Sunday, April 29, 2012

சிதம்பரம்....நிரந்தரம்...

வானம் முழுவதும் தங்கம் வேய்ந்த
 வைகறை நேரம் ஒன்றினிலே
தேனின் ஒருதுளி தேடி நடந்தேன்
தில்லை நகரின் வீதியிலே
கானம் பிறந்திட அசையும் திருவடி
காணக் காண இன்பமடா
ஞானம் பெருகும் ஆனந்த தாண்டவன்
நம்பிய பேருக்கு சொந்தமடா



மூவரும் தேடி மலரடி சூடி
திருமுறை பாடிக் கனிந்தஇடம்
யாவரும் காண மணிவாசகத்தை
இறைவன் ஒருபடி எடுத்த இடம்
தேவரும் வணங்கும் பதஞ்சலியோடு
திருமூலருமே அடைந்த இடம்
தாவர சங்கமம் யாவினுக்கும் இந்தத்
தில்லைதானே தலைமையகம்

காலம் என்கிற மூலம் பிறந்தது
கனக சபேசனின் கோயிலிலே
நீல நிறத்தெழில் நாயகியாள் சிவ
காமியின் இன்பக் காதலிலே
தூலம் எடுத்ததன் சூட்சுமம் புரிவது
தாண்டவ சபையின் எல்லையிலே
கோலங்கள் காட்டும் குஞ்சித பாதம்
கொள்ளை கொள்வது தில்லையிலே

அம்பலம் நடுவே அசைகிற அசைவே
அண்டம் அசைவதன் ரகசியமாம்
நம்பலம் அவனென நம்பிய புத்தியில்
வானம் திறப்பதே ரகசியமாம்
பம்பை உடுக்கை சங்குகள் முழங்கப்
பள்ளி நீங்குதல் பேரழகாம்
செம்பொன் கூரையில் செங்கதிர் உதிக்கும்
சிதம்பரம் ஒன்றே நிரந்தரமாம்

Saturday, April 28, 2012

மதுரை வாராய் மகேசா

மதுரைநகர் வீதிகளில் மகேசா நீவா
மறுபடியும் நெற்றிக்கண் திறக்க நீவா
குதிரைவிற்க வந்தவனே கிளம்பி நீவா
குடிமுழுகப் போகுதய்யா உடனே நீவா
உதிரிகளை பீடத்தில் ஏற்றிவைக்க
உளுத்தகட்டை துணிந்ததய்யா இறைவா நீவா
புதிர்களுக்கு விடைகாணப் புனிதா நீவா
பரமேசா விடையேறி விரைவாய் நீவா

மாடத்தில் ஒளிர்கின்ற விளக்கின் மேலே
மண்ணள்ளிப் போட்டால்தான் ஒளிரும் என்று
மூடத்தின் முழுவெல்லை கண்டவர்கள்
முதலறிக்கை தந்துவிட்டார் முதலே நீவா
பீடத்தின் அரும்பெருமை புரிந்திடாமல்
பிட்டத்தை இதுவரையில் வைத்துத் தேய்த்தோர்
ஓடத்தைக் கவிழ்க்குமுன்னே ஓடி நீவா
உத்தமனே உன்பெருமை காக்க நீவா

Monday, April 23, 2012

அபிராமி அந்தாதி - வாழ்வில் நிரம்பும் வசந்தம் - 1

1. பேசி முடியாப் பேரழகு
 
பொன்புலரும் காலைகளிலோ,முன்னந்தி மாலைகளிலோ நெடுந்தொலைவில், ஏதோவோர் ஆலயத்திலிருந்து காற்றில் கலந்துவரும்
தெய்வீக கானங்கள் சில நம்மை காலக்கணக்குகள் மறக்க வைக்கும்.
மற்றவற்றை விட்டு  சற்றே விலகி மனம் லயிக்கச் செய்யும்.
 
அதற்குமுன் பலமுறை கேட்டிருந்தாலும் முதல்முறை கேட்கும் மலர்ச்சியைத்
தரும் பாடல்கள் அவை.அவற்றில்   ஒன்று, சீர்காழியின் கணீர்க்குரலில் 
வரும் இந்தப் பாடல்...
 
