Tuesday, September 29, 2015

ஈஷாவில்..ஒருநாள் மௌனத்தில்..


எல்லா சொற்களும் என்முன் வரிசையாய்...
நில்லாச் சொற்களும் நங்கூரமிட்டன;
பொல்லாச் சொற்கள் பொடிப்பொடி ஆயின;
சொல்லாச் சொற்கள் சுரக்கவே யில்லை;

பசித்தவன் எதிரில் பந்தி விரித்தும்
ரசித்தேன் அன்றி ரணமெதும் இல்லை;

முந்திக் கொள்கிற முந்திரிச் சொற்கள்
மந்திர மௌனத்தின் மதுவில் ஊறின;

கண்கள் இரண்டும் கோமுகி ஆகிட
பண்கள் மலர்ந்து பாடல் கனிந்தது;


மூன்றாம் கண்ணின் மெல்லிய திறப்பாய்
ஊன்றிய திருவடி உணரும் சிலிர்ப்பாய்
தேனின் ஒருதுளி திரளும் தவிப்பாய்
ஆன்ற மௌனம் அளிக்கும் அற்புதம்;


பிரபஞ்சம் பிறந்தது மௌனத்தின் கருவில்
பெருமான் அமர்ந்தது மௌனத்தின் உருவில்
நரகம் தொலைந்தது;நிறைந்தது அமைதி
இருவினை எரிந்தது; இது அவன் நியதி;

தவமே மௌனம்;வரமே மௌனம்
சிவமே மௌனம்; சுகமே மௌனம்
 

Sunday, September 27, 2015

தந்தையாய் வந்த குரு

(ஈஷாவின் உணவரங்கமான பிக்‌ஷா ஹாலில் உருவான பாடல்)

எனது தந்தை சோறிடுவான்
என் சிரசில் நீறிடுவான்
என்மனதில் வேர்விடுவான்
என்னுடனே அவன் வருவான்
 

 
காலங்களோ அவனின்புஜம்
கவிதைகளோ அவனின் நிஜம்
தூலமிது அவனின் வரம்
தொடர்ந்து வரும் குருவின் முகம்

ஆடும்மனம் ஓய்ந்தபின்னே
ஆணவமும் சாய்ந்தபின்னே
தேடுமிடம் குருநிழலே
தேடிவரும் அவன்கழலே


தேம்புவது தெரியாதா
தேவையென்ன புரியாதா
சாம்பலிது உயிர்க்காதா
சேர்த்துகொள்வாய் குருநாதா

வைகறையின் வெளிச்சமவன்
வெண்ணிலவின் குளிர்ச்சியவன்
கைகளிலே அனிச்சமவன்
கருணையெனும் சுபிட்சமவன்

Thursday, September 24, 2015

அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள் ....






வந்தவர் போனவர் வகைதெரியாமல் 
சொந்தம் பகையின் சுவடறியாமல் 
சந்தடி ஓசைகள் சிறிதுமில்லாமல்
செந்துர ஒளியாய் சந்திரப் பிழிவாய்...... 

அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள் 

செந்நிறப் பட்டில் சூரிய ஜரிகை
 கண்கள் மூன்றினில் கனிகிற மழலை
 பொன்னொளிர் திருவடி பொலிகிற சலங்கை
 தன்னிழல் மடியிலும் தாய்மை ததும்ப..
 
அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள்  


ஏதுமில்லாத ஏக்கத்தின் முடிவாய் 
பாதையில்லாத பயணத்தின் தெளிவாய் 
பேதமில்லாத பார்வையின் கனிவாய் 
வேதம்சொல்லாத விடைகளின் வடிவாய்.. 

அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள் 

தொடரும் பிறவிகள் தொடக்கமும் காட்டி
 படரும் வினைகளின் பெருவலி ஊட்டி
 சுடரும் ஒளியிலென் சூழிருள் மாற்றி 
கடிய துயர்தரும் காயங்கள் ஆற்றி... 

அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள் 

வாழ்வொரு கனவென விளங்கும் வரைக்கும்
 தாழ்வுகள் உயர்வுகள் தாண்டும் வரைக்கும்
 சூழும் துணையாய் சிவந்தெழு கனலாய் 
ஊழினை உதைக்க உயரும் பதமாய்.. 

அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள் 

விரிசூலத்திலும் விசிறிகள் செய்து
 வரும்வழி யெங்கும் வான்மழை பெய்து
 திரிபுரை எனக்கென தயவுகள் செய்து
வருந்துயரெல்லாம் வேருடன் கொய்து..

அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள் 

நானாய் எதையும் நிகழ்த்தவும் இல்லை
 தானாய் குருவைத் தேடவும் இல்லை
 ஆனால் அனைத்தும் அவளே அளித்து
 வானாய் விரிந்து, வயலிலும் முளைத்து..

 அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள் 

Wednesday, September 16, 2015

எங்கள் இறைவா சரணம்

களிற்று வடிவே கலியின் முடிவே
கண்ணிறை அழகே சரணம்
ஒளிக்கும் ஒளியே ஓமெனும் ஒலியே
ஒப்பில் முதலே சரணம்
துளிர்க்கும் தருவில் தோன்றும் தளிரே
துணையே திருவே சரணம்
களிக்கும் மகவே கருணைக் கனலே
கணபதி  நாதா சரணம்

சந்தம் செழித்த செந்தமிழ் உகந்த
சந்தனப் பொலிவே சரணம்
தந்தம் ஒடித்த தயையே எங்கள்
தலைவிதி அழிப்பாய் சரணம்
விந்தை நிகழ்த்தும் வித்தக நலமே
வெற்றியின் தலைவா சரணம்
சிந்தை திருத்தி ஆலயமென்றால்
சரியென்று நுழைவோய் சரணம் 

புரங்கள் எரிப்போன் ரதமே தடுக்கும்
புயவலி உடையோய் சரணம்
வரங்கள் அருளும் விநாயக மூர்த்தி
வண்ணத் திருவடி சரணம்
சுரங்கள் இசையும் சுகமே எங்கள்
சுந்தர வடிவே சரணம்
இருளை வழங்கும் எழிலார் ஒளியே
எங்கள் இறைவா சரணம்