"பிள்ளையார் பெப்ஸி குடிக்கிறார் தெரியுமா? அங்கே நிக்கறேன்" செல்ஃபோன் இல்லாத காலத்தில் தங்கள் அலுவலர்கள் இடையில் உரையாடலுக்காகத் தரப்பட்டிருந்த வாக்கி டாக்கியைக் கையில் வைத்துக் கொண்டுபேசிக்கொண்டிருந்தார் தினமலர் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்த ஐயப்பன்.
கோவையில் கல்கி நூற்றாண்டு விழாவிற்கு வந்த அனைவருமே அந்த சிலையை ஆச்சரியமாகவும் ஆர்வமாகவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மணிமேல்நிலைப்பள்ளியின் முதல் தளத்தில் கலையரங்கம்.தரைதளத்தில்,அலங்காரப் பந்தலின் கீழ் சாய்விருக்கையில் சாய்ந்தபடி, படு தீவிரமாக "கல்கி" வாசித்துக் கொண்டிருந்தார் பிள்ளையார்.
அவர் எதிரே இருந்த டீப்பாயில் பிரித்து வைக்கப்பட்டிருந்தது மைசூர்பா பெட்டி.திறந்து வைக்கப்பட்டிருந்தது ஒரு பாட்டில் பெப்ஸி. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் நடத்திய கல்கி நூற்றாண்டு விழாவில்தான் இந்த அமர்க்களம்.
விழாவிற்கு தலைமை தாங்கியவர் கிருஷ்ணராஜ் வாணவராயர். அன்றும் இன்றும் இளைஞர்களின் ஆதர்சம்சிறப்புப் பேச்சாளர்கள் வரிசையிலோ ஒரு விசித்திரமான கூட்டணி. பாலகுமாரன், சோ, கலை விமர்சகர் சுப்புடு.
விழாவில் இறைவணக்கம் பாட வேண்டியவர் எதனாலோ வரவில்லை. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் திரு.கிருஷ்ணன் தன் வழக்கமான பாணியில் சுப்புடுவை கலாய்த்துக் கொண்டிருந்தார். "சார்! நீங்க மேடையிலே இருக்கீங்கன்னதும் இறைவணக்கம் பாடக்கூட ஆளைக் காணோம்".
கொஞ்ச நேரத்தில் ஏதோ வேலையாக வெளியே வந்த என்னை தயங்கித் தயங்கி அணுகினார் அந்தப் பெரியவர்."சார்! வணக்கம்." ஏறிட்டுப் பார்த்தேன். பரிச்சயமான முகம்தான். வயது எழுபது இருக்கும். பல நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன்."வணக்கம்! சொல்லுங்க சார்" என்றேன். கூடுதல் தயக்கத்துடன் கேட்டார்... "இல்லை ! நான் நல்லா பாடுவேன் சார். இந்த விழாவிலே இறைவணக்கம் பாட சான்ஸ் கிடைக்குமா?"
இறை வணக்கம் பாட வேண்டியவர் வராமல் போன விஷயம் இவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அகஸ்மாத்தாக அகப்பட்டார். ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் "கிருஷ்ணன் சாரைக் கேட்டு சொல்றேன்" என்று நகர்ந்தேன் தமிழ்த்தாய் வாழ்த்து கேசட் போட்டுவிடலாம் என்ற முடிவை மாற்றிக் கொண்டு அவரைப் பாடச் சொல்வதென்று முடிவெடுத்தோம்.
சுமாரான குரல். பாட அழைக்கப்பட்ட போதும், பாடி முடித்த பிறகும் "ரொம்ப நன்றி சார்!" என்று வெவ்வேறு பாவங்களில் சொன்னார். சுப்புடு கையாலேயே அவருக்குப் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசும் கொடுத்ததில் புளகாங்கிதம் அடைந்தார் மனிதர். மேடையின் ஓரத்தில் இருந்த என்னிடம் "ரொம்ப சந்தோஷம் சார்! ரொம்ப நன்றி சார்" என்று பலமுறை
சொன்னது கூச்சமாகவே இருந்தது.
