Friday, April 29, 2011

அந்த ரசிகர்கள் அப்படித்தான் -எஸ்பிபி குட்டி-நூல் விமர்சனம்


இசை,இலக்கியம்,இயக்கம்.இந்தத் திரிவேணி சங்கமத்தில் கால் நனைத்துசில சமயம் கடலிலிறங்கி,அலைகள் காலுக்குக் கீழ் பள்ளம் பறிப்பதைப்போல் உணர்ந்தால் கரைக்கு வந்து சுண்டல் சாப்பிட்டபடியே ஏக்கமாய்முக்கடலின்உப்புக்காற்றுக்கு முகங்காட்டி அமரும் விதமாகத்தான் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான இளைஞர்களின் வாழ்க்கை அமைந்திருந்தது.

ஆலைப்பணியாளர்கள் குடும்பத்திலிருந்து வந்த காரணத்தால் மார்க்சீயப் பார்வையும்,அரையிரவு-முழு இரவு பணிநேர மாற்றங்கள் தரும் போதிய கால அவகாசமும்,அதிலெழுந்த வாசிப்புப் பழக்கமும், தொலைக்காட்சி முழு ஆட்சி செய்யாத எண்பது-தொண்ணூறுகளில் இடையறாமல் கேட்டுக்கொண்டிருந்த திரையிசையும் சேர்ந்து ஒரு ரசிகனாய், ஒரு படைப்பாளனாய், சமூக விமர்சகனாய்-சில நேரங்களில் இந்த மூன்று அம்சங்களும் கொண்ட இளைஞர்களை செதுக்கிய காலம்,பொற்காலப் பட்டியலில் இடம்பெற வேண்டிய காலம்.



எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடல்கள் மீது கொண்ட தீவிர ஈர்ப்பால் எஸ்பிபி குட்டி என்றே அழைக்கப்பட்ட குட்டி என்ற இளைஞனின் கதையை இளஞ்சேரல் விறுவிறுப்பாக சொல்லியுள்ள புத்தகம், எஸ்பிபி குட்டி."யோவ்!பேசாதய்யா! கை வச்சுருவனய்யா!" என்று மிதவுரிமை கொண்ட நெருக்கமான நண்பர்கள் நடுவிலான உரையாடல் மூலம் கதை நகர்கிறது.சின்ன வயதில் தாய்மாமாவுடனோ சித்தியுடனோ ஒட்டிக் கொண்டு வளர்ந்தவர்கள்,தங்கள் மாமா அல்லது சித்தியைப் போலவே தங்கள் அம்மாவை அக்கா என்று அழைக்கப் பழகி விடுவார்கள்.

குட்டியும் அப்படித்தான்.மழை நாளில்,முன்னெச்சரிக்கையாக மின்சாரத்தை அப்பா நிறுத்திவைத்திருக்க,இசை கேட்கும் வெறியுடன், "மெயினப் போடச்சொல்லுக்கா!"என்று சத்தம் போடுகிற இளைஞன். சங்கராபரணம் கேசட் இழை அறுந்துபோன எரிச்சலில் வருகிற நண்பர்களிடம் எல்லாம் "வள்"ளென்று விழுந்தும்,அவர்களின் பழைய குற்றங்களுக்கெல்லாம் தண்டனைகளை நிறைவேற்றியும் தன் மூலக்கோபத்தின் காரணம் புலப்படாமல் காத்துக் கொள்கிற இளைஞன். அந்த ரகசியம் அம்பலப்படும்போது,"அந்தாளுக்கு காபி கொடுக்காதக்கா" என்று கடிந்து கொள்கிற உணர்ச்சிமயமான மனிதன்.சங்கராபரணம் இழை அறுந்து போனதை மைனர் செயின் பறிபோன அதிர்ச்சியுடன் சொல்கிற ரசிகன்.

பெற்றோரோடும் பொருந்தாமல்,நண்பர்கள் மத்தியில் ஒத்திசைவு இருந்தாலும் அவ்வப்போது திமிருகிற இத்தகைய மனிதர்களை எல்லா நேரங்களிலும் நண்பர்களே தாங்கிக் கொள்கிறார்கள். ஒத்த ரசனையை,தேடலை,சித்தாந்த விவாதங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.அந்த மனிதனின் அதிரடிக்குள் இருக்கும் நுட்பத்தை, பொறுமையின்மையில் இருக்கும் பொறுப்புணர்வை உணர்ந்து உடனிருக்கிறார்கள்.

அப்படியொரு நண்பனாய் உடனிருந்து இளஞ்சேரல் இதனை எழுதியிருக்கிறார்.இதில் பேசப்படுகிற எஸ்பிபி குட்டி,தான் எஸ்பிபி குரலில் பாடுவதாய் கற்பனை செய்து கொண்டு,உள்ளூர்த் திருவிழாவில் பாடி,தோழிகளிடம் "நல்லாவேயில்லை பையா"என்று சான்றிதழ் வாங்குபவர்.சுபமங்களா வாங்கி வராமல் சாக்கு சொல்லும்  நண்பனிடம்,"போய்யா! பொய் சொல்லாதய்யா"என்று பொருமுபவர்.வாழ்வின் வெளியில் பச்சை மண்ணாய் மணக்கும் இத்தகைய மனிதர்கள் நம்மிடையே இருக்கிறார்கள் என்பது,இந்த நூல் தரும் முதல் ஆறுதல்.
   
