Tuesday, June 18, 2013

சொல்லச் சொன்னாள் அபிராமி

       (இன்று காலை இசைக்கவி ரமணனை அலைபேசியில் அழைத்தேன். எங்கிருக்கிறீர்கள் என்றார். திருக்கடவூரில் என்றேன். அவரிடமிருந்து பேச்சே இல்லை. பின்னர் சொன்னார், "எங்கே இருக்கிறாய் தேவி! நீ எப்படி இருக்கிறாய்" என்று இப்போதுதான் எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் திருக்கடவூரில் இருப்பதாய் சொல்கிறீர்களே!"
என்று. அவர் எனக்கனுப்பிய கவிதைக்கு எழுதிய பதில் கவிதை இது.)


இப்படி ஏன்கேட்டாய்- நான்
எங்கும் இருக்கின்றேன்..-என
செப்பிடச் சொன்னாளே-அந்த
சுந்தரி உன்னிடத்தில்
அற்புதப் புன்னகையால் -புவி
ஆள்கிற அபிராமி-நமை
எப்படி மறப்பாளாம்-மறந்தே
எவ்விதம் இருப்பாளாம்.

சின்னஞ் சிறுவனென- நான்
சுற்றிய பருவத்தில்
அன்புடன் துணைவந்தாள்- அவள்
அரூபச் சிறுமியென
பின்னர் நெடுங்காலம் -நான்
பாதைகள் தவறிநின்றேன்
என்றோ நள்ளிரவில் -வந்தே
எழுப்பிக் கண்மறைவாள்

மீண்டும் அவள்மடியில் -நான்
மலராய் விழுந்தபின்னே
தூண்டும் விளக்கொளியில்-அவள்
தூரம் துடைத்தெடுத்தாள்
நீண்ட வினைவழியே -நாம்
நடந்து சலிக்கையிலே
தீண்டும் குளிராவாள்-விடை
தெரிந்த புதிராவாள்

ஆவின் பாலெடுத்தே -அந்த
அழகியை நீராட்டி
பூவின் சரம்தொடுத்தே-அந்தப்
பூவனம் மேல்சூட்டி
தேவி அகமகிழ-செம்மை
திகழும் பட்டுடுத்தி
நீவிக் கொசுவமிட்டே-திரை
நீக்கினர் அவள்ஜொலித்தாள்

மாலைகள் குவிந்தனவாம்-அவள்
மரகத மேனியெங்கும்
காலைக் கதிரொளியும்-வந்து
கும்பிட உள்நுழையும்
தூலம் சிலிர்ப்பெடுக்க-உள்ளே
தூங்கும் கனல்விழிக்க
கோலங்கள் காட்டிநின்றாள்-எங்கள்
கடவூர் அபிராமி

தன்னந் தனிமையிலே-அவள்
திருமுன் அமர்த்திக் கொண்டாள்
என்னென்ன புலம்பிவிட்டேன்-அவள்
எல்லாம் கேட்டுக் கொண்டாள்
புன்னகை மௌனத்திலே-அவள்
பேசிய கவிதையெல்லாம்
என்றைக்கும் தீராது -அவை
எழுத்தினில் வாராது

குங்குமம் அவள்நிறமே -அதில்
கொஞ்சிடும் அவள்மணமே
தங்க மலர்ப்பதமே -அது
தரும்நிழல் நிரந்தரமே
எங்கும் அவள்முகமே-இந்த
எழுத்துகள் அவள்வரமே
அங்குசம் அவள்கரத்தில் -அட
அதுதான் சுதந்திரமே