Tuesday, October 11, 2011

கமலத்தாள் கருணை


தேனமுதம் அலைவீசும் தெய்வீகப் பாற்கடலில்
வானமுதின் உடன்பிறப்பாய் வந்தாய்-
வானவரின் குலம்முழுதும் வாழவைக்கும் மாலவனின்
வண்ணமணி மார்பினிலே நின்றாய்

சீதமதி விழிபதித்து செல்வவளம் நீகொடுத்து
சோதியெனப் புதுவெளிச்சம் தருவாய்
வேதமுந்தன் வழியாக வெண்ணிலவு குடையாக
வளர்திருவே என்னகத்தே வருவாய்
மூன்றுபெரும் அன்னையரின் மூளுமெழில் கருணையிலே
மண்ணுலகம் இயங்குதம்மா இங்கே
தோன்றுமுங்கள் துணையிருந்தால் தோல்வியென்றும் வாராது
தொட்டதெல்லாம் துலங்கிடுமே நன்றே

கலைமகளும் வார்த்தைதர அலைமகள்நீ வாழ்க்கைதர
கவலையெலாம் நீங்கிடுமே நொடியில்
மலைமகளும் சக்திதர முயற்சியெலாம் வெற்றிதர
மணிவிளக்கை ஏற்றிவைப்பாய் மனதில
சேர்த்தநிதி பெருகுவதும் செம்மைபுகழ் வளருவதும்
செய்யவளே உன்கருணை தானே
கீர்த்தியுடனவாழுவதும் கருதியதை எய்துவதும்
கமலத்தாள் கருணையிலே தானே
கனகமழை பெய்வித்த காருண்ய மாமுகிலே
கண்ணார தரிசித்தேன் கண்டு
தனமுடனே கனம்நிரம்பி மனம்மகிழச் செய்திடுவாய்
தாங்கிடுக தளிர்க்கரங்கள் கொண்டு





அன்னபூரணி-( நவராத்திரி - 8)



தள்ளிநிற்கும் படித்துறையைத் தாவித்தொடும் கங்கைநதி
தாளமிடப் பாடுபவளாம்
அள்ளிவைத்த பூக்களிடை உள்ளுறையும் விஸ்வேசன்
உள்ளமெங்கும் ஆடுபவளாம்
கள்ளமுற்ற நெஞ்சினையும் வெண்பளிங்காய் மாற்றியதில்
கோயில்கொண்டு வாழுபவளாம்
விள்ளலன்னம் கையில்விழ விம்மிவிம்மி நெஞ்சமழ
வினைதீர்க்கும் அன்னையவளாம்

பேசுமொழி உள்ளிருந்து பாட்டின்பொருளாயிருந்து
பூரணத்தை சுட்டுபவளாம்
வீசுதென்றல் ஊடிருந்து சுவாசத்திலே உட்புகுந்து
சக்கரங்கள் தட்டுபவளாம்?
ஆசையின்மேல் கனலுமிட்டு ஆட்டமெலாம் ஓயவிட்டு
ஆனந்தமே நல்குபவளாம்
காசிஅன்னபூரணியாம் தேசுடைய பேரழகி
காவலென்று காக்கவருவாள்



அத்தனை உயிர்களுக்கும் அன்னமிடும் தாயவளை
அண்டியபின் என்ன கவலை?
பித்தனை உருகவைக்கும் பேரழகி உள்ளிருந்து
பேசுவதே இந்தக் கவிதை
முத்தியைத் தரும்தருணம் முந்திவந்து கைகொடுக்கும்
மோகினியின் கோயில் நுழைவோம்
எத்தனை இழைத்தவினை அத்தனையும் துகளாக்கும்
யாமளையின் பாதம் தொழுவோம்

கைமலர்கள் நோகயிந்த வையமெல்லாம் படியளக்கும்
காசிஅன்னபூரணேஷ்வரி
மைவிழிகள் புன்னகைக்க உய்யுமொரு மந்திரத்தை
மெல்லச்சொல்லும் மந்த்ரேஷ்வரி
நெய்விளக்கின் தீபவொளி நெக்குருகச் செய்திருக்க
நிற்பவளே காமேஷ்வரி
மெய்யெனுமோர் பொய்யுடலின் மோகமெல்லாம் தீர்த்தருள்வாய்
மஹாமாயே ஜகதீஷ்வரி

