குடும்பப் பாட்டாய் மாறிய காதல் பாட்டு

உலகின் அன்னை என்ற தலைப்பில் அன்னை தெரசா பற்றிய என் பாடல்களடங்கிய முதல் இசை ஆல்பம் வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெற்றிருந்த நேரமது. சுஜாதா,ஸ்வர்ணலதா, ஹரிணி
போன்றவர்கள் உருக்கமாகப் பாடியிருந்தார்கள். என்னை ஊக்குவிப்பதற்காக
கவிஞர் வைரமுத்து ஒரு முன்னுரையும் பேசித்தந்திருந்தார்.அதன்பிறகு
தொடர்ச்சியாக பக்தி கேசட்டுகளுக்கு எழுதிக் கொண்டிருந்த போது, முழுவதும்
காதல் பாடல்களைக் கொண்ட ஆல்பம் ஒன்று தயாரிப்பதென்று முடிவானது.

"காதல் வரும் காலம்"என்பது அந்தப் பிறக்காத குழந்தைக்கு சூட்டப்பட்ட
பெயர்.

"உயிரெல்லாம் உருகிட உருகிடப் புதுசுகம்
அடடடா இளமையின் கனவுகள் தினம்தினம்"
என்ற பல்லவியுட்ன் தொடங்கும் பாடலில் வருகிற வரி காதல் வரும் காலம். அந்த ஆல்பம் வெளிவரும் காலம் வரவில்லை. ஆனால்  மெட்டுக்கு எழுதப்பட்ட அந்த ஏழு பாடல்களில், ஒரு பெண் தன் காதலை
வெளிப்படுத்தியும் வெளிப்படுத்தாமலும் தவிக்கும்போது பாடுவதாய் அமைந்த
ஒரு பாடலை, சினிமாக் கம்பெனி ஒன்று வாங்கிவிட்டதாகத் தெரிவித்தார், இசையமைப்பாளர் யானிதேஷ். "இன்னிசைக் காவலன் ' என்ற திரைப்படத்துக்காக வாங்கப்பட்ட பாடல் அது. அந்தப் பாடலுக்கு நேர்ந்த கதியைப் பார்க்கும் முன்னால், அந்தப் பாடலைப் பார்த்துவிடுவோமே.

பல்லவி:
சொல்லவா சொல்லவா வெண்ணிலாவே
என்னவோ என்னவோ என்கனாவே
கன்னிப்பெண் ஆசைகள் ஆயிரம்
நெஞ்சுக்குள் என்னவோ ஊர்வலம்
சின்னதாய் மோகங்கள் ஆரம்பம்
மன்னவன் அல்லவோ காரணம்

சரணம்-1

யாரோடும் சொல்ல இங்கு வார்த்தையில்லை
சொல்லாத போதுநெஞ்சம் தாங்கவில்லை
ஆனாலும் இந்தக்காதல் ரொம்பத் தொல்லை
தள்ளாடும் பாவமிந்த ஜாதிமுல்லை

ஏதேதோ ஆசைபொங்க இன்பமான நடகம்
உல்லாச ஊஞ்சலாடும் வாலிபம்
தீராத தாகம்தீர காமன்தானே காரணம்
கண்ணோடு கண்கள்பேசும் சாகசம்

நெஞ்சோடு இன்பபோதை மெல்ல மெல்ல ஏறும் நேரம்
                                    (சொல்லவா சொல்லவா

சரணம்-2
நான்கூட வானவில்லின் ஜாதிதானே
என்மேனி தேனிலூறும் சோலைதானே
செந்தேனைத் தேனீபோலத் தேடினானே
செந்தீயில் பூவைப்போல வாடினேனே

அம்மாடி வேலிதாண்டும் ஆசையென்ன நியாயமோ
என்தேகம் இந்தவேகம் தாங்குமோ
பொல்லாத காதல்வந்து சொல்லித்தந்த பாடமோ
கண்ணாளன் செய்ததென்ன மாயமோ

