சிதம்பரம்....நிரந்தரம்...

வானம் முழுவதும் தங்கம் வேய்ந்த
 வைகறை நேரம் ஒன்றினிலே
தேனின் ஒருதுளி தேடி நடந்தேன்
தில்லை நகரின் வீதியிலே
கானம் பிறந்திட அசையும் திருவடி
காணக் காண இன்பமடா
ஞானம் பெருகும் ஆனந்த தாண்டவன்
நம்பிய பேருக்கு சொந்தமடாமூவரும் தேடி மலரடி சூடி
திருமுறை பாடிக் கனிந்தஇடம்
யாவரும் காண மணிவாசகத்தை
இறைவன் ஒருபடி எடுத்த இடம்
தேவரும் வணங்கும் பதஞ்சலியோடு
திருமூலருமே அடைந்த இடம்
தாவர சங்கமம் யாவினுக்கும் இந்தத்
தில்லைதானே தலைமையகம்

காலம் என்கிற மூலம் பிறந்தது
கனக சபேசனின் கோயிலிலே
நீல நிறத்தெழில் நாயகியாள் சிவ
காமியின் இன்பக் காதலிலே
தூலம் எடுத்ததன் சூட்சுமம் புரிவது
தாண்டவ சபையின் எல்லையிலே
கோலங்கள் காட்டும் குஞ்சித பாதம்
கொள்ளை கொள்வது தில்லையிலே

அம்பலம் நடுவே அசைகிற அசைவே
அண்டம் அசைவதன் ரகசியமாம்
நம்பலம் அவனென நம்பிய புத்தியில்
வானம் திறப்பதே ரகசியமாம்
பம்பை உடுக்கை சங்குகள் முழங்கப்
பள்ளி நீங்குதல் பேரழகாம்
செம்பொன் கூரையில் செங்கதிர் உதிக்கும்
சிதம்பரம் ஒன்றே நிரந்தரமாம்