காலைவரை காத்திருக்க....(நவராத்திரி 7)

காலைவரை காத்திருக்கத் தேவையில்லையே-அவள்
கண்ணசைத்தால் காலைமாலை ஏதுமில்லையே
நீலச்சுடர் தோன்றியபின் வானமில்லையே-அவள்
நினைத்தபின்னே தடுப்பவர்கள் யாருமில்லையே

சொந்தமென்னும் பகடைகளை உருட்டச் சொல்லுவாள்-அதில்
சோரம்போன காய்களையும் ஒதுக்கச் சொல்லுவாள்
பந்தமென்னும் கம்பளத்தைப் புரட்டச் சொல்லுவாள்-இனி
படுக்க உதவாதெனவே மடிக்கச் சொல்லுவாள்



உள்ளபசி என்னவென்றும் உணர்ந்துகொள்ளுவாள்-அவள்
உரியநேரம் வரும்பொழுதே உணவு நல்குவாள்
அள்ளியள்ளி உண்ணக்கண்டு சிரித்துக்கொள்ளுவாள்-நாம்
அழ அழவும் பந்தியினை முடித்துக் கொள்ளுவாள்

சூத்திரங்கள் வகுத்தபின்தான் ஆடவிடுகிறாள்-அவள்
சுருதியெல்லாம் சேர்த்துத் தந்து பாடவிடுகிறாள்
சாத்திரங்கள் நடுவில்தன்னைத் தேட விடுகிறாள்-மனம்
சாயும்போது சந்நிதியை சேரவிடுகிறாள்

சொன்னதெல்லாம் காற்றில்போகும்; மௌனம் சத்தியம்-இந்த
சூட்சுமத்தைத் தெரிந்துகொண்டால் முக்தி நிச்சயம்.
என்னையெல்லாம் நிமிர்த்திவைத்த லீலை அற்புதம்-இன்னும்
என்னவெல்லாம் செய்திடுமோ சக்தி தத்துவம்

கூட்டுக்குள்ளே உயிருக்கவள் காவல் நிற்கிறாள்-அந்தக்
கூனல்பிறைக் காரனுடன் காதல் செய்கிறாள்
வீட்டுக்குள்ளே ஏற்றும் சுடரில் வாழ வருகிறாள்-நம்மை
வீனையென்று மடியில்தாங்கி வீடு தருகிறாள்

Thursday, October 6, 2011

சந்ததம் தொடர்பவள் அபிராமி (நவராத்திரி - 6)




திக்குகள் எட்டிலும் தெரிந்திருப்பாள்-என்
திகைப்பையும் தெளிவையும் கணக்கெடுப்பாள்
பக்கத்தில் நின்று பரிகசிப்பாள்-என்
பார்வையில் படாமலும் ஒளிந்திருப்பாள்
நிர்க்கதியோ என்று கலங்குகையில்-அந்த
நாயகி நேர்பட நின்றிருப்பாள்
எக்கணம் எவ்விதம் நகருமென்றே -அவள்
என்றோ எழுதி முடித்திருப்பாள்

அழுதால் அவளுக்குப் பிடிக்காது-நான்
அழாவிடில் தரிசனம் கிடைக்காது
விழுதாய்க் கண்ணீர் இறங்குகையில்-எந்த
வீழ்ச்சியும் துரோகமும் வலிக்காது
தொழுதால் அவளைத் தொழவேண்டும்-அட
விழுந்தால் அவள்முன் விழவேண்டும்
எழுதாக் கவிதைகள் எழுதவைத்தாள்-அவள்
என்னுயிர் புதிதாய் ஒளிரவைத்தாள்

