Saturday, May 5, 2012

பாரம்பரியத் திருமடங்களும் நவீன குருமார்களும்


இந்து சமயத்தின் இணையிலா அம்சங்களில் குறிப்பிடத்தக்கவை குருபீடங்கள்.முப்பதாண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலான இந்துக்கள் தங்களை ஒரு குருபீடத்துடன் இணைந்திருந்தனர். குலமரபு வழியாகவோ தீட்சை பெற்ற முறையிலோஅத்தகைய தொடர்புகள் அமைந்திருந்தன. அந்தணர்கள்

சிருங்கேரி பீடத்துடனோ காமகோடி பீடத்துடனோ வழிவழியாக ஆட்பட்டிருந்தனர். சைவர்களுக்கு தருமையாதீனம்,திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம்,மதுரை ஆதீனம் போன்ற தொன்மையான மடாலயங்கள் குருபீடங்கள். குருபரம்பரைக்குக் கூடுதல் முக்கியத்துவம்
தரும் வைணவர்களுக்கும் தொன்மையும் பெருமையும் மிக்க ஜீயர்களின் பீடங்கள் உள்ளன.

மேற்கூறிய அமைப்புகள் இன்றளவும் போதிய ஆளுமையுடனும் திகழ்கின்றன எனிலும், நவீன குருமார்களின் வருகை இந்தத் தலைமுறையின் ஆன்மீகத் தேடலைப் புதுப்பித்ததோடு உயிர்ப்பு மிக்க நிறுவனங்களாக செயல்படத் தொடங்கின. தனிமனிதனின் ஆன்மீகத் தேடலுக்கு திசைகாட்டியாய்

விளங்குவதோடு,கல்வி,சுற்றுச்சூழல் போன்ற மேம்பாட்டு அம்சங்களிலும் முழுவீச்சில் இயங்கத் தொடங்கின.

பாரம்பரியத் திருமடங்கள் சாத்திரங்களின் பின்புலம் கொண்டவை. சமய தீட்சைகள் பூசனை விதிகள் நியமங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தருபவை. அவற்றின் பாரம்பரியப் பின்புலத்தாலும் நெறிமுறைகளாலும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் மதிப்பிற்கும் வழிபாட்டுக்கும் உரியவை.

பாரம்பரியமான பீடங்களுக்கும் நவீன குருபீடங்களுக்கும் இடையே சில நுட்பமான வேறுபாடுகள் உள்ளன.



பிராணாயாமம்,யோகம் போன்ற தொன்மையான ஆன்மீகக் கருவிகளைத் தங்கள் புரிதலாலும் உள்ளுணர்வாலும் நவீன மனிதனின் உணர்வெல்லைக்குள் கொண்டு சேர்த்ததில் நவீன குருமார்கள் பெரும் வெற்றி பெற்றனர். ஒரு தனிமனிதன் தன்னுடைய உடலை வளைத்து உடம்பினுக்குள்ளே உறுபொருள் காணமுடிகிறது. தன்னுடைய சுவாசத்தை கவனிப்பதன் மூலம் விழிபுணர்வின் பெருங்கடலில் மூழ்கி முத்தெடுக்க முடிகிறது. இதுபோன்ற நேரடி அனுபவங்களாலும் அவற்றால் விளையும் உடல்நலம் மனநலம் போன்ற பயன்களாலும் நவீன குருமார்கள் தங்கள் தியான அன்பர்களின்

மனபீடங்களில் ஏறிக் கொண்டார்கள்.

இவர்கள் ஆன்மீகத்தின் உட்கூறாகிய அறிவியலை வெளிப்படுத்தியவர்கள் எனிலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் பாரம்பரியத் திருமடங்கள்மீது போதிய மரியாதை கொன்டவர்கள். தங்கள் எல்லைகளைத் தாண்டாமல், பாரம்பரியத் திருமடங்களை சீண்டாமல் இயங்கி வருபவர்கள்.

ஒரு தத்துவத்தைப் பின்புலமாகக் கொண்ட பாரம்பரியத் திருமடங்களுக்கும் தத்துவத்தின் வடிவமாக

குருமார்களை முன்னிறுத்தும் நவீன குருபீடங்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியே இந்த இரண்டு அம்சங்களின் தனித்தன்மைகளையும் உணர்த்துகிறது.

ஆனால் சமீபத்தில் பாரம்பரியச் சிறப்புமிக்க மதுரை ஆதீனத்தின் 293ஆவது சந்நிதானமாக நித்யானந்தரை நியமித்திருக்கிறார் 292ஆவது மதுரை ஆதீனம்.ஒரே நேரத்தில் ஒரு திருமடத்தில் இரண்டு மகாசந்நிதானங்களா என்பது போன்ற எத்தனையோ கேள்விகளை இந்த நியமனம் எழுப்பியிருக்கும் வேளையில் ,பாரம்பரியத் திருமடத்தில் ஒரு நவீன பீடத்தைச் சேர்ந்தவர் அமர்த்தப்படும்போது வெளிப்படையாக உணரப்படும் முரண்களை மட்டுமே சிந்தித்தால் கூடப் போதுமானது.


