ஒழுங்கின்மை தானே ஒழுங்கு

கடந்த சில மாதங்களாகவே கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழாக்களில் பங்கேற்று வருகிறேன். மாணவர்களுக்குப் பேசுவது என்பதும் ஆண்டு விழாக்களில் பேசுவதும் வெவ்வேறு தன்மைகள் வாய்ந்தவை.மாணவர்கள் மட்டுமே நிறைந்த அவையில் அவர்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லலாம். பெற்றோர் மட்டுமே இருக்கும் அவையில் பெற்றோர்களுக்கானதை பேசலாம்.இருவரும் கலந்திருக்கும் அவையில் பொதுவாகப் பேச வேண்டும்.குறிப்பாக மாணவர்களை வைத்துக் கொண்டு பெற்றோர்களுக்கு பிள்ளை வளர்ப்பின் அம்சங்களைப் பேசலாகாது.

 சில மாதங்களுக்கு முன் பவானியில் ஆப்டிமஸ் பள்ளியின் மாண்டிஸோரி பிரிவு ஆண்டுவிழா.தை அமாவாசையை ஒட்டி பவானி கூடுதுறையில் கூடியிருந்தது மக்கள் வெள்ளம்.பவானியிலிருந்து சிறிது தூரத்தில்கவுந்தப்பாடி சாலையில் அமைந்துள்ளது ஆப்டிமஸ் பள்ளி.

பேச்சுக்குப் பிறகு குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள்.மழலையர் பள்ளி என்பதால் ஆசிரியைகள் கூடுதல் சிரத்தை எடுத்து குழந்தைகளைப் பழக்கியிருந்தார்கள். நடன நிகழ்ச்சி தொடங்கியது. பிள்ளைகளுக்கு மறந்துவிடும் என்பதால் ஆசிரியை மேடையின் பக்கவாட்டில் ஓதுங்கி நின்றுகொண்டு குழந்தைகளுக்கு மட்டும் தெரியும் விதமாக ஆடிக்கொண்டிருந்தார். முதல் வரிசையில் இருந்ததால்  அவர் ஆடுவதை என்னால் பார்க்க முடிந்தது. உடனே மேடையிலிருந்த சில குழந்தைகல் மேடைக்குப் பக்கவாட்டாக திரும்பி நின்று கொண்டு தங்கள் டீச்சர் ஆடுவதை சந்தோஷமாக வேடிக்கை பார்க்கத் தொடங்கின.


                                 இதை கவனித்த பள்ளியின் பொருளாளர் திரு.தனபாலன்,அடுத்த நடனத்திற்கு மேடையின் முன்புறம் நின்று குழந்தைகளை நெறிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். அடுத்த நடனத்தில் பிள்ளைகள் கரடி வேடமணிந்து மேடையில் தோன்றின. பாடல் ஒலிக்கத் தொடங்கிய விநாடியில் ஒரு கரடிக் குட்டிக்கு இடது காது கையோடு வந்துவிட்டது. அது மிகவும் சமர்த்தான கரடிக்குட்டி என்பதால், அந்தக் காதை மேடையிலிருந்தபடியே டீச்சரிடம் நீட்டியது.

மேடையின் முன்புறமிருந்த டீச்சர் ஆடிக்காட்டியபடியே
அந்தக் காதை கீழே போட்டுவிடுமாறு சைகை காட்டிக் கொண்டேயிருந்தார்.இப்போது மற்ற கரடிக்குட்டிகளுக்கு குழப்பம்.தங்களுக்கு சொல்லித்தந்த நடனத்தில் இல்லாத ஓர் அபிநயத்தை  டீச்சர் செய்கிறாரே என்று அவை குழம்பி நின்றன.

இப்போது ஒரு காதை இழந்த கரடிக்குட்டிக்கு இன்னொரு கவலை. ஒரேயொரு காதுடன் ஆடினால் நன்றாகவா இருக்கும்? கர்ம சிரத்தையாக இன்னொரு காதையும் பிய்த்து கீழே வீசிவிட்டு இனி நிம்மதியாக ஆடலாம் என்று முடிவு செய்த போது பாடல் முடிந்து விட்டது.குழந்தைகளின் உலகத்தில் ஒழுங்கின்மைதானே ஒழுங்கு!!