கள்ள ஓட்டு போட்டேன்

"அண்ணே ! எங்க கட்சிக்கு ஓட்டு போட்டுடுங்க!" உறவோடும் உரிமையோடும் கேட்ட அந்தக் கட்சித் தொண்டர் எனக்கு நன்குஅறிமுகமானவர்.எப்போதும் லுங்கியிலும் எப்போதாவது எட்டுமுழ வேட்டியிலும் தென்படுவார்.தழையத் தழைய எட்டுமுழ வேட்டியில் எதிர்ப்பட்டால் கட்சி வேலையாய் வெளியே போகிறார் என்று பொருள்.கான்ஸ்டபிள் யாராவது எதிரே வந்தால், வணங்கிவிட்டு, மரியாதையி ன் அடையாளமாய் தன் வேட்டியின் முன்புறத்தைப் பற்றிக் கொண்டு ஒதுங்கி நிற்பார்.

வீடுகளுக்கு வண்ணம் பூசுவது, தண்ணீர் குழாய்களைப் பழுது பார்ப்பது என்று பலவிதமான வேலைகள் பார்ப்பார் என்றாலும் ஒரு வேலையையும் ஒழுங்காகப் பார்ப்பதில்லை என்பது அவரைப் பார்த்தாலே தெரியும்.என்னிடம் கேட்டபோது அவரை அருகே அழைத்துச் சொன்னேன். "ஒண்ணு தெரியுமா?இதுவரை நடந்த தேர்தல்களிலேயே நான் ஓட்டு போட்ட எந்தக் கட்சியும் ஜெயிச்சதே கிடையாது. ஒங்க கட்சிக்கு இந்த முறை போட்டுறவா?" என்றதும் அவர் முகம் இருண்டது. சுதாரித்துக் கொண்டு,"போங்கண்ணே! மேடையில பேசுற மாதிரியே எங்கிட்டயும் நக்கலடிக்கிறீங்க"என்றபடி நகர்ந்து விட்டார்.

உண்மையில் நான் ஒன்றுக்கு நான்கு ஓட்டுகள் போட்டு ஒரு வேட்பாளரின்
வெற்றியில் பங்கு வகித்திருக்கிறேன்.1988ல் நடந்த தேர்தல்.1988ல் தேர்தலே
நடக்கவில்லை என்கிறீர்களா? எங்கள் கல்லூரியில் நடந்த தேர்தல் அது.என் வகுப்புத் தோழன் தங்கவேல் மாணவர் மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டான்.எங்கள் துறையில் எங்கள் ஜூனியர் கைலாஷ் மாணவர் மன்ற செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டான்.இருவருமே அதிர்ந்துபேசத்
தெரியாதவர்கள்.வசதியான பின்புலத்தில் இருந்து வந்தாலும் கொங்குநாட்டு
கிராமப்புற இளைஞர்களின் கண்களில் சுடர்விடும் வெள்ளந்தித்தனம் இவர்களிடம் சில அவுன்சுகள் கூடுதலாகவே உண்டு.

கல்லூரியில் படிக்கும்போதே இலக்கிய மேடைகளில் நான் தோன்றிக்கொண்டிருந்தேன். அப்போது சென்னையின் தூர்தர்ஷன் மட்டும்தான் இருந்தது. (இப்போதைய பொதிகை)அதில்வேறு இரண்டு மூன்றுமுறை தோன்றியிருந்தேன். அப்படி ஒருதடவை தொலைக்காட்சியில்
தோன்றிய நான் மறுநாள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் கல்லூரிக்குப் போனேன்.யாரும் பெரிதாகக்கண்டுகொள்ளவில்லை. எந்தப் பயலும் எந்த மயிலும் நேற்று டீவி பார்க்கவில்லையா என்று குழம்பினேன். இத்தனைக்கும்
அப்போது ஆற்காட்டார் கூடப் பதவியில் இல்லை.

