ரயிலில் என் பக்கத்து இருக்கையில் அந்தப் பெரியவர் அமர்ந்திருந்தார் என்றுதான் முதலில் நினைத்தேன்.உண்மையில் அந்த இருக்கையில் அவர் ஒரு தம்பூரைப்போல் சாய்த்து வைக்கப்பட்டிருந்தார்.சீரான இடைவெளியில் அவரிடமிருந்து ஹ்க்கும் ஹ்க்கும் என்று சுருதி சேராத முனகல்கள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.
அடுத்த இருக்கையில் அவருடைய மனைவி.இவருக்கு வயது எண்பத்தைந்துக்கு மேலிருக்கும்.அந்த அம்மையாருக்கு எழுபது வயதிருக்கும். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே வரிசையில் இடம்தரலாகாது என்னும் ரயில்வே விதிகளின்படி என்னிடமிருந்து இரண்டு மூன்று இருக்கைகள் தள்ளி அவர்கள் குடும்பத்தினர் இருந்தனர்.
திடீரென்று ஹ்க்கும் முனகல் நின்றது.ஈனஸ்வரத்தில் கிழவர் பேசத் தொடங்கினார்.இடப்பக்கம் இருக்கும் அவருடைய மனைவிக்கும், வலப்பக்கம் இருக்கும் எனக்கும் மட்டுமே கேட்கக்
கூடிய மெல்லிய குரலில் கேட்டார்,"இப்ப எந்த ஊருக்கு வந்திருக்கோம்? "அம்மையார் சற்றே உரக்கச் சொன்னார். "கோயமுத்தூர் வந்திருக்கோம்.
இப்ப ரயில்ல திரும்ப கும்மோணம் போறோம்".சில விநாடிகள் மௌனத்துக்குப்பிறகு பெரியவர் கேட்டார்."இங்க எதுக்கு வந்தோம்".மாமி பதில் சொன்னார்."நம்ம பையன் இந்த ஊர்ல இருக்கான்.அதான் வந்தோம்.அவன் ஆத்துல பத்துநா இருந்துட்டு ஊருக்குப் போறோம்".
அடுத்து பெரியவர் கேட்டார்."பையன் வரலையா?" "நம்மளை ரயில் ஏத்தி விட்டுட்டு பையன் ஆபீஸ் போயிட்டான்.பேரப்பசங்களும் மருமவளும் நம்மோட வர்றாங்க".மாமி சொல்லி முடித்ததும் பெரியவர் கேட்டார்,"ஆமாம்! நீ யாரு?"
எனது நெருங்கிய உறவினர் டி.எம்.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் நினைவு எனக்கு வந்தது.விடுதலை போராட்ட வீரராக விளங்கிய அவர் எனக்கு தாத்தா முறை.எங்கள் சின்னத்தாத்தாவின் தம்பி அவர்.அவருடைய கடைசி மகனுக்கு எங்கள் ஒன்றுவிட்ட அக்காவைக் கொடுத்திருந்தது.நான் கல்லூரியில் படித்த காலத்தில் அக்காவைப் பார்க்க திருச்சிக்குப் போவேன்.முதலில் கே.கே.நகரில் குடியிருந்தார்கள்.வாசலில் நின்று மணியடித்தால் தாத்தா புன்சிரிப்புடன் வந்து கதவைத் திறந்து விட்டு உள்ளே போய்விடுவார். கதவைத் திறப்பதென்றால் தாழைத் திறப்பதல்ல. கம்பிக்கதவை உள்புறமாகப் பூட்டி வைத்திருப்பார். சாவி அவர் வசம்தான் இருக்கும்.திறந்துவிட்டுப் போனால்,புறப்படும் வேளையில் மீண்டும் திறவுகோலும் கையுமாய் தரிசனம் தருவார்.
