Monday, November 22, 2010

போனவர்கள் வந்தால்......? கவியரங்கக் கவிதை

19.07.2009 ல் ஈரோடு சி.கே.கே.அறக்கட்டளை ஏற்பாட்டில கவியரங்கம். "போனவர்கள் வந்தால்?" என்பது பொதுத்தலைப்பு.
எனக்கான தலைப்பு :நேருபிரான். கவியரங்கத்தலைமை : "நாவுக்கரசர்" நெல்லை கண்ணன் அவர்கள்.




மண்ணைவிட்டுப் போய்விட்ட தலைவர் தம்மை
மகத்துவத்தால் புகழ்படைத்த அறிஞர் தம்மை
விண்ணைவிட்டு மறுபடியும் வரச்சொல்கின்ற
வித்தையினை நிகழ்த்தத்தான் இங்கே வந்தோம்;
பண்ணைவிட்டுப் பாட்டிசைக்கும் கலைஞன் போல
தும்பைவிட்டு வால்பிடிக்கும் உழவன்போல
கண்ணைவிற்றுச் சித்திரங்கள் வாங்குகின்ற
காரியத்தில் நமக்கிணையாய் யாரும் உண்டா?

அற்புதங்கள் நிகழ்த்தத்தான் அவனி வந்தார்
அரசியலில் புதுவெளிச்சம் அள்ளித் தந்தார்
ஒப்பிடவே முடியாத உயரம் நின்று
உலகமெலாம் போற்றிடவே வாழ்ந்திருந்தார்
பற்பலவாய் காட்சிகளும் மாறிப்போக
பதவிப்போர் தனில்நாடு பகடையாக
அற்பரெலாம் கூத்தாடும் அரங்கினுக்கு
அமுதத்தின் கலசத்தை அழைக்கலாமா?

கற்பித்த பாடங்கள் மறந்து போனார்
கண்ணியத்தை இங்குள்ளோர் இழந்து போனார்
தப்பாகத் தவறாக வாழ்வதொன்றே
தமதுவழி என்றிவர்கள் வாழலானார்
இப்படியாய் குறைமனிதர் வாழும் நாளில்
என்றைக்கோ தன்கடமை முடித்துக் கொண்டு
தப்பித்துப் போனவரை மீண்டும் இந்தத்
தரைக்கிழுத்து வருவதென்ன தர்மம் அய்யா?

நேருபிரான் மறுபடியும் தோன்றும் வண்ணம்
நாமெல்லாம் அருகதையைப் பெற்றுள்ளோமா?
பாரிலுயர் தேசமென்று பெயர்சொன்னாரே
பாரதத்தை அவ்வாறு காத்துள்ளோமா?
வேரினிலே அமிலத்தைப் பாய்ச்சிவிட்டு
வெண்பூக்கள் மலருமென்று பேசலாமா?
நேர்மையினைப் புதைத்துவிட்ட நாடே-மீண்டும்
நேருவர வேண்டுமென ஏங்கலாமா?

இன்றைக்கு நேருபிரான் திரும்ப வந்தால்
இடைத்தேர்தல் எதிலேனும் நிற்கச் சொல்வார்
மன்மோகன் சிங்குக்குக் குறைவராமல்
மத்தியிலே துணைப்பிரதமர் ஆக்கிக் கொள்வார்
அன்னைக்கு ஆதரவாய் இயங்கச் சொல்வார்
அறிக்கைகள் தினம்தினமும் வழங்கச் சொல்வார்
சென்னைக்குப் பலதடவை செல்லச் சொல்வார்
சத்யமூர்த்தி பவனைமட்டும் பூட்டிக் கொள்வார்

இமயம்போல் இதயமுள்ள நேருவுக்கு
இன்றையநாள் அரசியலே புரிபடாது
சமயம்போல் சொன்னசொல்லை மாற்றுதற்கு
சத்தியமாய் அவர்மனது இடம்தராது
குமுறிவரும் நதிகளையும் இணைக்கக் கூடும்
கோஷ்டிகளை இணைப்பதற்கு வழிதோன்றாது
அமைதியென்றால் ஞாபகத்தில் இருக்கக் கூடும்
அன்றாட நடப்புகளில் அது தோன்றாது

சீனாவின் துரோகங்கள் தாங்கொணாமல்
சிரித்தமுகம் வாடிவிட்ட நேருவுக்கு
தாய்நாட்டார் துரோகங்கள் எங்கே தாங்கும்
தளிர்போன்ற திருவுள்ளம் எங்கே தூங்கும்
வாழ்நாட்கள் அர்ப்பணித்து வாங்கி வந்த
வீரமிக்க சுதந்திரத்தை ஏலம்போட
ஓநாய்கள் திரண்டிருக்கும் காட்சி கண்டால்
ஒப்பரிய நேருபிரான் தாங்குவாரா?