மதிய உணவு இடைவேளையில் ஒரு மாணவர் வந்தார்.வந்தார்என்ன
வந்தார்....வந்தான்! "நேத்து..நேத்து.." என்று தொடங்கினார். "சொல்லுங்க"என்றேன் ஆவலாக! "நேத்து டீவியிலே ஒங்க மாதிரியே ஒருத்தர் வந்தார் பாத்தீங்களா?" என்றான்.

இப்படி  நொந்த அனுபவங்கள் சில பல  இருந்தன. ஆனால் மேடையில் பேசுபவர்கள் நல்லவர்கள் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கும் மூடநம்பிக்கை என் வகுப்புத் தோழர்கள் பலருக்கும் இருந்தது.மூன்று நான்கு பேர்களைத் தவிர யாரும் என்னை ஒருமையில் அழைக்க மாட்டார்கள்.
தங்களுக்குள் கெட்ட வார்த்தைகளில் பேசிக் கொண்டிருந்தாலும் என்னைப்
பார்த்ததும் நிறுத்திக் கொள்வார்கள்."டேய்!புலவருக்கு இதெல்லாம் பிடிக்காதுடா" என்று வேறு சொல்வார்கள்.நான் மனசுக்குள் அதைவிட
மோசமான வார்த்தைகளால் திட்டிவிட்டு நகர்ந்து விடுவேன்.

இந்த நேரத்தில்தான் கல்லூரித்தேர்தல் வந்தது.இளங்கலையில் நான் படித்தது
சோஷியாலஜி.என் வகுப்புத் தோழன் தங்கவேல் தலைவர் பதவிக்குப் போட்டியிட முடிவானதும் வகுப்பில் ஏறக்குறைய எல்லோரும் என்னைத் தேடினார்கள்.நான் வழக்கம் போல் ஸ்டாஃப் ரூமில் அமர்ந்து துறை
விரிவுரையாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.ஊரோடு
ஒத்துவாழ்கிறேனோ இல்லையோ ஆசிரியர்களுடன் ஒத்து வாழ்ந்தவன் நான். ஒருமுறை இன்டர்னல்ஸ் தேர்வில் எனக்கு அறுபது மதிப்பெண்கள்.விஷயம் என்னவென்றால் நான் அந்தத் தேர்வை எழுதவேயில்லை!!

விரிவுரையாளர்கள் அறைக்குள் வந்த வகுப்புத் தோழர்கள் என்னைத் தனியாகத் தள்ளிக்கொண்டு போனார்கள். "புலவரே! நம்ம தங்கவேலு தேர்தல்ல நிக்கறான்.தேர்தலன்னைக்கு வோட்டிங் தொடங்கறதுக்கு முன்னே அவன் 10 நிமிசம் பேசோணும்.அதுலே 7 நிமிசம் தமிழ்ல பேசட்டும்.3 நிமிசத்துக்கு மேல அவனுக்கு இங்கிலீசு தாங்காது. எழுதித் தர்றதோட அவனப் பேச வைக்கறது ஒங்க பொறுப்பு".

சிவாஜி கணேசன் காமரா முன் முதன்முதலாகப் பேசிய வசனம்,"சக்ஸஸ்" என்று எங்கேயோ படித்திருந்தேன். எனவே அந்த உரை "வெற்றி"என்றுதான் தொடங்க வேண்டும் என்று நான் சொன்னதும் எல்லோரும் ஆஹா ஆஹா என்று ஆமோதித்தார்கள். சிவாஜி கணேசன் தேர்தலில் ஜெ யித்திருக்கிறாரா என்று யாரும் கேட்கவில்லை. "வெற்றி எனும் வாசகத்தை நான் எழுதுவதற்குரிய வார்த்தைகளாய் இங்கே வீற்றிருக்கும் வாலிப நண்பர்களே! நெற்றிப் புருவத்துக்கு நடுவே குங்குமத்தால் கவிதை எழுதி வந்திருக்கும் இனிய தோழியரே!வணக்கம்" என்று அந்த உரை தொடங்கும்.அந்த இடத்தில்
என்ன தோரணையில் வணக்கம் வைக்க வேண்டும் என்பதுவரை
சொல்லித் தர வேண்டிய வேலை என்னுடையதாகிவிட்டது.