வாழ்க்கை நாடகம் தொடர்ந்துவரும்-அதில்
வரவுகள் செலவுகள் நிகழ்ந்து வரும்
கேட்கும் ஒருகுரல் உள்ளுக்குள்ளே-அதில்
கேள்விகள் யாவையும் அடங்கிவிடும்
தீர்க்கமாய் ஒரு திருவிளக்கு-அது
தினமெந்தன் மனந்தனில் தெரிந்திருக்கும்
தீர்க்க முடியா வழக்கெல்லாம் -அந்தத்
திருக்கட வூரில் முடிந்துவிடும்

முக்தியின் வேதம் அபிராமி-நல்ல
மௌனத்தின் நாதம் அபிராமி
பக்தியின் சாரம் அபிராமி-இங்கு
படைகொள்ளும் வீரம் அபிராமி
யுக்திகள் எல்லாம் அபிராமி -வரும்
யோசனை தருபவள் அபிராமி
சக்தியின் கனிவே அபிராமி-எனை
சந்ததம் தொடர்பவள் அபிராமி

அடிக்கடி வருகிற காட்சி - (நவராத்திரி-5)



நாவல் பழநிறப் பட்டுடுத்தி-மின்னும்
நகைகள் அளவாய் அணிந்தபடி
காவல் புரிந்திட வருபவள்போல்-அன்னை
காட்சி அடிக்கடி கொடுக்கின்றாள்
ஆவல் வளர்க்கும் காட்சியிதும்-என்
அரும்புப் பருவத்தில் தொடங்கியது
வேவு பார்க்க வந்தவள்போல் -எங்கள்
வீட்டு முற்றத்தை வலம்வருவாள்

பின்னங்கைகளில் தவழ்கிறதே-அது
பிரம்பா கரும்பா தெரியவில்லை
பின்னல் இடாத மழைக்கூந்தல் -அது
புரள்கிற அழகுக்கு நிகருமில்லை
கன்னங் கரியவள்- ஆறடிக்குக்
கொஞ்சம் குறைவாய் அவளுயரம்
மின்னல், மேகத்தின் நிறங்கொண்டு-வரும்
மாயத் தோற்றமாய்த் தெரிகின்றாள்

கட்டிய பின்னங் கைகளுடன் -அவள்
காலடி அளந்து வைக்கின்றாள்
முட்டிய கண்ணீர் மறைத்தாலும்-அந்த
மோகனத் திருவுரு மறைவதில்லை
விட்டுச் செல்வதும் இல்லையவள்
விழிகொண்டு நேராய்ப் பார்ப்பதில்லை
எட்டியும் எட்டா அமுதமென -எனை
எத்தனை வருடங்கள் ஏய்த்திருப்பாள்

பாரா முகமென்றும் தோன்றவில்லை-அவள்
பார்ப்பது போலவும் தெரியவில்லை
தீராச் சுமைகள் கனக்கையிலே-என்
தேவி கிளம்பி வருகின்றாள்
தாரா கணங்கள் பட்டினிலே-வந்து
தானாய் மின்னும் அழகினிலே
வாரா அமைதி வருகிறது-அவள்
வாஞ்சையை உள்மனம் உணர்கிறது!

கடவூர்க் காரி அவள்வருகை-அது
கனவா நனவா இரண்டுமில்லை
இடர்கள் எதிர்ப்படும் போதெல்லாம்-அவள்
இறங்கி வராமல் இருப்பதில்லை
தொடவும் தயங்கும் நெருக்கத்தில் -பின்
தொடவே முடியாத் தூரத்தில்
அடம்பிடிக்கின்றாள் இப்போதும்-ஆனால்
அவளிருக்கின்றாள் எப்போதும்!