       "சின்னஞ்சிறு பெண்போலே
        சிற்றாடை இடையுடுத்தி
        சிவகங்கைக் குளத்தருகே
        ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்" 
 
முன்பின் சிவகங்கை சென்றிராத சின்னஞ்சிறுவர்களை சுற்றிலும்
அமரவைத்துக் கொண்டு அங்கே போய்வந்த கதையை ஒரு பாசக்கார மாமா சொல்வதுபோல் இருக்கும் அந்தப் பாடல். வரிகளுக்கிடையிலான
நிறுத்தங்களும் நிதானமும் ஓர் உரையாடலுக்கான தொனியை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.
 
"பின்னல் ஜடை போட்டு...." என்று சில நொடிகள் நிறுத்தாமல் நிறுத்தி,
"பிச்சிப்பூ சூடிடுவாள்.."என்கிற போது அந்தப் பிச்சியின் கூந்தலில் இருந்து  பிச்சிப்பூ மணம் சூழ்வதை உணரலாம்.
 
"பித்தனுக்கு இணையாக..." என்று நீட்டி ,ஒரு விடுகதைபோல் நிறுத்தி
"நர்த்தனம் ஆ..ஆ..ஆடிடுவாள்" என்கிற போது தோன்றும் பரவசம் ஒவ்வொரு  முறையும் புதியது.   எனக்கு மிகவும் பிடித்த இந்தப்பாட்டின் உச்ச வரிகள் இரண்டு.
"பெண்ணவளின் கண்ணழகை
  பேசி முடியாது...
பேரழகுக்கீடாக...
வேறொன்றும் கிடையாது".
 
 
 
இறைமையின் பேரழகையோ பேராற்றலையோ விளக்க முயலும் எந்தக்  கலைகளும்  தம் எல்லையைக் கண்டு கொள்ளும் இடம் இதுதான். கலைகளென்ன? வேதங்களுக்கே அந்தக் கதிதான்."வேதங்கள் ஐயா
எனவோங்கி நிற்கும் அளவு ஆழ்ந்தகன்றதும் நுண்ணியதுமான
இறைத்தன்மையை  விளக்கும் முயற்சிகள் நடக்கும் போதெல்லாம்
முயற்சி தோற்றாலும் அந்த அனுபவம் அவர்களுக்கு சித்தித்து விடுகிறது.அந்த அனுபவம் சிந்தாமல் சிதறாமல் பகிரப்படும்போது
கிடைக்கும் உன்னத உன்மத்தத்தை என்னென்பது? அத்தகைய
உன்னதம்தான்,அத்தகைய உன்மத்தம்தான் அபிராமி அந்தாதி.
 
"ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை யாம் பாட"
என்றார் மாணிக்கவாசகர். ஆதியந்தம் இல்லாத அம்பிகையை அந்தாதியிலேயே பாடினார் அபிராமி பட்டர்.இஷ்ட தெய்வத்தை
இதயத்தில் இருத்துவதும் துதியிலும் தியானத்திலும் அதனுடனேயே
கலந்திருப்பதும் முடிவுறாத் தொடர்ச்சிதானே! அந்தத் தொடர்ச்சியின்
ஆனந்தத்தைத் தருவது அபிராமி அந்தாதி.
 
வாழ்வின் அற்புத கணங்கள் எவையென்று கேட்டால் தன்னை
மறக்கும் கணங்கள் தன்னை இழக்கும் கணங்கள் என்றெல்லாம்
பலரும் சொல்வார்கள். தன்னை மறப்பதை விட தன்னை இழப்பதைவிட
தன்னைக் கடக்கிற கணம்தான் உண்மையிலேயே மிக அற்புதமான கணம்.
 
அலுவலகம் விட்டு வரும் அப்பா குழந்தையின் கையிடுக்குகளில் கைகள்
கோர்த்து கரகரவென சுற்றுவார். கண்கள்கா செருக தலைசுற்ற அலறிச்
சிரிக்கும் குழந்தை.இறக்கிவிட்ட மறுநொடியே "இன்னும் இன்னும்" என்று
கைவிரித்து ஓடிவரும்.இதில் குழந்தைக்கு ஒன்று தெரிகிறது.
கண்கள் செருகினாலும் தலை சுற்றினாலும் அப்பாவின் கைகளில்
பத்திரமாக இருக்கிறோம் என்பதால் அது தன்னை மறக்கிற போதே
தன்னைப் பற்றிய அச்சத்தைக் கடக்கவும் செய்கிறது.     
 
