தனிக்கவிதையொன்றில்,போகிற போக்கில் கண்ணதாசன் இதைச் சொல்லிவிட்டு நிற்காமல் போய்க் கொண்டேயிருக்கிறார்.
"மூலம் திருமாலாய்
முளைத்தெழுந்த பெருமாளாய்
ஏலும் தனியறத்தில்
இயங்குகிற ராமனுமாய்
நந்தகோபன் மகனை
மாலே மணிவண்ணா
வாராய் என அழைத்தால்
காலையிலே நம்வீட்டுக்
கதவைத் திறக்கின்றான்"
இதில். நாலு வடிவெடுத்த நந்தகோபன் மகனை என்பது, முதல் நான்கு நிலைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. சில வரிகளுக்குப்பிறகு அந்தர்யாமி நிலையையும் பாடிவிடுகிறார் கவிஞர். "காற்றாக வானாகக்
கனலாகப் புனலாக
ஊற்றாக உருவாக
ஒளியாக மழையாக
நேற்றாக இன்றாக
நாளைக்கும் நிலையாக
ஏற்றாத தீபத்தும்
எரிகின்ற ஜோதியவன் "
"எல்லா உயிரிலும் நானேயிருக்கிறேன் என்றனன் கண்ண பெருமான்' என்று கீதையின் சாரத்தை பாரதி பாடுவான் .கண்ணதாசனுக்கோ
எல்லா உயிர்களிலும் எல்லாப் பொருள்களிலும் கண்ணனைப் பார்க்க முடிகிறது.
"தந்தைதாய் மக்கள்
என்குலத்தின் உறவினர்கள்
முந்தைப்பிறவிகளில்
முன்பிருந்த பெரியோர்கள்
அத்தனையும் கண்ணனவன்
அவதாரம் என்றிருந்தேன்!
தாயாக வந்தக்கால்
தலைமாட்டில் நிற்கின்றான்
நோயாக வந்தக்கால்
நோய்மருந்தும் ஆகின்றான்
பாரதத்தில் அன்று
பார்த்தனுக்குச் சொன்னதெல்லாம்
ஓரளவு எந்தன்
உள்ளத்தும் சொல்கின்றான்"
என்கிறார் கண்ணதாசன்.
' குருவாயூருக்கு வாருங்கள்-ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள் " என்ற பாடலில்,
"பாத்திரம் கண்ணன் பால்போல் மக்கள்-பக்தியில் பிறந்த தனிநீதி"
என்று பாடுகிறார் அல்லவா!!
தனிகவிதையில் அவர் குரலைக் கேளுங்கள்:
"நாத்திகன் வீட்டிலும்
நடக்கும் சங்கமம்
ஆத்திகன் வீட்டிலும்
அருளும் சங்கமம்
சாத்திரக் கூட்டினுள்
தழைக்கும் தெய்வதம்
பாத்திரம் நான் -அதில்
பால் என் கண்ணனே"
உயிர்களைத் தாங்கும் பாத்திரமாய் கண்ணன் இருக்க கண்ணனைத் தாங்கும் பாத்திரமாய்
தன்னை வைத்துப் பார்க்கும் இடத்தில் கண்ணதாசனிடம் யசோதையின் தாயன்பு வெளிப்படுகிறது.
கண்ணனை ஆண்டாள் திருப்பாவையில் பாடுகிறார்.சிவபெருமானை மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் பாடுகிறார்.சமய உணர்வின் உச்சத்தில் இருப்பவர்களுக்கு பேதம் தெரியாது. திருப்பாவை திருவெம்பாவை பற்றி காஞ்சி மஹா பெரியவர் ஓரிடத்தில் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.
"இந்து சமயத்தின் இரண்டு கண்கள் சைவமும் வைணவமும் என்றால், அந்தக் கண்களின் இரண்டு பாவைகள்தான் திருவெம்பாவையும் திருப்பாவையும்.மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையின் முதல் பாடல்,
'ஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ்சோதியை''என்று தொடங்கும்.இதன் முதலெழுத்து திருப்பாவை பாடிய ஆண்டாளை நினைவுபடுத்துகிறது . திருப்பாவையின் முதல்பாடல், "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்"என்று தொடங்குகிறது. இதன் முதலெழுத்து,திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகரை நினைவுபடுத்துகிறது. உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் இந்த இரண்டெழுத்துக்களையும் ஒன்றாக்கிப் பாருங்கள்-"ஆமா'என்று அதுவே சொல்லும்" என்றாராம் மஹாபெரியவர். சைவ சாத்திரங்களும் யாதொரு தெய்வத்தை நீங்கள் வணங்கினாலும் மாதொரு பாகர்தான் அந்த வடிவில்
வருவாரென்கிறது. இது சமய ஒற்றுமை சார்ந்த பிரச்சாரமல்ல. எல்லாக் கடவுளும் ஒன்றே என்ற புரிதல்.