சந்நிதி வாரீரோ - நவராத்திரி கவிதை - 4

அயன்விரல் பிடித்தன்று அரிசியில் வரைந்தாள்
அரிநமோத்து சிந்தம்
கயல்விழி திருமுகக் கலைமகள் சிணுங்கலே
கவிபாடும் சந்தம்
உயர்வுற அவளருள் உடையவர் தமக்கோ
உலகங்கள் சொந்தம்
மயிலவள் மலர்ப்பதம் மனந்தனில் வைத்தால்
வேறேது பந்தம்

வெண்ணிறத் தாமரை வெய்யிலைச் சுமக்கும்
விந்தையைக் காணீரோ
பண்ணெனும் தேன்மழை பாதத்தில் பிறக்கும்
பரவசம் கேளீரோ
விண்ணவர் அமுதம் வீணெனும் அறிவின்
விருந்திடம் சாரீரோ
எண்ணொடும் எழுத்தெனும் சிறகுகள் தருபவள்
சந்நிதி வாரீரோ



ஏட்டினில் எல்லாம் எத்தனை லிபியாய்
ஏந்திழை மிளிர்கின்றாள்
பாட்டினில் எழுகிற பரம சுருதியில்
பாரதி தெரிகின்றாள்
நாட்டினில் மழலைகள் நாவினில் எல்லாம்
நடனம் புரிகின்றாள்
காட்டினில் பறவைகள் கூட்டினில் இறங்கி
காவியம் இசைக்கின்றாள்

சருகினுக் குள்ளே சந்தனம் மணக்கச்
செய்தவள் அவள்தானே
உருகிடும்ய நெஞ்சில் பெருகிடும் கவியில்
உருள்பவள் அவள்தானே
கருதிய புலவர் கனவிலும் நனவிலும்
கிளர்பவள் அவள்தானே
பரிதியின் கனலிலும் பால்நிலா ஒளியிலும்
பெய்பவள் அவள்தானே

பதங்களைத் தேடு (நவராத்திரி 3)



ஆயிரம் சூரியன் பார்வையில் சுடர்விடும்
அன்னையின் திருமுகம் நிலவு
தாயவள் கருணையின்பாய்படுத் துறங்கிட
துன்பமும் இன்பமும் கனவு
பாய்மரக் கப்பலில் போகிற பிள்ளைக்கு
பயமில்லை சமுத்திர விரிவு
தேய்வதும் வளர்வதும் தன்னியல் பெனும்மனம்
தானாய் உணர்ந்தது தெளிவு

சாமரம் வீசிடும் அரம்பையர் நடுவினில்
சாகசச் சிரிப்புடன் தெரிவாள்
காமனின் அம்பினைக் கைப்பற்றும் கன்னிகை
குமரியில் நெடுந்தவம் புரிவாள்
ஊமையின் மனதிலும் ஊற்றெழும் பாட்டுக்கு
ஊர்த்துவ தாண்டவம் இடுவாள்
தீமைகள் சூழ்கையில் தாவி எடுத்துதன்
தாளெனும் தொட்டிலில் இடுவாள்


எல்லாம் சலிக்கையில் எதிரில் வருபவள்
எல்லா பதில்களும் தருவாள்
சொல்லால் தீண்டிட வருகிற்ச் பிள்ளையின்
சொற்களில் நிறைந்து வழிவாள்
கல்லாய் செம்பாய் பொன்னாய் அமர்ந்தும்
கண்ணெதிரே அவள் அசைவாள்
பொல்லா வினைகளின் நில்லாக் குறும்புகள்
பார்வையில் எரித்து விடுவாள்   

ஆலயம் அவளது அரசவையாகும்
அன்பர்கள் மனமே வீடு
காலங்கள் அவளது கால்கொலுசாகும்
கானங்கள் அதற்கெனப் பாடு
வேலெனும் விழிகள் வினைகளைச் சாடும்
விரைந்தவள் பதங்களைத் தேடு
வாலை சிரித்துன் வாழ்வுக்குள் நுழைந்ததும்
வாசலை இழுத்து மூடு





முதல்துளி அபிராமி (நவராத்திரி-2)

 
 
ஒருகுரல் கொடுத்தால் மறுகுரல் கொடுக்கும் உண்மை அபிராமி
ஒருவரும் அறியாத் திசையிலும் உடன்வரும் அண்மை அபிராமி
வரும்பகை எதையும் வற்றிடச் செய்யும் வன்மை அபிராமி
நெருநலும் இன்றும் நாளையும் நிகழும் நன்மை அபிராமி
 
