Thursday, June 18, 2015

கோவை கண்ணதாசன் கழகம் கண்டன எதிரொலி: ஸ்லீப்வெல் நிறுவனம் முதல்கட்ட நடவடிக்கை




கவியரசு கண்ணதாசனின்மலர்ந்தும் மலராத பாதிமலர்போல’’ எனும் பாடலை ஸ்லீப்வெல் படுக்கை விளம்பரத்திற்கு தவறான பொருளில் பயன்படுத்தியதைக் கண்டித்து கோவை கண்ணதாசன் கழகம் நடத்திய கண்ணதாசன் விழாவில் மரபின்மைந்தன் முத்தையா கண்டனம் தெரிவித்தார். இது குறித்த விரிவான செய்தி இண்டியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளிவந்தது.


இந்தக் கண்டனத்திற்கு ஆதரவாக சாகித்ய அகாதெமி விருது பெற்ற கவிஞர் புவியரசு, திரைப்படத் திறனாய்வுக்காக தேசிய விருது பெற்ற திரு.ஜீவானந்தம்,கலைக்களஞ்சியம் உருவாக்கிய பேராசிரியர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.


கவிஞரின் புதல்வர் திரு.காந்தி கண்ணதாசன் இவ்விளம்பரம்பற்றி தற்போதுதான் அறிந்ததாகவும் தேவைப்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தை தலைமையகமாகக் கொண்ட ஸ்லீப்வெல் படுக்கை தயாரிப்பு நிறுவனம் இன்று (!8.06.2015) இது குறித்து முதல்கட்ட நடவடிக்கை மேற்கொண்டது.அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அறிவுறுத்தலின் பேரில் அதன் தமிழக செயல்பாடுகளை நிர்வகிக்கும் நிறுவன துணைத்தலைவர் திரு.பி.நரேந்திரன் இன்று கோவை வந்தார்.


இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் திரு.பா.மீனாட்சிசுந்தரத்துடன் தொடர்பு கொண்டார். அதன்விளைவாக திரு.நரேந்திரனுடன் பேச்சு வார்த்தை நடத்த மரபின்மைந்தன் முத்தையாவுக்கு திரு.மீனாட்சிசுந்தரம் அழைப்பு  விடுத்தார்.

விளம்பரத்தில் என்ன தவறு?
இந்த விளம்பரத்தில் பின்னணியில்மலர்ந்தும் மலராதபாடல் ஒலிக்க,ஒரு பெண் தூக்கமின்றிப் புரள்வது போல் காட்டப்படுகிறது.பின்னர் ஒருவர் திரையில் தோன்றிமலர்ந்தும் மலராத மலர்போல இருக்காதீர்கள்.ஸ்லீப்வெல் படுக்கைகளை பயன்படுத்தி நன்கு உறங்குங்கள்'' என்பதாக பேசுகிறார்.

தாலாட்டுப் பாடலை தூக்கம் வராத அவஸ்தையின் வர்ணனையாக பொருள் படும்படி காட்சிப்படுத்தியது முதல் தவறு. மலர்ந்தும் மலராத மலர் என்பது குழந்தையின் கண்களுக்கான உவமை. அதை தூக்கமிழந்த மனிதருக்கான உவமையாய் கருதிஆப்படி இருக்காதீர்கள்:’ என்று சொல்வது அபத்தமானது.”

என்று மரபின்மைந்தன் முத்தையா கண்டனத்துக்கான காரணத்தை விவரித்தார். பின்னணியில் பாடலை ஒலிக்கவிட்டு, நன்கு உறங்குவதுபோல் காட்டிஸ்லீப் வெல் படுக்கையில் குழந்தை போல் உறங்குங்கள்’’ என்று காட்டியிருந்தால் யாரும் எதிர்க்கப் போவதில்லை.பாடலின் பொருள் தொனி அனைத்தையும் தவறாக வெளிப்படுத்துவது கவியரசு கண்ணதாசனின் பாடலை கொச்சைப்படுத்துகிறது.எனவே இந்த விளம்பரத்தை ஒளிபரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். சர்ச்சைக்கிடம் தராத வகையில் காட்சியமைப்பையும் வசனங்களையும் மாற்ற வேண்டும்’’ என்றும் வலியுறுத்தினார்.


‘’இந்தக் கோரிக்கை நியாயமானதுஎன ஒப்புக் கொண்ட திரு.நரேந்திரன் தங்கள் தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.       




Wednesday, June 10, 2015

நாதமே எங்கும் நிறை



 மறையா மறைபொருளே; மாதவமே; என்றும்
குறையா கருணைக் கடலே- நிறைந்தாயோ!
பொன்மேனி தன்னை பழஞ்சட்டை போலுதறி
நின்றாயோ எங்கும் நிலைத்து.


ஒப்பில் உயர்ஞான உத்தமனே; உண்மைகள்
செப்பவே வந்தனை செம்மலே-கப்பலாய்
மூட்டைவினை யேற்றி மனிதர் சுமைநீக்கி
ஓட்டினையோ சாகரத்தின் உள்

மோன சிவானந்த மூர்த்தி! உயிரொளியால்
வானளந்த வாமன வள்ளலே-ஊனுதறி
தானாய் கரைந்த தயாபரனே ! ஞானத்தின்
தேனாய் உயிரில் திகழ்.

கயிலாய வெற்பில் குளிர்முகிலா னாயோ;
ஒயிலான  கங்கையொளிந் தாயோ- வெயிலான
ஆதவனின் பொற்கிரணம் ஆனாயோ; ஆனந்த
நாதமே எங்கும் நிறை.