தன் மெல்லிய ரசனைகளின் பட்டியலில் ஒன்றாக,குட்டி புறாப்பந்தயங்களிலும் ஈடுபாடு வைத்திருந்தார் என்பதும்,புறாக்களுக்கு தண்ணீரும் தானியமும் உண்ண உண்ண ஊட்டுபவராக இருந்தார் என்பதும்,ஆலைவிட்டு வரும் பெண்களுக்காக சாலையோரங்களில் நிற்கும் விடலைப்பசங்களுக்காக பச்சாதாபம் கொண்டிருந்தார் என்பதும், எஸ்.பி.பி.பாடல்களை குட்டி பாடுவது எஸ்.பி.பி.பேசுவது போலிருக்கும்என்பதும் இளஞ்சேரல் தருகின்ற முக்கியக்குறிப்புகள்.இந்தக் குறிப்புகளைக் கொண்டு மனதுக்குள் குட்டியை வரைந்து பார்க்க முடிகிறது.
தமிழ்சினிமாவை தரக்குறைவாகப்பேசினால் குட்டிக்கு கோபம் வந்து விடுமாம்.ஐ.நா.சபை என்றழைக்கப்படும் டீக்கடையில்,விவாதத்தின் உச்சியில்,இனி குட்டியிடம் பேசினால் சண்டை உறுதி என்று ஒவ்வொருவராகக் கழன்று கொள்ள,தான் மட்டும் மீந்திருந்ததையும் குட்டியை சமாதானப்படுத்த ஏவிய அஸ்திரத்தையும் காட்சிப்படிமம் போல் வர்ணிக்கிறார் இளஞ்சேரல்.
"டிரம்கள் அதிர்ந்து,பின் வயலினில் ஒரு கீர்த்தனை வழிந்து நிற்பது போன்று அமைதியாக இருந்தேன்.காற்று வேகமாக வீசி புழுதியை நிரப்பியது போலிருந்தது சபை.குட்டியை முதலில் மலையேற்ற வேண்டும். "எந்தப்படமோ மொழியோ இருந்தாலும் உனக்கு எஸ்பிபி மட்டும் பாடிருந்தா ஏன் ஏத்துக்கறே..அதுக்கு மட்டும் பதில் சொல்லுய்யா. உனக்கு எஸ்பிபி மாதிரி அவங்களுக்கும் புடுச்ச விசயம் இருக்குமில்லையா" நான் மைதானத்தை ஒரு பாயாக சுருட்டி வீசுவேனென்று எதிர்பார்க்கவில்லை.இறுதி அங்குசம் எஸ்பிபிதான். எஸ்பிபியைத் தவிர வேறில்லை.

அதன்பிறகு குட்டி முதல்நாள் பஸில் கேட்ட எஸ்பிபி பாடல்கள் தந்த பரவசத்தையும்,கண்டக்டரிடம்போய் "ஏங்க ! காலங்காத்தாலே இப்படி ரம்மியமான பாட்டு பாடிக் கேட்டுட்டு எப்படீங்க வேலை வெட்டிக்குப் போறது"என்று முறையிட்டதையும் சொல்ல கலைந்த சபை கூடி விடுகிறது.

கோவை போன்ற கிராமிய நகரங்களுக்கே வாய்க்கக் கூடிய இந்த வாழ்க்கை பற்றிய நுட்பமான பதிவு, எஸ்பிபி குட்டி.இளஞ்சேரலின் இயல்பான எழுத்தோட்டம், சுகமான வாசிப்பனுபவத்தை வழங்குகிறது.

வெளியிடு:அகத்துறவு,மனை எண் 19,ஐந்தாவது தெரு,சிவசக்தி நகர்,
இருகூர் கோவை 641103.விலை ரூ.80/


Thursday, April 21, 2011

நிகழ்வதாகுக


 கதவைத் திறந்து கோடை நுழைந்து
கனலால் கோலம் போடும் நேரம்
மதகைத் திறந்து பெருகும் வியர்வை
முதுகில் பாடும் கவிதை ஈரம்

கண்னை உறுத்தும் காலை வெய்யில்
மண்ணைக் கொளுத்தும் மதிய வெய்யில்
சாலை தகிக்கும் மாலை வெய்யில்
காலம் சுருளும் இரவின் கையில்!

தாகம் எடுத்த தாவர வகைகள்
ஈழத் தமிழராய் எரிந்து கருகும்!
விரித்த பாயை சுருட்டியதைப் போல்
வறண்ட நீர்நிலை வாடிச் சுருங்கும்

தேகம் வற்றிய கணிகையின் மீது
மோகம் வற்றிய வாடிக்கையாளனாய்
ஜன்னல் -கதவு-திறந்தே இருந்தும்
தென்றலுக்கு திசைகள் மறக்கும்

தேர்வு நேரப் பாரம் சுமக்கும்
பிள்ளைகள் மனதில் பாடம் கனக்கும்
எல்லாம் இழந்த அகதிகள் போல் -இலை
இல்லா மரங்கள் இறுகிக் கிடக்கும்

சுருதி குறைந்த குரலில் முனகும்
பறவைகள் சில பாட முயலும்
காரடங்கிய வானப் பரப்பில்
ஊரடங்கு உத்தரவைப் போல்
சிறகுச் சத்தம் ஓய்ந்து கிடக்கும்
விறகாய் தெருக்கள் காய்ந்து கிடக்கும்

வதம்செய்யும் கோடையின் வெய்யிற்கோபமே
இதம்செய்யும் மழைக்கு ஏற்பாடென்பதால்
தவம்செய்யும் மரங்களின் தேடலுக்கிரங்கி
நிகழ்வதாகுக மழைஅவதாரம்












Tuesday, April 19, 2011

கள்ள ஓட்டு போட்டேன்

"அண்ணே ! எங்க கட்சிக்கு ஓட்டு போட்டுடுங்க!" உறவோடும் உரிமையோடும் கேட்ட அந்தக் கட்சித் தொண்டர் எனக்கு நன்குஅறிமுகமானவர்.எப்போதும் லுங்கியிலும் எப்போதாவது எட்டுமுழ வேட்டியிலும் தென்படுவார்.தழையத் தழைய எட்டுமுழ வேட்டியில் எதிர்ப்பட்டால் கட்சி வேலையாய் வெளியே போகிறார் என்று பொருள்.கான்ஸ்டபிள் யாராவது எதிரே வந்தால், வணங்கிவிட்டு, மரியாதையி ன் அடையாளமாய் தன் வேட்டியின் முன்புறத்தைப் பற்றிக் கொண்டு ஒதுங்கி நிற்பார்.

