Thursday, February 16, 2012

நாளை வெல்லும் நம்காலம்

பாண்டவர்களுடன் சற்குரு....
(ஈஷா யோகா மையத்தில் சத்குரு அவர்கள் மகாபாரதம் என்னும் நிகழ்ச்சியை பிப்ரவரி 12 முதல் 18 வரை நிகழ்த்தினார்கள். நிறைய இழப்புகளுக்கு நடுவிலும் நம்பிக்கை இழக்காத பாண்டவர்கள் மனநிலை குறித்து எழுதித் தந்த பாடல் இது. இசையமைத்துப் பாடியவர்கள் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர்)  

நாளை வெல்லும் நம்காலம்

அரண்மனை நிழலில் இருந்தாலென்ன
  மரங்களின் நடுவே துயின்றாலென்ன
  அன்னையின் மடியே ஆதாரம்
  அண்ணனின் சொல்லே நால்வேதம்

  ராஜ்ஜியம் நம்வசம் இருந்தால் என்ன?
    ஆரண்ய வாசம் நடந்தால் என்ன?
  காருண்யன் கண்ணன் நமதுபக்கம்
 நல்லவர் நிழலே நமதுசொர்க்கம்

  உறவுகள் பகையாய் ஆனால் என்ன?
    வஞ்சனை நம்மை சூழ்ந்தால் என்ன?
    இருண்ட காலங்கள் விடிந்துவிடும்
  த்ரௌபதி சபதம் வென்றுவிடும்

ஈஷா மகாபாரதம் நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பஞ்சபாண்டவர் மற்றும் த்ரௌபதியின் சிலைகள்

சகுனியின் பகடை ஜெயித்தால் என்ன?
    தர்மன்  எல்லாம் தொலைத்தால் என்ன?
      நாளை விடியும் நம்காலம்
  நியாயம் கேட்கும் காண்டீபம்

   நடக்கும் தூரம் வளர்ந்தால் என்ன?
       அரக்கு மாளிகை எரிந்தால் என்ன?
       நடக்கப் போகுது ஒருமாற்றம்
   நிகழப்போகுது குருஷேத்ரம்

Friday, February 10, 2012

சமயபுரத்தழகி

 
வாழ்க்கை வந்ததும் என்னவிதம்-அதில்
       வருபவை என்ன ரகம்?
கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும்-பதில்
       கொடுப்பது சமயபுரம்!
பார்க்கத் திகட்டாப் பேரழகில் -அன்னை
     பிரியம் வளர்க்குமிடம்
தீர்க்க முடியா வினைகளெலாம்-அவள்
    தீயினில் எரியுமிடம்
 
கன்னங் கரியவள் திருவிழிகள்- நமைக்
 காத்திடும் காலமெலாம்
மின்னும்  பார்வையில் மலர்ந்ததுதான்- அந்த 
விசும்பின் நீலமெலாம்
இன்னும் எதுவரை போவதென்றே-மனம்
எண்ணிடும் பொழுதுகளில்
அன்னையின் திருக்கரம் வழிகாட்டும்-அங்கே
ஆனந்தம் காத்திருக்கும்
 
கோபத்தில் இருப்பதைப் போலிருக்கும்-அவள்
கோலத்தைக் காண்கையிலே
ஆபத்தும் சோர்வும் தொடுவதில்லை -அவள்
அருள்நம்மை ஆள்கையிலே
ரூபங்கள் ஆயிரம் அவளெடுப்பாள் வந்து
காக்கிற வேளையிலே
தீபத்தின் சுடர்போல் தமிழ்கொடுப்பாள்-அவள்
திருமுகம் காண்கையிலே
 
சித்துகள் ஆயிரம் செய்பவளாம்-அந்த
சமய புரத்தழகி
வித்தகம் காட்டும் வேதியளாம்-அந்த
வண்ணச் சிரிப்பழகி
தத்துவ வாதங்கள் கடந்தவளாம்-அன்புத்
தாயெங்கள் மகமாயி
பக்தி மணக்கும் குடிசையெல்லாம்-வந்து
பேர்சொல்லும் கருமாரி

Sunday, February 5, 2012

என்ன கொடுமை இது.....

