Monday, September 23, 2013

சத்குரு ஞானோதயத் திருநாள்

தேதியிது !சாமுண்டி தேவி திருமலையில்
 ஆதி குருவின் அருளாலே-யாதுமாய்
  தன்னை உணருகிற தன்மையிலே சத்குருவும்
  பொன்னாய் மிளிர்ந்த பொழுது.

  பாறை மடியினிலே பூப்பூத்த நாளினிலே
  ஊறும் அமுதத்தின் ஊற்றொன்று-மீறும்
  புனலாய்ப் பெருகி புனிதத்தின் தூய
  அனலாய் எழுந்த அருள்.

 பேசா மவுனத்தில் பேரருளின் அற்புதத்தில்
 ஈஷா உதயத்தின் இன்பநாள்- நேசத்தால்
மானுடத்தைக் காக்கும் மகத்துவம் பொங்கவே
வானிறங்கி வந்த வகை.

சத்குரு என்றதுமே சட்டென்று கண்கலங்கி
பக்தி பெருகுகிற பாங்கெல்லாம்-சக்தி
வடிவாக வந்தவரின் வற்றாத அன்பு
நடமாடும் தெய்வ நிலை.

ஆன குருவடிவே ஆதி சிவவடிவாம்
 ஞானமறை நூல்கள் நவிலுமே-வானகமே
மண்ணில் இறங்கிய மாண்பின் வடிவன்றோ
கண்ணில் தெரியும் குரு

Sunday, September 22, 2013

பாரதி வீட்டில் ஒரு மரம்


21.09.2013. திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் "மண்வாசனை" கூட்டத்தில் கவியரசு கண்ணதாசன் குறித்து உரை நிகழ்த்தப் போயிருந்தேன்.மண்வாசனையை எழுப்பும் விதமாய் மழை வெளுத்து வாங்கியது.கூட்ட அரங்கில் மேடைக்கு இடதுபுறம்நெடிய்துயர்ந்த மரமொன்றின் நிமிர்வுக்கு வாகாய் இடம்விட்டுக் கட்டியிருந்தார்கள்.

அந்த மரத்தை சுட்டிக்காட்டி திரு.இல.கணேசன் என்னிடம் சொன்னார்:
"இந்த மரம் பாரதியார் காலத்திலிருந்தே இருக்கிறது"என்று. பாரதி பார்த்த மரம்.பாரதியைப் பார்த்த மரம் என்ற எண்ணம் மனதை மலர்த்தியது. பாரதியுடன் ஒரேவீட்டில் வாழ்ந்த உயிரல்லவா அது!!

மேடையில் பேசும்போது குறிப்பிட்டேன்."பாரதி வாழ்ந்த வீட்டில் கூட்ட அரங்குக்குப் பக்கத்தில் இந்த மரம் இருப்பதில் ஒரு பொருத்தம் இருக்கிறது.இந்த மேடையில் ஏறிப் பேசுபவர்கள், வெறும் வாய்ச்சொல் வீரர்களாக இருந்துவிட்டால்,தாங்கள் சொல்வதில் தங்களுக்கே நம்பிக்கை இல்லாதவர்களாக இருந்தால்,இந்த நெடிதுயர்ந்த மரத்தின் கிளைகள் ஆகாயத்தில் இருக்கும் பாரதிக்கு சேதி சொல்லும்.."பாரதி! நெட்டை மரங்களென நின்று புலம்பினார்...பெட்டைப் புலம்பல்" என்று  .

அங்கிருந்து தஞ்சைக்குப் போய் வெற்றித்தமிழர் பேரவையின் பாபநாசம் ஒன்றிய அமைப்பாளர் திரு.பரமகுரு இல்லப் புதுமனை புகுவிழாவுக்கு கவிஞர் வைரமுத்து அவர்களுடன் ஆவூர் சென்றேன்.ஊரெல்லைக்குள்
நுழையும்போது கவிஞர் கேட்டார்,"முத்தையா! ஆவூர் மூலங்கிழாரின் ஊர் இந்த ஆவூர் தானா?"என்று.உள்ளூர்ப் புலவர் ஒருவர் அதனை உறுதி செய்தார்.மேடையில் அமர்ந்தபிறகு, "கவிஞர்! நீங்கள் சொன்னது சரிதான்"என்றேன்.

"கிழார்" என்று பெயர் கொண்டவர்கள் பெரும்பாலும் சோழதேசத்துப் புலவர்கள்தான்.அதனால்தான் கேட்டேன்"என்றார் அவர்.

பாரதி பார்த்த மரம்,ஆவூர்க்கிழார் வாழ்ந்த மண் ஆகியவற்றின் அண்மையும் நெருக்கமும் சொல்லத் தெரியாத-சொல்லித் தெரியாத பரவசத்தைத் தந்தது.
இருந்தும் சொல்லப் பார்க்கிறேன்...


