தூங்க விடாதொரு நேரம்-அவள்
ஆளும் இரவினில் ஆடும் சதங்கைகள்
ஆயிரம்- செவிகளின் ஓரம்
நாளில் படர்ந்திடும் மூல இருளெங்கள்
நாயகி அவளது கோலம்-மலர்த்
தாள்கள் அசைவினில் தாவி யெழுந்திடும்
தந்திமி தோம்திமி தாளம்
தாயவள் அள்ளித் தோள்களில் இடுவாள்
தணலும் குளிரும் தழுவும்
சேயெனக் கொஞ்சிச் சிறுமுத்தம் இடுவாள்
செய்வினை எல்லாம் நழுவும்
பேயென சினந்து பூமியில் எறிவாள்
பதட்டத்தில் உயிரும் உலரும்
மாயையின் கருவில் மறுபடி இடுவாள்
மறுநொடி பவவினை தொடரும்
பிள்ளையின் கைகளில் பொம்மைகள் தந்தால்
பேசாதிருக்குமே பாவம்
பிள்ளைகள் தமையே பொம்மையாய் ஆட்டும்
பிச்சியின் தாய்மை வேகம்
வெள்ளமாய்ப் பொழிபவள் வெய்யிலாய்த் திரிபவள்
வேடிக்கை காட்டிடும் கோலம்
தள்ளுவாள் அள்ளுவாள் தேவியின் தாய்மைதான்
விசித்திர வித்தையின் ஜாலம்
சூரிய விழுதினில் தொட்டிலைக் கட்டியே
சூனியம் எங்கணும் அசைப்பாள்
வீரிய நகங்களில் பிள்ளையைக் கிள்ளியே
வீறிடல் கண்டவள் நகைப்பாள்
நீரில் நெருப்பினில் வானில் ஒளிந்தந்த
நீலி அழவிட்டுச் சிரிப்பாள்
காரியக் காரிதன் பிள்ளையை வினைகளின்
காற்று படாவண்ணம் அணைப்பாள்
ஊட்டி வளர்ப்பினும் வாட்டி வதைப்பினும்
உயிர்நிழல் அவளன்றி யாரோ
வீட்டினில் சேர்க்கிற வரைநம்மை அதட்டி
வழியெங்கும் வருபவள் யாரோ
மூட்டிய நெருப்பினில் முழுவினை எரிப்பவள்
மூலத்தை உணர்ந்தவர் யாரோ
கூட்டினில் உயிரினைப் பூட்டினள் எமன்வந்து
சாவியைத் தொடவிடுவாளோ
No comments:
Post a Comment