வீடுகளுக்கு வண்ணம் பூசுவது, தண்ணீர் குழாய்களைப் பழுது பார்ப்பது என்று பலவிதமான வேலைகள் பார்ப்பார் என்றாலும் ஒரு வேலையையும் ஒழுங்காகப் பார்ப்பதில்லை என்பது அவரைப் பார்த்தாலே தெரியும்.என்னிடம் கேட்டபோது அவரை அருகே அழைத்துச் சொன்னேன். "ஒண்ணு தெரியுமா?இதுவரை நடந்த தேர்தல்களிலேயே நான் ஓட்டு போட்ட எந்தக் கட்சியும் ஜெயிச்சதே கிடையாது. ஒங்க கட்சிக்கு இந்த முறை போட்டுறவா?" என்றதும் அவர் முகம் இருண்டது. சுதாரித்துக் கொண்டு,"போங்கண்ணே! மேடையில பேசுற மாதிரியே எங்கிட்டயும் நக்கலடிக்கிறீங்க"என்றபடி நகர்ந்து விட்டார்.

உண்மையில் நான் ஒன்றுக்கு நான்கு ஓட்டுகள் போட்டு ஒரு வேட்பாளரின்
வெற்றியில் பங்கு வகித்திருக்கிறேன்.1988ல் நடந்த தேர்தல்.1988ல் தேர்தலே
நடக்கவில்லை என்கிறீர்களா? எங்கள் கல்லூரியில் நடந்த தேர்தல் அது.என் வகுப்புத் தோழன் தங்கவேல் மாணவர் மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டான்.எங்கள் துறையில் எங்கள் ஜூனியர் கைலாஷ் மாணவர் மன்ற செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டான்.இருவருமே அதிர்ந்துபேசத்
தெரியாதவர்கள்.வசதியான பின்புலத்தில் இருந்து வந்தாலும் கொங்குநாட்டு
கிராமப்புற இளைஞர்களின் கண்களில் சுடர்விடும் வெள்ளந்தித்தனம் இவர்களிடம் சில அவுன்சுகள் கூடுதலாகவே உண்டு.

கல்லூரியில் படிக்கும்போதே இலக்கிய மேடைகளில் நான் தோன்றிக்கொண்டிருந்தேன். அப்போது சென்னையின் தூர்தர்ஷன் மட்டும்தான் இருந்தது. (இப்போதைய பொதிகை)அதில்வேறு இரண்டு மூன்றுமுறை தோன்றியிருந்தேன். அப்படி ஒருதடவை தொலைக்காட்சியில்
தோன்றிய நான் மறுநாள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் கல்லூரிக்குப் போனேன்.யாரும் பெரிதாகக்கண்டுகொள்ளவில்லை. எந்தப் பயலும் எந்த மயிலும் நேற்று டீவி பார்க்கவில்லையா என்று குழம்பினேன். இத்தனைக்கும்
அப்போது ஆற்காட்டார் கூடப் பதவியில் இல்லை.

மதிய உணவு இடைவேளையில் ஒரு மாணவர் வந்தார்.வந்தார்என்ன
வந்தார்....வந்தான்! "நேத்து..நேத்து.." என்று தொடங்கினார். "சொல்லுங்க"என்றேன் ஆவலாக! "நேத்து டீவியிலே ஒங்க மாதிரியே ஒருத்தர் வந்தார் பாத்தீங்களா?" என்றான்.

இப்படி  நொந்த அனுபவங்கள் சில பல  இருந்தன. ஆனால் மேடையில் பேசுபவர்கள் நல்லவர்கள் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கும் மூடநம்பிக்கை என் வகுப்புத் தோழர்கள் பலருக்கும் இருந்தது.மூன்று நான்கு பேர்களைத் தவிர யாரும் என்னை ஒருமையில் அழைக்க மாட்டார்கள்.
தங்களுக்குள் கெட்ட வார்த்தைகளில் பேசிக் கொண்டிருந்தாலும் என்னைப்
பார்த்ததும் நிறுத்திக் கொள்வார்கள்."டேய்!புலவருக்கு இதெல்லாம் பிடிக்காதுடா" என்று வேறு சொல்வார்கள்.நான் மனசுக்குள் அதைவிட
மோசமான வார்த்தைகளால் திட்டிவிட்டு நகர்ந்து விடுவேன்.

இந்த நேரத்தில்தான் கல்லூரித்தேர்தல் வந்தது.இளங்கலையில் நான் படித்தது
சோஷியாலஜி.என் வகுப்புத் தோழன் தங்கவேல் தலைவர் பதவிக்குப் போட்டியிட முடிவானதும் வகுப்பில் ஏறக்குறைய எல்லோரும் என்னைத் தேடினார்கள்.நான் வழக்கம் போல் ஸ்டாஃப் ரூமில் அமர்ந்து துறை
விரிவுரையாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.ஊரோடு
ஒத்துவாழ்கிறேனோ இல்லையோ ஆசிரியர்களுடன் ஒத்து வாழ்ந்தவன் நான். ஒருமுறை இன்டர்னல்ஸ் தேர்வில் எனக்கு அறுபது மதிப்பெண்கள்.விஷயம் என்னவென்றால் நான் அந்தத் தேர்வை எழுதவேயில்லை!!

விரிவுரையாளர்கள் அறைக்குள் வந்த வகுப்புத் தோழர்கள் என்னைத் தனியாகத் தள்ளிக்கொண்டு போனார்கள். "புலவரே! நம்ம தங்கவேலு தேர்தல்ல நிக்கறான்.தேர்தலன்னைக்கு வோட்டிங் தொடங்கறதுக்கு முன்னே அவன் 10 நிமிசம் பேசோணும்.அதுலே 7 நிமிசம் தமிழ்ல பேசட்டும்.3 நிமிசத்துக்கு மேல அவனுக்கு இங்கிலீசு தாங்காது. எழுதித் தர்றதோட அவனப் பேச வைக்கறது ஒங்க பொறுப்பு".