கிருஷ்ண கானத்தில் அப்படியொரு பாடல் உண்டு:
"கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை
கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான்
மாதவப் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார்
ஓதிய தமிழ்கேட்டு கண்ணன் வந்தான்"
எதைக் கண்டாலும் கண்ணனாகவே காண்கிற பக்தியின் உன்மத்தம் இந்தப்பாடலில்
வெகுஅழகாக வெளிப்படும்
"மார்கழித் திருநாளில் மங்கையர் இளந்தோளில்
கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான்"
என்பார் கவிஞர். கிருஷ்ண கானம் வந்து பல நாட்களுக்குப்பின்,கவிஞரின் மறைவுக்கு சற்று முன்போ பின்போ 'கண்ணனுக்கு தாசன் கண்ணதாசன்" என்றோர் இசைத்தொகுப்பு வெளிவந்தது. புகழ்பெற்ற பாடகர்களுடன் எம்.எஸ்.வி.,இளையராஜா ஆகியோரும் கவிஞரின் பாடல்களை அதில் பாடியிருப்பார்கள்.
நான் காசிக்குப் போயிருந்தபோது அதிலிருந்து ஒருபாடலை என் வாய் இடையறாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
"கங்கைக் கரையினிலே-ஒரு
கற்பகச் சோலையுண்டு
மங்கையர் வந்துநின்றால்-அவர்முன்
மாதவன் வந்துநிற்பான்
தேவன் நடனமிடும்-யமுனை
தீர்த்தக் கரையினிலே
பாவியர் வந்துநின்றால்-அவர்
பாவமும் தீர்ந்துவிடும்
பார்த்தனைக் காத்தவனே-தனது
பக்தரைக் காப்பவனாம்
ஆர்த்தெழும் சங்கினிலே -நமக்கோர்
அட்சதை வைத்தவனாம் "
என்ற பாடல்தான் அது.
கவிஞர் மொழிபெயர்த்த பஜகோவிந்தம் நூலின் சில பாடல்களை எம்.எஸ்.வி.யும் இளையராஜாவும் அதில் பாடியிருப்பார்கள்.
'பிருந்தாவனம் என்ன வெகுதூரமா-இந்தப்
பேதைக்கு அவனின்றிப் பரிகாரமா'என்ற பாடலை வாணிஜெயராம் பாடியிருந்ததாக ஞாபகம்.இப்போது அந்த கேசட் கிடைப்பதில்லை.ஆனால் கண்ணதாசன் கவிதைகள்
ஏழாவது தொகுதியிலும்,பஜகோவிந்தம் தொகுப்பிலும் அந்தப்பாடல்கள் உள்ளன.
கண்ணதாசனின் பக்தி அவரை எந்தவிதமான பக்குவத்திற்குக் கொண்டு செலுத்தியிருந்தது என்பதை உணர்த்தும் பாடலொன்று நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்களுக்கு மனதை உலுக்கக்கூடிய-உறுத்தக்கூடிய கேள்விகள் மூன்றுதான்.
கடவுள் நம்மை எத்தனைநாட்கள் இந்த மண்ணில் வைத்திருப்பார்? எப்போது அழைப்பார்?அழைத்தபின் முக்தியா-மறுபிறப்பா?
இந்த மூன்று கவலைகளும் தனக்கில்லையென்று கண்ணனிடம் சொல்கிறார் கண்ணதாசன்.
"நின்றுவா என்றுநீ
நீட்டினை கையெனில்
நின்றுநான் பணிசெயக் கடவேன்!
இன்றுவா என்பதே
இட்ட கட்டளையெனில்
இப்பொழுதே வரத் துணிவேன்1
சென்றுவா என்றெனைத்
திரும்பவும் விட்டாயேல்
திரும்பவும் தோன்றுவேன் நானே !
கன்றினைத் தாயொடு
கரந்தபேர் ஐயனே
கர்த்தனே கண்ணபிரானே!"
(தொடரும்)
1 comment:
// "நின்றுவா என்றுநீ
நீட்டினை கையெனில்
நின்றுநான் பணிசெயக் கடவேன்!
இன்றுவா என்பதே
இட்ட கட்டளையெனில்
இப்பொழுதே வரத் துணிவேன்1
சென்றுவா என்றெனைத்
திரும்பவும் விட்டாயேல்
திரும்பவும் தோன்றுவேன் நானே !
கன்றினைத் தாயொடு
கரந்தபேர் ஐயனே
கர்த்தனே கண்ணபிரானே!"//
ஏன் சொல்ல மாட்டிங்க ........
மது,மாது, புகழ்,கடன் இது எல்லாதுலயும் கண்ணன் தான் உங்களுக்கு தாசன் ........நீங்க கண்ணதாசன் இல்ல ........
Post a Comment