வானத்தையே முட்டிப்பார்க்க வளர்ந்தமரம் தவிக்கும்-அதை
வருடித்தந்த பாரதியின் விரல்தடமும் இருக்கும்
கானத்தையே உறிஞ்சிகிட்டு கிளம்பிவந்த வீரம்-அட
கவிஞன்பேரைச் சொன்னதுமே இலையில்சொட்டும் ஈரம்      

பசிய இலை படபடக்க பாட்டுச்சொல்லியிருப்பான் -அவன்
பட்டபாட்டை சொன்னபடி பசியில்தூங்கி இருப்பான்
நிசியினிலே கண்முழிச்சு நடந்திருப்பான் பாவம்-அட
நாக்கிருந்தா இந்தமரம் நூறுகதை கூறும்

ஆடிப்பாடி திரிஞ்சதெல்லாம் அந்தமரம் அறியும்-அந்த
ஆனைதள்ளி விட்டகதை அதுக்குத்தானே தெரியும்
வாடிநின்ன விருட்சத்துக்கு நிழல்கொடுத்த மரமே-ஒன்
வேருக்குள்ளே ஊறுவதும் அவன்கவிதை ரசமே

எங்கபுலவன் விரல்தடத்தை பார்த்துப்புட்டு போறேன் -ஒரு
சங்கப்புலவன் கால்தடத்தைத் தேடிப்பார்த்து வாரேன்
தங்கம் ஒண்ணை தந்துபுட்டு தூங்குதய்யா ஊரு-அந்தத்
தமிழன்வாழ்ந்த குடிசையெங்கே?சொல்லுறது யாரு?

கால்தடமோ விரல்தடமோ கண்ணில்தெரியாது--அட
காலத்தில் பதிச்சதடம் அழிக்க முடியாது
நூல்வடிவம் எடுத்தவர்க்கே நிரந்தரமா இருப்பு- அதில்
நல்லதமிழ் தந்தவர்க்கே நிலவு போல ஜொலிப்பு

Monday, September 16, 2013

தாடிகளை நம்புவது...?



தாடிகளை நம்புவதே தேசத்துக்கு நல்லது
மூடிவைத்துப் பேசவில்லை;மனம்திறந்து சொல்வது
பாடினதார் திருக்குறளை? படத்தைநல்லாப் பாருங்க
பாரதத்தின் நாட்டுப்பண்ணைப் படைத்தவர்யார் கூறுங்க

குறுந்தாடி வளர்த்தவங்க கம்யூனிசம் வளர்த்தாங்க
கைத்தடியும் எடுத்தவங்க பகுத்தறிவை வளர்த்தாங்க
வெறுந்தாடி வளர்த்தவங்க வருத்தமுன்னு சொன்னாங்க
வளரச்சொல்லி விட்டவங்க பரமஹம்சர் ஆனாங்க

வெள்ளியலை தாடிக்காரர் யோக நெறி தந்தாங்க
உள்ளம் அலை பாயாம வாழவழி சொன்னாங்க
டெல்லியில தாடிக்காரர் தலைவருன்னு சொல்றாங்க
உள்ளவரும் தாடியோட  உலவுறதைப் பாருங்க

நாட்டுக்குள்ளே ஒண்ணுரெண்டு தாடி தப்பாப் போகலாம்
வீட்டுக்குள்ளே அண்ணந்தம்பி தாடிமீசை ஆகலாம்
காட்டிலுள்ள சிங்கத்துக்கு பிடரிதாடி ஆகும்ங்க
ஓட்டு கேக்கும் சிங்கத்துக்கு தாடியுண்டா பாருங்க

Friday, September 13, 2013

லிங்க பைரவி

 
 
தூரத்து வெளிச்சம் நீதானா-எனைத்
துரத்திடும் கருணை நீதானா
பாரத்தில் தவிக்கிற நேரத்திலே சுமை
தீர்ப்பது பைரவி நீதானா -என்
திசைகளைத் திறந்தவள் நீதானா 
 
வழித்துணை யானவள் நீதானா
விழுத்துணை யானவள் நீதானா
பழிகள் நிறைந்தஎன் வழியினிலேஒளி
தருபவள் பைரவி நீதானா-உடன்
வருகிற திருவருள் நீதானா
 
 
போகிற வழியெது தெரியாதே-இந்தப்
பேதைக்கு வாழ்க்கை புரியாதே
வேகிற விறகென ஆகிற தருணம்
பாய்கிற கங்கை நீதானா-எனைப்
பவித்திரம் செய்பவள் நீதானா 
 
நான்கொண்ட பந்தங்கள் வேதனைதான் -இந்த
நாடக வாழ்க்கையும் வேதனைதான்
வான்கொண்ட நிறமே ஆனந்த ஸ்வரமே
ஆட்கொண்ட கருணை நீதானா-எனை
ஆள்வது பைரவி நீதானா
 
