Wednesday, December 31, 2014

பேச்சுப் பேச்சென்ன....பெரும்பூனை வந்தக்கால்....

 
குயிலிசை கேட்கக் கூடிய கூட்டம்
வெய்யிலில் மழையில் வளர்ந்தது கண்டு
கூண்டுக்குள்ளே கிடந்த கிளியோ
குய்யோ முறையோ எனக் கத்திற்று
மனனம் செய்தது மறந்து தொலைக்க
கவனம் சிதறிக் கிளி அலறிற்று;

மனப்பா டக்கிளி மறதி தொடர்ந்தால்
தினப்பா டுக்கே திண்டாட்டம் என்பதால்
தளர்ச்சியை மறைக்கத் திட்டம் பிறந்தது
'புரட்சிக் கிளி'யென பட்டம் கொடுத்தனர்
புரட்டுக் கிளியைப் புலவர் என்றனர்

குயில்போல் சுயமாய் கீதம் வராததால்
குயிலைப் பழிக்க கிளிகிளம்பியது ;
தூக்கி விடச்சில காக்கைகள் கிடைத்தன
கிளிகூடமைத்து கத்திய மரங்களில்
கிளையுதிர் காலம் ;அய்யோ பாவம்;

கச்சை கட்டிக் கிளம்பிய காக்கைகள்
இச்-சகம் முழுக்க கிளியின் இடமென
இச்சகம் பேசியே ஏற்றி விட்டன; 
மெச்சி எல்லோரும் மதித்திடவேண்டி
கட்சி கட்டிக் கிளம்பினர் பலரும்;

பச்சைச் சிறகின் இறகொன்றைப் பிடுங்கி
காது குடைந்தால் வேதஞானம்
வளரும் என்றோர் அண்டங் காக்கை
உளறி வைத்ததில் ஊரே திரண்டது
ஏச்சுப் பேச்சில் எந்நேரமும் முழு
மூச்சாய் இருந்த கிளியின் சிறகை
ஊர்ச்சிறு வர்களும் பிடுங்கத் தொடங்க
கீச்கீச் என்று கதறிற்று கிளியே!

Monday, December 22, 2014

பனிபோல் இறங்கும் கவிதைகள்-கனிமொழி.ஜி.யின் மழை நடந்தோடிய நெகிழ்நிலம்

அகழும் பொழுதும் நெகிழும் இயல்பு கொண்டது நிலம். அதுவும் மழையேந்திய நிலமென்றால் கேட்கவே  வேண்டாம்.
மழைக்கும் நிலத்துக்குமான உறவு நுட்பமானது.மழை வரும் முன்பே மலர்ந்து, வாசனை பரப்பி, விழும் மழைத்துளியில் திடநிலை கரைந்து நிலம் குழைகிறபோது 'சார்ந்ததன் வண்ணமாதல்" நிலத்தின் இயல்பா நீரின் இயல்பா என்கிற கேள்வி எழும்.

வாழ்வின் நுண்கணங்களுக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிற மனம்,அத்தகைய நிலம்தான். கனிமொழி.ஜி.யின் கவிதை நூலாகிய "மழை நடந்தோடிய நெகிழ்நிலம்"அத்தகைய நுண்கணங்களில் மலர்ந்து விகசிக்கும் கவிதைகளைக் கொண்டது.

காரைக்கால் அம்மை சிவனைக் கண்டு,'நீ சுடலையிலாடப் போவதெல்லாம் சரி.ஆனால் உமையை உன் இடப்பகுதியில் வைத்தபடி போகாதே.சிறு பெண். பயந்துவிடப் போகிறாள்''என்று தாய்மை ததும்பப் பாடியதை தமிழ் தன் பெட்டகத்தில் வைத்திருக்க, கனிமொழி ஜி,காட்டுகிற சிவன்
ஒரு புதிய பரிமாணத்தில் அசைகிறான்.

"எரிந்தடங்கி சற்றும் கணப்பற்ற சாம்பலின் மீது
மெல்ல நளிநடம் ஆடுகிறான் எம் சிவன்"

இது களிநடம் அல்ல. ஊர்த்துவ நடமும் அல்ல.நளி நடம்.அதுவும் எரிந்தடங்கி சற்றும் கணப்பற்ற சாம்பலின் மீது தொடங்குகிற நடனத்தின் தொடக்க நிலை.

ஆன்மீக அடிப்படையில் சொல்வதென்றால் ஊழி முடிந்து மற்றொரு பிரபஞ்சம் தொடங்கும் நிலையிலான நடம். கனிமொழி.ஜி. இந்தப் பிரபஞ்சத்தில் எத்தகைய மனிதர்களை குடியமர்த்த விரும்புகிறார் என்பது நான் மேற்கோள் காட்டிய வரிகளுக்கு முந்தைய வரிகளில் பதிவாகியிருக்கிறது.


