வண்ண நிலவுக்கு வாசனை உண்டுன்னு
பாடிடத் தோணுதே சின்னப்பொண்ணு -அது
மின்னும் அழகினைப் பாக்குறப்போ நெஞ்சில்
மின்னல் கிளம்புதே செல்லக்கண்ணு

புத்தக அறிவைத் தொட்டுப்புட்டா -அது
கண்ணில் தெரிகிற கோளு
நித்தமும் வந்து போவதனால்-அது
நம்ம வீட்டிலொரு ஆளு

கண்ணன்திருடிய பாற்குடமா-கடல்
தந்த அமுதத்தின் பாத்திரமா
சின்னக் கொழந்தைக்கு வேடிக்க காட்டணும்
மேல வரச்சொல்லு சீக்கிரமா-அத
மேல வரச்சொல்லு சீக்கிரமா*சரணம்-1*
ஆயிரம் ஆயிரம் காலங்களா-அது
ஆகாயத்தில் நடக்குதம்மா
தேஞ்சு வளரும் கணக்கிலதான் -அட
சாஸ்திரம் எல்லாம் கிடைச்சுதம்மா

கல்லும் மண்ணும் உள்ளதுதான்-நிலா
சொல்லும் சொல்லுக்குள் நின்னிடுமா?
பிள்ளைகள் உத்து பாத்ததிலே-அதில்
பாட்டி இருப்பது தெரிஞ்சதம்மா
சரணம்-2

தேய்ஞ்சு வளருது வெள்ளிநிலா - என்னும்
சேதிகள் எல்லாம் கற்பனதான்
தேய்பிறை யின்னு ஏதுமில்ல -தினம்
தங்க நெலாவுக்குப் பௌர்ணமிதான்

வாழ்க்கை கூட அப்படித்தான் -நாம
வாடி வருந்தத் தேவையில்ல
  உள்ளே நிலவப் போலெழுந்த -நம்ம
உசுரு தேஞ்சிடப் போறதில்ல