காரிருள் நிறத்துக் காரிகை ஒருத்தி
காலடி சலங்கை கேட்கும்-அவள்
மூரி நிமிர்ந்து முதலடி வைத்ததும்
மூளும் வினைத்தொடர் தீரும்
கூரிய முனையினில் குருதியின் சிவப்பினில்
குங்கும சூலம் ஒளிரும்
மாரி அவள்வரும் வேளையில் தீநிறம்
மேலைத் திசையினில் மலரும்
ஒன்பது இரவுகள் ஒவ்வொரு வீட்டிலும்
உலவிட வருவாள் தேவி
அன்பினில் குழைபவர் அகந்தனில் ஒளியாய்
அவள்நிலை பெறுவாள் மேவி
முன்புசெய் தவத்தின் முழுவரமாக
முற்றத்தில் கொலுவில் அமர்வாள்
இன்பமும் கல்வியும் செல்வமும் எல்லாம்
எண்ணிய விதமே தருவாள்
கடம்ப வனத்தினுள் கொஞ்சிடும் இசையாய்
கானங்கள் ஆள்பவள் அவளே
உடம்பெனும் வனத்தினுள் உயிர்தடுமாற
உதவிக்கு வருவதும் அவளே
நடம்புரி ஈசன் இடங்கொளும் நங்கை
நம்பிய யாருக்கும் அருள்வாள்
திடம்தரும் துணையாய் திசைகளில் ஒளியாய்
தினம்தினம் கண்முன் மலர்வாள்
வந்தவள் தானாய் வீட்டுக்குள் நுழைவாள்
வடிவுகள் பலப்பல கொள்வாள்
பந்தங்கள் கொடுப்பாள் பந்தங்கள் அறுப்பாள்
பலப்பல லீலைகள் செய்வாள்
சந்ததம் அவளே சொந்தமென்றிருந்தால்
சக்திதன் ஸ்ரீபுரம் அழைப்பாள்
தந்ததும் கொண்டதும் தெரிந்திடா வண்ணம்
வீட்டுக் கணக்குகள் முடிப்பாள்
No comments:
Post a Comment