நெஞ்சோடு இன்பபோதை மெல்ல மெல்ல ஏறும் நேரம்
                                    (சொல்லவா சொல்லவா
இது நடந்து ரொம்ப நாட்களுக்குப் பிறகு இசையமைப்பாளர் யானிதேஷ் அவசரம் அவசரமாய் ஓர் அதிகாலையில் அழைத்தார். "அய்யா! ஒரு தப்பு நடந்து போச்சு! நம்ம சொல்லவா சாங் இருக்கே, அதை ஷூட்
பண்ணீட்டாங்க!பிரச்சினை என்னன்னா, அந்த யூனிட்டில பெரும்பாலான ஆட்களுக்கு தமிழ் தெரியாது.ஒரு பொண்ணு அப்பா
அம்மாவோட பாடற சிச்சுவேஷனுக்கு பாட்டை ஷூட் பண்ணி வைச்சிருக்காங்க.குளோஸப் ஷாட் வேற இருக்கு.அதனால லிப் ஸிங்க்
கெடாத அளவு அதே ட்யூனுக்கு குடும்ப சூழலுக்கு ஒரு பாட்டு வேணும்" என்றார்.


தூக்கக் கலக்கத்தில்"எப்பங்க வேணும்"என்று கேட்டதும் "ஒருமணிநேரத்தில
கொடுத்தாபோதும் "என்று சொல்லிவிட்டு,நான் சுதாரித்துக் கொள்ளும் முன்
வைத்து விட்டார்.

நடந்த உரையாடலே கனவாக இருக்குமோ என்று தோன்றியது.சத்குருவைத் தவிர ஆண்கள் என் கனவில் வருவதில்லை என்பதால் செல்ஃபோனை எடுத்துப் பார்த்தேன். காலை 5.18.யானிதான் அழைத்திருந்தார்.

குடும்பத்துக்காக எத்தனையோ பேர் காதலைத் தியாகம் செய்ததுண்டு.குடும்ப
சூழலுக்காக காதல் பாடலைத் தியாகம் செய்த ஒரே பாடலாசிரியன் நானாகத்தான் இருப்பேன் "இன்னிசைக் காவலன்" படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல் இதுதான்

பல்லவி:
சொல்லவா சொல்லவா வெண்ணிலாவே
என்னவோ என்னவோ என்கனாவே
கண்ணிலே ஆயிரம் மின்னலே
மந்திரம் போட வா தென்றலே
சொந்தங்கள் சேர்ந்திடும் நாளிலே
பொன்மழை தூவுதோ விண்ணிலே

சரணம்:1
சந்தோஷ ராகம்பாடும் நேரம்தானே
நெஞ்சோடு இன்பமான பாரம்தானே
ஆகாயம் வந்துபார்க்கும் வாழ்க்கைதானே
ஆஹாஎன் வீடு கூட வானம்தானே

எந்நாளும் ஓய்விலாத தந்தைதானே சூரியன்
என்றாலும் எங்களுக்கு ஸ்நேஹிதன்
பிள்ளைகள் சுற்றிவந்து கும்மிகொட்டும் பெண்ணிலா
அன்னைதான் எங்களுக்கு வெண்ணிலா

அன்பென்ற ராகம்பாடி ஆடுகின்ற வானம்பாடி
                                   (சொல்லவா சொல்லவா

சரணம்:2
தெய்வங்கள் சேர்த்துவைத்த சொந்தம்தானே
தெய்வீகம் என்பதிந்த பந்தம்தானே
பிள்ளைகள் ஆளுகின்ற காலம்தானே
பொய்பேசி மாட்டிக்கொள்ளும் பூக்கள்நாமே

பொன்வீடு காவலென்று ஆடிப்பாடும் பூங்கொடி
கண்தூங்கும் மெத்தைதானே தாய்மடி
எல்லார்க்கும் வாழ்க்கையுண்டு நம்பிப்பாடு கண்மணி
நம்போல வேறு இங்கு யாரடி

காலங்கள் நம்மை வாழ்த்தி கானம்பாடும் இந்தநேரம்
                                  (சொல்லவா சொல்லவா

திரைப்படத்தில் இந்தப்பாடலை கல்யாணி பாடியிருந்தார்.
ஆல்பத்தில் பாடியவர் கோபிகா. படத்தில் இந்தக் காட்சியைப் பார்க்க
விரும்பினேன்.நான் பார்க்கப் போகும்முன் படம் போய்விட்டது!!