'' நகங்களும் சுரண்டலும் தமக்கில்லாதவரை
  கீழ்த்தாடை தட்டி விரல்களை முத்தமிட்டுக் கொள்கிறேன்".


அதற்கு முந்தைய வரிகளில் காட்டப்படுகிற மனிதர்கள் அழிந்து போன பிரபஞ்சத்தின் சுரண்டல் மனிதர்கள். பிறர் பொருள் பறித்து கடவுளுடன் பங்கிடுபவர்கள்.பூக்களின் சூலில் வாள் பாய்ச்சுபவர்கள்.போதைக்குத் 
துணையாய் பிறர் உழைப்பின் உதிரத்தைத் தொட்டு விரல் சூப்புபவர்கள்.

இவர்கள் எரிந்தடங்கியபிரபஞ்சத்தின் கணப்பற்ற சாம்பலில் உயிர்த்தெழும் மனிதர்களுக்கு நகங்களில்லை.அவர்கள் மனங்களில் சுரண்டலில்லை. அங்கிருந்து தன் புதிய சிருஷ்டி நடனத்தைத் தொடங்குகிறான் சிவன் என்பதாக இந்தத் தொகுப்பின் முதல் கவிதையிலிருந்து புரிந்து கொள்கிறேன்.

மழையோடிய நெகிழ்நிலம் போன்ற மனம் வாய்க்கப் பெறுமேல் அந்த மனதில் மரண பயம் இருக்காது. பொதுவாக மூத்து முதிர்ந்து வாழ்வின் விளிம்பில் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் போதுதான் அந்தப் பக்குவம் இருக்கும் .

கொலை தற்கொலை போன்ற காரணங்களால் நிகழும் மரணத்தில் பதட்டம் இருக்கும் அச்சம் இருக்கும். நோயால்  துன்புற்று நேரும் மரணத்திற்கும் அதே நிலைதான்."அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில்லாதபடி" என்கிறான் மகாகவி பாரதி.


ஆனால் கனிமொழி காட்டும் ஒரு மரணம் ,கொலை. ஒரே உயிரைக் கொல்வதற்கான இரண்டு எத்தனங்கள் வழி நிகழும்  கொலை. சாக்ரடீசுக்கு தந்தது போல் கையில் குவளை நிறைய நஞ்சைத் தந்து அதை கைகளில் வைத்திருக்கும் போதே முதுகில் குறுவாள் பாய்ச்சுகிற கொலை.

ஆனால் ஆன்மீகம் தொடர்ந்து வலியுறுத்தும் ''ஏற்கும் நிலை''
கனிந்ததால் இங்கே இந்த உயிர் உடனே புறப்படத் தயாராகிறது.அந்த தயார்நிலையை எழுதுகிறார் கனிமொழி.

"வஞ்சம் பின் முதுகில்வாளைச் செலுத்திய போது
கைகளில் வருடிக் கொண்டிருந்த வெண்புறாவை
பறக்க விடுகிறேன்
இருகைகளாலும் நஞ்சுக் கோப்பையை
முதல்நிமிட சிசுவென கவனமாய் ஏந்துகிறேன்"


இது பெயக்கண்டும் நஞ்சுண்ணும்  நாகரீகம். நஞ்சுண்டு அமைய முடியாதென அறிந்தும் அருந்தும் அதிநாகரீகம்.அதன்பின் ஏற்படுவது மரணமல்ல.சமாதி. முழு விழிப்புடன் தன்னையே மரணத்திற்கு ஒப்புத் தந்து,அதன் வழியே தீர்ந்து போதல். ஆங்கிலத்தில்  No more என்று சொல்வதன் உண்மையான பொருளில் இல்லாது போதல்.

"மெல்லக் கண்களை மூடிக் கொண்ட போது
கொஞ்சமிருந்த வெளிச்சமும் போய்
வழுவழுப்பான இருள் விழிகளுக்குள் உருளுகிறது...
புருவமத்தி சுடர் அகன்று முன் நகர்கிறது...
எழுந்து தொடரும் நான்..."


கனிமொழி.ஜி.அவர்களை நான் ஒருமுறை  மட்டுமே சந்தித்திருக்கிறேன்.அவருடைய ஆன்மீகப் பின்புலத்தை நான் அறியேன்.ஆனால் இது ஆக்ஞை வழியே உடலை விட்டு உயிர் புறப்படும் தன்மையைச் சொல்கிறது. இது ஆன்மீகத்தில் மிகவும் உயர்ந்த நிலை.
அடுத்த வரியில்தான் இல்லாது போதலை மிகவும் கவித்துவமாக வெளிப்படுத்துகிறார் கனிமொழி.ஜி


