வாக்களிக்க வாருங்கள்

வாசல்தேடிக் கும்பிடுவோர் விரலகள் பாருங்கள்-அவர்
விரல்களிலே என்ன கறை என்று தேடுங்கள்
பேசும்பேச்சில் உண்மையுண்டா என்று கேளுங்கள்-ஒரு
புதுவெளிச்சம் வரும்சுவடு தன்னைத் தேடுங்கள்

ஆட்டம்காணும் ஆட்சியிங்கு தேவையில்லையே-வெறும்
ஆள்பிடிக்கும் உத்திக்குநாம் அடிமையில்லையே
ஓட்டு வாங்கி மறப்பவரைரை ஓடச் செய்யுங்கள்-நல்ல
உயர்ந்த மாற்றம் தருபவரை ஆளச் செய்யுங்கள்

கொள்கைகளை அடகுவைக்கும் கட்சிகள்வேண்டாம்-வெறும்
கோஷ்டிகளை வளர்த்துவிடும் கட்சிகள் வேண்டாம்
உள்ளபடி நல்லபடி ஆள்பவர் யாரோ-அந்த
உயர்ந்தவரைக் கூட்டிவந்துஅமரச் செய்யுங்கள்

வல்லரசாய் வருவதற்கு வாய்ப்பு உள்ளதா-அந்த
வழியைக்கூட இதுவரைக்கும் காட்டவில்லையே
நல்லரசாய் அமையத்தானே நாமும் கேட்கிறோம்-அதை
நிகழ்த்தவேனும் வாக்களிக்க நீங்கள் வாருங்கள்

உங்கள் ஓட்டு உங்கள்தேர்வு உங்களுரிமை-அதை
உரியநாளில் பதிவதுதான் நமது கடமை
அங்குமிங்கும் கேட்கிறதே ஆயிரம்கோஷம்-நாம்
அணிதிரண்டால் பிழைத்துவிடும் பாரததேசம்