இப்படித்தான் ஆரம்பம்-11

கண்ணன் மீதான கண்ணதாசனின் ஈடுபாடு,அவருடைய புனைபெயருக்கும் பிந்தியது. பத்திரிகை ஒன்றில் வேலை தேடிப்போன போது,"என்ன புனைபெயரில் எழுதி வருகிறீர்கள்?"என்று பத்திரிகை ஆசிரியர் கேட்டாராம்.கம்பதாசன்,வாணிதாசன்
போன்ற பெயர்கள் அப்போது பிரபலமாக இருந்ததால்,சிறிது யோசித்துவிட்டு "கண்ணதாசன்"என்று சொல்லிவிட்டாராம்.பத்திரிகை ஆசிரியர் "ஆமாம் !பார்த்திருக்கிறேன்"என்று வேறு சொன்னாராம்.


அந்தக் காலங்களில் கண்ணதாசனுக்குக் கண்ணன் மீது பெரிய பக்தி இருந்ததில்லை.
காலப்போக்கில் கிருஷ்ணபக்தராகவே கனிந்தார் கண்ணதாசன்.தன்னிடம் வாக்களித்துவிட்டு வேறொருவருக்கு வாடகைக்கு விட்ட ஸ்டூடியோ அதிபரிடம்
'உன் ஸ்டூடியோ தீப்பிடித்து சாம்பலாகப் போகும்'என்று சாபமிட்டு கண்ணதாசன் வீடு திரும்பினாராம். வீட்டுக்குள் வந்ததுமே,மின்கசிவினால் அந்த ஸ்டூடியோ தீப்பிடித்ததாகத் தொலைபேசியில் செய்தி வந்ததாம்
"கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்"என்று கவிஞர் எழுதிய பல்லவிக்கு இது போன்ற சம்பவங்களே காரணம் என்று அவரே எழுதியிருக்கிறார்.

கண்ணனை, மிக அந்தரங்கமான துணையாய் அவர் உணர்ந்திருக்கிறார்.தனிக்கவிதை ஒன்றில் இதனைப் பதிவு செய்தும் இருக்கிறார்.

"நள்ளிராப் போழ்தினில் நானும் என் கண்ணனும்
 உள்ளுறும் பொருள்களை உரைப்பதும் உண்டுகாண்!
கள்ளினும் இனிய என் கண்ணன் சொல்வது
'பிள்ளைபோல் வாழும்நீ பிதற்றலும் கவிதையே"
என்று கண்ணனுக்கும் தனக்குமான உரையாடலை எழுதுகிறார்.

ஸ்ரீகிருஷ்ண போதையின் உச்சத்தில் ஓரிரு நாட்களுக்குள் எழுதப்பட்ட பாடல்கள் கிருஷ்ணகானம் இசைத்தொகுப்பில் உள்ளவை.ஒவ்வோர் இசைக்கலைஞரும்
உருகி உருகிப் பாடியிருப்பார்கள்.

உள்ளே முழு விழிப்புநிலையில் இருப்பதையே பரந்தாமனின் அரிதுயில் என்று வைணவம் சொல்கிறது.அறிதுயில் என்கிற தத்துவத்தை அனாயசமாகப் பாடுகிறார் கண்ணதாசன். பாட்டு என்னவோ தாலாட்டுப் பாடல்தான்.

'ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில்
கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ"

என்ற பாட்டு. அதில்...

'நாகப்படம் மீதிலவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ!அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்,யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ"

என்கிற  வரிகளில் தத்துவத் தெறிப்பும் தாய்மைத் தவிப்பும் சேர்ந்து விளையாடும்.

பெரியாழ்வார் ஒரு சித்திரத்தைக் காட்டுகிறார்.கண்ணன் யசோதையிடம் முலையமுதம் உண்டு முடித்ததும் அவனைத் தங்கள் வீட்டுக்கு அள்ளிப்போக பெண்கள் காத்திருக்கிறார களாம்.அவர்களின் வாழ்க்கை இலட்சியமே ,கண்ணனைப்போலொரு குழந்தையைப் பெறுவதுதான்.

"பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரைப் பெறுதும் என்னும் ஆசையாலே"

கண்ணனைப் போல் ஒரு பிள்ளை பெறுவது சாத்தியமில்லையே! அதனால்
கண்ணனைக் கொஞ்சி,அவனை முத்தமிடச் சொல்லி ரகசியமாய்க் கெஞ்சத்தான்
அவனை பெண்கள் வீட்டுக்குக்குத் தூக்கிப் போவார்களாம்.