மற்றபடி பெரும்பாலும் அறைக்குள்தான் இருப்பார்.அவருடைய அண்ணன் திருவெண்காடு டி.எம்.சீனிவாச பிள்ளை.ஓமந்தூராரின் மிக நெருங்கிய நண்பர்.அவரை பெரிய டி.எம்.எஸ்.என்றும் இவரை சின்ன டி.எம்.எஸ் என்றும் சொல்வார்கள். இருவருமே நல்ல உயரம். இரட்டையர்கள் இல்லையே தவிர அச்சு அசலாய் அதே முகஜாடை. மாநிறம். மீசையில்லா முகம்.கறுப்பு பிரேம் போட்ட கனத்த கண்ணாடி. எப்போதும் கதராடை. கே.கே.நகரிலிருந்து தில்லைநகர் போனபிறகும் திறவுகோல் திருப்பணி தொடர்ந்தது. ஒரு சின்ன வித்தியாசம்.மணியடித்தால் நிமிர்ந்து கூடப் பார்க்காமல் வந்து கதவைத் திறந்துவிட்டுப் போய்விடுவார்.அந்தச் சின்னப் புன்சிரிப்பும் காணாமல் போயிருந்தது.அவருக்கும் சேர்த்துவைத்து பாட்டி கலகலப்பாகப் பேசுவார்.திருமணமாகி முதல் முறையாக என் மனைவியை அழைத்துப் போயிருந்தேன்.பயணம் ஒத்துக் கொள்ளாமல் சோர்ந்து படுத்துவிட்ட என் மனைவியைப் பார்த்து யாருக்கும் கேட்காமல்-ஆனால்-என் மனைவிக்கு நன்றாகக் கேட்கும்படி பாட்டி என்னிடம் கேட்டார்,"இந்த நோஞ்சானை எங்கிருந்துடா புடிச்சுட்டு வந்தே?"
காலப்போக்கில் சின்ன டி.எம்.எஸ் தாத்தாவுடன் முதுமை விளையாடத் தொடங்கியது.அவருடைய ஞாபகங்களைப் பிடுங்கி ஒளித்து வைத்துக் கொண்டது.மனைவியை-மகன்களை-மருமக்களை பெயரன் பெயர்த்திகளை அவருக்கு முற்றாக அடையாளம் தெரியவில்லை. மகன்கள் அறைக்குள் வந்தால்,விருந்தாளிகள் என்று நினைத்து எழுந்து நிற்கத் தொடங்கினார்.கல்லூரிப் பருவத்தில் இருந்த பெயரன்களைக் காட்டி யாரென்று கேட்டால்,"டாக்டர்"என்றார்.
தாத்தாவின் ஞாபகங்களை மீட்க பெயரன்கள் சில முயற்சிகளைமேற்கொண்டார்கள். அவர் கோல்ட்ஃபிளேக் சிகரெட் பிடிப்பார். அந்த சிகரெட் பாக்கெட்டை கண்முன் ஆட்டிக் காட்டினார்கள்.அது என்னவென்றே அவருக்குத் தெரியவில்லை.பொழுதுபோக்குக்காக சீட்டு விளையாடுவார்.சீட்டுக் கட்டைக் காட்டினால் அதை வெறுமனே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.பெயரன்களில் ஒருவனுக்கு ஒரு யோசனை தோன்றியது."டேய்! தாத்தாகிட்டே பணத்தை நீட்டுங்கடா! என்ன
செய்றாருன்னு பார்ப்போம்".தன்முன் நீண்ட ஐந்நூறு ரூபாய் நோட்டை
உற்றுப் பார்த்தவர்,நடுங்கும் கைகளை நீட்டி வாங்கினார்."ஓஹ்ஹோஹோ!
தாத்தாவுக்கு பணத்தை மட்டும் தெரியுது டோய்!"
பேரன்களின் ஆரவாரக்குரல் அடங்குமுன் ஒரு காரியம் செய்தார்.ரூபாய்
நோட்டிலிருந்த காந்தி படத்தைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு
ரூபாய் நோட்டைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.கட்டிய மனைவிமுதல்
எல்லோரையும் பற்றிய நினைவுகளைப் பிடுங்கிக் கொண்ட முதுமையால்
காந்தியை மட்டும் தொட முடியவில்லை.அவருக்கு காந்தியை மட்டும்
அடையாளம் தெரிந்தது.அவருடைய வாழ்வின் அடையாளமே அதுதான்