விழா முடிந்து கீழே நின்று கொண்டிருந்த என்னை நெருங்கினார் அந்தப் பெரியவர். கைகளில் பொன்னாடையும் நினைவுப்பரிசும். நான்காவது நன்றியை வாங்க நான் தயாரான போது பத்தடி தொலைவில் நின்று கொண்டு தோரணையாகக் கைச்சாடை போட்டு அழைத்தார். அருகே போனதும் அவர் கேட்ட கேள்வி,"என்னப்பா! கார் ரெடியா இருக்கா?"
எனக்குப் புரியவில்லை. சற்றே குரலை உயர்த்திச் சொன்னார். "அதான் தம்பி! உங்களுக்காக இறைவணக்கம் பாடியிருக்கேன்லே! வீட்டுக்குப் போக கார் கொடுங்க". விருந்தினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கார் மட்டுமே இருந்தது. ஏதோ ஒரு வண்டியை எப்படியோ ஏற்பாடு செய்து அனுப்பினோம். அப்போது எரிச்சலாக இருந்தாலும் அவர் வீட்டுக்குப் போய் என்ன செய்திருப்பார் என்று யோசித்தேன்.
குறுகலான ஒரு வீதியைக் கடந்து அவர் வீட்டு வாசலில் கார் போய் நின்றிருக்கும்.மகன் மருமகள் பேரப்பிள்ளைகள் ஆச்சரியமாகப் பார்த்திருப்பார்கள். ஓட்டுநரிடம் "வரேன்ப்பா!
கிருஷ்ணன் கிட்டே சொல்லீடு" என்று சத்தமாகச் சொன்னபடியே வீட்டுக்குள் நுழைந்திருப்பார்."கல்கி நூற்றாண்டு விழாவுக்குப் போனேனா! சுப்புடு பார்த்துட்டார். நீங்க பாடியே ஆகணும்னு ஒரே பிடிவாதம். பாடினேன். அவங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். நீங்க பஸ்லே போறதாவதுன்னு பிடிவாதமா கார் வைச்சு அனுப்பீட்டாங்க"என்று தோரணையாக சால்வையை
மருமகளிடம் நீட்டியிருப்பார்.
வீட்டில் சரிந்து கொண்டிருக்கும் செல்வாக்கை மீட்டுக்கொள்ள இந்தச் சின்ன நாடகம் அவருக்குப் பயன்பட்டிருக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன் அதே ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில் சந்தித்த ஒரு பெரியவரின் ஞாபகம் வந்தது. திரு.கிருஷ்ணனை "என்னப்பா! சொல்லுப்பா" என்று தயங்கித் தயங்கி ஒருமையில் அழைப்பார். அடிக்கடி வந்து உதவிகள் பெறுவார். போகும்போது இன்னும் தயக்கமாய் "ஏம்ப்பா ! வாங்கிக்கட்டுமா? மைசூர்பா?" என்பார்.
கிருஷ்ணன் கையொப்பமிட்டுத் தரும் காகிதத்தைக் கவுண்ட்டரில் காண்பித்து ஒருகிலோ மைசூர்பா இலவசமாய் வாங்கிக் கொண்டு மெல்ல நகர்வார். வீட்டுக்குள் நுழையும்போது இவருடைய தோரணையும் மாறியிருக்கும்.
"இந்த கிருஷ்ணன் கூட ஒரே தொல்லையாப் போச்சு! வேணாம் வேணாம்னா கேக்கறதில்லை. ஒதுங்கிப் போனா கூட வம்பா கூப்பிட்டு கையில மைசூர்பாவைத் திணிச்சுடறது" என்ற செல்லச் சலிப்போடு மருமகள் கைகளில் கொடுத்திருப்பார்.
வீட்டுக்குள் சின்னச் சின்ன சலுகைகளைப் பெறவும் பெரிய மனிதர்களின் பரிந்துரைகள் தேவையாயிருக்கிறது பெரியவர்களுக்கு!!