|
புகைப்படம்: சுகா |
(இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ஒவ்வொரு பிறந்தநாளிலும் என் வாழ்த்துக்
கவிதை சில ஆண்டுகளாய் இணைய வெளியிலே உலா வரும்.இந்தமுறை அவர்
பிறந்தநாளையொட்டி"ஆனந்தம் ஆரம்பம்" என்னுந் தலைப்பில் அவருடைய மணிவிழா
கவியரங்கிலேயே வாழ்த்துக் கவிதையையும் வாசிக்க முடிந்தது)
"குருவென்னும் போதையில் குளிர்கொண்ட கோடையில்
குடிகொண்ட கவிதை மேகம்
குழுவொன்றும் இன்றியே குதூகலச் சிறுவனாய்
குலவிடும் இனிய நேயம்
அருளென்னும் கங்கையில் அன்றாடம் மூழ்கியும்
அடங்காத ஆத்ம தாகம்
அறுபதாம் அகவையாம்; அதற்கிவர் கவிதையாம்;
அம்பிகை செய்கை யாவும்!
கருவென்னும் ஒன்றிலே குடியேறும் தகுதியோ
கொஞ்சமும் இல்லை இனிமேல்,
கவிகொஞ்சும் இசையோடு "கலகல' சிரிப்போடு
காணுக என்றும் நலமே!
திருவென்னும் நிறைவெலாம் திகழ்கின்ற புகழ்வாழ்வு
தினம்காண்க கவிரமணனே
திசையெட்டும் கைகொட்டி இசையட்டும் உன்பாட்டில்
திருவருள் துணையாகவே