பட்டத்துக்குரியவராக அறிவிக்கப்பட்ட நிலையிலும் பட்டம் கட்டிக் கொண்ட நிலையிலும் நித்யானந்தா நெற்றியில் திருநீறு இல்லை. திருநீற்றுத் திருப்ப்திகம் பாடிய திருஞானசம்பந்தரின் திருமடத்திற்கு
பீடாதிபதியாகப் பட்டம் சூடிக் கொள்ளும் போது தன் வட்டப் பொட்டோடும் வாட்டமிலாச்சிரிப்போடும் மட்டுமே தோன்றுகிறார் நித்யானந்தா.

அவருக்குப் பட்டம் சூட்டிய மதுரை ஆதீனம் அவர் தலையில்
சூட்டிய மகுடத்தின் மேல் சிறிது திருநீற்றைத் தூவி நெற்றியில் கட்டைவிரலால் "இழுவி"விட்ட  திருநீற்றின் கீற்று மட்டுமே காணப்பட்டது. சைவசமய சின்னங்களில் தலையாயதான திருநீற்றுக்கு இடமில்லை.

சைவசமய தீட்சை பெற்று தம்பிரான்களில் ஒருவராகத் தாழ்வெனும் தன்மை சொல்லி நின்று இறைவணக்கம்,நெறிவணக்கம்,குருவணக்கம் ஆகிய தன்மைகள் ஒருங்கே அமையப்பெற்ற பயிற்சிகள் பெறாத நிலையில் ஒருவரை அமர்த்தியதில் வருகிற மரபுப் பிறழ்வின் அடையாளம் இது.

சம்பவத்தன்று மடாலயத்தில் நுழைந்த இந்து இயக்கத்தினர் திருமடத்திலுள்ள திருஞானசம்பந்தர் திருவுருவருகே அமர்ந்து தேவாரம் பாட, உள்ளே பெருமளவில் குழுமியிருந்த நித்யானந்த பக்தர்கள்
பதிலுக்கு நித்யானந்த முழக்கம் எழுப்பியிருக்கிறார்கள். தேவாரம் பாடுவது தங்கள் குருவிற்கு எதிரானது என்று நினைக்கும் அளவு சைவநெறியின் அடிப்படை அறியாதவர்களின் ஆளுகைக்கீழ் பாரம்பரியமிக்க சைவத்திருமடம் சென்றுவிட்டதா? அவர்களும் தேவாரம் பாடுவதில் இணைந்து

கொண்டிருந்தால் அவர்கள் மீது சைவ அன்பர்கள் நம்பிக்கை கொண்டிருக்க முடியும். அடுத்த வாரிசை நியமிப்பது ஆதீனங்களின் தனியுரிமை என்பது மரபார்ந்த ஒன்றே தவிர எழுதப்பட்ட விதியல்ல. முதல் கோணல் முற்றும் கோணல் என்பதற்கான ஆரம்ப அடையாளங்கள் அரும்பிநிற்கும் இதுபோன்ற பொருந்தா நியமனங்களை ஆதீனகர்த்தரின் ஏகபோக உரிமையென்று விட்டுவைத்து வேடிக்கை பார்ப்பது பொருந்தாது.எல்லாத் தளங்களிலும் ஜனநாயகப் பண்புகள் ஊடுருவியிருக்கும்

வேளையில், பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட ஒரு பீடத்தின் பெருமைகள் அதன் தலைமை நிலையில் இருக்கும் தனிமனிதர்களின் தவறான முடிவுகளால் தள்ளாடுவதை அரசு அனுமதிக்கலாகாது.

சைவத் திருமடங்களுக்கும் வைணவத் திருமடங்களுக்கும் தனித்தனியாக அறவாரியங்களை மாநில அரசு அமைக்க வேண்டும். அருளாளர்களும், சமய சாத்திரத்தில் தேர்ச்சி பெற்ற வல்லுனர்களும் அத்தகைய அறவாரியங்களில் இடம்பெற வேண்டும். பொருந்தாத நியமனங்கள் நிகழ்கையில் தலையிட்டு அவற்றை ரத்து செய்யும் அதிகாரமும் அத்தகைய வாரியங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

தன் நியமனத்திற்கு கண்டனக் குரல் எழுப்பியிருக்கும் பாரம்பரியப் பெருமை மிக்க ஆதீனங்களின் தலைவர்களை "கருடா சௌக்கியமா" என்று கேட்கிறார் நித்யானந்தா.யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம்சௌக்கியமே"