அபிராமி பட்டர் என்னும் அப்பாவின் கவிதைக் கரங்களைப் பற்றி
கரகரவென சுற்றும் உயிருக்கு ஏற்படும் அபிராமி அனுபவம்,தன்னை மறக்கவும் செய்கிறது,தன்னை.. தன் வினைகளை..,பிறவித் தொடர்களை
கடக்கவும் செய்கிறது.
 
அபிராமி என்ன சொல்லுக்கே பேரழகி என்றுதான் பொருள். பேச்சில் அடங்காப் பேரழகு. பேசி முடியாப் பேரழகு."அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத
வல்லி".அது வெறும் திருமேனி அழகா??இல்லை. கருணையின் அழகு.
பேரறிவின் அழகு. மூவராலும் பணிந்து வணங்கப்படும் பேரருளின் பேரழகு.
"அவள் இருக்கிறாள்" என்னும் பாதுகாப்புணர்வில் நம்மில் பெருகுகிற நிம்மதி
என்ன அழகோ,அந்த அழகே அபிராமி.
 
தன்னில் அவளை ஒளியாக உணர்ந்து அவளின் அருளமுதத்தில்
முற்றாய் நனைந்து அந்த மௌனத்திலேயே அமிழந்து, சரியான தருணம்
தாழ்திறக்க தனக்குள் தளும்பி வழியும் அந்த அனுபவம் தன்னையும்
தாண்டி உடைப்பெடுப்பதையும் பெருக்கெடுப்பதையும் அபிராமி பட்டர்
மௌனசாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்க உருவான பனுவல்களே
அபிராமி அந்தாதி. தை அமாவாசையில் சரபோஜி மன்னன் திருக்கடவூர்
வந்ததும்,அன்னையின் திருமுகவிலாசத்தை மனத்தே வைத்து தன்னந்தனியிருந்த அபிராமி பட்டரிடம் என்ன திதி என்று வினவியதும்
அவர் பவுர்ணமி என்று சொன்னதும் அந்தத் தருணத்தின் தாழ்திறப்புக்கான
ஏற்பாடுகள் மட்டுமே. திதிகேட்க வைத்தவளும் அவளே! தமிழ்பாட வைத்தவளும் அவளே!
 
எதையும் தொடங்கும்போதே விநாயகரை வழிபட்டுத் தொடங்கும்
மரபு வழுவாமல் நிதானமாக விநாயகர் காப்பில் தொடங்குகிறார் அபிராமி
பட்டர் என்பதில் எந்த வியப்புமில்லை. ஆனால் திருக்கடவூரிலுள்ள அம்பிகையைப் பாடும்போது அங்கிருக்கும் விநாயகரை விட்டுவிட்டு தில்லையிலுள்ள கற்பக விநாயகரைப் பாடுகிறார் என்பதுதான் வியப்பு.
 
"தாரமர்க் கொன்றையும் சண்பக மாலையும் சார்த்தும் தில்லை
 ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற
 சீரபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே" 
 
இத்தனைக்கும் திருக்கடவூரிலுள்ள விநாயகர்மீது தனியாகவே பின்னாளில்
பதிகம் பாடப்போகிறவர்தான் அபிராமிபட்டர். அப்படியானால் அபிராமி
அந்தாதியின் விநாயகர் காப்புச் செய்யுளில் திருக்கடவூர் விநாயகரை
விட்டுவிட்டு தில்லை விநாயகரைப் பாட  என்ன காரணம்?
 