சிவாஜி கணேசன் காமரா முன் முதன்முதலாகப் பேசிய வசனம்,"சக்ஸஸ்" என்று எங்கேயோ படித்திருந்தேன். எனவே அந்த உரை "வெற்றி"என்றுதான் தொடங்க வேண்டும் என்று நான் சொன்னதும் எல்லோரும் ஆஹா ஆஹா என்று ஆமோதித்தார்கள். சிவாஜி கணேசன் தேர்தலில் ஜெ யித்திருக்கிறாரா என்று யாரும் கேட்கவில்லை. "வெற்றி எனும் வாசகத்தை நான் எழுதுவதற்குரிய வார்த்தைகளாய் இங்கே வீற்றிருக்கும் வாலிப நண்பர்களே! நெற்றிப் புருவத்துக்கு நடுவே குங்குமத்தால் கவிதை எழுதி வந்திருக்கும் இனிய தோழியரே!வணக்கம்" என்று அந்த உரை தொடங்கும்.அந்த இடத்தில்
என்ன தோரணையில் வணக்கம் வைக்க வேண்டும் என்பதுவரை
சொல்லித் தர வேண்டிய வேலை என்னுடையதாகிவிட்டது.

ஆங்கில உரையை எழுதித்தரும் பொறுப்பு,எங்களுடன் படித்த தாமஸ் மேத்யூ என்ற மாணவனுக்குத் தரப்பட்டது.தமிழ்ப்பேச்சு சொல்லித் தரப்படும்போது ஆங்கிலமே மேல் என்ற முடிவுக்கும் ஆங்கில வாசகங்கள் சொல்லித் தரப்படும்போது தமிழே சிறந்தது என்றும் தங்கவேல் முடிவெடுத்தான்.ஒரு கட்டத்தில் "எனக்கு வாய்பேசவராதுன்னு சொல்லீடுங்கப்பா! அனுதாப ஓட்டாவதுவுழுகும்! எதிர்த்து நிக்கறவியளக்கூட செயிச்சுடலாமாட்ட! இந்த
ரெண்டு பேரு இம்ச தாங்கலையே!" என்று தங்கவேல் புலம்பத்
தொடங்கினான்.

"ஒழுங்கா பேசிப்பழகு தங்கவேலு! பொண்ணுக பேச்சக் கேட்டுத்தான் ஓட்டு
யாருக்குன்னு முடிவு பண்ணுவாளுக' என்று மகுடீஸ்வரன்
எச்சரித்துக் கொண்டிருந்தான்.

"உங்கள் பாதங்கள் படுகிற பாதையிலே என்னால் மலர்களைப்
பரப்ப முடியாவிட்டாலும் முட்கள் ஏதுமில்லாமல் பார்த்துக்
கொள்ள முடியும் என்று முழுமையாக நம்புகிறேன்"என்ற வரியைப்
பேசும்போது, "முட்களைப் பரப்ப முடியாவிட்டாலும் மலர்கள் இல்லாமல்
பார்த்துக் கொள்ள முடியும்"என்று தங்கவேலு பேசிக்காட்ட, நாங்கள்
திடுக்கிட்டோம்."புலவரே! பூரா ம மா மு மூ ன்னு வர்ற மாதிரி
எழுதீட்டீங்களா! குழம்பிப் போகுது!"என்று காரணம் சொன்னான்.இந்தியா சமயச் சார்பற்ற நாடு என்பதால் இன்னொரு வரியையும் முத்தாய்ப்பாக வைத்திருந்தேன்."கீதையின் கனிவையும் பைபிளின் பரிவையும் குரானின் கருணையையும் கலந்த ஒரு பாசத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் துடிக்கிறேன்" என்ற வரியை உணர்ச்சியுடன் சொல்ல வைப்பதற்குள் எனக்கு
கடவுள் நம்பிக்கையே போய்விட்டது.

தேர்தல்நாள் வந்தது. எங்கள் வகுப்பில் நான்குபேர் வரவில்லை.அந்த
நான்குபேர் ஒட்டுக்களையும் ரகசியமாகப் போடும் பொறுப்பு என்னை வந்து சேர்ந்தது.அந்தப் பதட்டத்தில் இருந்த எனக்கு தங்கவேலின் பேச்சுக்கு கைத்தட்டலும் விசிலும் அள்ளிக்கொண்டு போனது கவனத்தில் பதியவேயில்லை.

கள்ள ஓட்டை வெற்றிகரமாகப் போட்டு வந்தேன்.இதற்காக இனி யாரும் நடவடிக்கை எடுக்க முடியாது.ஏனெனில் 17 வாக்குகள் வித்தியாசத்தில் தங்கவேலு வெற்றி பெற்றிருந்தான்.நான் சொல்லித் தந்த உரை தங்கவேலுவுக்கு பல வருஷங்கள் கழித்தும் நினைவில் இருந்தது. ஆனால் இப்போது அவனை அழைத்து பேசிக்காட்டுமாறு சொல்ல முடியாது.கடந்த ஆகஸ்ட் 15ல் அவன் மாரடைப்பால் காலமானான்.

Friday, April 8, 2011

அவள் ஒரு தொடர்கதை

 
 
 
 
 
 
 
குணச்சித்திர வேடம் என்று சொன்ன மாத்திரத்தில் நம் நினைவுக்கு வருகிற முகங்களில் நடிகை சுஜாதாவின் முகமும் ஒன்று. தளும்பாத உணர்ச்சிகளும் தரமான நடிப்பும் அவருடைய பலங்கள். அளந்து ஊற்றின மாதிரி அளவான முகபாவங்களைக் காட்டக்கூடியவர் சுஜாதா.
 
காதல் காட்சிகளில் கூட நாணமோ, மோகமோ பொங்கி வழிந்ததில்லை. அதீத  முகபாவனைகளால் சில  நடிகைகள் படுத்தியெடுப்பார்கள். அப்படியொரு
நடிகை பற்றி ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் திரு கிருஷ்ணன்
 ஒருமுறை   சொன்னார், "அந்த அம்மா பாட்டுப் பாடி நடிச்சா கண்ணை
மூடீட்டு பார்க்கலாம் சார்". மிகையம்சம் இல்லாத மிதமான நடிப்பு சுஜாதாவின் சிறப்பம்சம்.
 