காலனை உதைத்த கால்களும் சிவக்கும் நடனம் அபிராமி
காலங்கள் உருட்டும் கைகளின் அழகிய நளினம் அபிராமி
நீலமுணர்த்தும் தியானத்தின் நிறைவில் சலனம் அபிராமி
தூலமும் துச்சம் என்கிற தெளிவின் தருணம் அபிராமி
 
பட்டரின் நாவில் பதங்கள் மலர்த்தும்   புலமை அபிராமி
தொட்டது துலங்க துணையென நிற்கும் கருணை அபிராமி
கெட்டவர் நடுங்க கீழ்மைகள் களையும்  கடுமை அபிராமி
முட்டிய கன்றின் இதழ்தொடும் அமுதின் முதல்துளி அபிராமி
 
ஒன்பது நாட்களும் ஒவ்வொரு வடிவாய் உதிப்பவள் அபிராமி
உன்னிய நெஞ்சில் ஓமெனும் மந்திரம் பதிப்பவள் அபிராமி
மன்னிய வினைகள் முழுவதும் வீழ்ந்திட விதிப்பவள் அபிராமி
சந்நிதி வரச்சொல்லி சித்துகள் நிகழ்த்தி சிரிப்பவள் அபிராமி
 
அமுத கடேசனின் ஆழ்தவம் அடைகிற அரும்பொருள் அபிராமி
குமுத மலர்க்கரம் அபயம் எனச்சொல்லும் கருப்பொருள் அபிராமி
இமய மலைக்கொரு ராணியென்றெழுந்த திருமுகம் அபிராமி
சமயங்கள் அனைத்தும் சங்கமமாகும் துறைமுகம் அபிராமி
 

அவளே அறிவாள் (நவராத்திரி 1)

அடர்ந்த வனந்தனில் ஒற்றைத் தடம்விழும் அழகாய்-வினை
படர்ந்த மனந்தனில்    பைரவி  நீநடை      பழகாய்
தொடர்ந்து வருந்துயர்க் கனலில் உருகிடும் மெழுகாய்-மனம்
இடரில் கரைகையில் திடம்தனைத் தந்திட வருவாய்
 
 
 
ஏற்றிய தீபத்தில் இளநகை செய்பவள் யாரோ-பலர்
சாற்றிய மறைகளில் சாரமென்றிருப்பவள் யாரோ
காற்றினில் வருகிற கீதத்தில் அவளது பேரோ-திரு
நீற்றினில் தகிக்கிற நெருப்பினில் அவளெழு வாளோ
 
காலத்தின் பேரிகை கைகளில் தாங்கினள் காளி-ஒரு
மூலத்தின் மூலத்தில் மூண்டெழும் சுடரெங்கள் தேவி
நீலத்தை கண்டத்தில் நிறுத்தினள் எங்களின் நீலி-இடும்
ஓலத்தைக் கேட்டதும் உடன்வருவாள் திரி சூலி
 
 
தாங்கிய கனவுகள் திடுமெனக் கலைகிற போது  -மனம்
ஏங்கிய ஏக்கத்தில் எல்லாம் கனக்கிற போது
நீங்கிய உறுதியை நிர்மலை மறுபடி தருவாள்-மடி
தூங்கிடச் செய்து தூக்கத்தில் விழிப்பொன்று தருவாள்
 
ஆயிரம் பந்தங்கள் அலைபோல் வந்திங்கு போகும்-அதில்
காயங்கள் இன்பங்கள் காலத்தின் போக்கினில் ஏகும்
மாயங்கள் யாவையும் மாதவள் செய்கிற ஜாலம்-நம்
தாயவள் உறவே நிலையென்று காட்டிடும் கோலம்
 
கவளங்கள் உருட்டிக் கைகளில் அன்னை இடுவாள்-இதழ்ப் 
பவளங்கள் மின்ன புன்னகையால் உயிர் தொடுவாள்
துவள்கிற பொழுதில் துணையென வந்தருள் புரிவாள்-நம்
கவலைகள் துடைக்கிற கணந்தனை அவளே அறிவாள்