"எழுந்து தொடரும் நான்....
புயற்காற்றை எதிர்கொள்ளும் மணற்சிற்பமென
வழியெங்கும் கரைந்து கொண்டே போகிறேன்...
மரணத்தின் பாதை அதற்குள் முடிவுற்றிருந்தது...
இப்பெருவெளி குறித்து
என்னிடம் திகைப்பேதுமில்லை...
இப்போது ஏதுமற்ற வெற்றிடத்தில்
ஏதுமற்று கலக்கிறேன்.
ஏதுமற்ற நான்." (ப;4-5)


கீழைத்தேய ஞானமரபின் கீற்றாக இக்கவிதையை காண்கிறேன். மறு பிறப்பற்ற நிலையிலேயே மரணத்தின் பாதை முடிவுறும்.பிறவிப் பெருங்கடல் கடக்கும் அனுபவம் கவிதையாய் மலர்ந்திருப்பது அவ்வளவு ஆசுவாசமாய் இருக்கிறது.

மனநலம் பிறழ்ந்தவன் பற்றி எத்தனையோ உவமைகளும் உருவகங்களும் தமிழிலக்கியப் பரப்பில் கவிதைகளிலும் பிற புனைவுகளும் கொட்டிக் கிடக்கின்றன. அந்த வரிசையில் புதிதாய் ஒன்றை சேர்க்கிறார் கனிமொழி.ஜி.

" சாயலில் நம் ஆதிமனிதனைக் கொண்ட அவன்
   சாமான்ய வாழ்விலிருந்து வழிதவறிய நீரோடை"

சொல்லிச் சொல்லிப் பார்க்கிறேன்.வியப்பு தீரவில்லை.
நல்ல கவிதைகளின் உச்ச வரிகளை கவிதைக்குத் தலைப்பாக்கிவிடும் விபத்து கனிமொழி.ஜி.க்கும் நேர்ந்திருக்கிறது.

''காய்ந்த சருகை சுமந்து செல்கிறது காலநதி"," உதிரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிலுவைகள்'' போன்றவை அதற்கான உதாரணங்கள்.

கூடிப் பிரியும் அகவாழ்வின் அற்புதச் சித்திரம்,"நெய்தல் மெல்ல பாலையாகிறது". கூடலின் நுட்பமான அம்சங்கள் மென்மையாகவும் மேன்மையாகவும் இந்தக் கவிதையில் பேசப்பட்டுள்ளன.

"அந்தியின் மீது இறங்கிக் கவிந்த இரவைப்போல்
அவளறியாது கலந்திருந்தான்.
சுவைத்தும் தீராத இனிப்பை ஊட்டி
உறைவாளென உறுதியானான்"

"வயிறுணர்ந்து மனமுணர்ந்து புலனுணர்ந்த நிறைவில்
சூடிக் கொண்டிருந்த மலர்ச்சரம் போலன்றி
மெல்லக் கசங்கல் நீங்கி இயல்பானாள்"

ஆகிய இடங்கள் குறிப்பிடத் தக்கவை.(ப-10)
தூங்கிக் கொண் டிருக்கும் ஓவியனை "கசங்கிய படுக்கை மேல் சரிந்த வானவில் "என்கிறார்.     

காலம் மனிதர்களை பிரித்துப் போட்டாலும் மனம் பிடித்து இருத்திக் கொள்ள எத்தனிக்கிறது. ஓவியனின் அறையை விட்டு வெளியேற நினைக்கையில் என்ன நடக்கிறது?

"தாழ்பெயர்ந்த கதவுக்கு உட்புறம் குறுக்கே
  சட்டமிட்ட தாழுடன் பூட்டும் வரைந்திருக்கிறான்
........................................................................................
........................................................................................
 இருட்டில் கைதுழாவி தூரிகையைத் தேடியவள்
சாவி வரையப் பழகுகிறாள்''
என்கிறார் கனிமொழி.ஜி.


இத்தொகுப்பில் அர்த்த அடர்த்தி மிக்க ஏராளமான 
 குறுங்கவிதைகளும் உள்ளன.மார்கழிப் பனிபோல் மெல்லென இறங்கும் இந்தக் கவிதைகளைத் தந்திருக்கும் 
கனிமொழி.ஜி. பாராட்டப்பட வேண்டியவர்


மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை வழங்கும் "மழை நடந்தோடிய நெகிழ்நிலம்" கனிமொழி.ஜி.யின் முதல் தொகுப்பு என்பதும் வியப்புக்குரிய விஷயம்தான்.

ஏற்கெனவே கவியுலகில் ஒரு கனிமொழி இருப்பதால் முன்னெழுத்தைப் பின்னெழுத்தாக்கி கனிமொழி.ஜி. என அறியப்படுகிறார் போலும்!!
ஆனால் அந்த கனிமொழியையும் டெல்லி வட்டாரங்களில் கனிமொழிஜி என்றுதான் அழைப்பார்களாம்!!