நிறைய பாடல்களை வானொலியில் கேட்டு நமக்குள் சில கற்பனைகள்
வரும். அந்தக் கற்பனைகளுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத காட்சி
அமைப்பைக் கண்டால்  "சப்" பென்று ஆகிவிடும். அத்தகைய பாடல்களுக்கு
உதாரணம், "உன்னையறிந்தால்-நீ உன்னையறிந்தால்"
 
.அதேபோல வானொலியில் பலமுறை கேட்டுவிட்டு காட்சியாகப் பார்த்தபோது சுஜாதா நடித்த பல பாடல்காட்சிகள் நம் கற்பனையை விடவும் பலமடங்கு பலம் பொருந்தியவையாக அமைந்திருந்தது பெரிய  ஆறுதல். சிவாஜி- சுஜாதா ஜோடியாக நடித்த பாடல் ஒன்று. காதலும் காமமும் ஒருசேர வெளிப்படும் காட்சியமைப்பு  படத்தின் பெயர் நினைவிலில்லை. "அந்தப்புரத்தில் ஒரு மகராணி.அவள் அன்புக்கரத்தில் ஒரு மஹராஹன். கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள் காமன் திருச்சபைக்கு வழிகேட்டாள்" என்பது பல்லவி.இது வரையில் ஆண்குரல்.
 
காமம் மீதூறி கண்சிவந்த நிலையில் காதலி இருப்பாள் என்று வர்ணனை வந்த பிறகு நாயகி பாட வேண்டும். "சாமந்திப் பூக்கள் மலர்ந்தன-இருசந்தனத் தேர்கள் அசைந்தன" என்ற வரிகளில்  "சாமந்திப் பூக்கள் மலர்ந்தன" என்ற வரிதான்  நாயகியினுடையது.. நிலைகுத்திய  பார்வையில், காமமும்  காதலும் மின்னிப் போகும்  அற்புதமான முகபாவனையை வெளிப்படுத்தியிருப்பார் சுஜாதா."ஆசை கனிந்துவர அவன் பார்த்தான், அன்னம் தலைகுனிந்து நிலம் பார்த்தாள்" என்ற வரியில் மூன்றாவது  மின்னலாய்  நாணமும் சேர்ந்து கொள்ளும். 
 
ஏறக்குறைய இதேபோல காதலும் காமமும் கலந்த பாடல்காட்சி, கடல்
மீன்கள் படத்தில் வரும் "தாலாட்டுதே வானம்" என்ற பாடல். அதிலேயும்
உணர்ச்சியின் உக்கிரத்தை தளும்பாத முகபாவனைகளில் உணர்த்தியிருப்பார்  சுஜாதா. "மேல்வானத்தில் ஒரு நட்சத் திரம்-கீழ்வானத்தில் ஒரு பெண்சித்திரம்" போன்ற கச்சிதமான வரிகள் அதில்அமைந்திருக்கும்.
 
விஜயகுமாருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருப்பார். அந்தப் படத்தின் பெயரும் நினைவிலில்லை. எல்லோரும் சேர்ந்து தம்பதிகளின்  மணநாளைக்  கொண்டாடும் காட்சியில் நாயகி பாடுவதாக ஒரு பாடல்."ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் பிறவிகள் பூமியில் பிறந்திட வேண்டுகிறேன். அத்தனை பிறப்பிலும் இத்தனை உறவும் அருகினில் இருந்திட வேண்டுகிறேன்" என்பது பல்லவி.
 
இந்தப் படத்தில் மனநிலை குன்றிய மைத்துனனாக ஒய்.ஜி.மகேந்திரன்
இயல்பாக நடித்திருப்பார். அவரைப்பற்றிய வரிகள், "மைத்துனன் நம்பி
மதுசூதன் பைத்தியம் அல்ல பாலகன்தான்". இதில் "பாலகன்தான்" என்ற
சொல்வரும்போது கண்களில் கனிவும் தாய்மையும் பளிச்சிட்டுப்
போகும் . கதையைக் கண்களால் சொன்னவர் சுஜாதா.
 
முதல் படத்திலேயே முழுத்திறமையையும் நிரூபிக்கிற வாய்ப்பு மிகச்சில நடிகைகளுக்குத்தான் அமையும்.அப்படி சுஜாதாவுக்கு அமைந்த படம்,அவள் ஒரு தொடர்கதை. விதம்விதமான் வாழ்க்கைச் சூழல்களை எதிர்கொள்ளும் அருமையான  பாத்திரம் அது.எம்.எஸ்.பெருமாள் அவர்களின் கதை. அதன்பிறகு நாயகியை மையப்படுத்தி வெளிவந்த பாத்திரங்கள் பலவற்றிலும் ஒளிவீசினார் சுஜாதா.
 
அகலின் அடியில் படரும் இருட்டாய் அவருடைய ஆரம்பகால வாழ்வில்
ஆயிரம் சோதனைகள். அவருடைய இளமை நாட்கள் வலியிலும் வேதனையிலும் கழிந்திருக்கின்றன. அவருடைய மிக நெருங்கிய உறவினர்
ஒருவர், மாற்றுத் திறனாளி. அடுத்த அறையில் இளம்பெண்ணாகிய
சுஜாதா இருப்பதையும் பொருட்படுத்தாமல் முறைகேடான
 நடவடிக்கைகளில்  ஈடுபடுவாராம். தன் நம்பிக்கைக்குரிய சக நடிகர்
ஒருவரிடம், "கைவண்டி இழுக்கிற ஒருவருக்குக் கூட என்னைக் கல்யாணம்
செய்து வைத்துவிடுங்கள்" என்று சுஜாதா பலமுறை கண்ணீர் வடித்ததாக
அந்த நடிகர் என்னிடம் சொல்லியிருக்கிறார்.
 
 ஆயிரம் வலிகளுக்கு நடுவிலும் ஒளிவீசிய சுஜாதா ,ஒரு துருவ நட்சத்திரம். நோயுற்ற நிலையில் கடந்த ஐந்தாண்டுகளாய் திரையுலகிலிருந்து விலகியே இருந்தார். 58 வயதில் மரணமடைந்தாலும் ரசிகர்களின் மனத்திரையில் அவர் ஒருதொடர்கதை.என் அபிமான நடிகை திருமதி சுஜாதா அவர்களுக்கு என் அஞ்சலி.
 