இப்படி வேண்டுமானால் இருக்கலாம்.திருக்கடவூரிலுள்ள  பிள்ளையாருக்கு
திருட்டுப் பிள்ளையார் என்று பெயர். அமரர்களும் அசுரர்களும் அமுதக்குடத்தை முன்னிட்டு சண்டையிட்டுக் கொள்ள அந்தக் கலசத்தைத்
தூக்கி கமுக்கமாக வைத்துக் கொண்ட கள்ளவாரணப் பிள்ளையார் அவர்.
தில்லையில் இருப்பவரோ கற்பக விநாயகர். எல்லாவற்றையும் தருபவர்.
அந்தாதி என்னும் அமுதக் கலசத்தை கள்ளவாரணப் பிள்ளையார்
கைப்பற்றிக் கொள்ளக்கூடாதென்று கூட அதனைக் காக்கும் பொறுப்பை
கற்பக விநாயகருக்கு அபிராமி பட்டர் அளித்திருக்கலாம்.
 
எது எப்படியோ! அபிராமி அந்தாதி முழுமையிலும் தென்படும் ஒரு தரிசனத்தை விநாயகர் வணக்கப் பாடலிலேயே   தொடங்கி வைக்கிறார்   
அபிராமிபட்டர்.அபிராமி என்னும் அனுபவம் விகசிக்கும் அந்தாதியில்
அம்மையையும் அப்பனையும் ஏகவுருவில் அர்த்தநாரீசுவரத் திருக்கோலத்திலேயே காட்டுவார் அபிராமி பட்டர். அந்தக் காட்சி
காப்புச் செய்யுளிலேயே துவங்குகிறது.
 
தார், ஆண்களுக்குரியது.மாலை பெண்களுக்குரியது. முனைகள் 
கட்டப்படாதது தார். முனைகள் கட்டப்பட்டது மாலை.அதிலும்
கொன்றையந்தார் சிவபெருமானுக்குரியது. சண்பகமாலை அம்பிகைக்குரியது
இரண்டும் ஒருங்கே சார்த்தப்பட்ட உமையொரு பாகராம் தில்லை ஊரரின்
புதல்வராகிய கார்மேனிக் கணபதியே! உலகேழையும் பெற்ற புவனமுழுதுடைய அம்பிகையாம் அபிராமியின் அந்தாதி, எப்போதும்
என் சிந்தையில் நிற்க அருள்புரிவாயாக என்று அபிராமி பட்டர் வேண்டுகிறார்.
 
 விநாயகப் பெருமானின் திருமேனி மேகநிறம். ""நெஞ்சிற் குடிகொண்ட
நீலமேனி" என்பது விநாயகர் அகவல். விநயகருக்கு நிறமும் குணமும்
கார்மேகம்தான். எப்படி வானிலுள்ள கார்முகில் தன்னில் தண்ணீரை
மீதம் வைக்காமல் முழுமையாகப் பொழிகிறதோ அதுபோல் கருணையைக் கரவாது பொழிபவர் கணபதி.அந்த விநாயகர் திருவருளால் முகிலில்
இருக்கும் வானமுதம் போலவே தன் உயிரில் இருக்கும் தேனமுதமாகிய
அபிராமி அனுபவத்தை கரவாது வெளிப்படுத்தும் கவிதைப் பெருக்காக
அபிராமி அந்தாதி அமைய வேண்டும் என்று விநாயகரை வழிபடுகிறார்
பட்டர்.
 
ஒரு நூலுக்கான காப்புச் செய்யுளாக மட்டும் இப்பாடல் அமையவில்லை. "சீரபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே".
அபிராமி என்னும் முடிவுறாத் தொடர்சுழல் அனுபவம் எப்போதும் தன் சிந்தையில் நிலைபெற்றிருக்க வேண்டும் என்பதற்கான விண்ணப்பமாகவும்
இந்தப் பாடல் அமைகிறது.
 
 

Thursday, April 5, 2012

மரபின் மைந்தனின் 48 & 49 வது நூல்கள் வெளியீட்டு விழா




'அபிராமி அந்தாதி' - "வாழ்வில் நிரம்பும் வசந்தம்" 
(அந்தாதி விளக்கவுரை)
மற்றும்

'கோலமயில் அபிராமியே' 
(அம்பாள் பற்றிய கவிதைகள்)

கலைமாமணி. மரபின் மைந்தன் முத்தையாவின் 48 & 49வது நூல்கள் வெளியீட்டு விழா. 
அழைப்பிதழ் இத்துடன்..... அனைவரும் வருக ......

***ரசனை இலக்கிய முற்றம்***