ராஜ ராஜ சோழன்......தந்தையாக!!

தஞ்சை பெருவுடையார் கோயிலில் 14.11.2010.அன்று நடைபெற்ற 1025ஆவது ஆண்டு சதய விழா கவியரங்கில், "கவிஞர்கள் பார்வையில் இராசராசன்
'என்னும் பொதுத்தலைப்பில்-தந்தையாக என்னுந் தலைப்பில் பாடிய கவிதை.
தலைமை :இசைக்கவி ரமணன்.சிந்தையெலாம் சிவபக்தி செழித்திருக்க
செயலெல்லாம் மக்கள்நலம் சிறந்திருக்க
விந்தையெலாம் வியக்கின்ற விந்தையாக
வாழ்ந்திருந்த புவியரசன் ராஜராஜன்
தந்தையென்று வாழ்ந்திருந்த தகவு பற்றி
தடந்தோளில் வளர்த்திருந்த மகவு பற்றி
சந்தமிகு செந்தமிழில் சொல்ல வந்தேன்
சரித்திரத்தின் தகவுகளை சேர்த்து வந்தேன்

தன்னைப்போல் வையகத்தைக் காப்பதற்கு
திருமகனாம் ராஜேந்திரன் தன்னைப்பெற்றான்
பொன்னைப்போல் தனைவளர்த்த தமக்கை பேரால்
பாசமுடன் குந்தவையைப் பெற்றெடுத்தான்
மின்னைப்போல் சரித்திரத்தில் தோன்றிச் செல்லும்
மாதேவ அடிகளையும் மகளாய்ப் பெற்றான்
இன்னுமொரு பெண்பிள்ளை இவனுக்குண்டு
இவள்பெயரை நடுப்பிள்ளை என்பார் உண்டு

நாட்குறிப்பு எழுதுகிற வழக்கம் அந்த
நாட்களிலே கிடையாது-ராஜ ராஜன்
ஆள்கறுப்பா சிவப்பா நாம் அறிந்ததில்லை
ஆதாரம் கல்வெட்டில் பெரிதாய் இல்லை
நாம்படைத்துக் காட்டுகிற கற்பனைக்குள்
நிஜம்போலத் தீட்டுகிற வரிகளுக்குள்
வாழத்தான் வேண்டுமந்த ராஜராஜன்
வேறுவழி அவனுக்கும் ஏது பாவம்

எப்படித்தான் பிள்ளைகளை வளர்த்திருப்பான்
என்னென்ன பேர்சொல்லி அழைத்திருப்பான்
அப்பா என்றழைக்கையிலே ராஜராஜன்
ஆனந்த வெள்ளத்தில் திளைத்திருப்பான்
செப்புப்போல் பிள்ளைகள் சண்டையிட்டால்
சிரித்தபடி எவ்வாறு தீர்த்துவைப்பான்
இப்படியாய் கற்பனைகள் எழும்போதெல்லாம்
இதயத்தில் முறுவலிப்பான் ராஜராஜன்

போர்நாடிப் போகின்ற பொழுதில் கூட
பிள்ளைகளின் ஞாபகங்கள் கசிந்திருக்கும்
தேரேறி விரைகையிலே தீண்டும் தென்றல்
தழுவவரும் பிள்ளைகளை நினைக்க வைக்கும்
போர்க்காயம் மீதினிலே பிள்ளைச் செல்வம்
பூவிதழ்கள் மருந்தாகப் படிந்திருக்கும்
ஆகாயம் தனில்தவழும் பூமேகம்போல்
அவன்மடியில் பிள்ளைகள் தவழ்ந்திருக்கும்

பெற்றவர் பலருக்கும் பிள்ளைகள் தங்கள்
கனவுகள் கொட்டி வைக்கிற பாத்திரம்
மற்றவர் சிலருக்கோ பிள்ளைகள் தங்கள்
மன்மத லீலையின் சாட்சி மாத்திரம்
உற்ற செல்வங்கள் நிறைந்தவருக்கோ
உருப்பெறும் பிள்ளைகள் சொத்துப் பத்திரம்
கொற்றவனாம் ராஜ ராஜனுக்கோ
பெற்ற பிள்ளைதான் வெற்றிச் சூத்திரம்

எஞ்சும் பகைவர்கள் எவருமில்லாமல்
இடிக்க வல்லவன் இளவல் இராஜேந்திரன்
விஞ்சும் புகழுடன் வாழ்ந்து வந்திருந்தான்
வீரத் தளபதி எனத் திகழ்ந்திருந்தான்
தஞ்சை மண்ணுக்கு சோழன் அதிபதி
தந்தை காலத்திலேயே பிள்ளை தளபதி
கொஞ்ச நாட்களுக்குள் இணைச்சக்ரவர்த்தியாய்
கோலங்கூட்டிக் கொலுவில் அமர்த்தினான்

மாதொருபாகங்கொண்ட ஈசனுக்கு
சதயத்தில் பிறந்ததந்தை கோயில்கண்டான்
ஆதிரையில் பிறந்தமகன் அடுத்த ஊரில்
அதேபோல அழகான கோயில் கண்டான்
மோதுகிற போரினிலே கங்கை கொண்டான்
மேன்மையுடன் கடாரத்தை வெற்றி கொண்டான்
ஈதனைத்தும் வெல்லுகிற விதமாகத்தான்
ஈழத்தில் போர்புரிந்து பகையை வென்றான்

தகுந்தபடி இளவரசன் படைநடத்தி
தென்னிலங்கை நாட்டினிலே போர்நடத்தி
விதந்தெவரும் போற்றும்படி வெற்றி கொண்டான்
வீழ்த்திவிட்ட இலங்கைமன்னன் பேரைச் சொன்னால்
மகிழ்ந்துவிடும் செந்தமிழர் இதயம்-ஆமாம்
மகிந்த எனும் அரசனைத்தான் வென்று வந்தான்;
மகிந்த எனும் ராஜனையே பக்ஷமின்றி
மாவீரன் ராஜேந்திரன் வீழ்த்தி விட்டான்

வானத்தில் விரிசலொன்று விழுவதில்லை
விழுந்தாலும் வெளியினிலே தெரிவதில்லை
கானத்தில் சுரபேதம் புதியதில்லை
கதிரோடு நிலவொன்றாய்த் திரிவதில்லை
ஊனமிலா ராஜராஜன் வாழும்போதே
ஒதுங்கிப்போய் தனியாட்சி தனயன் கண்டான்
ஏனென்று வரலாற்றில் விளக்கமில்லை
இதுவொன்றும் தமிழர்க்குப் புதியதில்லை

கணைபோல இளவரசன் பாய்ந்து சென்றான்
களமறவன் ராஜராஜன் வில்லாய் நின்றான்
துணையான பிள்ளைக்கு இளமை தொட்டே
தளபதியாய் இடங்கொடுத்தான் -காலப்போக்கில்
இணையாக முடிசூடி ஆட்சி செய்ய
எப்படியோ வழிவிடுத்தான் -சரித்திரத்தில்
அணையாத சுடரான தந்தை பிள்ளை
ஆளுமையினைப் போற்றுகிறேன்! வணக்கம் ! வாழ்க!