Tuesday, April 5, 2011

அம்பின் கண்ணீர்

கூடு திரும்பிய பறவையின் மனதில் நிரம்பிக்கிடக்கும் ஆகாயம்போல் நிர்மலமாய் இருந்தது இராமனின் திருமுகம். சிரசை அலங்கரித்த மகுடமும் திசைகளை அதிரச்செய்த எக்காளமும் அன்னையர் தூவிய அட்சதைகளும் அந்த நிர்க்குணனைச் சலனப்படுத்தவில்லை. வசிட்ட மகான் வாழ்த்திய மொழிகள் எந்தக் கிளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. தார்கள் அலங்கரித்த தடந்தோள்களில் மீதமிருந்தது அனுமனின் அணைப்பில் விளைந்த சிலிர்ப்பு. ஒரு குழந்தையின் தீண்டல் மென்மையும் தந்தையின் பரிவும் பக்தனின் பணிவும் கலந்த கலவையாய் அமைந்திருந்தது அனுமனின் தொடுகை. "பொருந்துறப்புல்லுக" என்று தான் அழைத்தபோது இராம நாமத்தை ஓயாது உச்சரித்த அனுமனின் இதழ்கள் ஒரு கணம் உறைந்ததை மனத்திரையில் மீண்டும் கண்ட காகுத்தனின் கண்களில் சின்னதாய் ஒரு மின்னல். தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும்பதம் என்ற இலக்கணத்திற்கு இலக்கியமாய் எழுந்தது. அந்தச் சம்பவம். எல்லோருக்கும் மன நிறைவோடு விடைபெற்றார்கள் என்ற எண்ணமே சொல்ல முடியாத நிறைவையும் நிம்மதியையும் தந்தது இராமனுக்கு.


ஆனந்தவாரிதியில் அமிழ்த்து கிடந்த அயோத்தி, இரவென்னும் தேவதையின் அரவணைப்பில் உறங்கிகொண்டிருந்தது. கார்வண்ண மேனியன் ஆளுகையின் கீழ் அச்சமின்றி வாழும் அதே பாதுகாப்புணர்வை அந்த நீளிருள் பொழுதினிலும் உணர்ந்து குழந்தைகள்போல் தூங்கிக் கொண்டிருந்தார்கள் அயோத்தி மாநகரத்து மக்கள். அந்தபுரம் நோக்கி மிக நிதானமாய் அடியெடுத்து வைத்த அண்ணலின் செவிகளில் இராமபாணமாய்ப் பாய்ந்தது விரக்தியின் பெருமூச்சு. தன் தோளுக்கு மிக அருகில் காதுகளில் உரசி கந்தகமாய்க் காயும் இந்த விரக்திப் பெருமூச்சு யாருடையது? துணுக்குற்றுக் திரும்பினான் இராமன். அருகில் ஆளரவம் இல்லை. அப்பொழுதுதான் மாடத்து விளக்கை அமர்த்தியிருந்தனர் தாதிகள். இருளில் எதுவும் புலப்படவில்லை. சில விநாடிகள்தான். பெருமூச்சின் நதிமூலம் பிடிப்பட்டது இராமனுக்கு. தன் தோள்களை அலங்கரிக்கும் கோதண்டத்திலிருந்தும் அம்பறாத் தூணியிலிருந்துமே அந்தப் பெருமூச்சு கிளம்பியதை உணர்ந்துகொண்டான்.



பரிவும் தயையும் பொங்கப் பொங்க பச்சிளங்குழந்தையைக் கைகளில் ஏந்தும் தாயின் கனிவோடு அவற்றை வருடிக் கொடுத்தான் தசரத புத்திரன். "என்ன குறை உங்களுக்கு? ஏன் இந்தப் பெருமூச்சு?" வாஞ்சையோடு வெளிப்பட்டது அவன் குரல். கோதண்டம் குமுறலோடு பேசத் தொடங்கிற்று. "எல்லோருக்கும் எல்லாம் கொடுத்தீர்கள். எங்களுக்கு என்ன கொடுத்தீர்கள்?" இராமன் பதில் சொல்ல எத்தனிக்கும் முன்பாக வார்த்தைக் கணை  வெடித்து கிளம்பியது. அம்பறாத் தூணியிடமிருந்து.  "சொல்லின் செல்வனை அடிமைகொண்ட செம்மலல்லவா! இவருக்குப் பேசக் கற்றுக் கொடுக்கவா வேண்டும்? சீதைக்குக் கொடுக்கும் முன்னரே என் தோள்களை உங்களுக்கல்லவா தந்தேன் என்று சமத்காரமாகச் சொல்லிவிடுவார்" அம்பின் எள்ளல் வலித்தது அண்ணலுக்கு.

"ஏதேது! என் கரங்களில் மட்டுமே கூட்டணி அமைக்கும் நீங்கள் இப்போது எனக்கெதிராக ஒன்று சேர்ந்துவிட்டீர்கள் போலிருக்கிறதே..." இள நகையோடு பேசி இறுக்கத்தைத் தளர்த்த முயன்றான் இராமன்.

"இராவண வதத்திற்க்குத் துணை நின்ற எல்லோருக்கும் அள்ளியள்ளிக் கொடுத்த நீ, எங்களுக்கு என்ன கொடுத்தாய்? அரக்கர்தம் குருதியையும்
அவச்சொற்களையும் சேர்த்துச் சுமக்கும் சாபம் அல்லவா கொடுத்தாய்." குளிர்
நிலவாய் கனிந்திருந்த அண்ணலின் திருமுகத்தில் கவலைக் குறிகள். "என்ன
சொல்கிறீர்கள்? வாலிவதம் குறித்து வழக்காடப் போகிறீர்களா? அல்லது
இராவணனைக் கொன்றது உங்களுக்குச் சம்மதமில்லையா?" சீறலில் நனைந்து வந்தது வள்ளலின் வினா.

