நாயகி ஆளுகிறாள்

திருக்கடவூர் எனக்குத் தாய்வழிப்பாட்டனாரின் ஊர் . எங்கே இருந்தாலும்
கனவிலும் நனவிலும் அந்த ஊரோ வீடோ மின்னிக் கொண்டிருக்கும் வைத்தீசுவரன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு முன்னால் ஏடெடுத்துப் பார்த்த போது கடந்த பிறவியில் திருக்கடவூரில் நான் பிறந்ததாக
வந்தது. இந்த முறை திருக்கடவூருக்குப் போய்க் கொண்டிருந்த போது அந்த
சம்பவம் நினைவுக்கு வந்தது)
எத்தனை திசைகள் போனால் என்ன
இதுதான் என்வீடு
வித்தகி ஆள்கிற கடவூர் என்தலம்
என்றது பனையேடு
நித்தமும் நித்தமும் நினைவினில் மின்னும்
நாயகி அவள்தோடு
எத்தனை உயரங்கள்!எத்தனை துயரங்கள்!
எல்லாம் அவளோடு!

பால்கொண்ட மழலைப் பருவத்திலிருந்தே
பார்த்தது அவள்முகம்தான்
நூல்கொண்ட அறிவில் நூபுர ஒலியுடன்
நுழைந்தது அவள்பதம்தான்
வேல்கொண்டு வினைகள் சாடிய பொழுதும்
விழுந்தது அவளிடம்தான்
கால்கொண்டு நடக்கும் காரியம் அவளது
கருணையில் நிகழ்வதுதான்

நேர்வழி நடக்கையில் வீசிடும் தென்றலில்
நிச்சயம் இருக்கின்றாள்
யாரறிவாரென இழிசெயல் புரிகையில்
இடறியும் விடுகின்றாள்
தேர்வடம் பற்றிய பிஞ்சு விரல்களைத்
தாய்மனம் மறந்திடுமோ
கார்முகில் நிறத்துக் காருண்ய வடிவம்
கனவிலும் நிறைந்திடுமோ

கோபுர பொம்மையை வேடிக்கை காட்டிக்
கோயிலில் நுழைய வைத்தாள்
தீபத்தின் சுடரில் திருமுகம் காட்டி
தவிப்புகள் அடங்கவைத்தாள்
ஆபத்தென்றுள்ளம் அழும்பொழுதெல்லாம்
அவள்வழி காட்டுகிறாள்
நாபியி லிருந்து எழுகிற குரலை
நாயகி ஆளுகிறாள்