ஒருபுறம் உலக இன்பங்களைத் துய்ப்பதில் கண்ணதாசன் காட்டிய ஈடுபாடும், மறுபுறம் கண்ணனில் மூழ்கித் திளைத்த மனப்போக்கும், வாழ்க்கை அனுபவங்களை சாட்சிபூர்வமாகப் பார்க்கும் சமநிலையை அவரிடம் ஏற்படுத்தியிருந்தது. கண்ணனின் வாழ்வில் நடந்ததாக சொல்லப்படும் சில சம்பவங்களின் ஊடே புகுந்து நிகழ்காலம் குறித்த சில சுவையான பிரகடனங்களைக் கவிஞர் வெளிப்படுத்துவார். இலக்கண பாஷையில் இதைத் தற்குறிப்பேற்றம் என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம்.ஆனால் அதையும் தாண்டிய அபூர்வமான தொடுகை ஒன்றில் அவர் கவித்துவமாய் சில மாயங்களைச் செய்வார். தண்ணீர்ப்பாம்பில் ஏன் விஷமில்லை என்பதற்குஅவர் சொல்லும் காரணத்தை கிருஷ்ணகானத்தில் கேட்டிருப்பீர்கள்.
"கண்ணனவன் நடனமிட்டு காளிந்தியைக் கொன்றபின்தான்
தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை ராமாரி!-அவன்
கனியிதழில் பால்குடித்து பூதகியைக் கொன்ற பின்தான்
கன்னியர்பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரிராமாரி-ஹரே-கிருஷ்ணாரி"
இது மிகவும் கோலாகலமான பாடல். வாழ்க்கையில் புரிதல் அடிப்படையில் சில சம்பவங்கள் நம்மை மயக்கும். உணர்தல் அடிப்படையில் சில சம்பவங்கள் நம்மை மயக்கும். உள்மனதில் ஊற்றெடுக்கும் காதலிலோ பக்தியிலோ சில பரவசமான பொற்கணங்கள் பூப்பதுண்டு. புரியவைக்க முயன்றால் அது பெருந்தோல்வியில் முடியும். ஏனெனில் அது உணர்தலின் பாற்பட்டது. தத்துவத் தேடலில் முதல் கேள்வி என்ன என்றொரு சீடர் ஜென் குருவிடம் கேட்டாராம்.அதற்கு அந்த குரு, "முதல் கேள்வியை உனக்கு நான் சொன்னால் அது இரண்டாவது கேள்வியாகிவிடும்" என்றாராம். முதல் கேள்வியின் தீவிரம் கேட்கப்படுவதல்ல-அது ஒரு வேட்கை என்பார் ஓஷோ. தாகம் புரிதலின் எல்லைக்குள் வராதது.உணர்வில் மட்டும் உன்னதங்களை நிகழ்த்துவது. அப்படி சில நிமிஷங்களை இந்தப் பாடலில் எழுதியிருப்பார் கவிஞர்.
"குளத்தில் முங்கிக் குளிக்கையிலே கோவிந்தன் பேரைச் சொன்னால்
கழுத்திலுள்ள தாலி மின்னுது ராமாரி-சேலை
திருத்தும்போது அவன்பெயரை ஸ்ரீரங்கா என்றுசொன்னால்
அழுத்தமான சுகமிருக்குது கிருஷ்ணாரி
ராமாரி-ஹரே-கிருஷ்ணாரி"
இந்த வரிகளைப் புரியவைக்க முயன்றால் அது மிக அபத்தமான முயற்சியாகப் போகும். பொழிப்புரைகளுக்கு எட்டாத பொழிவு இது. பக்தியை ஓர் இயக்கமாக ஏற்படுத்தியவர்கள் மக்கள் மத்தியில் தங்கள் நம்பிக்கைகளைக் கொண்டுசேர்க்க, சில அற்புதங்களை மையமிட்டுத் தொடங்குவார்கள்.பின்னர் அவர்களுக்கும் இறைவனுக்கும் இடையே அந்தரங்கமான உரையாடல் நிகழத் தொடங்கும். மேலே சொன்ன வரிகள் அந்த அந்தரங்க உணர்வின் வெளிப்பாடுகள்.ஆனால் இந்தப் பாடல், கண்ணனின் அற்புதங்களைப் பொதுவில் பாடிக்கொண்டாடும் விதமாகத்தான் தொடங்குகிறது.
கோகுலத்துப் பசுக்களெல்லாம் கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால்கறக்குது ராமாரி-அந்த
மோகனனின் பேரைச்சொல்லி மூடிவைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய்யிருக்குது கிருஷ்ணாரி
ராமாரி-ஹரே-கிருஷ்ணாரி
பக்தியில் ஈடுபடும் மனம் பொதுத்தன்மையிலிருந்து தனித்த அனுபவம் நோக்கி நகரவதன் படிநிலைகள் இந்தப் பாடலில் படிப்படியாக வெளிப்படுவதைப்பார்க்கலாம்.
"கண்ணனவன் நடனமிட்டு காளிந்தியைக் கொன்றபின்தான்
தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை ராமாரி"
என்ற வரி எனக்குள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.அதன் விளைவாக புதுக்கோட்டை கம்பன் கழகம் கேட்டுக்கொண்டபடி, அவர்களின் மலருக்காக கம்பன் பற்றி ஒரு கவிதை எழுதினேன்.