"இறைவனே, இராவண வதம் உன் அவதார நோக்கம் மட்டும்தானா? எங்கள்
இருப்புக்கும் அதுவே நோக்கம். வாலி வதம் குறித்த வழக்குதான் காலகாலமும்
நிகழபோகிறதே... எங்கள் வருத்தம் அவை குறித்தல்ல. சொல்லப்போனால்
கிட்கிந்தையில் நீ கொடுத்த காயம், ஆராண்ய வாசம் முடிந்து அயோத்தி வந்த
பிறகும் ஆறாத இரணமாய் எங்களை அல்லல்படுத்துகிறது."

சிவதனுசு போல் 'சடசட' வென்று நெறிபட்டன சீதை கேள்வனின் புருவங்கள்.
"கிட்கிந்தையில் விளைந்த காயமா? வாலி வதமும் அல்ல என்கிறீர்கள்  . . . வேறென்ன?"

"நீ மறந்திருப்பாய் என்று எங்களுக்கு தெரியும். வாலி வதத்திற்கு நீ புறப்படும் முன்பாக எதேச்சையாக நிகழ்வதுபோல் ஒரு நாடகத்தை அனுமனும்
சுக்ரீவனும் அரங்கேற்றினார்களே... நினைவிருக்கிறதா ? அறிந்தும்
அறியாததுபோல் நீ இருக்க சூழ்நிலைக் கைதிகளாய் நானும் உன் கணைகளும் அந்தநாடகத்தில் பங்கேற்றோமே... மறந்து விட்டாயா? உன் வில்வன்மை விளங்காத சுக்ரவன் தன் னுடைய ஆறுதலுக்காக மராமரங்களை எய்யச் சொன்னானே இராமா?"

அடுத்தவினாடி இராமனின் மனக்கண்ணில் தெரிந்தன மலைபோல் எழுந்த அந்தமரங்கள்;ஆகாயம் முட்டி அதற்கு அப்பாலும் சென்ற அதன் கிளைகள்வேதங்களைப்போல விரிந்து கிடந்தன. கோள்களும் விண்மீன்களும் அந்த மரங்களின் கிளைகளில் தொங்கும் மலர்களாகவும் கனிகளாகவும் கண்களுக்கு தெரிந்தன. ஊழி பெயர்ந்தாலும் குலையாதவையாய் உலகைத் தாங்கும் ஏழு மலைகளான கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், கந்தமாதனம், ஆகியவைபோல் அல்லவா அவை நின்றன! அந்த மரங்களின் காய் கனிகள் விழ நேர்ந்தால் ஒருபோதும்  அவை பூமியில்
விழுந்ததில்லை. உதிர்ந்த மறுகணமே தம் கிளைகளை உரசிக்கொண்டிருக்கும் ஆகாய கங்கையில் கலந்து சமுத்திரத்தில் சேர்ந்துவிடும். அந்த மராமரங்களின் கிளைகளில் இளைப்பாறுவதால் சூரியனின் புரவிகள் சோர்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன என்றும் அந்த மரக்கிளைகள் உரசித்தான் வெண்ணிலாவில் தழும்பு விளைந்ததென்றும் மராமரங்களின் மகத்துவததைக் கேள்வியுற்றிருக்கிறான் இராமன்.

விசுவரூபம் எடுத்த வாமனனின் ஏழு வடிவங்களாய் எழுந்த நின்றனவே அந்த
மரங்கள். வாலிக்கும் சுக்ரீவனுக்கும் விளைந்த பகையுணர்ச்சிபோல் முற்றிச்
செழித்த அந்த மராமரங்களின் வேர்கள் ஒவ்வொன்றும் ஐந்து தலைகளையும்
உயர்த்திய ஆதிசேடனை நினைவுறுத்தி நின்றன. இந்த ஏழு மரங்களில் ஏதேனும் ஒன்றை எய்தால் போதும் என்று சுக்ரீவன் வேண்டியது இராமனைச் சீண்டியது. கோதண்டத்தை வளைத்த மாத்திரத்தில் எழுந்த பேரோசை கேட்டு, கால் பிடரிபட கதறி ஓடின வானரங்கள். எண்திசை யானைகளும் மயங்கின. கல்ப காலத்தின்  இறுதி நேர்ந்ததென அமரர்கள் அஞ்சினர கோதண்டத்திலிருந்து  கிளம்பிய கணை ஒற்றை மரத்தையா ஊடுருவியது? ஏழு மரங்களையும் துளைத்து ஏழு உலகங்களையும் துளைத்து மீண்டது. எழு என்னும் எண்ணிக்கை மேல் இராமன் கடும் சினம்கொண்டானோ என்று ஏழு கடல்களும் ஏழு மலைகளும் ஏழு ரிஷிமார்களும் ஏழுகன்னியரும் சூரியனின் தேரில் பூட்டிய ஏழு புரவிகளும் கலங்கி நிற்க இராகவன் பகழி மீண்டது.

பழைய நினைவுகளில் லயித்துக் கிடந்த இராமன் சட்டென்று மீண்டான்."எப்போதும் நீ இப்படித்தான்! மிதிலையில் மன்னன் பெற்ற வரமாய்க் கிடந்தசிவதனுசை வளைக்கத்தான் சொன்னார்கள். நீயோ அதனை முறித்தாய். உன் வரம்பிலா ஆற்றலை விளங்கிக்கொள்ளும் விவரமில்லாத சுக்ரீவனின் வேண்டுகோளுக்காக அத்தனை பெரிய மரங்களைக் கணைகொண்டு துளைத்தாயே... இது என்ன அறம்?வாலியையும் சேர்த்து நீ அம்பு தொடுத்த நிராயுதபாணிகளின்  எண்ணிக்கைஎவ்வளவு தெரியுமா? எட்டு!"

நிலைகுலைந்து போனான் இராமன். நினைத்தும் பார்க்காத தாக்குதல்.
கருதியேபாராத குற்றச்சாட்டு. அம்பறாத்தூணியின் அடுத்த பொறுமல்
பாய்ந்த்தது. "எத்தனை கம்பீரமான மரங்கள் இராமா! என்ன ஒரு பிரம்மாண்டம்!  தாடகையின் மீது அம்பெய்யச் சொன்ன தவமுனிவனோடு தர்க்கம் செய்த நீ, தாவரங்கள் மேல் கணை தொடுக்கத் தயங்கவேயில்லையே! இது என்ன நியாயம்? எங்களை எய்ததென்னவோ நீதான்! எய்தாப் பழி எய்தியவர்கள் நாங்கள் அல்லவோ?

