Wednesday, June 10, 2015

நாதமே எங்கும் நிறை



 மறையா மறைபொருளே; மாதவமே; என்றும்
குறையா கருணைக் கடலே- நிறைந்தாயோ!
பொன்மேனி தன்னை பழஞ்சட்டை போலுதறி
நின்றாயோ எங்கும் நிலைத்து.


ஒப்பில் உயர்ஞான உத்தமனே; உண்மைகள்
செப்பவே வந்தனை செம்மலே-கப்பலாய்
மூட்டைவினை யேற்றி மனிதர் சுமைநீக்கி
ஓட்டினையோ சாகரத்தின் உள்

மோன சிவானந்த மூர்த்தி! உயிரொளியால்
வானளந்த வாமன வள்ளலே-ஊனுதறி
தானாய் கரைந்த தயாபரனே ! ஞானத்தின்
தேனாய் உயிரில் திகழ்.

கயிலாய வெற்பில் குளிர்முகிலா னாயோ;
ஒயிலான  கங்கையொளிந் தாயோ- வெயிலான
ஆதவனின் பொற்கிரணம் ஆனாயோ; ஆனந்த
நாதமே எங்கும் நிறை.