தர்மங்கள் மறந்த கூட்டம் தன்படை வெட்டிச் சாகும்
மர்மங்கள் நிறைந்த கோட்டை மனிதரை ஏலம் போடும்
சரிவுகள் தோன்றித் தோன்றி சரித்திரம் மறையலாகும்
நெறிகளை மறந்த நாட்டில் நேருவந் தென்ன ஆகும்

ஓட்டுக்காய் எதையும் செய்யும் உணர்விலே வேட்பாளர்கள்
நோட்டுக்காய் தமையே விற்கும் நினைவிலே வாக்காளர்கள்
வீட்டுக்காய் நாட்டை விற்கும் வெறியிலே தலைவர் கூட்டம்
நாட்டுக்கே தன்னைத் தந்த நேருவந் தென்ன ஆகும்?

பகடைகள் உருட்டுகின்ற படுகளம் பங்குச் சந்தை
அகப்பட்டால் உறிஞ்சிக் கொள்ளும் ஐ.டி.யில் மனித மந்தை
தகுதிகள் விலைகள் பேசி  தள்ளாடுகின்ற விந்தை
சகலமும் குழம்பும் நாளில் ஜவஹர்வந் தென்ன ஆகும்?

ஜாதியின் துணையை வாங்கி சலுகைகள் மிரட்டி வாங்கி
நீதியை விலைக்கு வாங்கி நியாயங்கள் விற்பார் எல்லாம்
பாதியைக் கணக்கில் காட்டி பாக்கியைப் பதுக்கும்போது
ஜோதியை அழைத்து வந்தால்-சொல்லுங்கள் என்ன ஆகும்?

அஞ்சிடப் போர்மேகங்கள் அமைதியே இல்லா வானம்
கொஞ்சிடும் மழலை கண்ணில் கலக்கத்தின் சுவடு,சோகம்
எஞ்சிய தமிழர் வாழ்வும் இலங்கையில் இருண்டு போகும்
நஞ்சினும் கொடிய நாளில் நேருவந் தென்ன ஆகும்?

தக்கதோர் சூழல்தானே தகவுளோர் தோன்றத் தேவை
இக்கணம் பொருத்தமில்லை இதுதானே இறைவன் லீலை
நக்கிடும் நாய்கள் முன்னே நாயகன் தோன்றிவிட்டால்
செக்கென அறிவாரா-நல் சிவலிங்கம் எனக் கொள்வாரா?

வாழ்விக்க வந்தோர் எல்லாம் வரலாறாய் மாறிப் போனார்
தாழ்வுக்கே வித்திட்டோரும் தறிகெட்டு ஆடலானார்
சூழலை சீர்குலைத்து சிங்கத்தை வரவழைத்தால்
பாழ்நிலை நீங்கிடாது பாரதம் மாறிடாது

ஆற்றிலே காலை வைத்தா; அடுத்த விநாடி ஓடும்
காற்றினைப் பார்த்து நின்றால் கணத்திலே கடந்து போகும்
நேற்றைக்கு வாழ்ந்த நேரு நலம்செய்து மறைந்து போனார்
ஊற்றுக்கண் அடைத்துவிட்டோம்;உத்தமர் வரவே மாட்டார்;

6 comments:

வண்ணதாசன் said...

”தக்கதோர் சூழல்தானே தகவுளோர் தோன்றத் தேவை, இக்கணம் பொருத்தமில்லை, இதுதானே இறைவன் லீலை”
மிக்கவும் சரியாய்ச் சொன்னீர்,
மெய்யுறு சொற்களால், நான்
நெக்குற நெகிழ்ந்து போனேன்,
நிச்சயம் வருவேன் ஆனால்!

சு.கி.ஞானம் said...

ஓட்டுக்காய் எதையும் செய்யும் உணர்விலே வேட்பாளர்கள்
நோட்டுக்காய் தமையே விற்கும் நினைவிலே வாக்காளர்கள்!!!
மிகும் அருமை!!

marabin maindan said...

வண்ணதாசன் அவர்களுக்கும்
ஞானசம்பந்தன் அவர்களுக்கும்
மிக்க நன்றி

Shankar said...

வாழ்விக்க வந்தோர் எல்லாம் வரலாறாய் மாறிப் போனார்
தாழ்வுக்கே வித்திட்டோரும் தறிகெட்டு ஆடலானார்.

இரண்டே வரிகளில் இன்றைய உலகம்

மிகவும் அருமை

marabin maindan said...

நன்றி சங்கர் அவர்களே

Ranganathan Purushothaman said...

சீனாவின் துரோகங்கள் தாங்கொணாமல்
சிரித்தமுகம் வாடிவிட்ட நேருவுக்கு
தாய்நாட்டார் துரோகங்கள் எங்கே தாங்கும்
தளிர்போன்ற திருவுள்ளம் எங்கே தூங்கும்
வாழ்நாட்கள் அர்ப்பணித்து வாங்கி வந்த
வீரமிக்க சுதந்திரத்தை ஏலம்போட
ஓநாய்கள் திரண்டிருக்கும் காட்சி கண்டால்
ஒப்பரிய நேருபிரான் தாங்குவாரா?

- Great words, amazing kavithai.
Thanks for sharing... enjoyed every bit of it.