ஊழி உலுக்கியவன்

கானமெழுப்பிய பேரிகை ஒன்றினைக்
கட்டிலில் போட்டது யார்?அட
கட்டிலில் போட்டது யார்?
யானை உலுக்கிய ஆல மரமொன்றின்
வேரை அசைத்தது யார்?அட
வேதனை தந்ததும் யார்?

ஏறிய நெற்றியை மீறிய மீசையை
எங்கோ மறைத்தது யார்-அட
எங்கோ மறைத்தது யார்
கீறிய சூரியப் பிஞ்சின் சுடர்கொண்டு
ககனம் நிறைத்தது யார்-யுகக்
கதவை உடைத்தது யார்?

வந்த நெருப்பிடம் வாஞ்சை வளர்த்தவன்
வற்றிய மேனிதந்தான் -வாடி
வற்றிய மேனிதந்தான்
சொந்த நெருப்பினை செந்தமிழ் ஆக்கியே
ஜோதி வடிவுகொண்டான் -புது
நீதி பலவும்சொன்னான்

பாற்கடல் நக்கிய ராட்சசப் பூனையின்
பாட்டையில் கால்பதித்தான் -எங்கள்
பாரதி கால்பதித்தான்
ஏக்கம் வளர்த்தவன் ஏழு கடலையும்
ஏந்தி இதழ்பதித்தான் -அதில்
காளி ரசம் குடித்தான்

மேனியின் வீணையில் ஓடும் நரம்புகள்
மேதைமைப் பாட்டிசைக்கும்-அவன்
தாங்கிய கூடசைக்கும்
வானம் குலுங்கிட ஊனும் விதையவன்
ஊனில் ஒளிந்திருக்கும்-அதில்
ஊழி அதிர்ந்திருக்கும்

ஆண்டுகள் எத்தனை ஆயினும் பாரதி
ஆளுமை வியாபகமே-அவன்
ஆண்மையின் ஞாபகமே
நீண்டிடும் பாதையின் நிர்மல வெய்யிலாய்
நிற்கும் அவன்முகமே-அவன்
என்றும் நிரந்தரமே