ஆங்கில உரையை எழுதித்தரும் பொறுப்பு,எங்களுடன் படித்த தாமஸ் மேத்யூ என்ற மாணவனுக்குத் தரப்பட்டது.தமிழ்ப்பேச்சு சொல்லித் தரப்படும்போது ஆங்கிலமே மேல் என்ற முடிவுக்கும் ஆங்கில வாசகங்கள் சொல்லித் தரப்படும்போது தமிழே சிறந்தது என்றும் தங்கவேல் முடிவெடுத்தான்.ஒரு கட்டத்தில் "எனக்கு வாய்பேசவராதுன்னு சொல்லீடுங்கப்பா! அனுதாப ஓட்டாவதுவுழுகும்! எதிர்த்து நிக்கறவியளக்கூட செயிச்சுடலாமாட்ட! இந்த
ரெண்டு பேரு இம்ச தாங்கலையே!" என்று தங்கவேல் புலம்பத்
தொடங்கினான்.

"ஒழுங்கா பேசிப்பழகு தங்கவேலு! பொண்ணுக பேச்சக் கேட்டுத்தான் ஓட்டு
யாருக்குன்னு முடிவு பண்ணுவாளுக' என்று மகுடீஸ்வரன்
எச்சரித்துக் கொண்டிருந்தான்.

"உங்கள் பாதங்கள் படுகிற பாதையிலே என்னால் மலர்களைப்
பரப்ப முடியாவிட்டாலும் முட்கள் ஏதுமில்லாமல் பார்த்துக்
கொள்ள முடியும் என்று முழுமையாக நம்புகிறேன்"என்ற வரியைப்
பேசும்போது, "முட்களைப் பரப்ப முடியாவிட்டாலும் மலர்கள் இல்லாமல்
பார்த்துக் கொள்ள முடியும்"என்று தங்கவேலு பேசிக்காட்ட, நாங்கள்
திடுக்கிட்டோம்."புலவரே! பூரா ம மா மு மூ ன்னு வர்ற மாதிரி
எழுதீட்டீங்களா! குழம்பிப் போகுது!"என்று காரணம் சொன்னான்.இந்தியா சமயச் சார்பற்ற நாடு என்பதால் இன்னொரு வரியையும் முத்தாய்ப்பாக வைத்திருந்தேன்."கீதையின் கனிவையும் பைபிளின் பரிவையும் குரானின் கருணையையும் கலந்த ஒரு பாசத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் துடிக்கிறேன்" என்ற வரியை உணர்ச்சியுடன் சொல்ல வைப்பதற்குள் எனக்கு
கடவுள் நம்பிக்கையே போய்விட்டது.

தேர்தல்நாள் வந்தது. எங்கள் வகுப்பில் நான்குபேர் வரவில்லை.அந்த
நான்குபேர் ஒட்டுக்களையும் ரகசியமாகப் போடும் பொறுப்பு என்னை வந்து சேர்ந்தது.அந்தப் பதட்டத்தில் இருந்த எனக்கு தங்கவேலின் பேச்சுக்கு கைத்தட்டலும் விசிலும் அள்ளிக்கொண்டு போனது கவனத்தில் பதியவேயில்லை.

கள்ள ஓட்டை வெற்றிகரமாகப் போட்டு வந்தேன்.இதற்காக இனி யாரும் நடவடிக்கை எடுக்க முடியாது.ஏனெனில் 17 வாக்குகள் வித்தியாசத்தில் தங்கவேலு வெற்றி பெற்றிருந்தான்.நான் சொல்லித் தந்த உரை தங்கவேலுவுக்கு பல வருஷங்கள் கழித்தும் நினைவில் இருந்தது. ஆனால் இப்போது அவனை அழைத்து பேசிக்காட்டுமாறு சொல்ல முடியாது.கடந்த ஆகஸ்ட் 15ல் அவன் மாரடைப்பால் காலமானான்.