"வண்டுலாம் பூங்குழலினார் உன் வாயமுதம் உண்ணவேண்டி
கொண்டுபோவான் வந்து நின்றார் கோவிந்தாநீ முலையுணாயே"
என்பது பெரியாழ்வார் பாடல்.

"கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ-அவன்
பொன்னழகைப் பார்ப்பதற்கும் போதைமுத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ" 

என்ற கண்ணதாசனின் வரிகள் எனக்குப் பெரியாழ்வாரை ஞாபகப்படுத்தும்.
(பெரியாழ்வாரை ஞாபகப்படுத்துவதில் இருபத்தோராம் நூற்றாண்டின் தாய்மார்களும்

சளைத்தவர்களில்லை.அதிகாலையில் குழந்தைகளை அரைத்தூக்கத்தில் எழுப்பி,அலற அலறக் குளிப்பாட்டி,அழுவதற்காகத் திறந்த வாய்க்குள் இட்லியைத் திணித்து,குழந்தையையே சீருடைக்குள் திணித்து,வாசலில் அலறும் ஹாரன் சத்தம் கேட்டு குழந்தையை புத்தகமூட்டையோடும் சாப்பாட்டு மூட்டையோடும் ஆட்டோவில் திணித்து,ஆட்டோ நகர நகர,அழுது கொண்டே கையசைக்கும் குழந்தையைப் பார்த்து கண்களைத் துடைத்துக் கொண்டே உள்ளே போகும் தாய்மார்களை வீதிதோறும் பார்க்கிறீர்கள்தானே!இதை ஒரே வரியில் பெரியாழ்வார் படம் பிடித்திருக்கிறார்."தம்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மார் ஆவர் தரிக்க இல்லார்" என்கிறார் பெரியாழ்வார்)

கண்ணதாசனின் கிருஷ்ண கானங்களில் தாய்மையுண்ர்வு தூக்கலாக இருக்கும். குறிப்பாக,

"குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்"
என்ற பாடல்.

குருவாயூர்க் கோவிலில் கண்ணன் கருவறையில் மட்டுமா காட்சி
தருகிறான்?இல்லை என்கிறார் கண்ணதாசன். குழந்தைக்கு முதல்முதலாக சோறூட்டும் வைபவம்குருவாயூரில்  தினமும் நடக்கும்.
கண்ணனைக் காண்பது கருவறையில் மட்டுமில்லையாம்

குருவாயூருக்கு வாருங்கள் -ஒரு
குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
ஒருவாய் சோறு ஊட்டும் தாய்முன் 
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்
என்கிறார் கவிஞர்.

தன் குழந்தையைப் பார்த்து சிலிர்ப்பவள் தாய்.எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் சிலிர்ப்பதே தாய்மை.அதுவே பிரபஞ்சத் தாய்மை.யசோதை கண்ணனை வாய்திறக்கச் சொன்னபோது உள்ளே பிரபஞ்சமே தெரிந்ததாம்.அந்த விநாடியில் யசோதை பிரபஞ்சத்தையே தன் குழந்தையாக உணர்ந்திருப்பாள். சராசரியான தாய்க்கு தன் பிள்ளையே பிரபஞ்சம்.புவனம் முழுதுடைய தாய்மைக்கு பிரபஞ்சமே பிள்ளை. இந்த உணர்வை ஊட்டத்தான் கண்ணனும் கந்தனும் குழந்தைகளாகக் காட்சி தருகிறார்கள். குருவாயூர்ப் பாலகனுக்கு ஒவ்வொரு பொழுதுக்கும்  ஒவ்வோர் அலங்காரம் நடக்கிறது. அதைப்பார்க்கும் போது தாய்மைக்கு என்ன நிகழ்கிறது?
கவிஞர் எழுதுகிறார் பாருங்கள்:

உச்சிக் காலத்தில் ஸ்ருங்காரம்-அவன்
ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்
பச்சைக் குழந்தையைப் பார்க்கும் போதே
பாவையர் தாய்மை ரீங்காரம்.

நம்மில் இருக்கும் தாய்மை உணர்வைத் தூண்டி ரீங்காரமிடச் செய்வதுதானே கடவுளின் கனவு!!

(தொடரும்)