திருஞானசம்பந்தர் குறித்து 700 பக்கங்களுக்கொரு நாவல் வெளிவந்துள்ளது. பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்த  நாவலை  திரு.சோலை  சுந்தரப்பெருமாள்  எழுதியுள்ளார். தாண்டவபுரம் நாவலைப் படித்தபின்னர் இந்த மின்மடலை எழுதுகிறேன். திருஞானசம்பந்தரை இதைவிடக் கேவலமாக சித்தரித்து எழுத முடியாது. ஒன்றிரண்டு பகுதிகளை சுட்டிக் காட்டுகிறேன்.

சேக்கிழார் காட்டும் திருஞானசம்பந்தர் 3/4 வயதுக்குள்ளாக திருநனிபள்ளி செல்கிறார். திரு.சோலை சுந்தரப் பெருமாள் எழுத்திலோ பதினாறு வயது கட்டிளங்காளையாகச் செல்கிறார். திருநனிபள்ளியில் தாய்மாமன் மகளின் அழகு அவரை சலனப்படுத்துகிறது.உமா திரிபுரசுந்தரி என்று நாவலாசிரியர் உருவாக்கி உலவ விட்டிருக்கும் அந்த மாமன் மகள் முகமும் அழகும்  திருஞானசம்பந்தர் நினைவில் அடிக்கடி வந்து போகிறதாம்.யாத்திரையில் இரவு தனித்துப் படுத்திருக்கும் வேளைகளில் அந்த நினைவில் அவதியுறுகிறாராம்

"அவர் மனசும் உடம்பும் ஒரே திக்கில் நெளுநெளுப்பைத் தூண்டிக் கொண்டிருந்தன.அதில் இருந்து விடுபட தன்னைத் தயார்படுத்திக் கொள்வதில் ஈடுபட்டு இருந்தார்"

"எப்போது அசந்து உறங்கிப் போனாரோ அவருக்கே நினைவில்லை. அவர்  உடம்பிலும் மனசிலும் ஏறி முறுகிக் கிடந்த நெளுநெளுப்பு முற்றிலும் வடிந்து போய் சாசுவதமாய் உணர்ந்தார்."
(பக்கம் 320)

"இடுப்பில் இருந்த உத்தரியத்தில் திட்டுதிட்டாய் படிந்திருந்த கொழகொழப்பு இப்போது காய்ந்து முடமுடப்பாக ஆகியிருந்தது. அதிலிருந்து வெளிப்படும் மெல்லிதான இனம் புரிந்து கொள்ளக் கூடிய அம்மணத்தை தன்னோடு நிழலாக இருக்கும் சரணாலயரோ யாழ்ப்பாணரோ உணர்ந்துவிடக் கூடாது என்ற  பரபரப்பில் எழுந்தார்"
(பக்கம்-321)

இவை திரு.சோலை சுந்தரப் பெருமாளின் பேனா சிந்திய துளிகள்.

திருஞானசம்பந்தரின் பாடல்களைப் படியெடுக்கும் சம்பந்தச் சரணாலயரும் இளம் கணிகையுடன் சுகித்துக் கிடந்தவராகவே சித்தரிக்கப்படுகிறார்.

திருஞானசம்பந்தரை,தன்னை வழிபட வரும் பெண்களின் வாளிப்பானஉடலை நோட்டமிடுபவராகவும் சித்தரிக்கும் திரு.சோலை சுந்தரப் பெருமாள் அவருக்கும் மனோன்மணிக்கும் இருந்த உறவின் விளைவாய் ஒரு குழந்தையும் பிறந்ததாய் மனம் போன போக்கில் எழுதுகிறார்.

திருஞானசம்பந்தரின் திருமணத்தில் தீவைத்தவர்கள் சமணர்கள் என்ற குறிப்புடன் இந்நாவல் முடிகிறது.இதே போன்ற முடிவை திரு.அருணனும் தன்னுடைய நிழல்தரா மரங்கள் நாவலில் எழுதியிருக்கிறார்.

ஆனால் திருஞானசம்பந்தரை மிகக் கேவலமாக சித்தரிக்கும் திரு. சோலை சுந்தரப்பெருமாள் நம் கடும் கண்டனத்திற்குரியவர்