வருத்துகிறது.தாய்வீட்டு நினைவும் தாய்நாட்டு நினைவும் அவளுக்கு எழுகிறது.துறந்த தெய்வங்கள் துணைக்கு வருமா என்று கவிஞர் கேட்கிறார்.

தன்வழி செல்கின்றாள் சஞ்சலம் கொள்கின்றாள்
எவ்விடம் செல்வாளோ எவரிடம் சொல்வாளோ
எங்கெங்கும் மேகங்கள் எங்கெங்கும் பனிமூட்டம் இப்போது
இந்தியத் தாய்நாட்டை எண்ணுகிறாள் பாவை
சென்றிட வழியில்லை தேம்புகிறாள் நின்று
தாய்வீட்டு தெய்வங்கள் துணையாக வாராதா இப்போது..

47 நாட்கள் நாவலையும் படிக்காமல். படத்தையும் பார்க்காமல் விட்டவர்களுக்கு இந்த ஒரு பாடல் போதும். படமும் நாவலும் காட்டாத காட்சிகள் மனக்கண்களில் நிழலாடும்.

(தொடரும்...)

1 comment:

தனி காட்டு ராஜா said...

நிகரில்லா கவிஞர் ........
அமுத கீதம் பாடியவர் மட்டுமல்ல....அமுத பானம் பருகி வாழ்கையை முழுதாக வாழ்ந்தவர்