ஒன்று தெரியுமா இராமா? நீ இட்ட கட்டளையை சட்டென்று முடித்தே பழகிய
கணைக்கு எழாவது மரத்தை துளைத்து வெளிவந்தபோதுதான் நடந்த சம்பவத்தின் விபரீதம் புரிந்த்து. வாலி மேல் எய்தபோது வேலை நிறுத்தத்தின் அடையாளமாய் அவன் மார்பைத் துளைக்காமல் மையத்திலேயே இருந்து எங்கள் எதிர்ப்பைக் காட்டினோமே அது மராமரங்களை எய்ததற்கும் சேர்த்துதான்."

கண்கள் இருண்டன இராமனுக்கு, கால்கள் தள்ளாடின. பிடிமானத்துக்குப்
பரபரத்தன கரங்கள். வியர்வையில் குளித்தது வண்ணத் திருமேனி. எவ்வளவு பெரிய பாவமது. என் வலிமையை ஓர் எளிய குரங்குக்கு நிரூபிக்க மராமரங்களா இலக்கு! மனம் குமைந்து மறுகினான் கோசலை மைந்தன்.

கோதண்டம் கூறிற்று: "இறைவனே எம்மை ஆளுடைய தலைவனே! உம் திருஉள்ளத்தைக் காயம் செய்தமைக்கு மன்னித்தருள்க. ஆயினும் இது எங்கள் கடமை. மராமரங்கள் மீது நீ தொடுத்த அம்பு சப்தஜாதி. அந்த ஏழு துளைகளே நாதஸ்வரம் என்னும் இசைக்கருவியாய் இனி தோன்றும். அந்தக் கருவியில் எழும் இன்னிசை மராமரங்களின் காயங்களுக்கு மருந்தாகும். அவற்றுக்குத் துணை வாத்தியமாய் அதிரும் மத்தளத்தின் "தத்திமிதோம் தத்திமிதோம்" என்கிற ஓசை "மன்னித்தோம் மன்னித்தோம்" என்று மரங்கள் சொல்வதாய் உனக்குக் கேட்கும். மற்றவர்களுக்கு அது மங்கல வாத்தியம். உனக்கோ அந்த மராமரங்களின் மன்னிப்பு கீதம். தம்மைப் படைத்த கடவுளே தம்மை துளைத்தபோதிலும் மராமரங்கள் உனக்கு அந்த வாத்தியங்கள் வழியே தங்களை மீண்டும் அர்ப்பணிக்கும்." பேசி முடித்தன,வில்லும் அம்பும். உள்மனக் காயம் ஆறாது மலர் தூவிய மஞ்சத்தில் இரவெல்லாம் தவித்தான் இரகு குலத்திலகன். பொழுது புலர்வதற்காக நிமித்தங்கள் தோன்றின. உறக்கம்  துறந்த உத்தமனின் கண்களைப்போல் செக்கச் சிவந்த பிழம்பாக
கிழக்கேஉதித்தான் கதிரவன்.

(ரிஷபாரூடன் என்ற புனைபெயரில், 2011 மார்ச் ரசனை இதழில் எழுதியது)

Friday, April 1, 2011

காட்டுச் சுனை



சித்திரம் தீட்டிட விரும்பிவந்தேன் -திரைச்
சீலையில் உன்முகம் தெரிகிறது
எத்தனம் இன்றியென் தூரிகையும்-உன்
எழில்முகம் தன்னை வரைகிறது
எத்தனை தேடல்கள் என்மனதில்-அவை
எல்லாம் குழைத்தேன் வண்ணங்களாய்
நித்திலப் புன்னகை தீட்டுகையில்-அந்த
நிலவொடு விண்மீன் கிண்ணங்களாய்!!
 
கண்களின் பாஷைகள் வரைவதற்கு-அந்தக்
கம்பனின் எழுதுகோல் வாங்கிவந்தேன்
பண்ணெனும் இன்சொல் வரைவதற்கோ-நல்ல
புல்லாங்குழலொன்று கொண்டுவந்தேன் 
மண்தொடும் புடவை நுனிவரைய-அந்த
மன்மதன் அம்புகள் தேடிவந்தேன்
பெண்ணுன்னை முழுதாய் வரையவென்றே-இந்தப்
பிறவியைக் கேட்டு வாங்கிவந்தேன்
 
பொன்னில் நனைந்தநல் வளைவுகளும்-எனைப்
பித்தெனச் செய்யும் அசைவுகளும்
மின்னில் எழுந்தவுன் புன்னகையும்-நல்ல
மதுத்துளி சுமக்கும் பூவிதழும்
என்னில் கலந்தவுன் பேரழகும்-இங்கே
எழுதிக் காட்டுதல் சாத்தியமோ
இன்னும் எத்தனை சொன்னாலும் -உன்
எழிலெந்தன் புனைவுக்கு வசப்படுமோ
 
உள்ளம் என்கிற திரைச்சீலை -அதில்
உன்னை நீயே வரைந்துதந்தாய்
வெள்ளம் வருகிற பாவனையில்-என்
வாழ்வில் நீயே விரைந்துவந்தாய்
விள்ளல் அமுதம் விரல்நுனியில்-என
விநாடி நேரம் தீண்டிச்சென்றாய்
துள்ளும் கலைமான் ஜாதியடி-என்
துயிலெனும் வனத்தில் திரிந்திருந்தாய்
 
காட்டுச் சுனையெனப் பாய்ந்துவந்தே-என்
கனவின் வேர்களை வருடுகிறாய்
மீட்டும் வீணையின் தந்திகளை-உன்
முறுவல் கொண்டே அதிரச்செய்தாய்
காட்டிய உவமைகள் அனைத்தையுமே-உன்
கால்களின் கொலுசில் கோர்த்துக் கொண்டாய்
வாட்டும் கருணை கொண்டவளே-என்
வாழ்வை எழுதி வாங்கிக் கொண்டாய்