ஆயிரம் வினைகளின் பாத்திரம்நான்-வெறும்
ஆசையின் விளைநிலம் மாத்திரம்நான்
தாயெனப் பரிந்து தீயென எழுந்து
தீவினை எரிப்பவள் நீதானா-கதி
தருபவள்பைரவி நீதானா
 
என்னென்ன வேடங்கள் போடுகிறேன் -நான்
என்னை எங்கெங்கு தேடுகிறேன்
 மின்னென எழுந்து கண்களைத் திறந்து
உண்மையைச் சொன்னவள் நீதானா-என்
உயிர்த்துளி பைரவி நீதானா
 

Wednesday, September 11, 2013

பாரதிக்கு முந்தைய பாரதிகள்

 
 
மகாகவி பாரதிக்கு முன்பும் சமகாலத்திலும் பாரதி பட்டத்துடன் திகழ்ந்தவர்கள் குறித்து உவமைக்கவிஞர் சுரதா ஒரு பாட்டுப் பட்டியலை வழங்கியிருக்கிறார்.

1) திருவதிகைக் கலம்பகம் எழுதிய வேலாயுத பாரதி
2)திருவிளையாடல் நாடகம் எழுதிய கிருஷ்ண பாரதி
3)சூடாமணி நிகண்டு இயற்றிய ஈஸ்வர பாரதி
4)ஆத்திசூடி வெண்பா வடித்த இராம பாரதி
5) விஸ்வபுராணம் இயற்றிய முத்துச்சாமி பாரதி
6)திருத்தொண்டர் மாலை,தேசிகர் தோத்திரம் போன்ற நூல்கள்   தந்த புதுவை குமார பாரதி
7)கூடல் பதிகம் பாடிய குணங்குடி கோவிந்த பாரதி
8) கந்தபுராணக் கீர்த்தனை,வேங்கைக்கும்மி உள்ளிட்ட பல நூல்களைப் பாடிய பெருங்கரை குஞ்சர பாரதி
9)மதுரகவி பாரதி
10)கீர்த்தனைகள் பல தந்த கோபாலகிருஷ்ண பாரதி
11)பாரதியின் பால்ய நண்பர் பசுமலை சோமசுந்தர பாரதி
உவமைக்கவிஞரின் இந்தப் பட்டியல் அடங்கிய கவிதை அவர்தம் வழித்தோன்றல் கவிஞர் கல்லாடன் நடத்திவரும்
வள்ளுவர் தமிழ்ப்பீடம்  செப்டம்பர் 2013 இதழில் வெளியாகியுள்ளது.
தொடர்புக்கு:93808 34762

Tuesday, September 10, 2013

ஊழி உலுக்கியவன்

கானமெழுப்பிய பேரிகை ஒன்றினைக்
கட்டிலில் போட்டது யார்?அட
கட்டிலில் போட்டது யார்?
யானை உலுக்கிய ஆல மரமொன்றின்
வேரை அசைத்தது யார்?அட
வேதனை தந்ததும் யார்?

ஏறிய நெற்றியை மீறிய மீசையை
எங்கோ மறைத்தது யார்-அட
எங்கோ மறைத்தது யார்
கீறிய சூரியப் பிஞ்சின் சுடர்கொண்டு
ககனம் நிறைத்தது யார்-யுகக்
கதவை உடைத்தது யார்?

வந்த நெருப்பிடம் வாஞ்சை வளர்த்தவன்
வற்றிய மேனிதந்தான் -வாடி
வற்றிய மேனிதந்தான்
சொந்த நெருப்பினை செந்தமிழ் ஆக்கியே
ஜோதி வடிவுகொண்டான் -புது
நீதி பலவும்சொன்னான்

பாற்கடல் நக்கிய ராட்சசப் பூனையின்
பாட்டையில் கால்பதித்தான் -எங்கள்
பாரதி கால்பதித்தான்
ஏக்கம் வளர்த்தவன் ஏழு கடலையும்
ஏந்தி இதழ்பதித்தான் -அதில்
காளி ரசம் குடித்தான்

மேனியின் வீணையில் ஓடும் நரம்புகள்
மேதைமைப் பாட்டிசைக்கும்-அவன்
தாங்கிய கூடசைக்கும்
வானம் குலுங்கிட ஊனும் விதையவன்
ஊனில் ஒளிந்திருக்கும்-அதில்
ஊழி அதிர்ந்திருக்கும்

ஆண்டுகள் எத்தனை ஆயினும் பாரதி
ஆளுமை வியாபகமே-அவன்
ஆண்மையின் ஞாபகமே
நீண்டிடும் பாதையின் நிர்மல வெய்யிலாய்
நிற்கும் அவன்முகமே-அவன்
என்றும் நிரந்தரமே