'காற்றிலாடும் பனைமரங்கள் கனவுகண்டன
கற்பகமாய் மலர்வதுபோல் நினைவு கொண்டன
நோற்பதுபோல் ஒற்றைக்காலில் நின்றிருந்தன
நனவாகும் நமதுகனா என்றிருந்தன
சாமமாகும் போதுகூட விழித்திருந்தன
சாவிலாத வாழ்வுகாணத் துடித்திருந்தன
ராம ராம என்றுசொல்லி ஜபித்திருந்தனநாமம்சொல்லும் பரவசத்தில் லயித்திருந்தன
உதயவேளை தன்னிலங்கே ஒருவன் தோன்றினான்
ஓலைகளைப் பறித்தெடுத்துக் கொண்டுபோயினான்
பதப்படுத்தி ஆணிதொட்டு வரையலாயினான்
புண்ணியப்பூங் கவிதைகளைப் புனையலாயினான்
தேனலைகள் புரண்டெழுந்து திசைநனைத்தன
தெய்வங்களும் இறங்கிவந்து தமிழ்படித்தன
கானம்பாடும் பறவைகளும் குரல்கொடுத்தன
'கம்பநாடன்'என்றுசொல்லிச் சிறகசைத்தன
ஓலைகளில் அமுதவாரி ஊற்றெழுந்தது
உலகமெங்கும் கவிதையின்பக் காற்றெழுந்தது
காலம்நின்று பார்த்துவிட்டுக் கால்நடந்தது
தேரெழுந்தூர் தச்சன்செய்த தேரசைந்தது
பனைமரங்கள் அவனிடத்தில் பக்திகொண்டன
பாட்டரசன் தொட்டவையோ முக்தி கொண்டன
கனவு நனவானதென்று கண்டு கொண்டன
கவியமுதை ஓலைகளில் மொண்டு தந்தன
கம்பநாடன் விழிமலர்கள் கருணை தந்தன-அவன்
கவிதைகள்தாம் பனையின் நுங்கில் சுவையும் தந்தன
அன்றுமுதல் பனைமரங்கள் உயரமாயின
விண்ணிலுள்ள கம்பனுக்கு விசிறியாயின"
கண்ணதாசனின் தற்குறிப்பேற்ற உத்தியைப் பின்பற்றி எழுதிப்பார்க்கும் ஆசையால் எழுந்தகவிதை இது.(இந்தக் கவிதையில் கவிஞர் வைரமுத்து சொன்ன கருத்தின் அடிப்படையில் இரண்டுவரிகளை மாற்றியது பற்றி 'ஒரு தோப்புக் குயிலாக' நூலில் எழுதியிருக்கிறேன்) கவிதை எழுதுவதில் மட்டுமின்றி,அப்போது நான் மேற்கொண்ட விளம்பர எழுத்தாளர் பணியிலும் புதுமைகள் செய்ய கண்ணதாசனின் உத்திகள் மிகவும் உதவியாய்இருந்தன.
விளம்பர வாசகங்கள் எழுதித் தருபவர்களை அந்தத் துறையில் 'காப்பி ரைட்டர்' என்பார்கள்.காப்பி ரைட்டர் என்ற சொல் பொதுவில் பலருக்கும் புரியாது. படியெடுத்து எழுதுகிற வேலை என்று நினைத்துக் கொண்டு, "ஏன்! உங்க ஆபீஸிலே ஜெராக்ஸ் மெஷின் கிடையாதா?"என்று அனுதாபத்துடன் விசாரிப்பார்கள். விளம்பர எழுத்தாளர் என்றாலும் விளங்காது. சிலர்,சுவரில் விளம்பரம் எழுதும் வேலை என்று நினைக்கத் தொடங்கினார்கள். இப்படியே விட்டால் சரிப்படாதென்று தோன்றியது. ஒரு தயாரிப்பை சிலாகித்து எழுதுகிற வேலைதான் காப்பிரைட்டர் வேலை என்பதை உணர்த்துவதற்காக,என் பதவியைக்குறிக்கும் விதமாய் சமஸ்கிருதத்தில் ஒரு பதத்தை உருவாக்கினேன். 'சிலாகித்ய வாக்ய சிருஷ்டி கர்த்தா' என்று சொல்லத் தொடங்கினேன்.இப்போதும் யாருக்கும் புரியவில்லை.ஆனால் மரியாதையாகப் பார்த்தார்கள்.
விளம்பரங்கள் எழுதுவது சில சமயங்களில் ஆங்கிலத்தில் இருப்பதை மொழிபெயர்ப்பதாகத்தான் இருக்கும்.ஏனென்றால் எல்லா மொழிகளிலும் விளம்பரங்கள் ஒரே நேரத்தில் வெளியாகும்.அதனால்மூலக்கருவை ஆங்கிலத்தில் உருவாக்கிக் கொண்டு வெவ்வேறு மொழிகளில் மாற்றிக் கொள்வார்கள்.வரிக்குவரி மொழிபெயர்க்காமல் முடிந்தவரை தமிழிலேயே உருவாக்கப்பட்ட தொனியை விளம்பரங்களில் கொண்டு வந்துவிடுவேன்.The pride posession of a privileged man என்ற வாசகத்திற்கு நான் செய்த மொழிபெயர்ப்பு "பீடுமிக்க ஆடவரின் பெருமைகளில் ஒன்று". விளம்பரப்படுத்தப்பட்ட பொருள் என்னவென்று சொல்லவில்லையே..ஆண்களின் உள்ளாடை!. Bare essentials என்று பொஸிஷனிங் செய்திருந்தார்கள். அதற்கு தமிழில் நான் கொடுத்த வாசகம் "அந்தரங்க சொந்தம்". எல்லாம் கவிஞரின் தாக்கத்தில்தான்...
(தொடரும்...)
No comments:
Post a Comment